பட மூலாதாரம், Prakash Singh/Bloomberg via Getty Images
படக்குறிப்பு, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அறிவித்துள்ளார்.
இதையொட்டி பேசிய அவர், “இன்று இந்தியா தனது வரலாற்றிலேயே இதுவரை இல்லாத மிகப்பெரிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளது. இன்று 27-ஆம் தேதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செய்திருப்பது ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு” என்றார்.
இந்நிகழ்வின் போது ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரும் உடனிருந்தனர்.
பிரதமர் மோதி, டா கோஸ்டாவை ‘லிஸ்பனின் காந்தி’ என்று அழைத்து உரையாற்றினார்.
“உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பிற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த ஒப்பந்தம் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 25% மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் மூன்றில் ஒரு பகுதியை பிரதிபலிக்கிறது,” என்றார் மோதி
“இந்த ஒப்பந்தம் வர்த்தகத்துடன் சேர்த்து, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் வலுப்படுத்துகிறது.”
இதன் மூலம் வர்த்தகம் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி ஆகிய இரண்டும் ‘வலுப்பெறும்’ என்று மோதி கூறினார்.
இந்த ஒப்பந்தத்தால் ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், தோல் மற்றும் காலணிகள் போன்ற துறைகள் பயன்பெறும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவில் உற்பத்தியை ஊக்குவிக்கும் மற்றும் சேவைகள் துறையை விரிவுபடுத்தும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Prakash Singh/Bloomberg via Getty Images
படக்குறிப்பு, இந்தியக் குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் பங்கேற்றார்.
தலைவர்கள் கூறியது என்ன?
அந்தோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா பேசுகையில், ” உலக ஒழுங்கு மாறி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான இந்த கூட்டாண்மை வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்தியா எங்களது நம்பகமான கூட்டாளியாக உருவெடுத்துள்ளது. இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகும். இந்த ஒப்பந்தத்தால் இருநூறு கோடி மக்கள் பயன்பெறுவார்கள்” என்றார்.
அதேபோல், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறுகையில், “இந்தியா மற்றும் ஐரோப்பா இணைந்து வரலாற்றைப் படைக்கின்றன. நாங்கள் ‘மதர் ஆஃப் ஆல் டீல்ஸ்’ (அனைத்து ஒப்பந்தங்களின் தாய்) ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளோம். இருநூறு கோடி மக்களுக்காக ஒரு தடையற்ற வர்த்தக மண்டலத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம், இது இந்தியா மற்றும் ஐரோப்பா ஆகிய இரு தரப்பிற்கும் பயனளிக்கும்” என்றார்.
“இது ஒரு ஆரம்பம் மட்டுமே. எங்களது உறவு எதிர்காலத்தில் இன்னும் வலுவடையும்” என்றும் அவர் கூறினார்.
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் திங்கள்கிழமை இந்தியாவின் குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவுடன் பதற்றம் காரணமா?
இந்தியா மற்றும் ஐரோப்பா ஆகிய இரு தரப்பினருக்கும் தற்போது அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பாகப் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு இதுவும் ஒரு காரணம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்பது இரண்டு நாடுகள் அல்லது இரண்டு தரப்புகள் ஒருவருக்கொருவர் தங்கள் சந்தைகளுக்கான அணுகலை எளிதாக்குவதாகும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முதலில் கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு எதிராக வர்த்தகப் போரை தீவிரப்படுத்துவதாக அச்சுறுத்தினார், பின்னர் பின்வாங்கினார்.
அதே சமயம், ரஷ்ய எண்ணெயை வாங்குவதைக் காரணம் காட்டி, அமெரிக்கா இந்தியா மீது 25 சதவீத கூடுதல் வரியை விதித்தது. மொத்தத்தில், டிரம்ப் நிர்வாகம் இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்துள்ளது.
ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், இந்தியா தனது மற்ற வர்த்தக கூட்டாளிகளுக்கு வழங்காத வரிச் சலுகைகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கும் என்று கூறியுள்ளது.
உதாரணமாக, கார்கள் மீதான வரி படிப்படியாக 110%-லிருந்து 10%-ஆகக் குறைக்கப்படும், அதே நேரத்தில் கார் பாகங்கள் மீதான வரி ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் முழுமையாக நீக்கப்படும்.
இயந்திரங்கள் மீது 44% வரையிலும், ரசாயனங்கள் மீது 22% வரையிலும் மற்றும் மருந்துகள் மீது 11% வரையிலும் விதிக்கப்படும் வரிகள் பெரும்பாலும் நீக்கப்படும்.
2024–25 நிதியாண்டில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான பொருட்கள் வர்த்தகம் சுமார் ₹11.5 லட்சம் கோடி சேவை வர்த்தகம் ₹7.2 லட்சம் கோடி அளவுக்கு இருந்தது.
இந்திய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தகவல்படி இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் முதல் நாளிலிருந்தே துணி, உடைத் துறைகளுக்கு வரி இருக்காது.
”இதன் மூலம், $263.5 பில்லியன் மதிப்புள்ள ஐரோப்பிய துணி சந்தைக்கு இந்தியாவுக்கு நேரடி அணுகல் கிடைக்கும். இதனால் கைத்தறி நெசவாளர்கள், பெண்கள், கலைஞர்கள் என பெரும் வேலைவாய்ப்புகள் உருவாகும்.”
பிரதமர் நரேந்திர மோதி, இது உலகின் 2-வது பெரிய பொருளாதாரம் (ஐரோப்பா) மற்றும் 4-வது பெரிய பொருளாதாரம் (இந்தியா) இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் 9,425 பொருள் வகைகளுக்கு வரிகள் நீக்கப்படும் என பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
ரூபாய் 6.41 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்ய தயாராக உள்ளன என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்திய தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கும் இந்த ஒப்பந்தம் பலனளிக்கும் என்றும் ஐரோப்பாவில் படிக்க செல்லும் மாணவர்களுக்கு 9 மாதம் படிப்புக்கு பிந்தைய விசா உத்தரவாதம் வழங்கப்படும் என்றும் மோதி கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் என்ன கிடைக்கும்?
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, இந்த ஆண்டு இந்தியா நான்கு டிரில்லியன் ஜிடிபி-யுடன் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளக்கூடும்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இந்தியாவுடன் நெருக்கமான வர்த்தக உறவுகள் முக்கியமானவை, ஏனெனில் இந்தியாவின் பொருளாதார பலம் வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும். இந்த ஆண்டு அதன் உள்நாட்டு உற்பத்தி 4 டிரில்லியன் டாலரைத் தாண்டும் பாதையில் உள்ளது மற்றும் அது ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளக்கூடும்.
டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் மேடையில் பேசிய வான் டெர் லேயன், ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் ஒன்றாக இணைந்தால், இருநூறு கோடி மக்களைக் கொண்ட ஒரு மாபெரும் தடையற்ற சந்தை உருவாகும், இது உலகளாவிய உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பங்காக இருக்கும் என்று கூறினார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே அதன் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டமைப்பாக உள்ளது.
இந்த ஒப்பந்தம் ‘பொதுவான முன்னுரிமை முறை’ (Generalized System of Preferences – GSP) முறையையும் மீண்டும் நிலைநிறுத்தும், இதன் கீழ் வளரும் நாடுகளிலிருந்து ஐரோப்பிய சந்தைக்கு வரும் பல தயாரிப்புகளுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படாது.