படக்குறிப்பு, ஸ்ரீநகரில் வேலிக்குப் பின்னால் இருந்து கண்காணிக்கும் இந்தியத் துணை ராணுவ வீரர்.கட்டுரை தகவல்
புதன்கிழமை அதிகாலை வேளை, பாகிஸ்தான் நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் உள்ள தனது வீட்டுக்குள் நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தார் முகமது வாஹித். அப்போது அவரது வீட்டை ஒரு பெரும் குண்டுவெடிப்பு அசைத்துப் பார்த்தது.
தான் உடனடியாக படுக்கையில் இருந்து பதறி எழுந்து, தன் குடும்பம் மற்றும் அக்கம்பக்கத்தினருடன் வெளியே ஓடியதாக பிபிசியிடம் கூறிய வாஹித், “என்ன நடக்கிறது என்று நாங்கள் புரிந்து கொள்ளும் முன்பே, மேலும் பல ஏவுகணைகள் தாக்கத் தொடங்கின. குழப்பமும், பீதியும் எங்கும் பரவத் தொடங்கியது,” என்று கூறினார்.
“குழந்தைகள் அழுது கொண்டிருந்தனர். பாதுகாப்பான இடம் தேடிப் பெண்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்” என்று விவரிக்கும் வாஹித், பாகிஸ்தான் நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரின் தலைநகரான முசாஃபராபாத்தில் வசிக்கிறார். புதன்கிழமை இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்ட இடங்களில் இதுவும் ஒன்று.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டதாக இந்திய ராணுவம் கூறியது.
பஹல்காம் தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட தீவிரவாதக் குழுக்கள் காரணம் என்று கூறியதோடு, அந்தத் தீவிரவாதக் குழுக்களுக்கு மறைமுகமாக உதவி செய்வதாக பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்தியது இந்தியா. இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
பாகிஸ்தான் நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் நடந்த இந்தியாவின் தாக்குதல் பற்றியும், அதன் பிறகு இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய குண்டு வீச்சு பற்றியும், இரண்டு பகுதிகளிலும் வசிக்கும் நேரில் கண்ட சாட்சிகளிடம் பிபிசி பேசியது.
இன்று காலை நடந்த இந்தத் தாக்குதல்களால் பாகிஸ்தானில், பொதுமக்களில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும், 35 பேர் காயமடைந்ததனர் என்று பாகிஸ்தான் அரசு கூறுகிறது.
இரண்டு நாடுகளுக்குமான பொதுவான எல்லைப் பகுதியான எல்லைக் கட்டுப்பாட்டுப் கோட்டைத் தாண்டிய (LoC), இந்தியப் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய குண்டு வீச்சில் பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தெரிவிக்கிறது.
‘தேநீர் தயாரிக்கையில் கொல்லப்பட்டவர்’
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, முசாஃபராபாத்தில் நடந்த இந்தியத் தாக்குதலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பிலால் மசூதியின் ஒரு பகுதி
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ரூபி கௌர் கொல்லப்பட்ட இந்தியர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதிகாலை சுமார் 1.45 மணி அளவில், கௌரின் வீட்டின் அருகே ஒரு மோர்டார் வகை குண்டு வெடித்ததாகவும், அதில் அவர் உடனடியாக கொல்லப்பட்டதாகவும், அவரது மகள் காயமடைந்ததாகவும், ரூபியின் மாமா பூவா சிங் பிபிசியிடம் கூறினார்.
“அவளுடைய கணவனுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் அவருக்காக தேநீர் தயாரிக்க எழுந்து சென்ற போதுதான் மோர்டார் குண்டு அவள் வீட்டுக்கு அருகில் வந்து விழுந்தது,” என்றார் அவர்.
புதன்கிழமை காலை நடைபெற்ற அளவுக்கான குண்டுவீச்சுகளை ‘இதுவரை நாங்கள் பார்க்காதவை’ என்கிறார் அவர். இந்தப் பகுதியில் சமூகப் பதுங்குகுழிகள் எதுவும் கிடையாது என்பதால் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே தான் தஞ்சம் அடைய வேண்டிய நிலைக்கு ஆளாயினர்.
“குண்டு வெடித்துச் சிதறியதில் அதில் இருந்த உலோகத் துண்டுகள் அவள் தலையில் குத்தி காயம்பட்டது. ரத்தம் அதிகமாக வழிய ஆரம்பித்தது. அவளை நாங்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் சென்றோம். ஆனால் அங்கே அவள் இறந்ததாக அறிவித்து விட்டார்கள்,” என்றார் சிங்.
‘புதன்கிழமை இரவு முழுவதும் பல மணி நேரங்களுக்கு குண்டு வெடிக்கும் பெரும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்ததாக’ பூஞ்ச் பகுதியில் வசிக்கும் இன்னொருவர் குறிப்பிட்டார்.
“நகரம் முழுவதும் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பகுதிகள் முழுவதும் பீதியான சூழலே நிலவியது,” என்று தொலைபேசியில் பேசிய டாக்டர் ஸம்ரூத் மொகல் தெரிவித்தார்.
“மக்களால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. மக்கள் தங்கள் வீடுகளை விட்டுவிட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்றார்கள். வன அலுவலகத்துக்கு அருகில் உள்ள முக்கிய சிறுநகரத்தை ஒரு ஷெல் தாக்கியதில் அருகிலுள்ள கட்டுமானம் சேதமடைந்தது”. என்கிறார்.
‘அடுத்து என்ன நடக்கும் என்று பயமாக இருக்கிறது’
பட மூலாதாரம், Reuters
பாகிஸ்தான் நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த முகமது யூனிஸ் ஷா, நங்கல் சஹதன் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கல்வி வளாகத்தில் இந்தியாவின் நான்கு ஏவுகணைகள் தாக்கியது பற்றியும் அதில் ஒரு மசூதி இடிக்கப்பட்டது பற்றியும் விளக்கினார்.
“அந்த வளாகத்தில் குழந்தைகளுக்கான ஒரு பள்ளி, கல்லூரி, விடுதி மற்றும் ஒரு மருத்துவ வளாகமும் இருந்தது,” என்கிறார் அவர். “முதல் மூன்று ஏவுகணைகளும் அடுத்தடுத்து வந்தன. நான்காவது ஏவுகணை அதற்கு 5 – 7 நிமிடங்கள் கழித்து வந்தது” என்றார்.
புதன்கிழமை நடைபெற்ற தாக்குதல்கள் தீவிரவாதிகளின் உள்கட்டமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக இந்தியா கூறியது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ”பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாத குழுக்களை நமது உளவுத்துறை கண்காணித்தது, இந்தியாவுக்கு எதிராக மேலும் தாக்குதல்கள் நடைபெறலாம் என்றும் எச்சரித்தன. எனவே, அவற்றை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்றார்.
மேலும், “இந்தியாவின் இன்றைய தாக்குதல், தீவிரவாதிகளின் கட்டமைப்புகளை அழிப்பதிலும், இந்தியாவுக்குள் அனுப்பப்படக்கூடிய தீவிரவாதிகளை செயலிழக்கச் செய்வதிலும் கவனம் செலுத்தின.” என்றார் விக்ரம் மிஸ்ரி.
தற்போது மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், தாக்குதல் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்ப்பதாகவும், அடுத்து என்ன நடக்கும் என்ற பீதியில் இருப்பதாகவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
“நாங்கள் பீதியில் இருக்கிறோம். அடுத்து என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை,” என்றார் வாஹித்.
“மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகிறார்கள். நிச்சயமற்ற தன்மை எங்கும் நிலவுகிறது.” என்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
முசாஃபராபாத்தில் வசிக்கும் இன்னொரு நபரான ஷாநவாஸும் இதே கருத்தைப் பிரதிபலிக்கிறார். அவரும் அவருடைய குடும்பமும், இப்போது “வேறுவழியில்லாமல் பாதுகாப்பான இடங்களைத் தேடிக் கொண்டிருப்பதாக” அவர் கூறினார்.
“ஏதோ நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். இப்போது அடுத்தடுத்து நடக்கும் விஷயங்களால் பயத்தில் உறைந்து போயிருக்கிறோம்.” என்கிறார்.
முசாஃபராபாத்தில் உள்ள தங்கள் பகுதியில் உள்ள மசூதி ஏன் தாக்கப்பட்டது என்று தெரியவில்லை என்று பிபிசியிடம் தெரிவித்த வாஹித், அந்தத் தாக்குதலில் “பத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும்” காயமடைந்ததாகக் கூறுகிறார்.
“இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நாங்கள் எல்லாரும் தினமும் ஐந்து வேளை தொழும் ஒரு சாதாரண மசூதி அது. இங்கே எந்த சந்தேகத்துக்குரிய நடவடிக்கையையும் நாங்கள் பார்த்ததில்லை,” என்கிறார் அவர்.
புதன்கிழமை நடைபெற்ற தாக்குதல்கள் தீவிரவாதிகளின் உள்கட்டமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், அந்த இடங்கள் ‘நம்பகமான உளவுத்துறை தகவல்களின்’ அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் இந்திய அரசு தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.