பட மூலாதாரம், @BJI_Official
வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் ஷபிகுர் ரஹ்மான், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
டிசம்பர் 31 அன்று ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தனக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு, இந்திய தூதர் ஒருவரைச் சந்தித்ததாக ஷபிகுர் ரஹ்மான் கூறியிருந்தார்.
ரஹ்மானின் கூற்றுப்படி, பிற நாடுகளின் தூதர்கள் அவரை வெளிப்படையாகச் சந்தித்து நலம் விசாரித்தனர், ஆனால் இந்திய அதிகாரி மட்டும் இந்தச் சந்திப்பை ரகசியமாக வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த பேட்டிக்குப் பிறகு, ஜமாத்-இ-இஸ்லாமி தலைவருக்கும் இந்திய தூதருக்கும் இடையே ஒரு ரகசியச் சந்திப்பு நடந்ததாக வங்கதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகத் தொடங்கின.
வங்கதேசத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது, அதில் ஜமாத்-இ-இஸ்லாமி ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்து வருகிறது. ஜமாத் அமைப்பு இந்தியாவுக்கு எதிரான ஒரு குழுவாகவே அடையாளம் காணப்படுகிறது. எனவே இந்த சந்திப்பு தொடர்பான செய்திகள் அவர்களின் அரசியலுக்கு முரணாக அமைந்தன.
இதைக் கருத்தில் கொண்டு, ஜமாத் தலைவர் வியாழக்கிழமை தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை இட்டு, அந்த பேட்டி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஷபிகுர் ரஹ்மான் எழுதியதாவது, “புதன்கிழமை சர்வதேச ஊடகமான ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் என்னிடம் இந்தியா உங்கள் அண்டை நாடு, எனவே உங்களுக்கு அவர்களுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா, ஏதேனும் பேச்சுவார்த்தை அல்லது சந்திப்பு நடக்கிறதா? என்று என்னிடம் கேட்கப்பட்டது. “
“இதற்குப் பதிலளித்த நான் – கடந்த ஆண்டு உடல்நலக்குறைவுக்குப் பிறகு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபோது, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பலர் என்னைச் சந்திக்க வந்தனர். பிற நாடுகளின் மதிப்பிற்குரிய தூதர்கள் வந்தது போலவே, இந்திய தூதரும் என்னைச் சந்திக்க எனது வீட்டிற்கு வந்திருந்தார்.”
“மற்றவர்களைப் போலவே நான் அவரிடமும் பேசினேன். அப்போது அவர் (இந்திய தூதர்) இந்த சந்திப்பை பகிரங்கப்படுத்த வேண்டாம் என்று என்னிடம் கோரிக்கை விடுத்தார். எதிர்காலத்தில் இரு நாடுகளின் நலன்கள் தொடர்பான விவகாரங்களில் உங்களுடன் ஏதேனும் சந்திப்பு நடந்தால், அது கண்டிப்பாகப் பகிரங்கப்படுத்தப்படும் என்று நாங்கள் கூறினோம்.”
“இதில் ரகசியம் ஏதும் இல்லை. ஜமாத் அமீர் இந்தியாவுடன் ரகசியச் சந்திப்பு நடத்தியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இத்தகைய செய்திகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் எதிர்காலத்தில் உண்மையை அறியாமல் இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்
பட மூலாதாரம், Getty Images
ராய்ட்டர்ஸிடம் ரஹ்மான் கூறியது என்ன?
‘அடுத்த அரசை அமைக்க வாய்ப்புள்ள கட்சிகளுடன் இந்தியா தனது தொடர்புகளை அதிகரித்து வரும் நிலையில், தனது பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு இந்திய தூதரைச் சந்தித்ததை ரஹ்மான் உறுதிப்படுத்தியதாக’ ராய்ட்டர்ஸ் எழுதியுள்ளது.
ரஹ்மானின் கூற்றுப்படி, மற்ற நாடுகளின் தூதர்களைப் போல வெளிப்படையாக நலம் விசாரிப்பதற்குப் பதிலாக, இந்திய அதிகாரி இச்சந்திப்பை ரகசியமாக வைக்குமாறு கோரினார்.
“இந்தச் சந்திப்பு அல்லது அதை ரகசியமாக வைப்பதற்கான கோரிக்கை குறித்த கேள்விகளுக்கு இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் உடனடி பதிலளிக்கவில்லை” என்று ராய்ட்டர்ஸ் எழுதியுள்ளது.
ராய்ட்டர்ஸின் தகவல்படி, இந்திய அரசு வட்டாரம் ஒன்று பல்வேறு கட்சிகளுடனான தொடர்பை உறுதிப்படுத்தியது.
பாகிஸ்தானுடன் ஜமாத் கொண்டுள்ள வரலாற்று ரீதியான நெருக்கம் குறித்துக் கேட்கப்பட்டபோது ரஹ்மான் கூறுகையில், “நாங்கள் அனைவருடனும் சமநிலையான உறவைப் பேணுகிறோம். நாங்கள் ஒருபோதும் ஒரு நாட்டை நோக்கிச் சாய விருப்பம் காட்டவில்லை, மாறாக அனைவரையும் மதிக்கிறோம் மற்றும் நாடுகளுக்கு இடையே சமநிலையான உறவை விரும்புகிறோம்” என்றார்.
ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு, வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி ஒரு முக்கியமான அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறது.
பாகிஸ்தான் ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி ஆகியவை கருத்தியல் ரீதியாக ஏறக்குறைய ஒன்றுதான். இரண்டுமே வங்கதேச விடுதலைப் போர் குறித்துக் கேள்விகளை எழுப்பின.
வங்கதேச விடுதலைப் போரில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து ஜமாத்-இ-இஸ்லாமி தொடர்ந்து கேள்வி எழுப்பியது.
பட மூலாதாரம், Getty Images
இந்தியா குறித்த ஜமாத்தின் நிலைப்பாடு என்ன?
வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி முகமது யூனுஸின் இடைக்கால அரசை ஆதரிக்கிறது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வங்கதேசத்தின் ‘புரொதோம் ஆலோ’ செய்தி இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் ஷபிகுர் ரஹ்மான், “1971-இல் எங்களது நிலைப்பாடு கொள்கை சார்ந்தது. இந்தியாவின் நலனுக்காக நாங்கள் ஒரு சுதந்திர நாட்டை விரும்பவில்லை.” என்றார்.
ஷபிகுர் ரஹ்மான் மேலும் கூறுகையில், “யார் மூலமாவது அல்லது யார் சார்பாகவோ எங்களுக்குச் சுதந்திரம் கிடைத்தால், அது ஒரு சுமையை இறக்கிவிட்டு மற்றொரு சுமையின் கீழ் அமுங்குவது போன்றது. கடந்த 53 ஆண்டுகளாக வங்கதேசத்தில் இது உண்மையாகவில்லையா? ஒரு குறிப்பிட்ட நாடு ஒரு குறிப்பிட்ட கட்சியை விரும்புவதில்லை என்பதை நாம் ஏன் கேட்க வேண்டும்? ஒரு குறிப்பிட்ட நாடு விரும்பாவிட்டால் ஒரு குறிப்பிட்ட கட்சி ஆட்சிக்கு வர முடிவதில்லை. ஒரு சுதந்திர நாட்டின் குணம் இதுதானா? வங்கதேச இளைஞர்கள் இனியும் இதையெல்லாம் கேட்க விரும்புவதில்லை” என்றார்.
ஒரு காலத்தில் தடை செய்யப்பட்டிருந்த வங்கதேசத்தின் இஸ்லாமியக் கட்சியான ஜமாத், பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தனது வரலாற்றிலேயே மிகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த தயாராகி வருகிறது.
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்த மாணவர்கள் தொடங்கிய நேஷனல் சிட்டிசன் பார்ட்டியுடன் (என்சிபி) ஜமாத் கூட்டணி அமைத்துள்ளது.
என்சிபி மற்றும் ஜமாத் ஆகிய இரண்டின் நிலைப்பாடும் இந்தியா தொடர்பாக மிகவும் சாதகமாக இல்லை. இந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இந்தியாவுக்கு அவர்களுடன் இணக்கமான உறவை ஏற்படுத்துவது எளிதாக இருக்காது என்று கூறப்படுகிறது.
ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், வங்கதேச நேஷனலிஸ்ட் பார்ட்டிக்கு (BNP) அடுத்தபடியாக ஜமாத்-இ-இஸ்லாமி இரண்டாவது இடத்தில் இருக்கலாம். பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்களாக இருக்கும் 17.5 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாட்டில், ஜமாத்-இ-இஸ்லாமி மீண்டும் பிரதான அரசியலுக்குத் திரும்புவதாகக் கருதப்படுகிறது.

ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் ஷபிகுர் ரஹ்மான் கூறுகையில், “குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்காவது ஒரு நிலையான தேசத்தைக் காண விரும்புகிறோம். கட்சிகள் ஒன்று சேர்ந்தால், நாங்கள் இணைந்து அரசாங்கத்தை நடத்துவோம்” என்றார்.
ஜென்-ஸி ஆதரவு பெற்ற ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நேரத்தில் இந்த கருத்து வந்துள்ளது.
மேலும், பிப்ரவரி 12 தேர்தலில் அதிக இடங்களை வெல்லும் கட்சியிலிருந்தே பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் ஷபிகுர் ரஹ்மான் கூறினார். ஜமாத் அதிக இடங்களை வென்றால், அவரே பிரதமர் வேட்பாளராக இருப்பாரா என்பதைத் தங்களது கட்சி தீர்மானிக்கும் என்றும் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
நீண்ட காலம் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா 2024 ஆகஸ்ட் மாதம் ஆட்சியில் இருந்து விலகிய பிறகு, ஜமாத் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி இப்போது தேர்தலில் போட்டியிடத் தடை செய்யப்பட்டுள்ளது.
ஹசீனா ஜமாத்தின் தீவிர விமர்சகர் ஆவார். அவரது பதவிக்காலத்தில், 1971-இல் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போரின் போது நடந்த போர்க்குற்றங்களுக்காக ஜமாத்தின் பல தலைவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஜமாத் வங்கதேச விடுதலைப் போரை எதிர்த்திருந்தது.
2013-இல் ஜமாத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, 2024 ஆகஸ்டில் அக்கட்சியின் மீதான அனைத்துத் தடைகளையும் நீக்கியது.
டாக்காவிலிருந்து தப்பிச் சென்ற பிறகு ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருப்பது கவலைக்குரிய விஷயம் என்று ரஹ்மான் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு