படக்குறிப்பு, இந்தியா – பாகிஸ்தான் பற்றி ஐ.நா உரையிலும் குறிப்பிட்டு பேசினார் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டுமொரு முறை இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை தான் நிறுத்தியதாகப் பேசியுள்ளார்.
ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பேசிய டிரம்ப் இந்தியா – பாகிஸ்தான் மோதல் உட்பட உலகம் முழுவதும் ஏழு போர்களைத் தான் முடிவுக்குக் கொண்டு வந்ததாகத் தெரிவித்தார்.
டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபரான பிறகு தற்போதுதான் ஐநாவில் உரையாற்றுகிறார். 15 நிமிடங்கள்தான் அவருக்கு ஒதுக்கப்பட்ட போதும் 1 மணி நேரத்துக்கும் மேலாக அவரது உரை நீடித்தது.
டிரம்ப் தனது உரையில் கிட்டத்தட்ட அனைத்து தரப்பினரையும் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா, இந்தியா, சீனா என எந்தத் தரப்பும் டிரம்பின் விமர்சனக் கணையிலிருந்து தப்பவில்லை. லண்டன் மேயர் சாதிக் கான் பற்றி டிரம்ப் தெரிவித்த கருத்தும் சர்ச்சையான நிலையில் பிரிட்டன் கடுமையான எதிர்வினையாற்றியுள்ளது.
இந்தியா பற்றி என்ன கூறினார் டிரம்ப்?
ரஷ்யா – யுக்ரேன் இடையேயான போருக்கு இந்தியாவும் சீனாவும்தான் நிதியுதவி செய்வதாகக் கூறினார் டிரம்ப்.
“அவர்கள் மட்டுமல்ல, சில நேட்டோ நாடுகளும் ரஷ்ய எண்ணெய் மற்றும் பொருட்களை வாங்குவதை முழுமையாக நிறுத்த முடியாதது அவமானகரமானது. இரண்டு வாரங்களுக்கு முன்புதான் இதைப்பற்றி தெரிந்து கொண்டேன், நான் மகிழ்ச்சியாக இல்லை. தங்களுக்கு எதிரான போருக்கு அவர்களே நிதியுதவி செய்கிறார்கள். இதற்கு முன்பு இது போல் நடந்ததில்லை,” என்றார்.
அதே போல் இந்தியா – பாகிஸ்தான் போர் உட்பட ஏழு போர்களை தான் நிறுத்தியதாகக் கூறும் டிரம்ப் இத்தகைய செயல் நோபல் பரிசுக்கு உரித்தானது என்றும் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
ரஷ்யா சமரசத்திற்கு தயாராக இல்லை
யுக்ரேன் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வர புதின் மறுப்பது ரஷ்யாவை நல்ல தோற்றத்தில் பிரதிபலிக்கவில்லை என்றார் டிரம்ப்.
ரஷ்யாவை கடுமையாக விமர்சித்து பேசிய டிரம்ப், “போரை முடிவுக்குக் கொண்டு வர சமரசம் செய்து கொள்ள ரஷ்யா தயாராக இல்லையென்றால் மேலும் கடுமையான வரிகளை விதிக்க அமெரிக்க தயாராக உள்ளது. இது போரை முடிவுக்குக் கொண்டு வரும் என நான் உறுதியாக இருக்கிறேன். ஆனால் இந்த வரிகளை முழுமையாக செயல்படுத்த ஐரோப்பிய நாடுகளும் இத்தகைய நடவடிக்கைகளில் எங்களுடன் இணைய வேண்டும்.” என்று தெரிவித்தார்.
டிரம்ப் தனது உரைக்குப் பிறகு வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், யுக்ரேன் போரில் இழந்த பகுதிகளை மீட்கும் நிலையில் இருக்கலாம் எனக் குறிப்பிட்டார். நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் யுக்ரேன் இதனைச் செய்யும் என டிரம்ப் கூறியுள்ள நிலையில் அமெரிக்காவின் தலையீடு பற்றி அவர் பேசவில்லை.
அமெரிக்காவில் வலுவான பொருளாதாரம், எல்லைகள், ராணுவ வலிமை மற்றும் கூட்டணிகள் உள்ளது என சாதனைகள் மற்றும் பலங்களைப் பட்டியலிட்ட டிரம்ப், இதை ‘அமெரிக்காவின் பொற்காலம்’ எனக் குறிப்பிட்டார்.
சாதிக் கானை குறிவைத்த டிரம்ப்
லண்டனின் மாநகரின் முதல் முஸ்லிம் மேயராக லேபர் கட்சியின் சாதிக் கான் உள்ளார். ஐ.நா உரையில் ஐரோப்பாவின் புலம்பெயர்வோர் சிக்கலையும், சாதிக் கானையும் கடுமையாக சாடிய டிரம்ப், அவர் லண்டனில் ‘ஷரியா சட்டத்தை’ கொண்டு வர விரும்புவதாகவும் தெரிவித்தார். இதற்கு முன்னரும் பல முறை டிரம்ப் சாதிக் கானை குறிவைத்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“லண்டனில் மிக மோசமாக மேயர் உள்ளார். லண்டன் முழுமையாக மாறிவிட்டது. அவர்கள் ஷரியா சட்டத்திற்கு செல்ல விரும்புகிறார்கள். லண்டன் தனி நாடு போல ஆகிவிட்டது, நீங்கள் அதைச் செய்ய முடியாது.” எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக பிரிட்டன் சென்றிருந்த டிரம்ப் அப்போதும் சாதிக் கானை குறிவைத்து பேசியிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, லண்டன் மேயர் சாதிக் கானை பல வருடங்களாக குறிவைத்து பேசி வருகிறார் டிரம்ப்.
“உலகின் மிக மோசமான மேயர்களில் சாதிக் கானும் ஒருவர். அவர் மோசமாக பணி செய்துள்ளார். லண்டனில் குற்றம் உச்சத்தில் இருக்கிறது. என்னுடைய விருந்திற்கு அவர் வர விரும்புகிறார். ஆனால் அவர் வர வேண்டாம்.” என அப்போது தெரிவித்திருந்தார்.
ஷரியா சட்டம் பற்றி இது வரை சாதிக் கான் எங்குமே குறிப்பிடாத நிலையில் டிரம்பின் கருத்துக்கு பிரிட்டன் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது.
பிரிட்டன் சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் டிரம்பின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். “ப்ரைட் பேரணிகளில் கலந்து கொள்ளும் மேயர் இவர், பன்மைத்துவமான பார்வைகளுக்கும் கருத்துகளுக்கும் ஆதரவானவர். எங்களின் போக்குவரத்து, காற்றின் தரம், சாலைகள், பாதுகாப்பு மற்றும் புதிய வாய்ப்புகளை மேம்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். அவரை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்.” என தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
லண்டன் மேயர் அலுவலகமும் டிரம்பின் கருத்து தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“அவரின் வெறுப்பான மற்றும் குறுகிய எண்ணம் கொண்ட கருத்துகளுக்குப் பதிலளித்து அவற்றுக்கு மதிப்பளிக்க நாங்கள் விரும்பவில்லை. லண்டன் உலகின் சிறப்பான நகரங்களில் ஒன்று, பல அமெரிக்க நகரங்களை விடவும் பாதுகாப்பான நகரமாக உள்ளது,” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உங்கள் நாடுகள் நரகத்திற்குச் செல்கின்றன”
பட மூலாதாரம், Getty Images
ஐரோப்பிய நாடுகளையும் ஐக்கிய நாடுகள் சபையையும் கடுமையாக சாடி பேசினார் டிரம்ப். ஐநா கூட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் பற்றியும் குறைபட்டுக் கொண்டார். தான் வந்த நகரும் படிகட்டுகளும் டெலிபிராம்டரும் வேலை செய்யவில்லை என்றார் அவர்.
தான் ஏழு போர்களை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தியபோது ஐநா அவருடன் இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.
“இஸ்ரேல் – இரான், இந்தியா – பாகிஸ்தான், ருவாண்டா – காங்கோ, தாய்லாந்து – கம்போடியா, அர்மேனியா – அஸர்பைஜான், எகிப்து – எத்தியோப்பியா, செர்பியா – கொசோவோ என நிறுத்தவே முடியாத ஏழு போர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. எந்த அதிபரும் இதைச் செய்ததில்லை. இந்தப் போர்களை நிறுத்த ஐ.நா எதுவுமே செய்யவில்லை.” என்றார் டிரம்ப்
ஐநாவின் நோக்கம் பற்றி கேள்வி எழுப்பிய டிரம்ப், அதன் திறனை அடைவதற்கு நெருக்கமாகக் கூட அவர்கள் வரவில்லை. அதன் வெற்று வார்த்தைகள் போர்களை முடிவுக்குக் கொண்டு வராது எனத் தெரிவித்தார்.
திறந்த எல்லைகள் என்கிற தோல்விகரமான முயற்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனக் கூறிய டிரம்ப் ஐரோப்பிய நாடுகள் நரகத்திற்குச் செல்வதாகவும் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய சிறைகளில் வெளிநாட்டு கைதிகள் தான் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார் டிரம்ப். ஜெர்மன் சிறைகளில் உள்ள 50% கைதிகள் வெளிநாட்டினர். அதே போல் ஆஸ்திரியா (53%), கிரீஸ் (54%) மற்றும் அழகான சுவிட்சர்லாந்தில் (72%) வெளிநாட்டு கைதிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.