பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
துருக்கி யுக்ரேனுக்கு ட்ரோன்களை வழங்குகிறது, அதே நேரத்தில் ரஷ்யாவிலிருந்து எரிசக்தியையும் வாங்குகிறது.
துருக்கி நேட்டோ உறுப்பினராகவும் இருக்கிறது, பிரிக்ஸ் உச்சிமாநாட்டிலும் கலந்துகொள்கிறது.
மேலும், இஸ்ரேலை வெளிப்படையாக எதிர்க்கும் துருக்கி, சிரியாவில் அமெரிக்க ஆதரவு பெற்ற குர்திஷ் படைகளையும் தாக்கி வருகிறது.
ரஷ்யாவுக்கு எதிரான மேற்கத்திய பொருளாதாரத் தடைகளில் துருக்கி சேரவில்லை. மாறாக, பில்லியன் டாலர் மதிப்பில் ரஷ்யாவிலிருந்து எண்ணெயை வாங்கி வருகிறது.
இவ்வளவு விஷயங்களை ஒரே நேரத்தில் நிர்வகித்தாலும், அதிபர் எர்துவான் மீது டிரம்ப் கோபப்படவில்லை.
முந்தைய பதவிக்காலத்தில் இரானுக்குக் கடுமையான தடைகள் விதித்த டிரம்ப், அந்தத் தடைகளை மீறிய துருக்கிய வங்கிக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதையும் தாமதப்படுத்தினார்.
இந்தியாவும் உத்தி சார்ந்த சுயாட்சி என்ற கொள்கையின் கீழ் ரஷ்யாவிலிருந்து எண்ணெயை வாங்குகிறது. இந்தியா குவாட் கூட்டமைப்பிலும் இருக்கிறது, அதே சமயம் பிரிக்ஸிலும் இருக்கிறது. ஆனால் இங்கு டிரம்பின் அணுகுமுறை முற்றிலும் வேறு.
2025 ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பல முடிவுகளை டிரம்ப் எடுத்துள்ளார்.
இந்தியாவுக்கு 50% வரி விதித்துள்ள அமெரிக்கா, துருக்கிக்கு 15% மட்டுமே வரி விதித்துள்ளது.
எர்துவானைப் பாராட்டிய டிரம்ப்
பட மூலாதாரம், Getty Images
துருக்கி அதிபர் ரசீப் தய்யீப் எர்துவான் , 2019 க்கு பிறகு முதல் முறையாக அமெரிக்காவுக்கு இருதரப்புப் பயணமாக வருகிறார். அவர் கடைசியாக 2019 இல் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் வெள்ளை மாளிகைக்குப் பயணம் செய்தார்.
ஜோ பைடனுடனான எர்துவானின் உறவு சீராக இல்லை. பைடன், எர்துவானை அடிக்கடி எதேச்சதிகார ஆட்சி நடத்துவதாக விமர்சித்தார். ஆனால் டிரம்ப், அதிபராகப் பதவி ஏற்பதற்கு முன்பு இருந்தே எர்துவானைப் புகழ்ந்து வருகிறார்.
2012 இல் இஸ்தான்புல்லில் டிரம்ப் டவரின் திறப்பு விழாவில், டிரம்ப் எர்துவானை, ‘உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறார், மிகவும் நல்ல மனிதர், துருக்கி மக்களை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்துகிறார்’ என்று பாராட்டினார்.
அதிபராகப் பதவியேற்ற பிறகும், எர்துவானை தனது நண்பர் என்றும் சிறந்த தலைவர் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். பிரதமர் மோதியையும் டிரம்ப் தனது நண்பர் எனக் கூறியிருந்தாலும், அந்த நட்பு இதுவரை இந்தியாவின் நலன்களை காப்பாற்ற உதவவில்லை.
ஆனால், டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் அமெரிக்கா, நேட்டோ கூட்டாளி துருக்கியை எஃப்-35 போர் விமானத் திட்டத்தில் இருந்து விலக்கியது. காரணம், துருக்கி ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்கியிருந்தது. இது அமெரிக்காவை அதிருப்தியடையச் செய்தது.
வரும் செப்டம்பர் 25 அன்று எர்துவான் வெள்ளை மாளிகைக்கு வந்து டிரம்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார்.
செப்டம்பர் 19 அன்று, டிரம்ப் ட்ரூத் சோஷியலில் இதை அறிவித்து, “துருக்கி அதிபருடன் பல்வேறு வணிக மற்றும் ராணுவ ஒப்பந்தங்களில் பணிபுரிந்து வருகிறோம். இதில் போயிங் விமானங்கள் வாங்குதல், எஃப் -16 ஒப்பந்தம் ஆகியவை அடங்கும்.எஃப் -35 பற்றிய பேச்சுவார்த்தைகளும் தொடரும். அனைத்தும் நேர்மறையாக அமையும் என நம்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.
இந்தியா மீது கடுமை, துருக்கி மீது மென்மை
பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில், அதிநவீன ஜெட் விமானங்கள் குறித்து டிரம்புடன் ஒரு உடன்பாட்டை எட்டியதாக எர்துவான் ஜூலை மாதம் கூறினார். டிரம்பின் பதவிக்காலத்தில் எஃப் -35 விநியோகங்கள் படிப்படியாகத் தொடங்கும் என்றும் எர்துவான் கூறினார்.
ஐசிஐஎஸ் ஆலோசனை நிறுவனத்தின் மூத்த எரிசக்தி ஆய்வாளரான ஆரா சபாடாக், செப்டம்பர் 15 அன்று தி பொலிட்டிக்கோ (The Politico) விடம், கடந்த ஆண்டு துருக்கி தனது மொத்த எரிவாயு இறக்குமதியில் 41 சதவிகிதத்தை ரஷ்யாவிலிருந்து வாங்கியதாகத் தெரிவித்தார்.
எண்ணெய் இறக்குமதியை நிறுத்துமாறு நேட்டோவிடம் டிரம்ப் வேண்டுகோள் விடுத்த போதிலும், துருக்கி தனது எண்ணெய் இறக்குமதியில் 57% ரஷ்யாவிலிருந்து பெறுவதாக கேப்லெர் கம்மோடிடிஸின் (Kpler Commodities) கச்சா எண்ணெய் ஆய்வாளர் ஹுமாயுன் ஃபாலக்ஷாஹி பொலிட்டிகோவிடம் தெரிவித்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், டிரம்ப் ஏன் இந்தியாவைப் போல எர்துவானிடம் கண்டிப்புடன் இல்லை என்ற கேள்வி எழுகிறது.
துருக்கி அதன் உத்தி சார்ந்த இருப்பிடத்தின் காரணமாக உலகளவில் ஒரு முக்கியமான நாடு.
இதன் விளைவாக, இது ஒரு முக்கிய நேட்டோ நட்பு நாடாகக் கருதப்படுகிறது. கருங்கடலுக்கான அணுகலை துருக்கி கட்டுப்படுத்துகிறது. ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே ஒரு உத்தி சார்ந்த பாலமாகவும் துருக்கி கருதப்படுகிறது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் அஸ்வினி மகாபத்ரா கூறுகையில், “துருக்கியின் நிலைப்பாட்டை நேட்டோ புறக்கணிக்க முடியாது. அதனால் தான் எர்துவானின் தன்னிச்சையான போக்கை நேட்டோ பொறுத்துக்கொள்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை அப்படி இல்லை. இந்தியாவை கோபப்படுத்துவது அமெரிக்க நலனுக்கு எதிரானது என்று டிரம்ப் உணர்ந்திருந்தால், அவர் ஒருபோதும் 50 சதவிகித வரியை விதித்திருக்க மாட்டார்” என்கிறார்.
பேராசிரியர் மகாபத்ரா தொடர்ந்து கூறுகையில், “டிரம்பின் கூட்டாளிகள் யுக்ரேன் போரை மோதி போர் என்று அழைக்கின்றனர். துருக்கியும் சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகின்றன, ஆனால் அமெரிக்கா அவர்களைப் பற்றி ஒருபோதும் அப்படிச் சொல்லவில்லை. துருக்கி யுக்ரேனுக்கு ட்ரோன்களை வழங்கி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகிறது, ஆனால் யுக்ரேனுக்கோ ரஷ்யாவுக்கோ எர்துவான் மீது எந்த கசப்பும் இல்லை. இந்தச் சூழலில், இது எர்துவானுக்கான ஒரு வெற்றி” என்று குறிப்பிடுகிறார்.
துருக்கியின் முக்கியத்துவம்
பட மூலாதாரம், Getty Images
ரஷ்யா கூறியபடி எரிசக்தி இறக்குமதியை நிறுத்துவது துருக்கிக்கு சாத்தியமில்லை.
ஏற்கெனவே துருக்கியில் பணவீக்கம் வேகமாக உயர்ந்துள்ளது. இதற்குமேல் எரிசக்தி விலை அதிகரித்தால், மக்களிடையே அதிருப்தி அதிகரிக்கும். அதேசமயம், எர்துவான் இப்போதே அதிகாரத்தை விட்டு விலக விரும்பவில்லை.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மேற்கு ஆசிய ஆய்வு மையத்தின் முன்னாள் பேராசிரியர் ஏ. கே. பாஷா கூறுகையில், துருக்கி தனது இருப்பிடத்தால் மட்டுமல்ல, அதன் பெரிய ராணுவத்தாலும் நேட்டோவில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக ஒன்றாகச் செயல்பட்டால், துருக்கி நேட்டோவில் முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறுகிறார்.
“ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் ஒரே நேரத்தில் எர்துவானுக்கு அழுத்தம் கொடுத்தன. இருந்தாலும் அவர் எவருக்கும் சரணடையவில்லை. துருக்கியின் நலனுக்காக சாதகமான முடிவுகளை எடுத்தார். பைடன் அவரைச் சந்திக்கவே இல்லை. ஆனால் டிரம்ப் வந்ததும் நிலைமை எர்துவானுக்கு சாதகமாக மாறியது. டிரம்ப் குடும்பத்திற்கு இஸ்தான்புல்லில் வணிகம் உள்ளது. இந்தியாவும் டிரம்ப் வந்தால் நமக்கு ஆபத்து இல்லை என்று நினைத்தது. ஆனால் அது தவறான கணிப்பு.”
“துருக்கி அஜர்பைஜானின் குழாய் வழியாக இஸ்ரேலுக்கு எண்ணெய் அனுப்புகிறது. அதேசமயம், இஸ்ரேலை விமர்சிக்கிறது. எர்துவான் யாருடைய கட்டுப்பாட்டையும் ஏற்கவில்லை. சமீபத்திய ஆண்டுகளில் எல்லா சிக்கல்களையும் திறமையாக சமாளித்துள்ளார். சிரியாவில் பஷர் அல்-அசத் அரசாங்கம் அவருக்கு ஒரு பிரச்னையாக இருந்தது. ஆனால் இப்போது அதுவும் இல்லை. இந்தியாவுக்கு பல சிக்கல்கள் இருக்கின்றன. அதில் பெரிய பிரச்னை பாகிஸ்தான். இந்தியா தன்னிச்சையாக முடிவெடுக்கிறது என்று அமெரிக்கா நினைத்தவுடனே, அது பாகிஸ்தானைப் பயன்படுத்தத் தொடங்குகிறது. டிரம்ப் இப்போது அதைத்தான் செய்கிறார்”என்று பேராசிரியர் பாஷா கூறுகிறார்.
அதிபர் எர்துவான் மீதான டிரம்பின் தாராளவாத அணுகுமுறை குறித்து பேராசிரியர் மகாபத்ரா பெரிதாக ஆச்சரியப்படவில்லை.
மேற்கத்திய நாடுகளிடமிருந்து எர்துவானுக்கு அதிக கவனம் கிடைக்காத போதெல்லாம், அவர் ரஷ்யா மற்றும் இஸ்லாமிய நாடுகளை நோக்கித் திரும்புவார் என்று அவர் கருதுகிறார்.
எர்துவான் கொள்கையின் வெற்றி
பட மூலாதாரம், Getty Images
“டிரம்ப் கொடுக்கும் கவனத்தை துருக்கி உடனே ஏற்றுக்கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் துருக்கியைச் சேர்க்கவில்லை. பைடனுக்கும் எர்துவானைப் பிடிக்கவில்லை. அதனால் எர்துவான் ரஷ்யாவுடனான உறவை அதிகரித்தது இயல்பானது”என்கிறார் பேராசிரியர் மகாபத்ரா.
“அமெரிக்காவுடன் புதிய எரிசக்தி ஒப்பந்தம் கையெழுத்திட துருக்கி தயாராகி வருகிறது. பொருட்கள் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்காவுடன் உறவை வலுப்படுத்த விரும்புகிறது. புதிய ஒப்பந்தத்தின் கீழ், துருக்கி அமெரிக்காவிடமிருந்து கூடுதலாக எல்என்ஜி வாங்க வாக்குறுதி அளிக்கலாம்”என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் இன்ஸ்டிட்யூட்டின் துருக்கிய ஆய்வு திட்ட இயக்குநர் சோனர் காகப்டே, “ஒட்டோமானில் ஒரு சுல்தான்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
அதில் அவர்,
“அதிகாரத்தில் இருந்த காலத்தில், எர்துவான் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட வகையில் தன்னை வலுப்படுத்திக் கொண்டார். இராக், சிரியா மற்றும் லிபியாவில் அவர் பயனுள்ள ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு, துருக்கியின் அரசியல் சக்தியை வெளிப்படுத்தினார். துருக்கி ஒரு ராஜீய சக்தியாக மாறத் தவறிய இடத்தில், அதன் ராணுவ வலிமை அதற்கு ஈடுசெய்தது”என்று எழுதியுள்ளார்.
2021 செப்டம்பரில், எர்துவான் ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்ற நியூயார்க் சென்றார். அப்போது அமெரிக்க அதிபர் பைடனைச் சந்திக்க விரும்பினார். ஆனால் சந்திப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால் எர்துவான் கோபமடைந்து, ரஷ்ய அதிபர் புதினைச் சந்திக்கச் சென்றார்.
நிக்கி ஆசியாவிடம் பேசிய முன்னாள் அமெரிக்க ராணுவ அதிகாரி ரிச் ஓட்சன், எர்துவானின் வெளியுறவுக் கொள்கை பற்றி கூறுகையில், “துருக்கி நான்கு திசை சமநிலையைப் பேணும் கொள்கையைக் கொண்டுள்ளது. மேற்கில் ஐரோப்பா, தெற்கில் இஸ்லாமிய உலகம், கிழக்கில் யூரேசியா, வடக்கில் ரஷ்யா. எங்கு அச்சுறுத்தல் இருந்தாலும், எர்துவான் மறுபுறம் திரும்பி சமநிலைப்படுத்துகிறார்”என்றார்.
ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஆட்டத்தில் துருக்கி பெரும்பாலும் சிக்கிக் கொள்கிறது என்று பலர் நம்புகிறார்கள். துருக்கி நீண்ட காலமாக இந்த வகையான விளையாட்டை விளையாடி வருவதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலும், துருக்கி இந்த விளையாட்டில் ரஷ்யாவுடன் சமரசம் செய்ய வேண்டியிருக்கும்.
புதினுடன் எர்துவானின் நட்பு
பட மூலாதாரம், Getty Images
2016 ஜூலை 15 அன்று, துருக்கிய ராணுவத்தின் ஒரு பிரிவு எர்துவானைப் பதவியிலிருந்து அகற்ற முயன்றது.
2016 ஆம் ஆண்டு துருக்கியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு தோல்வியடைந்தபோது, அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருந்த இஸ்லாமிய அறிஞரான ஃபெத்துல்லா குலன் தான் இதற்குப் பின்னால் இருப்பதாக எர்துவான் உறுதியாக நம்பினார்.
குலெனை ஒப்படைக்க வேண்டும் என்று துருக்கி நீண்ட நாட்களாக அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்திருந்தாலும், அது ஒருபோதும் நிறைவேறவில்லை. இதனால் எர்துவானுக்கு அமெரிக்கா மீதான சந்தேகம் அதிகரித்தது. ஆனால், குலென் கடந்த ஆண்டு அக்டோபரில் இறந்துவிட்டார்.
இந்த சூழ்நிலையை ரஷ்யா முழுமையாக பயன்படுத்திக் கொண்டது என்று கூறப்படுகிறது.
“குலன் அமெரிக்காவில் வசித்து வந்தார் என்பதை புதின் நன்கு அறிந்திருந்தார். துருக்கியில் பலர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பின்னால் அமெரிக்கா இருப்பதாக விரைவாக நம்பினர்”என்று “எ சுல்தான் இன் ஒட்டோமான்” புத்தகத்தில் சோனர் காகப்டே புத்தகத்தில் எழுதியுள்ளார்.
“அந்த அரசியல் குழப்பத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களில் எர்துவானின் நெருங்கிய கூட்டாளிகள் சிலரும் இருந்தனர். அப்போது எர்துவானை தொடர்புகொண்ட முதல் உலகத் தலைவர் புதின் தான். அவர் எர்துவானை தனது சொந்த ஊரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கு வர அழைத்தார்”.
“அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உடனடியாக அழைக்கவில்லை. நான்கு நாட்களுக்குப் பிறகு தான் வாஷிங்டனில் இருந்து அழைப்பு வந்தது. அப்போதைய ஜான் கெர்ரிதான் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு மூன்று வாரங்கள் கழித்து எர்துவான் புதினைச் சந்திக்கச் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்குக்கு சென்றார்.
பின்பு, “புதினுடனான நெருங்கிய நட்பை விட்டுப் பிரிவது எர்துவானுக்கு எளிதாக இல்லை. இரு நாடுகளின் உறவுகளிலும் அதிகார ஏற்றத்தாழ்வு தெளிவாகத் தெரிந்தது. துருக்கி S-400 ஒப்பந்தத்திலிருந்து விலகினால், புதின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை தடுக்கலாம். இது துருக்கியின் பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எர்துவானின் சர்வதேச புகழையும் புதின் சேதப்படுத்தக்கூடும். ஆனால், அந்த புகழ் எர்துவானுக்கு துருக்கியில் நல்ல ஆதரவை ஏற்படுத்தியுள்ளது”என்று சோனர் ககாப்டே எழுதுகிறார்.
ஆனால், பல ஆய்வாளர்கள், எர்துவான் சிக்கலான அரசியல் மற்றும் சர்வதேச பிரச்சனைகளை சமாளிப்பதில் திறமையானவர் என்று நம்புகின்றனர். கடந்த இருபது ஆண்டுகளில் அவர் பல கடினமான சூழ்நிலைகளை சந்தித்து, இன்னும் வலிமையுடன் முன்னேறியுள்ளார்.
2003 க்கு முன்பு, துருக்கி பெரும்பாலும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. நவீன துருக்கியின் நிறுவனர் முஸ்தபா கெமால் அட்டாடுர்கே ராணுவத்தில் இருந்து வந்தவர்.
ராணுவம் துருக்கிய பொருளாதாரத்திலும் பெரும் செல்வாக்கு கொண்டிருந்தது. ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்வதும் சாதாரணமாக இருந்தது. ஆனால், இந்த நிலையை முடிவுக்குக் கொண்டுவந்தது எர்துவான் தான்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு