“இது உண்மையில் எங்களுக்கு மிகப்பெரிய, மிகப்பெரிய மைல்கல். இந்த வெற்றி மூலம் நாங்கள் எப்படிப்பட்ட அணி என்பதை வெளிப்படுத்தியுள்ளோம். ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் ஒரு போட்டியில்கூட தோற்காத நாங்கள் இறுதிப்போட்டியில் தோற்றோம் என்பது எனக்குத் தெரியும். ஆனால், டி20 உலகக் கோப்பையில் ஒருபோட்டியில் கூட தோற்காமல், கோப்பையை வென்றோம். அதேபோல சாம்பியன்ஸ் டிராபியிலும் ஒரு போட்டியில்கூட தோற்காமல் கோப்பையை வென்றுள்ளோம்”
இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்று சாதனை படைத்த போது உற்சாகத்தில் கேப்டன் ரோஹித் சர்மா பேசியது.
கேப்டன் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 12-வது முறையாக டாஸில் தோல்வி அடைந்தாலும் மனம் தளராமல் தொடர்ந்து அணியை வழிநடத்தினார். நியூசிலாந்து அணி முதல் 10 ஓவர்களில் அருமையான தொடக்கத்தை அளித்து ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்தது. ரச்சின் ரவீந்திரா, வில்லியம்ஸன் ஆட்டமிழந்த பின் ஆட்டம் முழுவதையும் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
நியூசிலாந்து முதல் 8 ஓவர்களும், கடைசி 10 ஓவர்கள் மட்டுமே சற்று ஆதிக்கம் செலுத்தியது. இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் 38 ஓவர்களை வீசி நியூசிலாந்து பேட்டர்களை திணறவிட்டு 144 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 பேரை ஆட்டமிழக்கச் செய்தனர்.
இந்த 38 ஓவர்களில் 125 பந்துகள் டாட் பந்துகளாகும். இந்திய அணி 11 முதல் 40 ஓவர் வரை முழுக்கமுழுக்க சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது இது 2வது முறையாகும். இதற்கு முன் 2002 இலங்கைக்கு எதிரான சாம்பியன்ஸ்டிராபியில் இதுபோன்று சுழற்பந்துவீச்சாளர்களை இந்திய அணியின் அப்போதைய கேப்டன் கங்குலி முழுமையாக பயன்படுத்தி இருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சுத் தாக்குதலுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்பதைப் போல் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் சான்ட்னர், பிரேஸ்வெல், ரவீந்திரா ஆகியோர் இந்திய பேட்டர்களுக்கு கடும் நெருக்கடியளித்தனர்.
12 ஆண்டுகளில் 2வது மோசமான ஆட்டம்
நியூசிலாந்து அணி நேற்று 11 முதல் 40 ஓவர்களுக்கு இடையே இந்திய சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 4 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள்தான் சேர்த்தது. ஆனால் முதல் 10 ஓவர்களில் 69 ரன்கள் சேர்த்திருந்தது. 2013-ஆம் ஆண்டுக்குப் பின் நடுப்பகுதி ஓவர்களில் நியூசிலாந்து எடுத்த இரண்டாவது குறைந்தபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன் 2018ல் அபுதாபியில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் சேர்த்திருந்தது.
ஏறக்குறைய 14வது ஓவரிலிருந்த 27வது ஓவர் வரை நியூசிலாந்து பேட்டர்கள் ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை.
இந்திய அணியும் 16 முதல் 30-வது ஓவர்களுக்கு இடையே இந்திய அணி முக்கியமான 3 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள்தான் சேர்த்திருந்தது. 2013 ஈடன் கார்டனில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 42 ரன்கள் சேர்த்திருந்த இந்தியா, அதற்கு அடுத்தபடியாக அந்த ஓவர்களில் மிகவும் பொறுமையாக ஆடிய ஆட்டமாக நேற்றைய ஆட்டம் பதிவாகியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
ரவீந்திராவுக்கு 5 கேட்ச் மிஸ்ஸிங்
நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியை தொடக்கம் முதலே மிரட்டிய நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு மட்டும் இந்த சாம்பியன்ஸ் டிராபியில் 5 கேட்சுகள் தவறவிடப்பட்டுள்ளன. சாம்பியன்ஸ் டிராபியில் வேறு எந்த பேட்டருக்கும் இதுபோல் அதிக முறை கேட்ச் தவறவிடப்பட்டது இல்லை. இதில் பைனலில் மட்டும் முகமது ஷமி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவரும் தங்களுக்கு கிடைத்த கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டனர். இந்திய அணி நேற்றைய ஆட்டத்தில் 4 கேட்சுகளைத் தவறவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் வெற்றிக்கு பந்துவீச்சிலும்,பேட்டிங்கிலும் தொடக்கம் முதல் சில முக்கியத் தருணங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தன அது குறித்துப் பார்க்கலாம்.
பட மூலாதாரம், Getty Images
வெற்றிக்கு வழிகாட்டிய வருண்
நியூசிலாந்துக்கு வில்யங்-ரவீந்திரா கூட்டணி அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். அதிலும் ரவீந்திரா இந்தியப் பந்துவீச்சை விளாசத் தொடங்கியதும் 5 ஓவர்களிலேயே வருண் சக்ரவர்த்தியை பந்துவீச கேப்டன் ரோஹித் சர்மா அழைத்தார்.
அதற்கு கை மேல் பலன் கிடைத்தது. ரவீந்திரா விக்கெட்டுக்கு குறிவைக்கப்பட்ட நிலையில், அந்த வலையில் வில் யங் மாட்டிக் கொண்டார். அவர் தனது கால்காப்பில் வாங்கி எல்பிடபிள்யூ முறையில் அவர் ஆட்டமிழந்தார். பெரிய பார்ட்னர்ஷிப்புக்காக வலுவான அடித்தளம் அமைத்த இந்த ஜோடியை பிரித்த வருண் பந்துவீச்சுதான் வெற்றிக்கு நம்பிக்கையளித்த முதல் தருணம்.
பட மூலாதாரம், Getty Images
திருப்பம் தந்த குல்தீப்
குல்தீப் யாதவ் நேற்று எடுத்த இரு விக்கெட்டுகளும் அற்புதமானவை, முக்கியமானவை. ஆட்டத்தின் போக்கையே மாற்றி, ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் கைக்கு கொண்டுவந்தது இரு விக்கெட்டுகள்தான். ரச்சின் ரவீந்திராவை வீழ்த்த வருண் கொண்டுவரப்பட்டநிலையில், அதில் வில்யங் வீழ்ந்தார்.
குல்தீப் யாதவ் பந்துவீச்சை கட்செய்து ஆடமுயன்றபோது ரவீந்திரா போல்டானார். அடுத்த சிறிது நேரத்தில் வில்லியம்ஸனுக்கு வழக்கத்தைவிட 2 டிகிரி கூடுதலாக டாஸ் செய்து, அதிகமாக பந்தைசுழலச் செய்து குல்தீப் விக்கெட்டை வீழ்த்தியது இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. குல்தீப் இரு விக்கெட்டுகளை வீழ்த்தியதே ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் கொண்டுவந்தது.
பட மூலாதாரம், Getty Images
பார்ட்னர்ஷிப்பை உடைத்த வருண்
கிளென் பிலிப்ஸ், மிட்ஷெல் இடையே சிறப்பான பார்ட்னர்ஷிப் உருவாகி வந்தது, இருவரையும் பிரிக்க முடியாமல் பந்துவீச்சாளர்களு சிரமப்பட்டனர். மீண்டும் வருண் அழைக்கப்பட்டார், வருண் வீசிய 5-வது பந்தில் பிலிப்ஸ் கிளீன் போல்டாகி வெளியேறினார். வருண் சக்ரவர்த்தியின் 2 விக்கெட்டுகள், குல்தீப் யாதவின் 2 விக்கெட்டுகள் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் இந்தியாவின் கைகளுக்குள் கொண்டு வந்தன.
பேட்டிங்கிலும் இந்திய அணிக்கு சில அற்புதமான தருணங்களும், திருப்புமுனைகளும் கிடைத்தன. குறிப்பாக கடந்த 4 போட்டிகளிலும் தொடக்க வீரராக சிறிதுநேரமே களத்தில் இருந்து அதிரடி காட்டிய ரோஹித் சர்மா அரைசதம் அடித்தது, ஸ்ரேயாஸ் அய்யரின் அற்புதமான ஆட்டம், ராகுலின் பொறுப்பான பேட்டிங் ஆகியவை ஆட்டத்தை நியூசிலாந்திடம் இருந்து இந்தியா தட்டிப் பறிக்க உதவியது.
பட மூலாதாரம், Getty Images
ரோஹித் அரைசதம்
கடந்த 18 ஆண்டுகளில் ரோஹித் சர்மா 9-வது ஐபிஎல் பைனலில் நேற்று விளையாடினார். இதுவரை ஒரு பைனலில்கூட ரோஹித் சர்மா அரைசதம் அடிக்காத நிலையில் முதல்முறையாக நேற்று அரைசதம் அடித்தார். இந்தத் தொடரிலும் ஒட்டுமொத்தமாக 180 ரன்களை சேர்த்திருந்த ரோஹித் சர்மா அதிகபட்சமாக ஒரு அரைசதம் கூட அடித்திருக்கவில்லை. ஆனால், நேற்று 41 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 76 ரன்களில் ஆட்டமிழந்தார். முன்பு விளையாடிய 8 ஐசிசி பைனல்களில் ரோஹித் சர்மா 2023 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 47 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும்.
ரோஹித் சர்மா அளித்த அதிரடியான தொடக்கத்தால் 10 ஓவர்களில் நியூசிலாந்துக்கு இணையாக ரன்ரேட்டை கொண்டு செல்ல இந்திய அணியால் முடிந்தது. சுழற்பந்துவீச்சை கொண்டுவந்தபின் பொறுமையாக ஆடி, வெற்றிக்கு பாதி தொலைவுக்கு இந்திய அணியை அழைத்துக் கொண்டு சேர்த்து ரோஹித் வெளியேறினார்.
பட மூலாதாரம், Getty Images
ஸ்ரேயாஸ் அய்யரின் பங்களிப்பு
ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபின், அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நடுப்பகுதி பேட்டர் ஸ்ரேயாஸ் மீது விழுந்தது. சற்றும் பொறுமை இழக்காமல் ஆடிய ஸ்ரேயாஸ், 48 ரன்களைக் குவித்தார். அக்ஸர் படேலுடன் அமைத்த 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தில் முக்கியத்திருப்புமுனையாக அமைந்தது. சுழற்பந்துவீச்சாளர்களைக் கையாள திணறும் சீனியர் பேட்டர்களுக்கு மத்தியில் ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பான பேட்டிங் சராசரி வைத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக இதற்கு முன் 8 முறை ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்ததும் வேகப் பந்துவீச்சில்தானே தவிர சுழற்பந்துவீச்சில் இல்லை.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி தொடக்கத்தில் இருந்தது. ஆனால், தனக்குக் கிடைத்த வாய்ப்பை ஸ்ரேயாஸ் சிறப்பாகப் பயன்படுத்தினார், இந்தத் தொடரில் 235 ரன்கள் குவித்து 49 சராசரி வைத்துள்ளார், அதிகபட்சமாக 79 ரன்களைக் குவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெல்வதற்கு நடுப்பகுதி ஓவர்களில் ஸ்ரேயாஸ் அய்யரின் ஆட்டம் உறுதுணையாக அமைந்தது.
பட மூலாதாரம், Getty Images
கே.எல்.ராகுலின் பொறுமை
ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்த பிறகு ஆட்டம் எந்தப் பக்கமும் சாயலாம் என்ற நிலையில் ஆட்டம் இருந்தது, ஆனால் கடிவாளத்தை இறுகப் பிடித்து இந்திய அணியை கரை சேர்த்ததில் கே.எல்.ராகுலின் பேட்டிங் முக்கியமான ஒன்றாகும். கே.எல்.ராகுல் சேர்த்த 34 ரன்களில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி மட்டுமே அடித்திருந்தார். இக்கட்டான நேரத்தில் ரன் ரேட்டை சீராக பராமரிக்க சான்ட்னர் பந்துவச்சில் ஒரு சிக்ஸரும், ரூர்க் பந்துவீச்சில் ஒரு பவுண்டரியும் அவர் அடித்தார்.
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதும் நடுப்பகுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் எவ்வாறு நிலைத்தன்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தினாரோ அதேபோன்ற பேட்டிங்கை கீழ்வரிசையில் கே.எல்.ராகுலும் வெளிப்படுத்தி இக்கட்டான நேரத்தில் அணியை காப்பாற்றியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
கடைசி 24/23 வெற்றி
தற்போதைய இந்திய அணி உண்மையில் உச்சி முகர வேண்டிய அணி என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஏனென்றால் ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் கடைசி 24 போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணி, அதில் 23 போட்டிகளில் வென்றுள்ளது. அந்த ஒரு தோல்வியும் 2023-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி மட்டும்தான். கடைசியாக விளையாடி 13 போட்டிகளிலும் 13 வெற்றிகளையும் பெற்றுள்ளது. 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில் நடந்த ஐசிசி தொடர்களில் விளையாடிய 13 போட்டிகளிலும் வென்றதே இந்திய அணியின் திறமைக்கு சான்று.
முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ், 2007 டி20 உலகக் கோப்பையை வென்றிருந்தார். இதில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை ஒருபோட்டியில் கூட தோற்காமல் இந்தியா வென்றது, ஆனால் மற்ற இரு கோப்பைகளை வென்ற போதும் அந்த தொடர்களின் லீக் ஆட்டங்களில் இந்திய அணி தோல்வியையும் சந்தித்திருந்தது.
பட மூலாதாரம், Getty Images
7-வது ஐசிசி கோப்பை
இதன் மூலம் இந்திய அணி ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் 7-வது கோப்பையை வென்றுள்ளது. 1983 உலகக் கோப்பை, 2002 சாம்பியன்ஸ் டிராபி, 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன் டிராபி ஆகிய கோப்பைகளை வென்றுள்ளது.
3 முறை சாம்பியன்ஸ் டிராபி
ஆஸ்திரேலியா அணி 10 முறை ஐசிசி சார்பில் கோப்பைகளை வென்று முதலிடத்தில் இருக்கும் நிலையில் இந்திய அணி 2வது இடத்தில் 7 கோப்பைகளுடன் இருக்கிறது. அதேசமயம் சாம்பியன்ஸ் டிராபியை 3 முறை வென்ற ஒரே அணி இந்திய அணி மட்டும்தான் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது.