பட மூலாதாரம், Press Information Bureau
பிரதமர் நரேந்திர மோதி சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்தியாவுக்கு கடும் போட்டியாளராக பார்க்கப்படும் சீனாவுடனான உறவு குறித்து நேர்மறையாகப் பேசினார்.
இந்தியா-சீனா இடையே சர்ச்சைக்குரிய எல்லையில் இயல்புநிலை திரும்பியுள்ளது என்றும் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் கூறினார்.
இவை முக்கியமான கருத்துகள்.
ஏனென்றால், 2020ல் வடக்கு லடாக் பகுதியில் நிகழ்ந்த கடுமையான எல்லை மோதலுக்கு பிறகு, இந்தியா-சீனா இடையிலான உறவுகள் தொடர்ந்து பதற்றத்தில் இருந்து வருகிறது.
மேலும் 1962 போருக்குப் பிறகு நடந்த மிகக் கொடிய மோதல் சம்பவமாகவும் இது கருதப்படுகின்றது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், மோதியின் கருத்தை வரவேற்று, “இரு நாடுகளும் ஒருவரின் வெற்றிக்கு ஒருவர் பங்களிக்கும் கூட்டாளிகளாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
சமீபத்தில் இருநாடுகளின் உறவுகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களைப் பார்த்தால், நெருக்கமான கூட்டணிக்காக மோதி முன்வைக்கும் அழைப்பு மிகப்பெரிய மாற்றமாக தோன்றாது.
ஆனால், இந்தியா-சீனா உறவு இன்னும் இறுக்கமாகவே உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
இருநாட்டு உறவில் சாதகமான அம்சங்கள்
மேலும் ஒரு உண்மையான நல்லிணக்கம் ஏற்படுவதற்கு இரு நாடுகளுக்கும் இடையே மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் அரங்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன.
இந்தியா-சீனா உறவுகளில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன.
இருதரப்பு வர்த்தகம் தொடர்ந்து வலுவாகவே உள்ளது. லடாக் மோதலுக்குப் பிறகும் சீனா இந்தியாவின் முக்கியமான வர்த்தகக் கூட்டாளியாக இருந்து வருகிறது.
வளரும் நாடுகளின் கூட்டணியான பிரிக்ஸ் முதல் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிலும் இருநாடுகளும் பலதரப்பு ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகின்றன.
மேற்கத்திய நாடுகளுக்கு மாற்றாக பொருளாதார மாதிரிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதிலும், இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்பதிலும், அமெரிக்காவின் தார்மீகப் போராட்டங்களை மறுக்க வேண்டும் என்பதிலும் இரு நாடுகளும் ஒரே மாதிரியான நோக்கங்களை கொண்டுள்ளன.
லடாக் மோதல் காரணமாக இந்தியா-சீனா உறவுகள் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக பாதிக்கபட்டபோதும், இரு ராணுவங்களும் உயர்மட்ட சந்திப்புகளை தொடர்ந்து நடத்தின.
பட மூலாதாரம், Getty Images
இதன் விளைவாக, அக்டோபரில் எல்லை ரோந்துகளை மீண்டும் தொடங்க ஒப்பந்தம் எட்டப்பட்டது.
அதே மாதம் ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோதி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார். எதிர்காலத்தில் ஒத்துழைக்க அவர்கள் உறுதியளித்தனர்.
அதன் பிறகு, ஜனவரியில் இரு நாடுகளும் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க ஒப்பந்தம் செய்தன.
சிக்கல் நீடிப்பது ஏன்?
இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
ஒவ்வொரு நாடும் மற்றொரு நாட்டின் முக்கியப் போட்டியாளருடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளைக் கொண்டுள்ளன.
உதாரணமாக, அமெரிக்காவுடன் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் சீனா நெருக்கமாக உள்ளன.
சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் இந்தியாவின் கொள்கைகளை சீனா எதிர்க்கிறது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா இணைவதை எதிர்ப்பதன் மூலம், உலக அளவில் வலுவான சக்தியாக உருவாகும் இந்தியாவின் முயற்சிகளை சீனா தடுக்கிறது.
இந்தியாவின் பரந்த கடல்சார் பகுதியில், சீனாவின் மிகப்பெரிய கடற்படை படை இருப்பும், அதன் ஒரே வெளிநாட்டு ராணுவத் தளமும் உள்ளன.
பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் மூலம், இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவின் செல்வாக்கை விரிவுபடுத்தி வரும் இந்த பொருளாதார வழித்தடம், இந்தியா உரிமை கோரும் எல்லைப் பகுதியில் கடந்து செல்வதால், இந்தியா அதனை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
இதற்கிடையில், இந்தியா தைவானுடன் உறவுகளை மேம்படுத்துகிறது.
சீனா தைவானை தனது எல்லைக்குட்பட்ட ஒரு பகுதியாகவே கருதுகிறது. நாடு கடத்தப்பட்ட திபெத்திய தலைவர் தலாய் லாமாவை இந்தியா தங்க வைத்துள்ளது. ஆனால், சீனா அவரை பிரிவினைவாதியாகக் கருதுகிறது.
தென்சீனக் கடலில் சீனாவின் அச்சுறுத்தல்களைத் தடுக்க பயன்படுத்தக் கூடிய சூப்பர்சோனிக் ஏவுகணைகளை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விற்பனை செய்ய இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில், குவாட் மற்றும் மத்திய கிழக்கு – ஐரோப்பிய பொருளாதார அமைப்பு போன்ற சர்வதேச குழுக்களில் காணப்படும் இந்தியாவின் ஈடுபாட்டை, சீனா தனது செல்வாக்கை கட்டுப்படுத்தும் முயற்சியாக பார்க்கிறது.
எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?
இரு நாட்டு உறவின் எதிர்காலப் போக்கை புரிந்துகொள்ள கவனிக்க வேண்டிய பல முக்கியக் குறியீடுகள் உள்ளன.
ஒன்று எல்லை குறித்தான விவாதங்கள்.
2,100 மைல் (3,380 கிலோமீட்டர்) நீளமுள்ள எல்லையில், கிரேக்கத்தின் பரப்பளவுக்கு இணையான 50,000 சதுர மைல் பகுதி இன்னும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.
எல்லையில் நிலவும் சூழல் தான் இரு நாட்டு உறவின் முக்கியக் குறியீடாக உள்ளது.
லடாக் மோதல் இரு நாடுகளுக்கிடையிலான நம்பிக்கையை முற்றிலும் சிதைத்தது.
ஆனால், கடந்த ஆண்டு செய்த எல்லை ரோந்து ஒப்பந்தம் அந்த நம்பிக்கையை ஓரளவு மீட்டெடுக்க உதவியது.
எதிர்காலத்தில், நம்பிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை இரு நாடுகளும் முன்னெடுத்தால், அதுவே உறவினை மேம்படுத்தும் நல்ல அறிகுறியாக அமையும்.
மேலும் எதிர்கால உயர் மட்ட சந்திப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
தனிப்பட்ட ராஜதந்திர உத்திகளை முக்கியமாகக் கருதும் மோதி மற்றும் ஜின்பிங் ஆகிய இருவரும் இந்த ஆண்டு சந்தித்தால், இருதரப்பு உறவுகளில் ஏற்பட்ட சமீபத்திய முன்னேற்றம் மேலும் வலுப்பெறும்.
ஜூலை மாதத்தில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாடு, நவம்பரில் நடைபெறும் ஜி20 மாநாடு மற்றும் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக் கூட்டம் ஆகியவற்றை ஒட்டி இருவரும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இரு நாட்டு உறவுகளில் மற்றொரு முக்கிய அடையாளம் சீன முதலீடு.
இது உற்பத்தி முதல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை வரை பல்வேறு முக்கியமான இந்தியத் துறைகளுக்கு தேவையான மூலதனத்தை கொண்டுவரும்.
சீனாவுடன் இந்தியாவுக்கு உள்ள 85 பில்லியன் டாலர் (65.7 பில்லியன் பவுண்ட்) வர்த்தகச் சுமையை குறைக்கும் வாய்ப்பும் இதன் மூலம் உருவாகும்.
இத்தகைய முதலீடுகள் அதிகரிப்பது இந்தியாவுக்கு தேவையான நேரத்தில் பொருளாதார வளர்ச்சியை வழங்கும்.
உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமான இந்தியாவில், சீனாவுக்கு அதிக வாய்ப்புகள் உருவாகும்.
இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான வர்த்தக ஒத்துழைப்பு உருவானால், பரந்த அளவிலான பதற்றங்களைக் குறைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.
அதே சமயம், பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களும் முக்கியமானவை.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம், மாலத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நான்கு நாடுகளில் சமீபத்தில் புதிய அரசாங்கங்கள் பதவியேற்றுள்ளன.
இந்த தலைவர்கள், அவர்களுக்கு முன்பு பதவியில் இருந்தவர்களை விட சீனாவுக்கு அதிக ஆதரவளிப்பவர்களாக உள்ளனர்.
இருப்பினும், அவர்கள் இதுவரை சீனாவுடன் மட்டும் இணையாமல், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் உறவை சமநிலையில் பராமரித்து வருகின்றனர்.
அமெரிக்கா என்ன செய்கிறது?
யுக்ரேன் போர் முடிவுக்கு வந்தால், ரஷ்யா சீனாவை சார்ந்திருக்கும் சூழல் மாறக்கூடும். இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவுடன் உறவுகளை வலுப்படுத்துவதில் இருந்து சீனா விலகக்கூடும்.
இது இந்தியா-சீன உறவுகளை சிறப்பாக்க உதவலாம். இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டிரம்பும் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம்.
சீனா மீது வரிகள் விதித்திருந்தாலும், சீனாவுடனான உறவுகளில் பதற்றத்தை குறைக்க விரும்புவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அவர் அவ்வாறு செய்தால், சீனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு உதவுவதில் அமெரிக்கா உறுதியாக இருக்காது என்று இந்தியா அஞ்சுகிறது.
அதனால், இந்தியா சீனாவுடனான தனது உறவுகளை நல்ல நிலைமையில் வைத்திருக்கவே விரும்பும்.
வரவிருக்கும் டிரம்பின் பரஸ்பர வரிக் கொள்கை இந்தியாவை கடுமையாக பாதிக்க வாய்ப்பு உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான 10 சதவீத வரி வித்தியாசத்தை கருத்தில் கொண்டால், இவ்வாறு நடப்பதற்கான சாத்தியம் உள்ளது.
இதன் விளைவாகவும், சீனாவுடனான தனது வணிக ஒத்துழைப்பை இந்தியா வலுப்படுத்த விரும்பும்.
இந்தியாவும் சீனாவும் ஆசியாவின் இரண்டு பெரிய நாடுகள், இரண்டும் தங்களை பெருமை மிக்க நாகரிக நாடுகளாகக் கருதுகின்றன.
இரு நாடுகளும் இயற்கையாகவே போட்டியாளர்கள்.
ஆனால், இரு நாட்டு உறவில், சமீபத்தில் ஏற்பட்ட நேர்மறையான முன்னேற்றங்கள் மற்றும் பிற முனைகளில் உள்ள முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளுடன் இணைந்து, இந்த உறவு மேலும் நிலைத்தன்மையுடன் இருக்கக் கூடும்.
இது சீனாவுடனான உறவை மேம்படுத்தும் மோதியின் முயற்சிகளை வெற்று வார்த்தைகளாக இல்லாமல் அர்த்தமுள்ளதாக்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு