பட மூலாதாரம், Getty Images
ஜோர்டான் பயணத்தின் போது இந்தியா – ஐரோப்பா இடையிலான வர்த்தகத்தையும், அதில் பெட்ரா நகரம் வகித்த பங்கையும் நினைவு கூர்ந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி, “பிரகாசமான எதிர்காலத்திற்காக நாம் கடந்த கால வர்த்தக உறவுகளை புதுப்பிக்க வேண்டும்” என்றார்.
ஒரு காலத்தில் உலக வரைபடத்தில் இருந்தே இல்லாமல் போய்விட்ட பெட்ரா நகரம் ஒரு ‘இந்தியரின்’ உதவியால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வர்த்தகப் பாதையை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா என்பது குறித்து சிலர் கேள்விகளை எழுப்புகின்றனர்.
பாலைவனத்தின் நடுவில் இருந்தாலும், அங்கு ஏன் தண்ணீர் பற்றாக்குறை இல்லை? நூற்றுக்கணக்கான ஒட்டகங்களுடன் வந்த வணிகர்கள் அங்கு ஓய்வெடுத்து பின்னர் ஐரோப்பாவை நோக்கி எப்படி பயணித்தார்கள்?
பண்டைய காலத்தில் இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான வர்த்தகத்தில் இந்த நகரத்தின் முக்கியத்துவம் என்ன? அதன் பிறகு அதன் செல்வாக்கு ஏன் குறைந்தது?
பெட்ராவின் மகிமையும் வீழ்ச்சியும்
கிமு 4ஆம் நூற்றாண்டில் பெட்ரா ஒரு வர்த்தக மையமாக முக்கியத்துவம் பெற்றிருந்தது. கிரேக்க மொழியில் பெட்ரா என்றால் ‘பாறை’ என்று பொருள்.
இந்தப் பகுதி நபாத்தியர் (Nabataeans) என்ற நாடோடி அரபு பழங்குடியினரால் ஆளப்பட்டது, அவர்களின் தலைநகரம் பெட்ரா ஆகும்.
பெட்ரா என்பது பாதி கட்டப்பட்ட நகரம், பெரும்பாலும் பாறையிலிருந்து செதுக்கப்பட்டது. ஒரு காலத்தில், 10,000 முதல் 30,000 மக்கள் அங்கு வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
செங்கடலுக்கும் சாக்கடலுக்கும் இடையில் அமைந்துள்ள பண்டைய நகரமான பெட்ரா, கிரேக்க, ரோமானிய மற்றும் பாரசீக காலங்களில் ஒரு வர்த்தக மையமாக இருந்தது.
அரேபியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து ஃபிரங்கின்சென்ஸ் (Frankincense), சீனாவிலிருந்து பட்டு, இந்தியாவிலிருந்து மசாலாப் பொருட்கள், தேயிலை, வைரங்கள், நகைகள் மற்றும் பருத்தி துணிகள் அனைத்தும் இந்தப் பாதை வழியாக ஐரோப்பாவை அடைந்தன.
அந்த காலத்தில், கடல் பாதை குறைவாகவே பயன்படுத்தப்பட்டது. அனைத்து வர்த்தகமும் ஒட்டகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. ஒட்டகங்களில் தங்கள் பொருட்களை சுமந்து செல்லும் வணிகர்கள் பெட்ராவில் ஓய்வெடுத்து பின்னர் தங்கள் பயணத்தைத் தொடர்வார்கள்.
பட மூலாதாரம், Getty Images
பெட்ரா மக்கள் மழைக்காலத்தில் சுற்றியுள்ள மலைப்பகுதிகளிலிருந்து தண்ணீரை சேகரிக்க அணைகளைக் கட்டினர். பின்னர் அவர்கள் கால்வாய்கள் மற்றும் குழாய்கள் மூலம் அந்த நீரைக் கீழே கொண்டு வந்தனர். இந்த நீர் இயற்கையாகவே ஈர்ப்பு விசையால் கீழ்நோக்கிப் பாய்ந்தது.
ஒரு காலத்தில் இந்த நகரம் செல்வச்செழிப்பு மிக்கதாக இருந்தது, பெட்ரா வழியாகச் செல்லும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது. பெட்ரா இன்னும் உலகின் மிகவும் பிரபலமான பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும்.
உயரமான நிலத்தில் கட்டப்பட்ட அணைகளின் எச்சங்கள், கல்லறைகள், யானை முகங்களுடன் செதுக்கப்பட்ட கல் சிற்பங்கள், தேவாலயங்கள், கோயில்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் பெட்ரா நகரத்தின் மகத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.
இரண்டாம் நூற்றாண்டில், ரோமானியர்கள் இப்பகுதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைத் தங்கள் பேரரசில் இணைத்துக் கொண்டனர், இதனால் இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இந்த முக்கியமான வர்த்தகப் பாதையில் தங்கள் ஆதிக்கத்தை அவர்கள் தக்க வைத்துக் கொண்டனர்.
ரோமானியர்கள் ‘வியா நோவா ட்ரியானா’ (Via Nova Traiana) என்ற சாலையைக் கொண்டிருந்தனர். இஸ்லாமியர் காலத்தில் ஹஜ் யாத்திரைக்கான பாதையாகவும் இது இருந்தது.
‘இந்தியா- ஐரோப்பா வர்த்தகம்’

பிரதமர் மோதி தனது உரையில், “குஜராத்துக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான வர்த்தகம் பெட்ரா வழியாகவே நடந்தது” என்றார். பிரகாசமான எதிர்காலத்திற்காக இந்த பண்டைய வர்த்தகப் பாதையை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்தியாவில் பரூச்சிலிருந்து (குஜராத்தில் உள்ள ஒரு நகரம்) கடல் வழியே மத்திய தரைக் கடல் பிராந்தியம் அல்லது ஐரோப்பாவிற்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட போது பெட்ரா ஒரு முக்கிய வர்த்தக மையமாக இருந்தது என்று அவர் கூறினார்.
புதிய மற்றும் பாதுகாப்பான வர்த்தக வழிகள் கண்டுபிடிக்கப்பட்டன, இதனால் அதிக அளவிலான பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை கடல் வழியாக நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்ல முடிந்தது. அப்போது இந்தப் பகுதி பெடோயின் (Bedouin) சமூகத்தினரால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.
அப்போது ரோமானியர்கள் பெட்ராவை விட கான்ஸ்டான்டிநோபிள் நகரத்தின் மீது (இன்றைய இஸ்தான்புல்) அதிக கவனம் செலுத்தினர், இது அந்த நகரத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
பெட்ராவில் 4-ஆம் நூற்றாண்டில் ஒரு பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது. இதனால் பல கட்டமைப்புகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் நகரத்தின் நீர் வழங்கல் அமைப்பு சேதமடைந்தது. இதன் விளைவாக, அங்குள்ள மக்கள் தொகை குறைந்தது. மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் அருகிலுள்ள வளமான மற்றும் சமவெளிப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர்.
ஏழாம் நூற்றாண்டில் இந்த நகரம் தாக்கப்பட்டதாகவும், 12-ஆம் நூற்றாண்டின் சிலுவைப் போர்களின் போது அது ஒரு ராணுவத் தளமாக செயல்பட்டதாகவும் வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெட்ராவில் காணப்படும் தேவாலய இடிபாடுகள், அந்த நகரம் கிறிஸ்தவ மக்கள்தொகையைக் கொண்டிருந்தது என்பதற்கான சான்றுகளை வழங்குகின்றன.
இந்த வர்த்தக பாதையை மீட்டெடுக்க வேண்டும் என்று பிரதமர் மோதி கூறுகிறார். ஆனால், சமூக ஊடகங்களில் சிலர் அது சாத்தியமில்லை என்று பதிவிடுகிறார்கள்.
இன்று, பெட்ரா ஒரு சுற்றுலாத் தலமாக உள்ளது. 1985-ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட பிறகு, இந்த இடத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அது இப்போது ஒரு போக்குவரத்து மையமாக இல்லை. ஜோர்டானில் உள்ள ஒரே துறைமுகம் அகாபா ஆகும், இது பெட்ராவிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பெட்ராவிற்கு சாலை வழியாக பொருட்களை கொண்டு செல்வது எளிதல்ல. பெட்ரா ஒரு உற்பத்தி அல்லது தொழில்துறை மையமும் அல்ல. அங்கு அதிக வசதிகள் இல்லை.
ஒரு ‘இந்திய வணிகரின்’ தேடல்
பட மூலாதாரம், Getty Images
ஜோஹன் லுட்விக் பர்க்ஹார்ட் சுவிட்சர்லாந்தில் பிறந்து இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார்.
பின்னர் அவர் சிரியாவுக்குச் சென்று அரபு மொழியைக் கற்றுக்கொண்டார். இஸ்லாமிய பழக்கவழக்கங்களையும் மரபுகளையும் கற்றுக்கொண்டார். ஜோஹன் பெரும்பாலும் முஸ்லிம் உடைகளை அணிந்தார்.
முன்னாள் இந்திய வெளியுறவு செயலாளர் ஷ்யாம் சரண், “ஜோஹன் சிரியாவில் இருந்த போது, ’தொலைந்துபோன நகரம்’ பற்றி அறிந்துகொண்டார்” என்று கூறுகிறார்.
அங்கு செல்வதற்காக, அவர் ஷேக் இப்ராஹிம் பின் அப்துல்லா என்ற இந்திய முஸ்லிம் வணிகராக மாறுவேடமிட்டுக் கொண்டார். இதனால் நகரத்தை எளிதில் அடைய முடியும் என்றும், யாரும் தன்னை அடையாளம் காண மாட்டார்கள் என்றும் அவர் நினைத்தார்.
ஜோஹன், முகம்மது நபியின் தோழரான ஆரோனின் கல்லறையைப் பார்வையிடப் புறப்பட்டார். இந்தக் கல்லறை பெட்ராவின் ஒரு மூலையில் அமைந்துள்ளது. பெடோயின் பழங்குடியினரால் அவர் அந்தப் பகுதிக்குக் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அங்கு சில தொல்பொருள் எச்சங்களைக் கண்டுபிடித்து அவற்றைப் பதிவு செய்தார்.
ஜோஹன், அபு சிம்பலில் உள்ள பாழடைந்த பாறைக் கோயில்களைக் கண்டுபிடித்தார்.
பர்க்ஹார்ட் தனது வாழ்நாள் முழுவதும் தனது உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தவே இல்லை. சிரியாவில் அவர் இறந்த பிறகும் கூட, அவரது கல்லறையில் ஷேக் இப்ராஹிம் பின் அப்துல்லா என்று பொறிக்கப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு