படக்குறிப்பு, டாஸின் போது இரு கேப்டன்களும் கைகுலுக்கவில்லை, அதேபோல ஆட்டத்தின் முடிவிலும் கிரிக்கெட்டர்கள் கைகுலுக்கிக் கொள்ளவில்லைகட்டுரை தகவல்
ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்புவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அன்று மாலை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற அபார வெற்றிக்கு முன்னதாக, ஒரு வானிலை அறிகுறி போட்டி நடைபெறுமா இல்லையா என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
மிகவும் பரபரப்பான இந்தப் போட்டிக்கு முன்னதாக நிலவிய குழப்பமான சூழலை அந்த மேகமூட்டம் பிரதிபலித்தது.
வங்கதேசத்துக்கு ஆதரவாக இந்தப் போட்டியை புறக்கணிப்பதாக ஆரம்பத்தில் எடுத்திருந்த முடிவிலிருந்து பின்னர் பாகிஸ்தான் பின் வாங்கியது. இந்தியாவுக்கு வெளியே தங்கள் நாடு பங்கேற்கும் போட்டிகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் வங்கதேசம் இந்த தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் உண்மையான கிரிக்கெட்டைக் காட்டிலும் அதனைச் சுற்றியிருந்த நிகழ்ச்சிகளிலேயே அதிக ஆர்வம் இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் தற்போதைய சூழலால், இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்கும் நிகழ்வை பலரும் உற்றுநோக்கினர்.
கேமராக்கள் இல்லாத இடத்தில்..
டாஸ் நேரத்தில் கேப்டன்கள் இடையே வாழ்த்துகள் எதுவும் பரிமாறப்படவில்லை. சூர்யகுமார் யாதவ் மற்றும் சல்மான் அலி அகா ஆகிய இருவருமே பரஸ்பரம் பேசிக் கொள்ளாமல் மௌனம் காத்தனர்.
நாணயம் சுண்டப்படுவதைப் படம்பிடிக்கத் தயாராக இருக்கும் எண்ணற்ற கேமராக்களுக்கு முன்னால், இரு கேப்டன்களும் இரண்டு நிமிடங்கள் முன்னதாகவே அங்கு இருக்க வேண்டும். ஆனால் இத்தகைய சங்கடமான சூழலில் இருக்கும்போது, அந்த இரண்டு நிமிடங்கள் ஒரு யுகமாகத் தோன்றும்.
பாகிஸ்தான் கேப்டன் சல்மானின் சட்டைக் காலரில் மிகச்சிறிய சுருக்கம் இருந்ததை தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஒருவர் பார்க்க போதுமான நேரம் இருந்தது. காலர் சுருக்கத்தை ஒரு நபர் சரிசெய்த விதம், இரு கேப்டன்களும் வெளிப்படுத்த முயன்ற ஆளுமையான பிம்பத்தைச் சற்று குறைத்துக் காட்டியது.
இருப்பினும், மைதானத்திற்கு வெளியே முன்னாள் வீரர்கள் நட்பான முறையில் நடந்துகொண்டனர். ஐசிசி நேரலையில் ரோஹித் சர்மாவும் வாசிம் அக்ரமும் அன்புடன் ஒருவரை ஒருவர் வரவேற்று, கோப்பையை மைதானத்திற்குள் ஏந்திச் சென்றனர். கேமராக்கள் இல்லாத இடத்தில் ஹர்பஜன் சிங், மிஸ்பா உல் ஹக் மற்றும் ரமீஸ் ராஜா ஆகியோர் சுமூகமாக உரையாடிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா, பாகிஸ்தானை தோற்கடித்தது
பாடல்கள் குறித்த அதிருப்தி
மைதானத்தைச் சுற்றியுள்ள சூழல் முந்தைய உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து மிகவும் மாறுபட்டிருந்தது. விளையாட்டு மைதானத்திற்கு வருவதற்கு, பல தெருக்களுக்கு முன்னதாகவே அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வளையங்களில் பைகள் பலமுறை சோதனை செய்யப்பட்டன.
முன்னெப்போதும் இல்லாத வகையில், இலங்கை சிறப்பு அதிரடிப் படையினர் பாதுகாப்புப் பணியில் தானியங்கி துப்பாக்கிகளுடன் ஈடுபட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஏற்படுத்திய தாக்கத்தால், தெருவோரக் கடைகளில் விற்கப்படும் இரு நாட்டு அணியினரும் பயன்படுத்துவதைப் போன்ற ஜெர்சிகளின் விற்பனை விலையும் அதிகரித்துவிட்டது.
போட்டி திட்டமிட்டபடி நடந்ததால் உள்ளூர் வியாபாரிகளும், விடுதி உரிமையாளர்களும் மகிழ்ச்சியடைந்தனர். இந்திய அணி தங்கிய இடத்தில் அதிக கூட்டம் இருந்ததால், முகமது சிராஜால் லிஃப்டிற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தச் சூழல் போட்டியின் முக்கியத்துவத்தைப் பிரதிபலித்ததே தவிர, எந்தப் பதற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சிறப்பான பேட்டிங்குக்காக இஷான் கிஷன் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
ஆனால் டாஸ் போடும்போதுதான் பதற்றம் தொடங்கியது. போட்டிக்கு முன்னதாக இசைக்கப்பட்ட பாடல்கள் குறித்த அதிருப்தியால் முணுமுணுப்புகள் எழுந்தன.
இந்திய ராப் இசைக்கலைஞர் ஹனுமான்கைண்ட் வாண வேடிக்கைகளுக்கு மத்தியில் தனது நடனக் குழுவினருடன் நிகழ்ச்சி நடத்தினார்.
கடந்த ஆண்டு வெளியான ‘துரந்தர்’ திரைப்படத்தின் இசை டிராக்கில் அவர் தோன்றினார். அந்தப் படத்தின் அரசியல் பின்னணிக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு கிளம்பியதால் அங்கே படத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
போட்டியைத் தாண்டிய விஷயங்களைப் பற்றிப் பேச இரு அணிகளுமே தயக்கம் காட்டின. “இப்படிப்பட்ட போட்டிகளில் உணர்ச்சிகள் அதிகமாகவே இருக்கும், ஆனால் அதை நாம் கையாண்டுதான் ஆக வேண்டும்,” என்று சல்மான் கூறினார்.
“இது போன்ற பல போட்டிகளை முன்பு விளையாடியிருக்கிறோம். சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற அடுத்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதில்தான் எங்கள் கவனம் இருக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
போட்டி தொடங்கியதும், இஷான் கிஷனின் ஆட்டம் இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. போட்டிக்கு முன்னதாக உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை பேசப்பட்டது.
ஆனால், ஆட்டத்தில் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
இருப்பினும், வலைப்பயிற்சியின் போது தனது பந்துவீச்சு முறையைப் போல பந்து வீசிய சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை எடுத்த பிறகு, அவர் சூர்யகுமாரைப் பார்த்துத் தலைவணங்கி சூசகமாக தனது எதிர்வினையைக் காட்டியது சுவாரசியமாக இருந்தது.
இன்னிங்ஸ் இடைவேளையின் போது, பாகிஸ்தான் 176 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில், ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று சிலர் கருதினர். ஆனால், பவர்பிளே ஓவர்களிலேயே இந்தியா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி 39 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது பாகிஸ்தானின் நம்பிக்கையைத் தகர்த்தது.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இப்போது இந்தியா 8-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
தற்போது, இந்தப் போட்டி விளையாட்டு ரீதியாக இல்லாமல் அரசியல் ரீதியாக மாறிவிட்டது. ஒரு தரப்பு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவது சலிப்பை ஏற்படுத்தினாலும், இந்த அரசியல் தலையீடுகள் விவாதிப்பதற்குப் பல விஷயங்களைக் கொடுக்கின்றன.
பாகிஸ்தான் தோல்வியடையும் நிலையில் இருந்தபோது, வாசிம் அக்ரம் மற்றும் ரோஹித் சர்மா இடையிலான சுமூகமான சந்திப்பை ஐசிசி மீண்டும் ஒளிபரப்பியது. அனைவரும் இணக்கமாகவே இருக்கிறோம் என்பதைக் காட்ட அது முயன்றது. ஆனால், போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. அந்த பரஸ்பர மரியாதை என்ற நிலையை எட்டுவதற்கான வேளை இன்னும் வரவில்லை என்பதை இது காட்டியது.
“நாங்கள் அவர்களை ஒரு அணியாகத்தான் பார்க்கிறோம் – இதை ஒரு பெரிய மோதலாகவோ அல்லது வேறு எதுவாகவோ நாங்கள் கருதவில்லை,” என்று இந்தியாவின் அக்சர் படேல் கூறினார்.
“நாங்கள் ஒரு அணிக்கு எதிராக விளையாடுகிறோம், கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். விளையாடும்போது மற்ற எதைப் பற்றியும் நான் சிந்திப்பதில்லை,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இறுதி விக்கெட் விழுந்த பிறகும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் சிவம் துபே தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை என்று உணர்ந்தனர். ஹர்திக் மூன்று ஓவர்கள் மட்டுமே வீசினார், துபே பந்து வீசவே இல்லை. கூடுதல் பயிற்சிக்காக பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தனது பேஸ்பால் கையுறையுடன் மைதானத்திற்கு வந்தார். பெரிய வெற்றி கிடைத்திருந்தாலும், இன்னும் பயிற்சி தேவைப்படுவதாக அவர்கள் எண்ணினர்.
அரசியலை (இந்திய பாகிஸ்தான்) மறக்கும் அளவுக்கு இந்தப் போட்டியில் எந்த ஒரு பெரிய விறுவிறுப்போ அல்லது சவாலோ இல்லை என்பதையே இது உணர்த்தியது.