• Tue. Sep 16th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா – பாகிஸ்தான் போட்டி பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் கூறியது என்ன?

Byadmin

Sep 16, 2025


காணொளிக் குறிப்பு, கை குலுக்காத இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள்

கைகுலுக்காத வீரர்கள் – ஆசிய கிரிக்கெட் கவுன்சில், பாக். கிரிக்கெட் வாரிய தலைவர் கூறியது என்ன?

ஆசிய கோப்பையில் குரூப் ஏ பிரிவில் துபையில் நடைபெற்ற ஆறாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 11 முறை பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துள்ளது.

ஆட்டம் நிறைவடைந்த பின் பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய அணி வீரர்கள் கைகுலுக்கவில்லை. முடிவில் பஹல்காம் தாக்குதல் பற்றியும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசினார்.

சூர்யகுமார் பேசியது என்ன? பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுவது என்ன?

ஆட்டத்தின் இறுதியில், சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்த கேப்டன் சூர்யகுமார், மறுமுனையில் நின்றிருந்த ஷிபம் துபேவை அழைத்துக் கொண்டு உடனடியாகக் களத்தை விட்டு வெளியேறினார். எதிரணி வீரர்களுடன் கைகுலுக்கும் வழக்கமான நிகழ்வு அப்போது நடக்கவில்லை.

பாகிஸ்தான் வீரர்கள் களத்தை விட்டு வெளியேறும் போது இந்திய வீரர்களின் டக்அவுட்டை நோக்கி நடந்து வருவது போல் தோன்றியது. ஆனால் இந்திய வீரர்கள் அதற்கு முன்னதாகவே ஓய்வறைக்குத் திரும்பிவிட்டனர்.

முன்னதாக, இந்த ஆட்டத்தில் டாஸ் போடப்பட்ட போதும் சூர்யகுமார் – பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா (Salman Agha) ஆகிய இருவரும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.

போட்டிக்குப் பிறகு பேசிய சூர்யகுமார் வெற்றியை “இந்தியாவுக்கு ஒரு சரியான பரிசு” என்றார்.

“பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நாங்கள் துணை நிற்கிறோம், இன்றைய வெற்றியை மிகுந்த துணிச்சலைக் காட்டிய எங்கள் ராணுவத்தினருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

போட்டிக்கு பிந்தைய பரிசளிப்பு நிகழ்ச்சியில் எந்தவொரு பாகிஸ்தான் வீரரும் பேசவில்லை.

அதற்குப் பின்னர் பேசிய பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் (mike hesson) “நாங்கள் கைகுலுக்க அங்கு சென்றோம். ஆனால், அவர்கள் ஏற்கெனவே உடை மாற்றும் அறைக்குச் சென்று கொண்டிருந்தார்கள்” என்று கூறினார்.

“ஒரு போட்டியை இந்த வகையில் முடிப்பது ஏமாற்றமளிக்கும் ஒன்று. நாங்கள் விளையாடிய விதத்தில் ஏமாற்றமடைந்தோம். ஆனால் நிச்சயமாக நாங்கள் கைகுலுக்க தயாராக இருந்தோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

டாஸ் போடும் முன் என்ன நடந்தது?

“டாஸ் போடும் போது கைகுலுக்க வேண்டாம் என்று போட்டி நடுவர் இரு கேப்டன்களையும் கேட்டுக்கொண்டார்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரி ஒருவர் போட்டிக்குப் பிறகு தெரிவித்ததாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

போட்டி அதிகாரிகளும் கைகுலுக்குவதை தவிர்க்க அனுமதி அளித்ததாகவும், பாகிஸ்தான் அணிக்கு இது தொடர்பான தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் தகவல் கிடைத்திருப்பதாக அல்ஜசீரா கூறியுள்ளது.

போட்டி முடிந்த பிறகு, பாகிஸ்தான் அணி மேலாளர் “டாஸின் போது கைகுலுக்க வேண்டாம் என்று கேப்டன்களை நடுவர் கோரியதால்” அவருக்கு எதிராக “முறையான எதிர்ப்பை” பதிவு செய்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது என ஈஎஸ்பிஎன் செய்தி வெளியிட்டுள்ளது.

போட்டிக்குப் பின் நடந்த விவாதத்தில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர், வீரர்கள் கைகுலுக்காமல் சென்றதைப் பார்க்கவே வருத்தமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

“பார்க்கவே மன வருத்தமாக உள்ளது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இது கிரிக்கெட் போட்டி, இதை அரசியலாக்க வேண்டாம். உங்கள் வீட்டுக்குள்ளே கூட சண்டைகள் நடக்கும். இதை மறந்து, முன்னேறுங்கள். இது கிரிக்கெட் விளையாட்டு, கை குலுக்கி, உங்கள் பெருந்தன்மையை வெளிப்படுத்துங்கள்” என அக்தர் கூறினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் கூறியது என்ன?

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான மொஹ்சின் நக்வி (mohsin Naqvi) தனது எக்ஸ் பக்கத்தில் இன்றைய போட்டியில் விளையாட்டு மனப்பான்மையை (ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்) காணப்படாதது ஏமாற்றமளித்ததாகப் பதிவிட்டுள்ளார்.

“இன்றைய போட்டியில் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் காணப்படாதது மிகுந்த ஏமற்றமளித்தது. விளையாட்டில் அரசியலைக் கொண்டுவருவது, விளையாட்டின் உண்மையான உணர்விற்கு எதிரானது. எதிர்கால வெற்றிகள் அனைத்து அணிகளாலும் நாகரிகத்துடன் கொண்டாடப்பட வேண்டும் என்று நம்புகிறோம்” என அவர் அந்தப் பதிவில் கூறினார்.

ஏப்ரலில் நடந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து மே மாதம் இந்தியா பாகிஸ்தான் இடையே நான்கு நாட்கள் ராணுவ மோதல் நீடித்தது. அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin