பட மூலாதாரம், Getty Images
ஏப்ரல் 22ஆம் தேதியன்று 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் நிர்வாகத்திலுள்ள காஷ்மீரிலும் கடந்த மே 7ஆம் தேதி அதிகாலையில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு கூறியது. அதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தானும் பதில் தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவித்தது.
இதனால் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், “ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூரில் உள்ள ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன” என்று நேற்றிரவு (மே 8) இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் ஜம்மு காஷ்மீரில் நேற்றிரவு நடந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் பொறுப்பல்ல என்று பிபிசியிடம் கூறினார்.
இப்படியாக இரு நாடுகள் இடையிலான பதற்றமும் போர் அபாயமும் அதிகரித்து வருவதாக எல்லையில் உள்ள மக்கள் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர். எல்லையோர கிராமங்களில் உள்ள பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே இப்படியொரு சூழல் ஏற்படுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் இத்தகைய பதற்றம் அதிகரித்துள்ளது. அப்போது இரு நாடுகளும் எப்படி நிலைமையைச் சரி செய்தன?
இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் யாவை?
இந்திய பாதுகாப்புப் படையினருக்கும், தூதர்களுக்கும் இதுபோன்ற சம்பவங்களில் ஏற்கெனவே அனுபவம் உண்டு.
கடந்த 2016ஆம் ஆண்டில், உரியில் இந்தியாவின் 19 வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடத்தியது.
புல்வாமாவில் 2019ஆம் ஆண்டு ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் பின்னர், இந்தியா பாலகோட்டிற்குள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. 1971க்குப் பிறகு பாகிஸ்தானுக்குள் இந்தியா மேற்கொண்ட முதல் நடவடிக்கை இது.
இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தானும் தாக்கியது. பின்னர் வான்வழி மோதல் ஏற்பட்டது. முன்னதாக, 2008ஆம் ஆண்டில், மும்பையில் உள்ள ஹோட்டல்கள், ரயில் நிலையங்கள் மற்றும் யூத மையங்கள் மீது 60 மணிநேரம் நடத்தப்பட்ட பயங்கரமான தீவிரவாத தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர்.
ஒவ்வொரு முறையும், இந்தியா இந்தத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாதக் குழுக்களைக் குற்றம் சாட்டி வருகிறது. பாகிஸ்தான் அவற்றை மறைமுகமாக ஆதரிப்பதாகவும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. 2016 முதல், குறிப்பாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா–பாகிஸ்தான் இடையிலான பதற்றம் புதிய உச்சங்களை எட்டியதாகத் தெரிகிறது.
இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவின் எல்லை தாண்டிய வான்வழித் தாக்குதல் ஒரு புதிய முன்னுதாரணமாக மாறி, பாகிஸ்தானை பதிலடி அளிக்கத் தூண்டியுள்ளது. இதனால் ஏற்கெனவே கொந்தளிப்பான சூழல் இன்னும் தீவிரமானதாக மாறியுள்ளது.
எதிர்வினைக்கும் எதிர்ப்புக்கும் இடையில் நுட்பமான சமநிலையைப் பராமரிக்க வேண்டிய நிலையில் இந்தியா இருப்பதாக, தற்போது நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு என்ன நடந்தது?
பட மூலாதாரம், Getty Images
புல்வாமா தாக்குதலின்போது பாகிஸ்தானில் இந்தியாவின் உயர் தூதராக இருந்த அஜய் பிசாரியா, இந்தத் தொடர்ச்சியான சூழ்நிலையை ஆழமாகப் புரிந்து வைத்துள்ளார். இந்தச் சூழ்நிலை பற்றிய விரிவான தகவல்களை, ‘கோப மேலாண்மை: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான குழப்பமடைந்த ராஜ்ஜீய உறவு’ என்ற தனது நினைவுக் குறிப்புகளில் அஜய் பிசாரியா பதிவு செய்துள்ளார்.
“புல்வாமா குண்டுவெடிப்பு மற்றும் பஹல்காம் சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை” என்று அஜய் பிசாரியா விளக்குகிறார். அதேவேளையில் பஹல்காம் சம்பவம் சற்று வித்தியாசமானது என்றும் அவர் விவரித்தார்.
புல்வாமா அல்லது உரியில் நடந்த தாக்குதல்களில், பாதுகாப்புப் படையினரே இலக்குகளாக இருந்தனர். ஆனால் பஹல்காம் தாக்குதலில், பொதுமக்கள் குறிவைக்கப்பட்டனர். இது 2008 மும்பை தாக்குதல் சம்பவத்தை மீண்டும் நினைவில் கொண்டு வந்தது.
“பஹல்காம் தாக்குதலில் புல்வாமா தாக்குதலின் கூறுகள் இருந்தன. ஆனால் அது மும்பை தாக்குதலின் வடிவத்தைக் காட்டியது” என்று கூறும் அஜய் பிசாரியா, “நாம் மீண்டும் ஒரு மோதல் நிலையில் இருக்கிறோம். கதை கிட்டத்தட்ட அதே வழியில் முன்னேறி வருகிறது” என்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
பஹல்காம் தாக்குதல் நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல், தூதர்களை வெளியேற்றுதல் மற்றும் பாகிஸ்தான் குடிமக்களுக்கு விசாக்களை தடை செய்தல் போன்ற பல விரைவான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்தது. பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்களுக்கு இந்தியாவின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தானில் இருந்து ஏற்றுமதியும் தடை செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை முன்னெடுத்தது. பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு தங்களது வான்வெளியை மூடியது. மேலும், இந்தியர்களுக்கான விசா வழங்குவதை நிறுத்தியதோடு, சிம்லா ஒப்பந்தத்தைவும் இடைநிறுத்தியது.
இறுதியாக, இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இலக்குகளைக் குறிவைத்து தாக்குதலை மேற்கொண்டது. பாகிஸ்தானும் ஜம்மு-காஷ்மீரில் பதில் தாக்குதல் நடத்தியது.
பிப்ரவரி 14, 2019 அன்று நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட பதிலடி நடவடிக்கை குறித்து அஜய் பிசாரியா தனது நினைவுக் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். “அடுத்த நாள் காலை நான் டெல்லிக்கு அழைக்கப்பட்டேன், ஏனெனில் அரசாங்கம் வர்த்தகத்தை நிறுத்த உடனடி நடவடிக்கைகளை எடுத்தது.
கடந்த 1996ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட ‘மிகவும் விரும்பத்தக்க நாடு’ எனும் அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அடுத்த சில நாட்களில், பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு பாகிஸ்தான் பொருட்கள் மீது 200 சதவிகித சுங்க வரியை விதித்தது,” என்று விளக்கியுள்ளார்.
இதனால் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி நிறுத்தப்பட்டதோடு, வாகா எல்லை வழியாக நடக்கும் வர்த்தகமும் முடக்கப்பட்டதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், ANI
இந்த நடவடிக்கைகளுடன், பாகிஸ்தான் உடனான உறவைக் குறைக்கப் பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக அஜய் பிசாரியா கூறினார்.
எல்லை தாண்டிய சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் நிறுத்தம், டெல்லி- லாகூர் இடையிலான பேருந்து சேவை நிறுத்தம், கர்தார்பூர் வழித்தடம் குறித்த பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைத்தல், விசா வழங்குவதைத் தடை செய்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்துகளை நிறுத்தி வைத்தல் ஆகியவை அதில் அடங்கும்.
“நம்பிக்கையை உருவாக்குவது எவ்வளவு கடினம், ஆனால் அதை உடைத்துவிடுவது எவ்வளவு எளிது” என்று பிசாரியா இதை விவரித்துள்ளார்.
“சிக்கலான உறவுகளுக்குள் பரஸ்பர நம்பிக்கையை மீட்டெடுத்து, பேச்சுவார்த்தை நடத்தி, அதை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் சில நிமிடங்களிலேயே நிராகரிக்கப்படுகின்றன” என்கிறார் பிசாரியா.
ஜூன் 2020இல் ராஜ்ஜீய ரீதியாக நடந்த ஒரு தனி சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள இந்திய உயர் தூதரகத்தில் இருந்த பணியாளர்களின் எண்ணிக்கை 110 லிருந்து 55 ஆகக் குறைக்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை 30 ஆக குறைந்தது.
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட ராஜ்ஜீய நடவடிக்கைகள்
பட மூலாதாரம், Ajay Bisaria
இந்தியாவும் பல ராஜ்ஜீய நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
புல்வாமா தாக்குதல் நடந்த மறுநாள், அப்போதைய வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகலே, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட 25 நாடுகளின் தூதர்களைச் சந்தித்து, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (JeM) இந்தத் தாக்குதலில் வகித்த பங்கு குறித்து விளக்கினார்.
இந்த நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை அடங்கும். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பொறுப்பேற்றது.
தாக்குதல் நடந்த 10 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 25 அன்று, ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரை ஐக்கிய நாடுகள் தடைகள் குழுவினால் ஒரு தீவிரவாதியாக அறிவிக்கப்படுவதற்கும், அவரை ஐரோப்பிய ஒன்றியத்தின் “தன்னாட்சி தீவிரவாதிகள் பட்டியலில்” சேர்க்கவும் இந்தியா தனது ராஜ்ஜீய முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்தது.
இந்த நடவடிக்கைகள் அனைத்துக்கும் மத்தியில், இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்களுக்கு இடையே ஹாட்லைன் உள்ளிட்ட தகவல் தொடர்பு வழிகள் தொடர்ந்து செயல்பட்டன. இது இரு ராணுவங்களுக்கும், தூதரகங்களுக்கும் இடையிலான முக்கியத் தகவல் தொடர்புப் பாலமாக அமைந்தது.
சுஷ்மா ஸ்வராஜ் வெளிப்படுத்திய அறிகுறிகள்
பட மூலாதாரம், Getty Images
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைப் போலவே, 2019ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலிலும், “இந்தியாவே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும், பாகிஸ்தானை இந்தியா பொய்யாகக் குற்றம் சாட்டியது” என்றும் பாகிஸ்தான் கூறியது.
இப்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் போலவே, அப்போதும் காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு ‘மறைமுகமாக உதவிய’ 80 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள், தாக்குதல் நடத்தி நபர்களுக்கு மறைவிடங்கள் மற்றும் பிற உபகரணங்களைப் பற்றிய தகவல்களுடன், உளவுத்துறை தகவல்களையும் வழங்கியதாக நம்பப்படுகிறது.
அப்போது இந்தியாவின் உள்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்தார். தாக்குதல் சம்பவம் மற்றும் சந்தேகிக்கப்படும் சதிகாரர்கள் குறித்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன. அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடனான சந்திப்பில், “இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களைச் சமாளிப்பதற்கான இந்தியாவின் ராஜ்ஜீய தேர்வுகள் மிகவும் குறைவாகவே உள்ளன” என்று அஜய் பிசாரியா கூறியிருந்தார்.
“அரசாங்கம் சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்ற எண்ணத்தை அவர் எனக்குக் கொடுத்தார். இதற்குப் பிறகு, ராஜ்ஜீய திட்டங்களின் பங்கு விரிவடையும் என்று நான் எதிர்பார்த்திருக்க வேண்டும்” என்று பிசாரியா தனது நினைவுக் குறிப்புகளில் எழுதியுள்ளார்.
பிப்ரவரி 26 அன்று, இந்திய ராணுவம் ஜெய்ஷ்-இ-முகமது பயிற்சி முகாமை குறிவைத்து வான்வழித் தாக்குதலை நடத்தியது. 1971ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச எல்லையைத் தாண்டி இந்தியா நடத்திய முதல் தாக்குதலாக இது அமைந்தது.
தாக்குதல் நடந்த ஆறு மணிநேரத்திற்குப் பிறகு, இந்தத் தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகளும் அவர்களின் தளபதிகளும் கொல்லப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் அறிவித்தார். ஆனால் பாகிஸ்தான் உடனடியாக இந்தக் கூற்றை நிராகரித்தது. இதற்குப் பிறகு, டெல்லியில் மேலும் பல உயர்மட்டக் கூட்டங்கள் நடந்தன.
மறுநாள், பிப்ரவரி 27ஆம் தேதி காலை, பாகிஸ்தான் பதிலடியாக வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. அப்போது, இந்தியாவின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனின் விமானம் பாகிஸ்தான் ராணுவத்தால் எல்லையைத் தாண்டி சுட்டு வீழ்த்தப்பட்டது.
அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. வெளிநாட்டு மண்ணில் அவர் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையிலான பதற்றம் பெரிதும் அதிகரித்தது.
இந்தியாவின் ராஜ்ஜீய தொடர்புகள்
பட மூலாதாரம், AFP
“பின்னர், ராஜ்ஜீய ரீதியிலான பல வழிகளை இந்தியா செயல்படுத்தியது. இதற்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் தூதர்கள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தனர். விமானி அபிநந்தனுக்கு தீங்கு விளைவிக்க பாகிஸ்தான் முயன்றால், நிலைமை மோசமடையக்கூடும் என்பதே இந்தியாவின் செய்தி” என்று பிசாரியா எழுதியுள்ளார்.
அதையடுத்து, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிப்ரவரி 28 அன்று அபிநந்தனை விடுவிப்பதாக அறிவித்தார். பதற்றங்களைத் தணிப்பதற்கான ஒரு “நல்லெண்ண சைகை”யாக பாகிஸ்தான் இதை முன்வைத்தது.
மார்ச் 5ஆம் தேதிக்குள், புல்வாமா மற்றும் பாலகோட் பிரச்னை சற்று தணிந்து, அபிநந்தன் திருப்பி அனுப்பப்பட்டபோது, இந்தியாவில் அரசியல் சூழல் சற்று மென்மையாக மாறியது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு, இந்திய உயர் தூதரை பாகிஸ்தானுக்கு திரும்ப அனுப்ப முடிவு செய்தது, இது ராஜ்ஜீய திசையில் மாற்றத்தைக் குறிக்கிறது.
“புல்வாமா தாக்குதல் சம்பவம் நடந்த 22 நாட்களுக்குப் பிறகு, மார்ச் 10 அன்று நான் இஸ்லாமாபாத்தை அடைந்தேன். பழைய பாணியிலான ராஜ்ஜீய முறைகளுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்குவதற்கு இந்தியா ஆதரவு அளித்தது.
உத்தி சார்ந்த மற்றும் ராணுவ இலக்கை இந்தியா அடைந்துவிட்டதாலும், தனது குடிமக்கள் முன்னிலையில் பாகிஸ்தான் தன்னை வெற்றியாளராகக் காட்டிக் கொண்டதாலும் இவ்வாறு நடந்திருக்கலாம்” என்று பிசாரியா குறிப்பிட்டுள்ளார்.
ஒரு ராஜதந்திரியாக பிசாரியா இதை “ஒரு சவாலான மற்றும் சுவாரஸ்யமான நேரம்” என்று விவரித்தார். ஆனால் இம்முறை வித்தியாசம் என்னவென்றால், இலக்குகள் இந்திய குடிமக்களாக உள்ளனர். அவர்கள் தாக்கப்பட்டனர். காஷ்மீரின் சூழல் வேகமாக மேம்பட்டிருந்த காலகட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்தது முரணாக உள்ளது.
‘நெருக்கடி தொடர்கிறது’
பட மூலாதாரம், Getty Images
இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றமான சூழ்நிலைகளில் ஏற்படும் அழுத்தத்தைத் தவிர்க்க முடியாது. ஆனால் இந்தச் சூழ்நிலைகளில், “அழுத்தத்தை அதிகரிக்கும் போக்கும், அதை எளிதாக்கும் போக்கும் உள்ளன” என்கிறார் பிசாரியா.
இதுபோன்ற மோதல்களின்போது, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூடும்போது, இந்த முடிவுகளின் பொருளாதார தாக்கத்தை அவை மதிப்பிடுகின்றன.
மேலும், இந்தியாவுக்கு எதிராக எதிர்வினையைத் தூண்டாமல் பாகிஸ்தானுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கண்டறிய முயலும் என்றும் அவர் கூறினார்.
“இந்த முறை ஏற்பட்டுள்ள எதிர்வினைகளும், சூழ்நிலையும், முந்தைய சந்தர்ப்பங்களைப் போலவே இருந்தது” என்கிறார் பிசாரியா.
இந்த முறை எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களில் ஒன்றாக, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியதை வலியுறுத்தும் பிசாரியா, இந்தியா இன்னும் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்தால், அது பாகிஸ்தானுக்கு நீடித்த மற்றும் தீவிரமான விளைவுகளை உருவாக்கும் என்றும் எச்சரிக்கிறார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.