இந்தியாவும் பாகிஸ்தானும் அதிக எண்ணிக்கையில் ராணுவ ஆளில்லா விமானங்களின் (ட்ரோன்) இருப்பை தங்கள் படையில் அதிகரித்து வருகின்றன.
இரு நாடுகளும் வெளிநாடுகளில் இருந்து ஆளில்லா விமானங்களை வாங்கியுள்ளன. கூடவே விமானி இல்லாமலேயே எதிரியை கண்காணிப்பது, உளவு பார்ப்பது அல்லது இலக்குகளை குறிவைப்பது போன்ற திறன்கள் அடங்கிய இந்த தொழில்நுட்பத்தை தாங்களே உருவாக்கியும் உள்ளன.
ஆசியாவின் மூன்று அணுசக்தி கொண்ட அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனாவும் தங்கள் ராணுவத் திறனை மேம்படுத்தும் பொருட்டு விமானிகள் இல்லாமல் பறக்கும் ட்ரோன்களைப் பயன்படுத்துவதில் ஒரு எழுச்சியைக் கண்டுள்ளன.
ராணுவத்தில் பெரிய அளவில் ட்ரோன்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், போர் முறை மாறியுள்ளதாகவும், ஏதேனும் சண்டை அல்லது மோதல் ஏற்பட்டால், ட்ரோன்களின் பயன்பாடு மிக அதிகமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த நாடுகளில் பெரும் எண்ணிக்கையில் ட்ரோன்கள் இருப்பதாகவும், ஒருவர் மற்றவரை உளவு பார்ப்பதிலும், கண்காணிப்பதிலும் அதன் பயன்பாடு அதிகரித்து வருவது எதிர்காலத்தில் மோதலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பரம்பரை எதிரிகளாகக் கருதப்படும் அண்டை நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் எந்த வகையான ட்ரோன்கள் உள்ளன என்பதையும், எந்த வகையான ஆளில்லா வான்வழி வாகனங்கள் (யுஏவி) பயன்பாடு சமீப காலமாக அதிகரித்துள்ளது என்பதையும் இங்கே நாம் விரிவாகப் பார்ப்போம்.
பாகிஸ்தானை விட இந்தியாவில் ட்ரோன்கள் அதிகம்
ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் அதிக உயரத்தில் நீண்ட நேரம் பறக்கக்கூடியவை மற்றும் ரேடாரில் சிக்காமல் தரையில் நடக்கும் ராணுவ நடவடிக்கைகள், படைகளின் இருப்பு, முக்கியமான ஆலைகள், புதிய கட்டுமானம் மற்றும் ராணுவ தளங்கள் போன்றவற்றை திறம்பட கண்காணிக்கும் மற்றும் குறிப்பிட்ட இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவை ஆகும்.
ஒரு ராணுவ ட்ரோன் மூன்று அடிப்படை செயல்பாடுகளை செய்ய முடியும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
• கண்காணிப்பு மற்றும் எதிராளியின் செயல்பாடுகளை கண்டறிவது
• உளவு பார்ப்பது, அதாவது ஆயுதங்கள் அல்லது துருப்புக்கள் எங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்பதை அறிவது.
• இலக்குகளை குறிபார்த்து அழிப்பது.
பல ட்ரோன்கள் இந்த மூன்றையும் செய்கின்றன, ஆனால் சில ட்ரோன்கள் வரையறுக்கப்பட்ட திறன்களைக் கொண்டுள்ளன.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவத் திறனை ஆளில்லா விமானங்களின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்தால், சமீப காலமாக இரு போட்டி நாடுகளும் அதை அதிகரித்திருப்பது தெரிய வருகிறது.
இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ட்ரோன்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதாக பாதுகாப்பு விவகார ஆய்வாளர் ராகுல் பேடி பிபிசியிடம் தெரிவித்தார்.
அடுத்த இரண்டு முதல் நான்கு ஆண்டுகளில் இந்தியாவிடம் சுமார் ஐயாயிரம் ட்ரோன்கள் இருக்கும் என்று அவர் மதிப்பிடுகிறார்.
பாகிஸ்தானிடம் இந்தியாவை விட குறைவான ஆளில்லா விமானங்கள் இருந்தாலும்கூட பாகிஸ்தானிடம் இருக்கும் ட்ரோன்கள் வெவ்வேறு திறன்களைக் கொண்டுள்ளன. மேலும் அவை 10 முதல் 11 வகைகளைச் சேர்ந்தவை என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் ட்ரோன்கள்
அமெரிக்காவிடமிருந்து மூன்றரை பில்லியன் டாலர் மதிப்பிலான 31 பிரிடேட்டர் ட்ரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்த ஆண்டு அக்டோபரில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
அவற்றுடன் கூடவே ட்ரோன்கள் மூலம் இலக்குகளை அழிக்க பயன்படுத்தப்படும் 50 கோடி டாலர் மதிப்புள்ள குண்டுகள் மற்றும் லேசர் வழிகாட்டும் ஏவுகணைகளும் வாங்கப்படும்.
அமெரிக்காவின் பிரிடேட்டர் ட்ரோன்கள் மிகவும் விலை உயர்ந்தவை. இந்திய மதிப்பில் ஒரு ஆளில்லா விமானத்தின் விலை சுமார் 950 கோடி ரூபாயாகும்.
இந்த 31 ட்ரோன்களில் 15 இந்திய கடற்படையில் சேர்க்கப்படும், மீதமுள்ள 16 ராணுவம் மற்றும் விமானப்படைக்கு சமமாக வழங்கப்படும்.
பிரிடேட்டர் ட்ரோன்கள் உலகின் மிகவும் வெற்றிகரமான மற்றும் ஆபத்தான ட்ரோன்களாக கருதப்படுகின்றன. ஆப்கானிஸ்தான், இராக், சிரியா, சோமாலியா மற்றும் பல நாடுகளில் மறைவிடங்கள் மற்றும் இலக்குகளை அழிக்க அவை பயன்படுத்தப்பட்டன.
இந்தியா முன்பு இஸ்ரேலின் ‘ஹெரான்’ (Heron) ட்ரோனை வாங்கியிருந்தது. இப்போது இந்த ஆளில்லா விமானத்தை இஸ்ரேல் விண்வெளி முகமையின் (Israel Aerospace Agency) உரிமத்தின் கீழ் இந்தியாவிலேயே தயாரித்து வருகிறது.
கடந்த 2020 மே மாதம் லடாக் பகுதியில் சீனாவுடனான எல்லைப் பதற்றத்திற்குப் பிறகு, இந்தியாவில் ட்ரோன்கள் மற்றும் ‘யுஏவி’களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடற்படை மீது தற்போது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஏனெனில் இந்திய பெருங்கடலில் சீனக் கடற்படை மற்றும் இந்திய கடற்படைக் கப்பல்களின் இருப்பு உள்ளது மற்றும் இந்தியாவின் கவனம் இந்தப் பிராந்தியத்தின் மீது மிக அதிகமாக இருக்கிறது.
இந்த பிராந்தியத்தில் சீன கடற்படையின் செயல்பாடுகளை இந்தியா கண்காணிக்க வேண்டும் என்று அமெரிக்காவும் விரும்புகிறது என்று வர்ணனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அக்டோபர் மாத தொடக்கத்தில் ‘சௌத் ஏசியன் வாய்சஸ்’ (South Asian Voices) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் பாதுகாப்பு ஆய்வாளர்களான ஸோயேப் அல்தாஃப் மற்றும் நிம்ரா ஜாவேத், ’இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவங்களில் ட்ரோன்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறித்தும் அதன் தாக்கம்’ குறித்தும் ஆய்வு செய்துள்ளனர்.
“இந்தியாவின் ட்ரோன் திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் ‘ஸ்வார்ம் ட்ரோன்’களை (swarm drones) சேப்பதாகும். இவை ஆயுதம் இல்லாத வான்வழி வாகனங்கள் மற்றும் அவை அதிக எண்ணிக்கையில் ஒரே சமயத்தில் பறக்கின்றன,” என்று அந்தக்கட்டுரை குறிப்பிடுகிறது.
“அவை சிக்கலான பணிகளைச் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை இந்தியாவின் பாதுகாப்பு செயல் உத்தியில், குறிப்பாக பாகிஸ்தானின் எந்த அச்சுறுத்தலையும் முறியடிப்பதற்கான முக்கிய அம்சமாக கருதப்படுகின்றன.”
இந்திய நிறுவனமான ‘நியூ ஸ்பேஸ் ரிசர்ச் அண்ட் டெக்னாலஜிஸ்’ (New Space Research and Technologies) இதை தயாரித்துள்ளதாக அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
’இந்த ட்ரோன்கள் ஒரே சமயத்தில் ஒன்றுசேர்ந்து தாக்கி எதிரியின் பாதுகாப்பு அமைப்பை முடக்குவது, அணுகுண்டு ஏவுதளங்களை அழிப்பது உட்பட இலக்குகளை அழிக்கும் திறனைக் கொண்டுள்ளன,’ என்றும் அந்த கட்டுரை தெரிவிக்கிறது.
பாகிஸ்தானின் ‘ட்ரோன் வலிமை’
துருக்கி மற்றும் சீனாவில் இருந்து பாகிஸ்தான் ஆளில்லா விமானங்களை இறக்குமதி செய்கிறது. கூடவே ஜெர்மனி மற்றும் இத்தாலியில் இருந்தும் ட்ரோன்களை அது வாங்கியுள்ளது என்று பாதுகாப்பு விவகார ஆய்வாளர் ராகுல் பேடி பிபிசியிடம் தெரிவித்தார்.
பர்ராக் (Barraq) மற்றும் ஷாபர் (Shahpar) போன்ற ஆளில்லா விமானங்களை பாகிஸ்தானே சொந்தமாக தயாரித்துள்ளது.
பாகிஸ்தானிடம் துருக்கியின் நவீன ‘பைரக்டர்’ ட்ரோன்கள் டிபி II (Bayraktar TB2) மற்றும் ஏகேன்ஜி (Akenji) உள்ளது. அதே நேரத்தில் அது சீனாவிடமிருந்து ‘வாங் லாங் II’ (Wang Long Two) மற்றும் ‘சிஎச் 4’ (CH4) போன்ற ட்ரோன்களையும் வாங்கியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டில் பாகிஸ்தான், முன்னோடி ‘ஷாஹ்பர் டூ’ (Shahpar Two) ட்ரோனை உருவாக்கியது. இது ஆயிரம் கிலோமீட்டர் வரை பறந்து இலக்கை தாக்கும் திறன் கொண்து என்று கூறப்படுகிறது.
இது தனது இலக்கை லேசர் கற்றை மூலம் லாக் செய்து ஏவுகணையின் உதவியுடன் அழிக்கிறது.
முன்னதாக, போர் ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ‘அபாபில்’ (Ababil) என்ற பெயரிலான கண்காணிப்பு ஆளில்லா விமானங்கள், பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலையால் தயாரிக்கப்பட்டன.
“பாகிஸ்தான் தனது விமானப்படை, ட்ரோன்கள் மற்றும் வழக்கமான வழிகள் மூலம் இந்தியாவின் S-400 மற்றும் ப்ரித்வியின் நவீன வான் பாதுகாப்பு அமைப்பை திறம்பட குறிவைப்பதன் மூலம் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பை முடக்க முடியும்,” என்று ஸோயேப் அல்தாஃப் மற்றும் நிம்ரா ஜாவேதின் கட்டுரை தெரிவிக்கிறது.
பாகிஸ்தான் உலகின் நான்காவது அல்லது ஐந்தாவது ட்ரோன் சக்தியாக கருதப்படுகிறது என்று பல பாதுகாப்பு பகுப்பாய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன என்று ராகுல் பேடி கூறுகிறார்.
“பாகிஸ்தானிடம் பல நவீன வகையான ட்ரோன்கள் உள்ளன மற்றும் அவற்றின் ட்ரோன்கள் விமானப்படை, ராணுவம் மற்றும் ஓரளவு கடற்படையிலும் சேர்க்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் ட்ரோன் திறன் வளர்ந்து வருகிறது. மேலும் இந்த திறனை தொடர்ந்து அதிகரிப்பதில் அந்த நாடு கவனம் செலுத்துகிறது,” என்றார் அவர்.
“இந்த ட்ரோன்களின் பறக்கும் திறன் சுமார் 50 மணி நேரம் ஆகும். போர் விமானங்கள் அவற்றை அழிக்க முடியாது. ஏனெனில் அவை விமானத்தின் பறப்பு வரம்பை விட அதிக உயரத்தில் பறக்கின்றன,” என்று ராகுல் பேடி தெரிவித்தார்.
இந்த நவீன ஆளில்லா விமானங்கள் காரணமாக பாகிஸ்தானுக்கு அதிக அளவில் தந்திரோபாய பலன்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறுகிறார்.
பாலகோட் தாக்குதல் மற்றும் 370வது சட்டப்பிரிவு நீக்கத்திற்கு பிறகு நிலைமை எப்படி மாறியுள்ளது?
தெற்காசியாவில் அதிக எண்ணிக்கையில் நவீன ட்ரோன்கள் அறிமுகப்படுத்தப்படுவது பிராந்தியத்தின் ராணுவ ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று ஸோயேப் அல்தாஃப் மற்றும் நிம்ரா ஜாவேதின் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
“ஆளில்லா விமானங்கள் ராணுவ செயல் உத்தியின் ஒரு முக்கிய அங்கமாகி வருவதால், ராணுவ மோதல் தவிர்ப்பு மற்றும் ராணுவ சமநிலையின் பாரம்பரிய அமைப்பு சிதையும் ஆபத்து அதிகரித்து வருகிறது.”
“அணு ஆயுத தளங்கள் மற்றும் அணு ஆயுத வலு கொண்ட தெற்காசியாவில் உள்ள வளங்கள் உட்பட இலக்குகளைத் தாக்கும் ஆளில்லா விமானங்களின் திறனானது, போர் சூழல் ஏற்படும்போது பேரழிவுக்கான சாத்தியத்தை உயர்த்தியுள்ளது.”
“தற்போது ட்ரோன்கள் தரையில் இருந்து இயக்கப்படுகின்றன அல்லது வான்வழியாக இயக்கப்படுகின்றன, அதாவது செயற்கைக்கோள் மூலம் வழிநடத்தப்படுகின்றன. எதிரியிடம் தகவல் தொடர்பு அமைப்பை செயல் இழக்கச்செய்யும் திறன் இருந்தால் அதன் மூலம் ட்ரோன்களை திறனற்றதாக ஆக்கமுடியும்,” என்று போர்ஸ் என்ற ராணுவ விவகார இதழின் ஆசிரியர் பிரவீன் சாஹ்னி குறிப்பிட்டார்.
“இந்தியா பாலகோட் தாக்குதலை நடத்தியபோது பாகிஸ்தானிடம் விமானத் தொடர்பு அமைப்பை செயலிழக்க செய்யும் திறன் இருந்தது. அந்த நாடு இந்திய விமானியின் தகவல் தொடர்பு அமைப்பை முடக்கியது. பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரை நோக்கி விமானம் சென்றதற்கு இதுவே காரணம்,” என்றார் அவர்.
“ராணுவ தொழில்நுட்பத்தில் சீனா மிகவும் முன்னேறி உள்ளது. சீனாவிடம் இருந்து ஆளில்லா விமானங்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் பெறுகிறது. இன்று பாகிஸ்தானிடம் அதிக திறன் உள்ளது,” என்று பிரவீன் சாஹ்னி கூறினார்.
“பாகிஸ்தானின் விமானப்படை மிகவும் வலுவாக உள்ளது. அதில் சீனாவுக்கு பெரும் பங்கு இருக்கிறது. சீனா 10-15 ஆண்டுகளாக ராணுவ தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருகிறது. 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு பிறகு, சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ கூட்டு மிகவும் வலுவாக உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
“ஃபிஸிகல் போர் களம் அதாவது மனிதர்கள் போரில் செயல்பட்ட இடமெல்லாம் இப்போது மனிதர்களிடமிருந்து இயந்திரங்களுக்கு மாறி வருகிறது. ஃபிஸிகல் என்பது நிலம், கடல், வானம், கடலுக்கு அடியில் மற்றும் விண்வெளி. இவை அனைத்திலும் இப்போது பெரும் அளவில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன,” என்றார் அவர்.
“இது வெவ்வேறு நாடுகளில் அவர்களின் தொழில்நுட்பத்தின்படி வெவ்வேறு நிலைகளில் நடக்கிறது. தற்போது ட்ரோன்கள் முற்றிலுமாக தகவல் தொடர்பு அமைப்புகள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.”
ஆனால் ட்ரோன் பந்தயம் நடப்பதாக சாஹ்னி கருதவில்லை. “இது போரில் தொழில்நுட்ப மாற்றத்தின் அடையாளம். உலகம் இப்போது ட்ரோன் போரின் கட்டத்தில் உள்ளது. ட்ரோன் போர் என்பது நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் போர் முறை,” என்று அவர் குறிப்பிட்டார்.
அதிகரித்து வரும் ட்ரோன்களின் பயன்பாடு இந்த நாடுகளுக்கு அச்சுறுத்தலா?
யுக்ரேன் மற்றும் காஸா போர்களில் ட்ரோன்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. “தாக்கப்படும் தரப்பிடம் மிகவும் பலவீனமான வான் பாதுகாப்பு அமைப்பு உள்ள பட்சத்தில் ட்ரோன்கள் மிகவும் பயனுள்ளதாக நிரூபணமாகியுள்ளன,” என்று ஆய்வாளரான அஜய் ஷூக்லா பிபிசியிடம் பேசுகையில் தெரிவித்தார்.
“நீங்கள் காஸாவிலும் பல இடங்களிலும் ட்ரோன்களின் பயன்பாட்டை பார்க்கிறீர்கள். அங்கு தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் ஆளில்லா விமானங்களை விட அதிக திறன் கொண்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் இல்லை.”
“ஆனால் நீங்கள் இந்தியா மற்றும் சீனாவின் உதாரணத்தை எடுத்துக் கொண்டால், சீனாவின் ஆயுதக் கிடங்கில் உள்ள நவீன ட்ரோன்கள் இந்தியாவின் விமானப்படை அல்லது போர் விமானங்கள் இல்லாத பகுதிகளில் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். மற்ற இடங்களில் அது வெற்றி பெறாது” என்றார் அவர்.
“பாகிஸ்தான், சீனா அல்லது இந்தியாவில் வான் பாதுகாப்பு அமைப்புகள் அதாவது ரேடார், கட்டுப்பாடு மற்றும் கட்டளை அமைப்பு (வான்வெளியை கட்டுப்படுத்தும் அமைப்பு) மற்றும் விமானப்படை மிகவும் வலுவானவை. எனவே, ட்ரோன்கள் கூட எதிரி ட்ரோன்களை இடைமறிக்க முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“இங்கே ட்ரோன்களின் பங்கு, வானில் மிக உயரமாக பறந்து எதிரியின் குறிப்பிட்ட பகுதிகளை கண்காணிப்பது, குறிப்பிட்ட இலக்குகளை உளவு பார்ப்பது மற்றும் முக்கியமான புகைப்படங்களை எடுப்பது என்பதுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.”
கடந்த 8-10 ஆண்டுகளில் போர்களின் தன்மை மாறிவிட்டது மற்றும் ட்ரோன்கள் இப்போது அவற்றின் முக்கியமான பகுதியாக ஆகிவிட்டன. வழக்கமாக போர்களில் பயன்படுத்தப்படும் பீரங்கிகள் மற்றும் பெரிய போர் ஆயுத அமைப்புகளுக்கு ட்ரோன்கள் மாபெரும் சேதத்தை ஏற்படுத்தமுடியும். எனவே இப்போது இரு நாடுகளும் இவற்றின்மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
இருப்பினும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ட்ரோன்களுக்கான போட்டி நடப்பதாக ராகுல் பேடி கருதுகிறார்.
”எதிர்காலத்தில் ரிமோட் கண்ட்ரோல் போர்முறை அதிகரிக்கும். ஏனெனில் வரும் நாட்களில் தொழில்நுட்பம் காரணமாக இயந்திரங்கள் மனிதர்களின் இடத்தை எடுத்துக்கொண்டுவிடும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இரண்டுமே அணு ஆயுத வலு கொண்ட நாடுகள். ஒரு ட்ரோன் தவறுதலாக அணுமின் நிலையத்தின் மீது வந்தாலும்கூட அது கடுமையான சிக்கலை உருவாக்கும். இதன் காரணமாக பதற்றம் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு