பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணியை பி.சி.சி.ஐ அனுப்ப மறுத்ததாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) முதல் பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து பி.சி.சி.ஐ தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இருப்பினும், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடாது என்று பி.சி.சி.ஐ தெரிவித்ததாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஐ.சி.சி தெரிவித்துள்ளது என பாகிஸ்தான் ஊடகங்களில் கூறப்படுகின்றன.
இந்த தகவலை ஐ.சி.சி எழுத்துப்பூர்வமாக பாகிஸ்தானுக்கு அளித்துள்ளதாகப் பாகிஸ்தான் ஊடகங்களில் கூறப்படுகின்றன.
இதனால், பாகிஸ்தான் மக்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், பாகிஸ்தான், இந்தியாவிற்கு கடும் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை அடுத்து பாகிஸ்தானும் இந்தியாவுடனான போட்டியில் விளையாடாது என பாகிஸ்தான் ஊடகங்களில் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன சொன்னது?
இதுகுறித்து பிபிசி உருது மொழிச் சேவையிடம் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) செய்தித் தொடர்பாளர் ஒருவர், “ஐ.சி.சி இந்தத் தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் ஞாயிற்றுக்கிழமை அனுப்பியது,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர முடியாது என்று பி.சி.சி.ஐ எழுத்துப்பூர்வமாக ஐ.சி.சி-க்கு தெரிவித்துள்ளது” என்றார்.
இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர மறுப்பது குறித்து ஜியோ செய்தி சேனலிடம் (Geo News) பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காஜா எம். ஆசிப், “பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், தெஹ்ரீக்-இ போன்ற அமைப்புகளை உள்ளடக்கியவர்களுடன் இந்தியா போரிட்டு வருகிறது என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இதில் பாகிஸ்தான் தாலிபன்களும் அடங்குவர்,” என்றார்.
மேலும், “துபாயில் போட்டி (Hybrid Model) நடத்துவது குறித்து நான் கருத்து தெரிவிக்கப்போவதில்லை. காஷ்மீர் பிரச்னை குறித்துப்பேச ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நான் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அப்போது அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் இருந்து அனைத்து இந்தியர்களும் தங்கள் பெயர்களை திரும்பப் பெற்றனர்,” என்றார்.
இந்தியாவின் கவலை
தங்கள் வீரர்களது பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை தெரிவித்து வருகிறது. 2009-ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவர்கள் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் ஹுசைன் ஹக்கானி இது பற்றிக் கூறும் போது, “தெற்காசியாவில் பிறந்து கிரிக்கெட்டைப் பின்பற்றாத சிலரில் நானும் ஒருவன். ஆனால் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட விரும்புகிறேன். பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணியை அனுப்புவதில்லை என இந்தியா முடிவு செய்துள்ளது. இது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இன்னும் மோசமாக இருப்பதையே காட்டுகிறது,” என்றார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பை சமூக ஊடகத்தில் குறிப்பிட்டு, “நிலைமையைச் சீரமைத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான போட்டிகள் நடைபெறுவதை உறுதி செய்வது பாகிஸ்தானின் பொறுப்பு,” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர் நௌமன் நியாஸ், தனது எக்ஸ் சமூக ஊடக பதிவில், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய அணியின் போட்டிகளை வேறு ஒரு பொதுவான இடத்தில் நடத்தும் ஹைபிரிட் மாடலுக்கு ஆதரவாக இல்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் எந்த ஒரு இடத்திலும், எந்த விதமான போட்டிகளையும் இந்தியாவுடன் விளையாட விரும்பவில்லை என்ற முடிவைப் பரிசீலித்து வருகிறது.
‘இந்தியாவுடன் பாகிஸ்தான் விளையாடாது’
பாகிஸ்தானின், கராச்சியைச் சேர்ந்த விளையாட்டுச் செய்தியாளர், ஃபைசன் லக்கானி, தனது எக்ஸ் தளப் பதிவில், “பாகிஸ்தானில் வந்து விளையாடுவதற்கு இந்தியா தயாராக இல்லை என்றால், பாகிஸ்தான் இந்தியாவுடன் எந்தப் போட்டியிலும் விளையாடாது என்று பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜியோ செய்தி சேனல், எந்தவொரு சர்வதேசப் போட்டியிலும் இந்தியாவுடன் விளையாட வேண்டாம் என்று பாகிஸ்தான் அரசு யோசித்து வருவதாக எழுதியுள்ளது.
சாம்பியன் டிராபி தொடர் போட்டிக்கான அட்டவணை, நவம்பர் 11-ஆம் தேதி அறிவிக்கப்பட இருந்தது, ஆனால் இப்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்போது ஐ.சி.சி இது குறித்து ஒரு முடிவெடுக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசி-யிடம் தெரிவித்தார்.
ஐ.சி.சி அட்டவணை
எந்தவொரு ஐ.சி.சி போட்டியின் அட்டவணையும் போட்டிக்கு 100 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும். இதனால் போட்டியை நடத்தும் நாடு, ஒளிபரப்பாளர்கள் மற்றும் மற்ற அமைப்பினர் தங்களை தயார் செய்து கொள்ள போதுமான கால அவகாசம் கிடைக்கும்.
இந்தச் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைத் தவிர, வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் இடம்பெறாத காரணத்தால் இலங்கை அணி இந்த தொடரில் பங்கேற்காது.
2023-ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை பாகிஸ்தானில் நடைபெற இருந்தது, ஆனால் இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்ததையடுத்து, பல போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டன. ஆனால், 2025 சாம்பியன்ஸ் டிராபி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.