இந்திய சமூக அமைப்பில், திருமணத்திற்கு மிக முக்கியமான பங்கு உள்ளது. திருமணம் என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் வாழ்க்கையில் அடைய வேண்டிய ஒரு முக்கியமான இலக்காகவே கருதப்படுகிறது, அதிலும் ஆண்களை விட பெண்களுக்கு இது தொடர்பான அழுத்தம் இன்னும் அதிகம் என்றே சொல்லலாம்.
இந்தியாவில் தனியாக வாழும் பெண்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளை மேற்கோள் காட்டி, தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை 7.14 கோடிகள் என்றும், இது இந்தியாவின் மொத்த பெண்களின் எண்ணிக்கையில் 12% என்றும் கூறப்பட்டுள்ளது.
‘அகாடமியா’ எனும் ஆய்விதழில் வெளியான அந்த ஆய்வுக்கட்டுரையில், 2001ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 5.12 கோடிகளாக இருந்தது என்றும், பத்தே ஆண்டுகளில் இது 39% உயர்ந்திருந்தாலும் கூட, இந்த சமூகம் தனித்து வாழும் பெண்களுக்கு தொடர்ந்து களங்கம் ஏற்படுத்துகிறது, ஏளனம் செய்கிறது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியிருக்க ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்பவர்களை, குறிப்பாக பெண்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது? அவர்கள் எதிர்கொள்ளும் சமூக அழுத்தங்கள் என்ன?
தனியாக வாழ்வதற்கும், தனிமையில் வாழ்வதற்குமான வித்தியாசம்
“திருமணம் செய்யாமல் இருப்பது மிகவும் பாவகரமான ஒரு செயல் போல இந்த சமூகம் கருதுகிறது. எனது படிப்பு, திறமை, நிதி நிலைமை, இதையெல்லாம் பார்க்காமல், திருமணம் செய்யவில்லை என்ற ஒரே காரணத்திற்காக என்னை குற்றவாளி போல நடத்துவது என்ன நியாயம்” என்று கேள்வி எழுப்புகிறார் ஜோதி ஷிங்கே (40 வயது).
மும்பையைச் சேர்ந்த ஜோதி, தற்போது உத்தராகண்ட் மாநிலத்தில், கடல்மட்டத்திலிருந்து 2,118 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சக்ரதா எனும் ஊரில், சொந்தமாக ஒரு தங்கும் விடுதி மற்றும் கஃபே நடத்தி வருகிறார்.
“இந்தியாவில் பெரும்பாலான திருமணமாகாத பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அனைத்தையும் நானும் எதிர்கொண்டேன், இப்போதும் எதிர்கொள்கிறேன். நான் சில வருடங்களுக்கு முன் டெல்லியில் பணிபுரிந்தபோது, தங்குவதற்கு வீடு கிடைக்கவில்லை.”
“திருமணமாகாத ஆண்களுக்குக்கூட வீடு கொடுப்போம், ஆனால் திருமணமாகாத பெண்களை நம்ப முடியாது என என்னிடம் வீட்டு உரிமையாளர் ஒருவர் நேரடியாகவே கூறினார். அதைக் கூறிவிட்டு, அவர் சிரித்ததை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை. அத்தனைக்கும் அப்போது நான் பிரபலமான தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில், நல்ல சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.” என்கிறார் ஜோதி.
வீடு தேடுவது தொடர்பாக தனக்குக் கிடைத்த மோசமான அனுபவங்கள் தான் சொந்தமாக ஒரு தங்கும் விடுதியைத் தொடங்க தன்னைத் தூண்டியதாக ஜோதி கூறுகிறார்.
தன்னிடம் இப்போதும் பலர் ‘எப்போது திருமணம்?’, ‘இப்படியே இருந்து என்ன சாதிக்கப் போகிறாய்?’, ‘உனக்கு ஏதும் குறை உள்ளதா?’ போன்ற கேள்விகளை எழுப்புவதாகவும், ஆனால் தான் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும் அவர் கூறுகிறார்.
“நான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்துகிறேன். சக்ரதா போன்ற இமயமலைக்கு அருகே இருக்கும் ஒரு அழகான ஊரில் நிம்மதியாக வாழ்கிறேன். விரைவில் ஒரு புதிய ஹோட்டலை தொடங்கப் போகிறேன். ஆனால், அதெல்லாம் கேள்வி கேட்பவர்களுக்குப் புரியாது. அவர்களைப் பொருத்தவரை, திருமணமாகாத பெண், பெண்ணே அல்ல” என்கிறார் ஜோதி.
இந்தியாவில் தனியாக வாழும் பெண்கள் குறித்த ஆய்வில், ‘சமூகத்தின் வழக்கமான பாலினம் சார்ந்த மரபுகளுக்கு எதிரானவர்களாக பார்க்கப்படும் அந்தப் பெண்கள், மகிழ்ச்சியற்றவர்களாக, முதிர்ச்சியற்றவர்களாக, சமூக ஓட்டத்தில் இருந்து விலகியவர்களாக, முழுமையற்றவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு ‘தனியாக வாழும் பெண்கள்’ எனக் குறிப்படுவது, 35 வயதுக்கு மேற்பட்ட நான்கு வகையான பெண்களை,
- துணையை இழந்த பெண்கள்
- விவாகரத்து பெற்ற பெண்கள்
- திருமணம் செய்துகொள்ளாத பெண்கள்
- கைவிடப்பட்ட/பிரிந்து வாழும் பெண்கள்
தனியாக வாழும் பெண்களுக்கு வாழ்க்கை குறித்த மிகவும் நேர்மறையான பார்வை இருந்தாலும், அவர்கள் நல்ல நிதி நிலையோடு இருந்தாலும், அவர்களை இந்த சமூகம் வாழ்க்கையில் தோற்றவர்களாகவே பார்க்கிறது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
“தனியாக வாழ்பவர்கள் மகிழ்ச்சியற்றவர்கள் என்ற எண்ணம் சமூகத்தில் உள்ளது. என்னிடமே அதை நிறைய பேர் கூறியிருக்கிறார்கள்” என்கிறார் ஜோதி.
தனியாக வாழ்வதற்கும், தனிமையில் வாழ்வதற்கும் வித்தியாசம் உள்ளது எனக் கூறும் அவர், “எனக்கும் அப்பா, அண்ணன், அண்ணி, அவர்களது பிள்ளைகள் என மும்பையில் பெரிய குடும்பம் உள்ளது. எந்த குடும்ப விழாவையும் தவற விடமாட்டேன். அதேபோல, சக்ரதாவிலும் எனக்கு பெரிய நண்பர்கள் கூட்டம் உள்ளது. நான் தனிமையில் இல்லை. மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன்” என்கிறார்.
‘வாழ்க்கை வெறுமையாக உள்ளது’
ஆனால், கோயம்புத்தூரைச் சேர்ந்த வினோத் குமாருக்கு (வயது 43- பெயர் மாற்றப்பட்டுள்ளது) இதில் மாற்றுக்கருத்து உள்ளது.
“நான் முடிந்தவரை குடும்ப விழாக்களை தவிர்க்கவே பார்ப்பேன், உறவினர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கூற முடியாது என்பதால். திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதை மிகப்பெரிய குற்றம் போல பார்க்கிறார்கள்.” என்கிறார்.
“எனக்கு ஒருநாளும் காய்ச்சல் அல்லது வேறு ஏதும் உடல்நலம் சார்ந்த பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பேன். அப்படியே வந்தாலும் யாரிடமும் சொல்ல கூச்சமாக இருக்கும். சொன்னால், இதற்கு தான் ‘காலா காலத்தில் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்’ என்று குத்திக்காட்டுவார்கள்” என்கிறார் வினோத்.
தனக்கு மனதில் திருமண ஆசை இருந்தும், ‘இனி திருமணம் செய்து என்ன செய்யப் போகிறாய்?’, ‘இனி குழந்தை பெற்று, அவர்களுக்காக எப்படி பணம் சேர்க்க முடியும்?’, ‘இனி எப்படி பெண் கிடைக்கும்?’ போன்ற கேள்விகள் தனக்குள் மிகப்பெரிய தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதாக வினோத் கூறுகிறார்.
“கேள்வி ஒவ்வொருவரிடமும் பதில் சொல்லி அலுத்து விட்டது. கேள்வி கேட்பவர்கள், அறிவுரை கூறுபவர்கள் நமக்காக எதையும் செய்ய மாட்டார்கள் என்பதையும் புரிந்துகொண்டேன். அதனால் அத்தகைய மனிதர்களை சந்திப்பதை தவிர்க்கிறேன். வாழ்க்கையில் ஒருவித வெறுமயை உணர்வதை தவிர்க்க முடியவில்லை” என்று கூறுகிறார் வினோத்.
திருமணம் செய்துகொண்டு வாழ்பவர்களோடு ஒப்பிடுகையில் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்பவர்கள் அதிக மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள் என்று ‘நேச்சர்’ அறிவியல் இதழில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்ஸிகோ, அயர்லாந்து, கொரியா, சீனா மற்றும் இந்தோனீசியா ஆகிய ஏழு நாடுகளில், 1,06,556 தன்னார்வலர்களிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில், குறிப்பாக விவாகரத்து பெற்றவர்கள் மனச்சோர்வால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 99% அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
தனியாக வாழ்பவர்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது?
தனியாக வாழ்பவர்கள் சந்திக்கும் பல சிக்கல்களுக்கு நம் சமூகத்தில் விடையே கிடையாது என்று கூறுகிறார் எழுத்தாளர் ராஜசங்கீதன்.
“குறிப்பாக தனியாக வாழ்பவர்கள், விவாகரத்து பெற்றவர்கள் அல்லது துணையை இழந்தவர்களின் பாலியல் தேவைகள் குறித்து இங்கு யாரும் பேசுவதில்லை. அதற்கு அவர்கள் முன்வைக்கும் தீர்வு, ‘திருமணம் செய்துகொள்’. திருமணம் என்பதைத் தாண்டி ஆண்-பெண் இடையே வேறு எந்த உறவும் இருக்கக்கூடாது என்பதில் இந்த சமூகம் கவனமாக இருக்கிறது” என்கிறார் அவர்.
ஒருவருக்கு திருமணத்தின் மீதோ அல்லது அதைச் சுற்றியுள்ள கடமைகள், கட்டுப்பாடுகள் மீதோ விருப்பம் இல்லை என்பதற்காக, அவருக்குத் துணையே இருக்கக்கூடாது அல்லது துணையை அவர் விரும்பவில்லை என்றோ அர்த்தமில்லை என்கிறார் எழுத்தாளர் ராஜசங்கீதன்.
“தனியாக வாழும் பெண்கள், ஏதேனும் ஆணிடம் பேசினால் அதை வேறு மாதிரியாக சித்தரிக்கும் வழக்கம் கிராமத்தில் மட்டுமல்ல நகரத்திலும் உள்ளது. பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக திருமணம் வேண்டாம் என்ற முடிவில் இருக்கும் ஒருவர் நட்பாகவோ, காதலாகவோ அல்லது பாலியல் தேவைக்காகவோ ஒருவருடன் பழகுவதற்கு இந்த சமூகத்தில் வாய்ப்பில்லை.” என்று கூறுகிறார் அவர்.
ஒரு பெண் அல்லது ஆண் தனியாக வாழ வேண்டும் என்ற முடிவை எடுப்பதற்கு அவர்கள் மட்டுமே காரணமாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்றும் குடும்ப பொறுப்புகள் அல்லது வேறு மாதிரியான சமூக அழுத்தங்கள் காரணமாகவும் அந்த முடிவை எடுக்கலாம் என்கிறார் ராஜசங்கீதன்.
“எத்தனையோ பேர் குடும்ப பாரங்கள் காரணமாக திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என முடிவெடுக்கிறார்கள். குடும்பத்தின் நிலையை ஓரளவு சரிசெய்துவிட்டு நிமிர்வதற்குள், அவர்கள் திருமணத்திற்கான வயது என இந்த சமூகம் நிர்ணயித்துள்ள கட்டத்தை கடந்துவிடுகிறார்கள். அவர்களின் தேவைகள் குறித்து இந்த சமூகத்திற்கு அக்கறை இல்லை.” என்று கூறுகிறார்.
தனியாக வாழ விரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் சூழலில், அவர்களை இந்த சமூகம் புறக்கணித்தால் அல்லது களங்கப்படுத்தினால், அது அவர்களை தீவிரமான மனச்சோர்வுக்குள் தள்ளும் அல்லது பல சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும் என்கிறார் ராஜசங்கீதன்.
சமூக அழுத்தங்களின் பாதிப்பு
“தனியாக வாழ்பவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும், ‘நீங்கள் இந்த சமூகத்தின் ஒரு அங்கம் அல்ல’ என்பது ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்படும். இது அவர்களுக்கு ஒரு வித குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தும்” என்கிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.
“இந்த கோவிலுக்கு செல்லுங்கள், அந்த பரிகாரம் செய்யுங்கள், மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என எத்தனையோ அறிவுரைகள் கிடைக்கும் அவர்களுக்கு. என்னிடம் சில பெற்றோர், ‘திருமணம் வேண்டாம்’ என்கிறார்கள், ஏதேனும் மனநலப் பிரச்னையா என பாருங்கள்’ என பிள்ளைகளை அழைத்து வருவார்கள். எல்லாம் ‘என் பக்கத்து வீட்டுக்காரர் என்ன நினைப்பாரோ’ என்ற பயத்தில் தான்.” என்கிறார் பூர்ண சந்திரிகா.
இப்படி சமூக அழுத்தங்களால் உந்தப்பட்டு, அவசர அவசரமாக திருமணம் செய்து தவறான துணையுடன் வாழ்க்கை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுக்கும் மனநல ஆலோசனை அளித்துள்ளதாக கூறுகிறார் அவர்.
“திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. நம் சமூகத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு மூடநம்பிக்கை, ‘திருமணம் செய்து வைத்தால், எல்லாம் மாறிவிடும்’ என்பது. அந்த நம்பிக்கை மாறாமல் எதுவும் இங்கு மாறாது.” என்கிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு