பட மூலாதாரம், Getty Images
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது தொடர்பாக அமெரிக்க நிர்வாகம் இந்தியா மீது குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறது.
இருப்பினும், இந்த அமெரிக்காவின் அதிருப்தி இந்தியா-ரஷ்யா உறவுகளை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ரஷ்யா சென்றிருக்கும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேசியுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வர உள்ளார்.
மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நிதியமைச்சர் ஸ்காட் பெசென்டை தொடர்ந்து தற்போது வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ ஆகியோர் இந்தியாவை விமர்சித்துள்ளனர்.
யுக்ரேன் போரில் இந்தியாவின் பங்கு இருப்பதாக விமர்சித்த நவாரோ, இந்தியாவுக்கு ரஷ்ய எண்ணெய் தேவை என்று கூறுவது “அபத்தமானது” என்று தெரிவித்தார்.
இந்தியா, ரஷ்ய எண்ணெய்யை வாங்கி லாபம் ஈட்டி வருவதாகவும், ரஷ்ய எண்ணெய்க்கு ஒரு “லாண்ட்ரோமேட்” (சுய சேவை சலவை மையம்) ஆக மாறிவிட்டதாகவும் கூறினார்.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகத்தையும் அதன் விலைகளையும் நிலைப்படுத்துவதற்காக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குமாறு அமெரிக்காவே இந்தியாவிடம் கூறியதாக ரஷ்யா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்திருக்கும் நிலையில், நவாரோவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மீண்டும் விமர்சனம்
பட மூலாதாரம், Getty Images
செய்தியாளர்களிடம் பேசிய நவாரோ, இந்தியாவுக்கு அதன் எரிசக்தி பாதுகாப்புக்காக ரஷ்ய எண்ணெய் தேவை என்று திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும், ஆனால் உண்மையில் இந்தியாவுக்கு அது தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
“உண்மையில், யுக்ரேனில் அமைதிக்கு வழி புது தில்லி (இந்தியா) வழியாகச் செல்கிறது. ஆனால், இந்தியா ரஷ்ய எண்ணெய்யை சுத்திகரிக்கும் ஒரு ‘லாண்ட்ரோமேட்’ ஆக மாறிவிட்டது. இதன் மூலம் இந்தியா லாபம் ஈட்டுவதோடு, மறைமுகமாக யுக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு நிதியுதவி செய்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது விதிக்கப்படும் வரிகளை இரட்டிப்பாக்குவதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 27க்கு மேல் நீட்டிக்க மாட்டார் என்று நவாரோ எச்சரித்தார்.
“இந்தியா எங்களிடம் பொருட்களை விற்று சம்பாதிக்கும் பணத்தில் ரஷ்ய எண்ணெய்யை வாங்குகிறது. பின்னர், சுத்திகரித்து பெரும் லாபம் ஈட்டுகிறது. ஆனால், ரஷ்யா அந்தப் பணத்தைப் பயன்படுத்தி மேலும் ஆயுதங்களை உருவாக்கி யுக்ரேனியர்களை கொல்கிறது. இதன் விளைவாக அமெரிக்காவில் வரி செலுத்துவோர் யுக்ரேனுக்கு கூடுதல் ராணுவ உதவி வழங்குவதற்கு கூடுதலாக தரவேண்டியிருக்கிறது. இது மூடத்தனம்,” என நவாரோ மேலும் கூறினார்:
“இந்தியா யுக்ரேனில் நடக்கும் ரத்தக்களரியில் தனது பங்கை ஏற்கத் தயாராக இல்லை. மாறாக, அது ஷி ஜின்பிங்குடன் நெருக்கமாகி வருகிறது. மக்களிடம் இந்தியாவுக்கு அனுதாபத்தைப் பெறும் நோக்கோடு இந்தியாவிலிருந்து வரும் பிரசாரத்துக்கு நான் பதிலளிக்க வேண்டியிருந்தது,” என நவாரோ மேலும் கூறினார்,
அவர் இந்தியாவின் தலைமைத்துவத் திறனைப் பாராட்டினாலும், அது தனது பாதையை மாற்ற வேண்டும் என்றும் கூறினார்.
“நான் இந்தியாவை விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோதி ஒரு சிறந்த தலைவர். ஆனால், இந்தியா செய்வது யுக்ரேனில் அமைதியைக் கொண்டுவரப் போவதில்லை. இந்தியா, உலகப் பொருளாதாரத்தில் தனது பங்கு என்னவென்று பார்க்க வேண்டும். இப்போது நீங்கள் (இந்தியா) அமைதியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, போரை இன்னும் நீட்டிக்கிறீர்கள்,” என அவர் கூறினார்.
இந்தியா மீது 50% வரி நிச்சயம்
பட மூலாதாரம், Getty Images
இந்தியா அதிக வரி விதிப்பதாக நவாரோ கூறினார். அதிக வரியுடன், வரி அல்லாத தடைகளையும் அமெரிக்கா விதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“அவர்களின் இறக்குமதி வரிகள் மிக அதிகமானவை—இவை ‘மகாராஜா இறக்குமதி வரிகள்.’ மேலும், அதிகமான இறக்குமதி அல்லாத தடைகளையும் அவர்கள் விதிக்கின்றனர். அமெரிக்காவுக்கு இந்தியாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது. இது அமெரிக்கத் தொழிலாளர்களுக்கும் வணிகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தியா எங்களிடம் பொருட்களை விற்று சம்பாதிக்கும் பணத்தில் ரஷ்ய எண்ணெய்யை வாங்குகிறது. இந்தியா வர்த்தகத்தில் எங்களை ஏமாற்றுவதால் நாங்கள் 25 விழுக்காடு இறக்குமதி வரியை விதிக்கிறோம், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால் மற்றொரு 25 விழுக்காடு வரி விதிக்கிறோம்,” என நவாரோ தெரிவித்தார்.
“ஆறு நாட்களில் இந்தியா மீது 50 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதை நீங்கள் பார்ப்பீர்கள்,” என நவாரோ தொடர்ந்து கூறினார்.
ஜெய்சங்கர் என்ன சொன்னார்?
பட மூலாதாரம், Getty Images
ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷ்ய எண்ணெய்யை மிக அதிக அளவில் வாங்குவது இந்தியா இல்லை என்றும், 2022க்குப் பிறகு ரஷ்யாவுடன் மிகப்பெரிய வர்த்தக வளர்ச்சி கொண்ட நாடும் இந்தியா இல்லை என்றும் கூறிய நிலையில் நவாரோவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் விலைகளும் விநியோகமும் நிலையாக இருக்க வேண்டும் என்பதற்காக, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்காவால் சொல்லப்பட்ட நாடு இந்தியா என ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜேய் லாவ்ரோவுடன் இணைந்து நடந்த செய்தியாளார் சந்திப்பின்போது ஜெய்சங்கர், “நாங்கள் ரஷ்ய எண்ணெய்யை மிக அதிகமாக வாங்குபவர்கள் இல்லை. அதிகம் வாங்குவது சீனா. நாங்கள் ரஷ்ய எரிவாயுவை மிக அதிகமாக வாங்குபவர்களும் இல்லை. உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் அது ஐரோப்பிய ஒன்றியமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்,” என தெரிவித்தார்.
“2022க்குப் பிறகு ரஷ்யாவுடன் மிக அதிக வர்த்தக வளர்ச்சி கொண்ட நாடு இந்தியா இல்லை. அவை தெற்கு நாடுகளாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த நிலையில், எங்கள் மீது இறக்குமதி வரி ஏன் விதிக்கப்படுகிறது என்று எங்களுக்குப் புரியவில்லை,” என இந்திய வெளியுறவு அமைச்சர் மேலும் கூறினார்.
50% இறக்குமதி வரி இந்தியாவுக்கு பிரச்னை
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது. இந்தியா தனது ஏற்றுமதியில் 18 விழுக்காட்டை அமெரிக்க சந்தைக்கு செய்கிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.2 விழுக்காடாகும்.
சில மதிப்பீடுகளின்படி, 50 விழுக்காடு இறக்குமதி வரியால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 முதல் 0.4 விழுக்காடு வரை குறையலாம். இதனால், இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆறு விழுக்காட்டுக்கு கீழே செல்லலாம்.
இதற்கிடையே, இந்தியாவும் சீனாவும் நெருக்கமாகி வருவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. நவாரோ தனது சமீபத்திய அறிக்கையில் இதற்காகவும் இந்தியாவை விமர்சித்தார்.
இந்த மாதம், பிரதமர் நரேந்திர மோதி எஸ்.சி.ஓ (SCO) கூட்டத்தில் பங்கேற்க சீனாவுக்குச் செல்கிறார். அமெரிக்கா இந்தியா மீது விதித்த இறக்குமதி வரிகளை சீனா விமர்சித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இந்த வாரம் இந்தியாவுக்கு வந்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரையும் பிரதமர் நரேந்திர மோதியையும் சந்தித்தார்.
இந்தியா பதிலடி தருமா?
பட மூலாதாரம், Getty Images
இந்தியா இதற்கு பதிலடி கொடுக்குமா என்ற கேள்வியும் வெளியுறவு வட்டாரங்களில் எழுப்பப்படுகிறது.
பார்க்லேஸ் ஆய்வை மேற்கோள் காட்டி வெளியான பிபிசி செய்தி ஒன்றில், இந்தியா பதிலடி நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும், இதுபோன்ற எடுத்துக்காட்டுகள் முன்பு பார்க்கப்பட்டுள்ளதால் அதை முற்றிலும் நிராகரிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
“2019இல், அமெரிக்கா எஃகு மற்றும் அலுமினியம் மீது இறக்குமதி வரி விதித்தபோது, இந்தியா ஆப்பிள் மற்றும் பாதாம் போன்ற பொருட்களுக்கு 28 விழுக்காடு இறக்குமதி வரி விதித்தது. இவற்றில் சில இறக்குமதி வரிகள் 2023இல் உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலையீட்டால் திரும்பப் பெறப்பட்டன,” என பார்க்லேஸ் ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது.
நவாரோவின் எச்சரிக்கை குறித்து நிபுணர்கள் கருத்து என்ன?
பட மூலாதாரம், Getty Images
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக நவாரோ வெளியிட்ட கருத்துக்கு நிபுணர்கள் பதிலளித்துள்ளனர்.
“ரஷ்யா மீதான தடைகள் இந்தியாவை அது செய்து வந்தவற்றைச் செய்வதிலிருந்து தடுக்கவில்லை. இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், தடைகளை மாற்றுங்கள். எல்லோரையும் ரஷ்ய எண்ணெய் வாங்குவதிலிருந்து தடுத்து நிறுத்துங்கள்,” என டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜான் போல்டன் கூறினார்.
“இது முற்றிலும் அபத்தமானது. முதலில், போருக்கு ரஷ்யாவே காரணம், அதற்கு சீனாவும் மற்ற நாடுகளும் உதவி செய்தன என கூறப்பட்டது. இப்போது, யுக்ரேன் போருக்கு யுக்ரேனே காரணம். இந்தியா இந்த போருக்கு உதவியது என்று கூறப்படுகிறது. இவர்கள் பல்வேறு நாடுகள் மீது போருக்கு பழியைச் சுமத்துவது, கடந்த 25 ஆண்டுகளாக இந்தியா-அமெரிக்க உறவை வலுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளை முற்றிலும் நாசப்படுத்தியுள்ளதி. இது இந்தியாவில் ஏற்கப்படவே மாட்டாது,” என மற்றொரு முன்னாள் ஆலோசகர் இவான் ஏ. ஃபைஜென்பாம் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு