படக்குறிப்பு, பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஷோயிப் அக்தர், ஷோயிப் மாலிக் மற்றும் மிஸ்பா உல் ஹக்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் உமர்குல், மிஸ்பா-உல்-ஹக்
ஆசியக் கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று நடைபெற உள்ள இந்தியா – பாகிஸ்தான் டி20 போட்டி கிரிக்கெட் வட்டாரங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாகியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள், சர்வதேச ஊடகங்கள், அரசியல் வட்டாரங்கள் என அனைத்து தரப்பிலும் இந்தப் போட்டி பற்றி விவாதிக்கப்படுகிறது.
பஹல்காம் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே நான்கு நாள் நீடித்த ராணுவ மோதலுக்குப் பிறகு இருநாடுகளும் முதல் முறையாக விளையாட இருக்கின்றன.
இந்தியாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடக் கூடாத என்று வலியுறுத்தின.
அதற்கு எதிர்வினையாற்றிய பாஜக எம்பியும் பிசிசிஐ முன்னாள் தலைவருமான அனுராக் தாக்கூர், “பன்னாட்டு தொடர்கள் ஏசிசி அல்லது ஐசிசியால் ஒருங்கிணைக்கப்படுகின்றன, எந்த நாட்டிற்கும் அதில் கலந்து கொள்வது தேவையும் கட்டாயமும் ஆகிறது. நாம் கலந்து கொள்ளவில்லையென்றால், தொடரிலிருந்து வெளியேறிவிடுவோம். இதனால் மற்ற அணிகளுக்குப் புள்ளிகள் கிடைக்கும்” என்றார்.
பாகிஸ்தான் கடைசியாக 2021-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திருந்தது.
நடப்புத் தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் யூஏஇ அணிக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் ஓமனை 93 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்
பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் என்ன சொல்கிறார்கள்?
‘கேம் ஆன் ஹை’ எனும் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மிஸ்பா-உல்-ஹக், உமர் குல், ஷோயப் மாலிக் மற்றும் ஷோயப் அக்தர் கலந்து கொண்டு இந்தியா – பாகிஸ்தான் போட்டி பற்றி விவாதித்தனர்.
போட்டிக்கு முன்பாக விளையாட்டு வீரர்கள் மீதான அழுத்தம் பற்றி பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் பேசினார்.
“போட்டிக்கு முன்பு என்ன நடக்கும், என்ன நடக்காது என வீரர்களின் மனதில் அழுத்தம் இருக்கும். ஆனால் அவர்கள் இயல்பாக இருக்க வேண்டும். அணி நிர்வாகம் மற்றும் கேப்டனின் பங்கும் முக்கியம். முக்கியமான போட்டி எனச் சொல்லிக் கொண்டே இருந்தால் வீரர்கள் நடக்கப் போவதைப் பற்றி யோசிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணிக்கான முக்கியமான அறிவுரையும் வழங்கினார் மிஸ்பா, “நாங்கள் விளையாடுகின்ற போது எங்களுக்கு எப்போதுமே நல்ல தொடக்கம் இருக்கும். ஒரு அணி முதலில் ஆதிக்கம் செலுத்தினால் அதன் மன உறுதி அதிகமாக இருக்கும். அதன் பின்னர் எதிரணிக்கு விளையாடுவது எளிமையாக இருக்காது.” என்றார்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதும் அழுத்தம் இருக்கும் என்கிறார் உமர் குல்.
“ஊடகங்களில் விவாதம் மற்றும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு போன்றவற்றால் வீரர்கள் மீது அழுத்தம் இருக்கும். தான் பெர்ஃபார்ம் செய்து சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்கிற மனநிலை இருக்கின்ற வீரரால் தான் அழுத்தத்தின் கீழ் பெர்ஃபார்ம் செய்ய முடியும்” என்றார் குல்.
இந்தியா உடனான போட்டியை வெல்வதன் முக்கியத்துவம் பற்றி பேசிய குல், “இது நம்முடைய கிரிக்கெட் மற்றும் வீரர்களுக்கு மிகவும் முக்கியம். சமீப நாட்களில் நம்முடைய ஆட்டத்தால் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். கோபத்தில் உள்ள ரசிகர்கள் பாகிஸ்தான் அணியை மீண்டும் ஆதரவளிக்கச் செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஷோயப் மாலிக்
அதே நிகழ்ச்சியில் பேசிய ஷோயப் மாலிக் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி சமாளிக்க வேண்டியது அழுத்தத்தைத் தான் என்றார்.
“இந்தத் தொடரில் நாம் வெல்வோம் என யாரும் நினைக்கவில்லை. நான் இதை ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறேன். அதனால் தான் உங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். முந்தைய போட்டிகள் எல்லாம் சிறிய அணிகளுடன் இருந்தன. எனவே இந்தியா உடனான போட்டி தான் நமக்கு உண்மையான சவால்.” எனத் தெரிவித்தார் மாலிக்.
தொடர்ந்து பேசிய அவர், “பலரும் இந்தப் போட்டியைப் பார்க்கின்றனர். ஃபார்மில் உள்ள வீரர்கள் அதனைத் தொடர வேண்டும். 11 பேரில் 4 அல்லது 5 பேர் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்தாலும், ஆட்டம் நம் கையில் தான். இந்திய அணியின் 3, 4 விக்கெட்டுகளை குறைந்த ரன்களுக்குள் வீழ்த்துவது முக்கியமானது. அது நடந்தால் பாகிஸ்தான் அணியால் இந்தியாவை வீழ்த்த முடியும். இரண்டாவது வாய்ப்பு என்பது நடு ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். அவர்களின் பேட்டர்களை நாம் வீழ்த்தவில்லையென்றால் அதன் பிறகு கடினம்” என்றார்.
ஆல்ரவுண்டர்களை களம் இறக்க வேண்டும் என்கிற வலையில் சிக்கிவிட வேண்டாம் எனவும் தெரிவித்தார் ஷோயப் மாலிக்.
“அணியின் தேர்வராக நீங்கள் அனைத்து வீரர்களையும் உங்களால் தேர்வு செய்ய முடியாது. நீங்கள் ரிஸ்க் எடுக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக களமிறக்க வேண்டிய அணியை களமிறக்குங்கள். 3 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சாளர்கள், பேட்டர்களுடன் ஒரே ஒரு ஆல் ரவுண்டர் போதுமானது” எனக் கூறினார் மாலிக்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் வலுவாக உள்ளதாகக் கூறிய மாலிக், தற்போது உள்ளது தான் இந்தியாவின் சிறந்த பேட்டிங் லைன் அப் என்றார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் என்ன நடந்தது?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியாவின் உதவி பயிற்சியாளர் ரயன் டென் தாஸ்காட்டே
போட்டிக்கு முன்பாக செய்தியாளர் சந்திப்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்ட கருத்துகள் அல் ஜசீரா இணையதளத்தில் வந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தியா தரப்பில் உதவி பயிற்சியாளர் ரயன் டென் தாஸ்காட்டே, பாகிஸ்தான் தரப்பில் இளம் வீரர் சயிம் ஆயுப் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இருவரும் கடினமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ரயன் கேள்விகளுக்கு அமைதியாக பதில் கூறிய நிலையில், இந்தியா உடனான சமீபத்திய தோல்விகள் பற்றிய கேள்விக்கு “அவை கடந்த காலம்” என சயிம் கூறியதாக அல் ஜசீரா செய்தி கூறுகிறது.
மக்களின் உணர்வுகள் இந்தப் போட்டியுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன, இது வீரர்களின் மன உறுதியைப் பாதிக்குமா என ரயனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ரயன், “இது மிகவும் உணர்வுப்பூர்வமான பிரச்னை, இது நிச்சயம் வீரர்களின் மனதில் தாக்கம் செலுத்தும், ஏனென்றால் அவர்கள் இந்தியர்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.” எனத் தெரிவித்தார். மேலும், “களத்தில் விளையாடுகின்ற போது வீரர்கள் தங்களின் உணர்வுகளை தவிர்த்துவிட்டு தொழில்முறையாக விளையாட வேண்டும்.” என அவர் தெரிவித்தார்.
விளையாட்டு மைதானங்கள் போராட்டத்துக்கான களமாகப் பயன்படுத்தப்படுவது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த ரயன், “விளையாட்டும் அரசியலும் தனியே வைக்கப்பட வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய ரயன், “இதில் மக்களின் கருத்துகள் மாறுபடலாம். ஆனால் வீரர்கள் விளையாடுகின்ற விதம் அவர்கள் நாடு பற்றி என்ன உணர்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. எனக்கு இது புரிகிறது, ஆனால் நாங்கள் பிசிசிஐ மற்றும் இந்திய அரசின் முடிவுகளைப் பின்பற்றுகிறோம்.” எனத் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சயிம் ஆயுப்
சயிம் ஆயுப் இந்தியாவுக்கு எதிராக எந்தப் போட்டியிலும் இதுவரை விளையாடவில்லை. ஓப்பனிங் பேட்டராக விளையாடும் சயிம் ஆயுப் பெர்ஃபார்மன்ஸ் சமீப நாட்களில் சிறப்பானதாக இல்லை.
இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து அவர் விளையாடியுள்ள 15 டி20 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே 40 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் தன்னுடைய பெர்ஃபார்மன்ஸ் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த ரயன், “ஒரே வீரர் ஒவ்வொரு முறையும் போட்டியை வெல்வார் என எதிர்பார்க்க முடியாது. அணியில் 11 பேர் இருக்கிறார்கள், எனவே ஒவ்வொரு நாளும் ஒருவர் இல்லையென்றாலும் இன்னொருவர் நன்றாக பெர்ஃபார்ம் செய்ய வைக்க முயற்சிக்கிறோம். நாங்கள் கடினமாக வேலை செய்து முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக அமையும் என நம்பலாம்.” எனத் தெரிவித்தார்.
இந்தப் போட்டியின் முக்கியத்துவம் பற்றி பேசிய சயிம், “சிலருக்கு இது பெரிய போட்டியாக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு இது மற்றுமொரு போட்டி தான், நாங்கள் எங்களின் பெர்ஃபார்மன்ஸை மேம்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் ‘கிரிக்கெட் அங்கிளின்’ செய்தி
அப்துல் ஜலில் என்கிற பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகரின் கருத்தை கலீஜ் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
கிரிக்கெட் அங்கிள் என அழைக்கப்படும் 76 வயதான அப்துல் 100-க்கும் மேற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளைப் பார்த்துள்ளார்.
“இது ஒரு கிரிக்கெட் போட்டி, மக்கள் இதனை ரசித்து விளையாட்டை பாராட்ட வேண்டும். உங்களிடம் டிக்கெட் இருந்தால் செல்லுங்கள், ரசியுங்கள், ஆனால் எதிரணியையும் இரு அணிகளின் ரசிகர்களையும் மதியுங்கள்.” எனத் தெரிவித்தார்.
இதன் மூலம் வெற்றியும் தோல்வியும் போட்டியின் ஒரு அங்கம் என கிரிக்கெட் ரசிகர்களுக்கான செய்தியை அப்துல் தெரிவித்துள்ளார்.
“எனது கொள்கை என்பது கிரிக்கெட் ரசிப்பதற்கு, மன அழுத்தத்திற்கு அல்ல. கிரிக்கெட் என்பது அன்பு செய்ய, சண்டை செய்வதற்கு அல்ல. இரு அணிகளின் ரசிகர்களுக்குமான என்னுடைய செய்தி இது தான்.” என்றார்.