பட மூலாதாரம், Getty Images
இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் ஷங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே புரிதல் எட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அனைத்து வடிவத்திலும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை கடைபிடித்து வருவதாகவும். இந்த நிலை தொடரும் எனவும் ஜெய்ஷங்கர் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) இன்று பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய DGMOவை அழைத்துப் பேசினார்.
அதன்படி, இரு தரப்பினரும் நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்த உடன்பாட்டைப் புரிந்துக் கொண்டு செயல்படுத்துமாறு இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் மே 12 ஆம் தேதி மதியம் 12:00 மணிக்கு மீண்டும் பேசுவார்” என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக அமலுக்கு வரும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் டார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாக பேசியதாகவும் அதன் முடிவாக கூட்டு புரிதல் எட்டப்பட்டதாகவும் இஷாக் டார் ஜியோ டிவியிடம் கூறியுள்ளார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில்,”இந்தியா மற்றும் பாகிஸ்தான் முழுமையான மற்றும் உடனடியான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன” என பதிவிட்டுள்ளார்.
“இரவு முழுவதும் அமெரிக்காவின் மத்யஸ்தத்துடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடியான பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுள்ளன என நான் அறிவிக்கிறேன்” என்று டிரம்ப்பின் சமூக வலைத்தள பதிவு கூறுகிறது.
“பொதுஅறிவு மற்றும் புத்திசாலித்தனத்தை பயன்படுத்திய இரு நாடுகளுக்கும் பாராட்டுக்கள். இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியதற்கு நன்றி” என்றும் டிரம்பின் பதிவில் கூறப்பட்டுள்ளது.
”இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன மற்றும் பொதுவான நாட்டில் பரந்த அளவிலான பிரச்னை குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள்” என அமெரிக்க வெளியுறத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்
இந்திய ராணுவம் செய்தியாளர்கள் சந்திப்பு
இதனை தொடர்ந்து இன்று மாலை இந்திய பாதுகாப்புத்துறை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.
அப்போது பேசிய கடற்படை கேப்டன் ரகு நாயர், ”சண்டை நிறுத்தம் கடைபிடிக்கப்படுகிறது. கடற்படை, விமானப்படை மற்றும் ராணுவம் சண்டை நிறுத்தத்தை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், ”பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மேற்கொண்ட பதில் நடவடிக்கைகள், கட்டுப்படுத்தப்பட்டதாகவும், பொறுப்புணர்வுடனும் இருந்தன” என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங்,” தவறான தகவல்” பிரசாரத்தை மேற்கொள்ள பாகிஸ்தான் பல முயற்சிகளை எடுத்ததாக கூறினார்.
”பாகிஸ்தான் இழப்புகளைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள விமானத் தளங்கள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது” என்று வியோமிகா சிங் கூறினார்.
அடுத்து பேசிய கர்னல் சோஃபியா குரேஷி, ”முதலில், பாகிஸ்தான் தனது ஜி.எஃப் 17ஐக் கொண்டு இந்தியாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பை சேதப்படுத்தியதாக கூறியது. இது முற்றிலும் பொய்யான தகவல். அதேபோல, இரண்டாவதாக சிர்சா, பதான்கோட், ஜம்மு, பட்டிண்டா, நலியா மற்றும் புஜ்-இல் உள்ள விமானப்படைத் தளங்களை தாக்கியதாவும் பிரசாரம் செய்யப்பட்டது. இதுவும் பொய்ப்பிரசாரம் தான்” என்றார்.
மேலும், ”சண்டிகர் மற்றும் பியாஸில் உள்ள இந்திய ஆயுதக் கிடங்கு சேதமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. இதுவும் பொய்யான தகவல். நாங்கள் இன்று காலை கூறியதுபோல, அவை அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன.”
”பாகிஸ்தானில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர்களது மூத்த ராணுவ அதிகாரிகள் உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளனர். இந்திய ராணுவம், மசூதிகளை சேதப்படுத்தியதாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். நான் இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, இந்திய ராணுவம் கலாசாரத்தை மதிக்கிறது.
இந்திய ராணுவம், பாகிஸ்தானுக்கு மிக அதிகமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுடைய நிலம் மற்றும் வான்வெளி சொத்துக்களுக்கு சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்றார் சோஃபியா குரேஷி.
பட மூலாதாரம், Reuters
இந்தியா-பாகிஸ்தான் மோதல் தொடங்கியது எங்கே?
கடந்த மாதம் ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, மே 7ஆம் தேதி அதிகாலையில் பாகிஸ்தானில் ஒன்பது இலக்குகளைக் குறிவைத்து இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இந்தத் தாக்குதல்கள் தீவிரவாத மறைவிடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் எந்தவொரு ராணுவ முகாமையோ பொது மக்களையோ குறிவைக்கவில்லை என்றும் இந்தியா கூறியது.
மே 8ஆம் தேதி மாலையில், ஜம்மு உள்ளிட்ட மேற்கு எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டதாக இந்தியா மே 9ஆம் தேதி கூறியது. ஆனால், இந்தக் கூற்றை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இதற்கிடையில், அதிகரித்து வரும் பதற்றத்தைக் குறைக்குமாறு அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் இரு நாடுகளிடமும் வேண்டுகோள் விடுத்தன.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு