• Thu. Sep 18th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா தாக்கினால் செளதி அரேபியா பாகிஸ்தானுக்கு ஆதரவாக வருமா?

Byadmin

Sep 18, 2025


பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் செளதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், @Spa_Eng

படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் செளதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

செளதி அரேபியாவிற்கும், அணுசக்தி நாடான பாகிஸ்தானுக்கும் இடையே புதன்கிழமை பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

கத்தாரின் தலைநகரான தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு ராணுவ மோதல் நடந்த சில மாதங்களுக்கு பிறகு, இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது.

எனவே, இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் முக்கியமானது என்று கருதப்படுவது மட்டுமல்லாமல், இது மேற்கு ஆசியா மற்றும் தெற்காசியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் செப்டம்பர் 17 அன்று செளதி அரேபியா சென்றடைந்தார். செளதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஷெபாஸ் ஷெரீஃபிற்கு அழைப்பு விடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

கூட்டு அறிக்கையில், “பாகிஸ்தான் பிரதமர் மற்றும் செளதி அரேபிய பட்டத்து இளவரசர் ஒரு உத்தி ரீதியான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இரு நாடுகளும் எந்தவொரு தாக்குதலுக்கும் எதிராக ஒன்றிணைந்து செயல்படும். இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு எதிராக ஒரு தாக்குதல் நடந்தால், அது இரு நாடுகளுக்கும் எதிரானதாக கருதப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் செளதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், @Spa_Eng

இது ஏன் இந்தியாவுக்கு பின்னடைவு?

இத்தகைய சூழ்நிலையில், எதிர்காலத்தில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற நடவடிக்கையை எடுத்தால், செளதி அரேபியா பாகிஸ்தானுக்கு ஆதரவாக வருமா என்ற கேள்வி எழுகிறது.

செளதி அரேபியாவில் இந்தியாவின் முன்னாள் தூதராக இருந்த தல்மீஸ் அகமத்திடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது, “தற்போது இது இந்தியாவுக்குப் பெரிய பின்னடைவாகத் தெரியவில்லை. ஆனால், நீண்ட கால நோக்கில் பார்த்தால், இது இந்தியாவுக்கு எந்த வகையிலும் நல்லதல்ல” என்று கூறினார்.

“வளைகுடா நாடுகள் தங்கள் பாதுகாப்பிற்காக பாகிஸ்தான், துருக்கி மற்றும் சீனாவை நோக்கி திரும்புகின்றன. இந்த மூன்று நாடுகளும் இந்தப் பகுதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகிவிட்டன. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடந்தபோதும், இந்த மூன்று நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக அணி திரண்டன. எனவே, இது இந்தியாவுக்கு ஒரு பின்னடைவுதான்” என்று தல்மீஸ் அகமது கூறினார்.

தெற்காசியாவின் புவிசார் அரசியலில் ஆழ்ந்த கவனம் செலுத்தி வரும் மைக்கேல் குகெல்மன், எக்ஸ் தளத்தில், “பாகிஸ்தான் ஒரு புதிய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், இந்தியாவின் முக்கிய பங்குதாரராக இருக்கும் ஒரு நாட்டுடனும் இந்த ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியா பாகிஸ்தானைத் தாக்குவதைத் தடுக்காது. ஆனால், மூன்று முக்கியமான சக்திகளான சீனா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இப்போது ஒன்றாக இணைந்துவிட்டன. பாகிஸ்தான் இப்போது மிகவும் நல்ல நிலையில் உள்ளது” என்று எழுதினார்.

இந்த ஒப்பந்தம் குறித்து இந்தியாவின் வெளியுறவு அமைச்சகமும் கருத்து தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த ஒப்பந்தம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய மற்றும் உலக அமைதி மீது ஏற்படுத்தும் தாக்கத்தை நாங்கள் ஆய்வு செய்வோம். இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது, இந்தியாவும் தேசிய பாதுகாப்பு மீதான தாக்கத்தைப் பற்றிப் பேசுகிறது. இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல் இந்த நிலையை மிகவும் தீவிரமானதாகப் பார்க்கிறார்.

கன்வல் சிபல் எக்ஸ் தளத்தில், “இந்த ஒப்பந்தம் செளதி அரேபியாவின் நிதி பாகிஸ்தான் ராணுவத்தை வலுப்படுத்தப் பயன்படுத்தப்படும் என்பதைக் குறிக்கிறது. இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளுக்கு அணுசக்தி பாதுகாப்பை வழங்குவது பற்றி பாகிஸ்தான் வெளிப்படையாகப் பேசுகிறது” என்று எழுதினார்.

பாகிஸ்தான் மற்றும் செளதி அரேபியாவின் கூட்டணி புதியது அல்ல. ஆனால், தற்போதைய கூட்டணி இந்தியாவுக்கு அதிக பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் செளதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், @Spa_Eng

படக்குறிப்பு, செளதி அரேபியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான இந்த ஒப்பந்தம் இந்தியாவின் நலனுக்கு எதிரானது என்று கருதப்படுகிறது.

பாகிஸ்தான் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது

அமெரிக்காவின் டெலேவர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பேராசிரியராக இருக்கும் முக்ததர் கான், “இந்தியா பாகிஸ்தானைத் தாக்கினால், செளதி அரேபியா தனது துருப்புக்களை அனுப்பாமல் இருக்கலாம். ஆனால், அதன் வசம் பணம் உள்ளது. செளதி அரேபியா பாகிஸ்தான் ராணுவத்தை வலுப்படுத்த நிதி உதவி வழங்கும். செளதி அரேபியாவிடம் அமெரிக்க தொழில்நுட்பம் உள்ளது, அதை அது பாகிஸ்தானுக்கும் வழங்கும். இது பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஒரு பெரிய விஷயமாக இருக்கும். நிச்சயமாக, இது இந்தியாவுக்கு ஒரு பெரிய பின்னடைவு” என்று கூறுகிறார்.

“செளதி அரேபியா ஏன் இந்த ஒப்பந்தத்தைச் செய்தது என்ற கேள்வி எழலாம். ஆனால், அதற்குச் சரியான பதில்கள் உள்ளன. முதலாவது, வளைகுடா நாடுகள் இப்போது அமெரிக்காவை நம்பவில்லை. இரண்டாவது, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடந்தபோது பாகிஸ்தான் இந்தியாவின் தாக்குதலை மிகவும் வலுவாக எதிர்கொண்டது. இதனால், பாகிஸ்தான் ஒரு முக்கியமான நாடாக உருவெடுத்தது. தனது இடத்தைத் இழந்துவந்த பாகிஸ்தான் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மறுபுறம், இந்த பகுதியில் இந்தியாவின் தாக்கம் எங்கும் காணப்படவில்லை” என்று கூறுகிறார் முக்ததர்.

பிரதமர் மோதி பல ஆண்டுகளாக செளதியை கவர்ந்திழுக்க முயன்றார். ஆனால், அது பலனளிக்கவில்லை என்று உத்தி விவகார நிபுணர் பிரம்மா செலானி கருதுகிறார்.

செலானி எக்ஸ் தளத்தில், “மோதி பல ஆண்டுகளாக செளதி அரேபியாவை சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார். செளதியுடன் உறவுகளை ஒரு உத்திரீதியான கூட்டாளி நிலைக்குக் கொண்டு சென்றுள்ளார். இப்போது மோதியின் பிறந்தநாளில் செளதி பட்டத்து இளவரசர் ஒரு மோசமான ஆச்சரியத்தை அளித்துள்ளார். இப்போது செளதி மற்றும் பாகிஸ்தான் இரண்டில் ஒன்று தாக்கப்பட்டாலும், அது இருவரும் தாக்கப்பட்டதாகக் கருதப்படும்” என்று எழுதினார்.

அமெரிக்காவில் பாகிஸ்தானின் தூதராக இருந்த ஹுசைன் ஹக்கானி எக்ஸ் தளத்தில், “பாகிஸ்தான் இப்போது செளதி அரேபியாவின் பணத்தில், அதற்கு தேவையான அமெரிக்க ஆயுதங்களை வாங்க முடியும். ” என்று எழுதினார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் செளதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா-செளதி உறவுகளும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் – சௌதி அரேபியா இடையேயான நட்பு

சௌதி அரேபியாவின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத், 1998-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணு சோதனையை நடத்திய உடனேயே இஸ்லாமாபாத் சென்றடைந்தார்.

அவர் பாகிஸ்தானின் அணு மற்றும் ஏவுகணை தளங்களை பார்வையிட்டார். அப்போது அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தார்.

சௌதி இளவரசரின் இந்த பயணம் பலரது புருவங்களை உயர்த்தியது. அப்போது, நியூ யார்க் டைம்ஸிடம் பேசிய கிளிண்டன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், இந்த பயணம் சங்கடத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தானின் உயர் பாதுகாப்பு தளம் ஒன்றுக்கு வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் அழைத்துச் செல்லப்படுவது அதுவே முதன்முறை.

பாகிஸ்தான் கஹுட்டாவில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் வசதி மற்றும் கௌரியில் உள்ள ஏவுகணை தளத்தை சௌதி அமைச்சர் ஏன் சென்று பார்த்தார் என்பது அமெரிக்காவிற்கு தெளிவாக தெரியவில்லை.

இந்த பயணத்திற்கான நோக்கம் என்ன என்பதை பாகிஸ்தானோ அல்லது சௌதி அரேபியாவோ விளக்கவில்லை.

இந்த ஒப்பந்தம் இந்தியாவுடனான சௌதி அரேபியாவின் உறவுகளை எப்படி பாதிக்கும்?

“சௌதி அரேபியாவுடன் இந்தியாவுக்கு நல்ல உறவு உள்ளது, ஆனால் மேற்கு ஆசியாவுடனான அதன் உறவு வர்த்தகம் அளவிலேயே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் போன்று அல்லாமல் இந்தியா வளைகுடாவில் பாதுகாப்பு கூட்டாளியாக இல்லை.” என்றார் தல்மீஸ் அஹ்மது

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“மற்றொருபுறம், பாகிஸ்தான் துருப்புகள் சௌதி அரேபியாவில் உள்ளன. ஏமனுடனான எல்லையையொட்டி சௌதி அரேபியாவில் பாகிஸ்தான் துருப்புகள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவின் தலைமை உள்நாட்டு அரசியலில் ஆர்வத்துடன் இருப்பதாக நினைக்கிறேன். உலகம் முழுதும் பல விஷயங்கள் நடைபெறுகின்றன, ஆனால் அவற்றில் இந்தியா எங்கும் இல்லை.” என்றார் தல்மீஸ் அஹ்மது

வளைகுடா நாடுகளில் அமெரிக்கா மீதான அவநம்பிக்கை அதிகரித்து வருவதாக, மேற்கத்திய ஊடகங்களில் சொல்லப்படுகின்றது. அதன் விளைவாக, அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் பாதுகாப்புக்காக பாகிஸ்தான், சீனா, துருக்கி மற்றும் மற்ற நாடுகளை நோக்கிச் செல்கின்றன.

செப்டம்பர் 9 அன்று தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதையடுத்து, தங்கள் பாதுகாப்புக்காக அமெரிக்காவை நம்பலாமா என்பது குறித்து வளைகுடா நாடுகள் பெரிதும் கேள்வியெழுப்பி வருகின்றன.

பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய சௌதி அரேபிய அதிகாரி ஒருவர், “இந்த ஒப்பந்தம் பல ஆண்டுகால பேச்சுவார்த்தைகளின் விளைவால் நடந்தது. இது, எந்தவொரு குறிப்பிட்ட சம்பவம் அல்லது குறிப்பிட்ட நாடுக்கான விளைவாக பார்க்கக் கூடாது. இரு நாடுகளுக்கு இடையேயும் ஏற்கெனவே வலுவான உறவு உள்ளது.” என்றார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் செளதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் ஒரு முக்கியமான நாடாக உருவெடுத்து வருவதாகப் பல வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை

தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை வான்வழித் தாக்குதல் மூலம் இஸ்ரேல் கொல்ல முயற்சித்தது. இதனிடையே, கத்தாரின் உதவியுடன் இஸ்ரேல் சண்டை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையையும் நடத்திவருகிறது, இந்த முழு பிரச்னையிலும் கத்தார் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது.

இஸ்ரேலிய தாக்குதல்களால் மேற்கு ஆசியா மிகவும் சிக்கலாக மாறியுள்ளது. மேற்கு ஆசியாவில் அமெரிக்கா நீண்ட காலமாக பாதுகாப்பை உறுதிசெய்யும் நாடாக உள்ளது, ஆனால் இஸ்ரேலிய தாக்குதல்களால் இது பலவீனமாகியுள்ளது.

அமெரிக்க செய்தி நிறுவனமான சிஎன்என்-யிடம் பேசிய சௌதி அரேபியாவின் மூத்த அதிகாரி, அடையாளத்தை வெளியிடாமல் பேசியபோது, “இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகளில் சமநிலையை பேணுவதற்கான அவசியம் உள்ளது, இரு நாடுகளுமே அணுசக்தி நாடுகள்.” என்றார்.

“இந்தியாவுடனான உறவு இப்போது இருப்பதைப் போன்று எப்போதும் வலுவாக இருந்ததில்லை. இந்த உறவை நாங்கள் மேலும் வலுப்படுத்துவோம், பிராந்திய அமைதிக்காக ஒன்றாக செயல்படுவோம்,” என அவர் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, சௌதி அரேபியாவுக்கு அணுசக்தி பாதுகாப்பையும் பாகிஸ்தான் வழங்குமா என்ற கேள்விக்கு, “இது மிகவும் விரிவான பாதுகாப்பு ஒப்பந்தம், இது எல்லாவற்றையும் உள்ளடக்குகிறது” என கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin