பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அன்ஷுல் சிங்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் ஒன்பது இடங்களில் உள்ள ‘பயங்கரவாத முகாம்களை’ தாக்கியதாக இந்திய ராணுவம் கூறுகிறது.
இந்த ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய ராணுவத்தை சேர்ந்த கர்னல் சோஃபியா குரேஷி, “கடந்த மூன்று தசாப்தங்களாக பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் அதிகரித்துள்ளன. இவற்றில் ஆள் சேர்ப்பு, பயிற்சியளிப்பது மற்றும் ஏவுதளங்கள் ஆகியவை அடங்கும். அவை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் பரவியுள்ளன” என்று கூறியிருந்தார்.
இது இந்தியாவின் ‘போர் நடவடிக்கை’ என்று கூறிய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தகுந்த பதிலடி கொடுக்க தங்களுக்கு முழு உரிமை உண்டு என்றார்.
நான்கு நாட்கள் எதிரும் புதிருமாக இருந்த இரு நாடுகளும், பிறகு சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டை நிறுத்தம் குறித்த தகவல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்தான் முதலில் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
பஹல்காம் தாக்குதல் நடைபெற்றதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையில் உச்சகட்டத்தில் இருந்த பதற்றம் சண்டை நிறுத்தத்திற்குப் பிறகும் குறையவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையே நான்கு நாட்கள் நடைபெற்ற மோதலில் அதிக இழப்பு யாருக்கு? யாருக்கு எவ்வளவு நட்டம் என்பதே இப்போதைய பேசுபொருளாக உள்ளது. இந்த விஷயத்தில் நிபுணர்களின் கருத்து என்ன?
பட மூலாதாரம், Getty Images
இழப்புகள் குறித்த இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கூற்றுகள்
இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசும்போது, இந்தியாவின் 5 போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை சுட்டு வீழ்த்தியதாக கூறியிருந்தார். அதில் 3 ரஃபேல் விமானங்களும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதைத் தவிர, தாக்குதல் நடைபெற்ற இரவில் 70க்கும் மேற்பட்ட டிரோன்களையும் குறிவைத்ததாக பாகிஸ்தான் தரப்பு கூறியது.
பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்ட இந்த விவரங்கள் தொடர்பாக, இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி தெளிவான பதில் எதையும் அளிக்கவில்லை, ரஃபேல் விமானங்களின் இழப்பு குறித்த பாகிஸ்தானின் கூற்று தொடர்பாகவும் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எடுத்த பதில் நடவடிக்கையில் பதான்கோட், அம்பாலா, உதம்பூர், ஸ்ரீநகர், படிண்டா, ஆதம்பூர், அவந்திபூர், சூரத்கர், சிர்சா உட்பட 26 இந்திய ராணுவ தளங்களை குறிவைத்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இவற்றைத் தவிர, இந்திய தலைநகர் டெல்லி உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களின் மீது டஜன் கணக்கான டிரோன்களை பறக்கவிட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் கூறியது.
நக்ரோட்டாவில் உள்ள பிரம்மோஸ் ஏவுகணை சேமிப்பு தளத்தையும், ஆதம்பூரில் உள்ள S-400 வான் பாதுகாப்பு அமைப்பையும் தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
ஆதம்பூரில் S-400 வான் பாதுகாப்பு அமைப்புக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது, இந்திய பிரதமர் மோதி சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்றபோது எடுக்கப்பட்ட படங்கள் மூலம் தெரிந்தது.
அத்துடன் பாகிஸ்தான் கூறிய பிற கூற்றுகளை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியாவுக்கு கிடைத்த லாபம் என்ன?
இந்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி,
- ஒன்பது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன, நூற்றுக்கும் மேற்பட்ட ‘தீவிரவாதிகள்’ கொல்லப்பட்டனர்
- யூசுப் அஜ்ஹர், அப்துல் மலிக் ரவூஃப், முத்சிர் அகமது போன்ற முக்கிய ‘தீவிரவாத தளபதிகள்’ கொல்லப்பட்டனர்
- அணுசக்தி நாடான பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்களை ஒரே தாக்குதலில் தாக்கிய முதல் நாடு இந்தியா.
- பாகிஸ்தான் விமானப்படை உடைமைகளில் 20% அழிக்கப்பட்டன
- போலாரி விமானப்படைத் தளத்திற்கு பெரும் சேதம் மற்றும் படைத் தலைவர் உஸ்மான் யூசுப் மரணம்
செயற்கைக்கோள் படங்களில் காணப்பட்டவை என்ன?
மோதலின் போது, இந்தியாவும் பாகிஸ்தானும் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தின. இதற்குப் பிறகு, இரு தரப்பினரும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியாக தெரிவித்தன
தாக்குதல்கள் பரவலாக நடந்திருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன, ஆனால் கூறப்பட்டதை விட சேதம் குறைவாக இருப்பதாக அமெரிக்க செய்தித்தாள் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் மற்றும் விமான நிலையங்களை குறிவைப்பதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.
மேலும், “பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியிலிருந்து 100 மைல்களுக்கும் குறைவான தொலைவில் அமைந்திருக்கும் போலாரி விமானத் தளத்தில் துல்லியமான தாக்குதலை நடத்தியதாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கூறினார்கள். அங்கு ஒரு இடத்தில் வெளிப்படையான சேதம் ஏற்பட்டிருந்ததை புகைப்படங்கள் காட்டின” என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் ஜாம்ஷோரோ மாவட்டத்தில் போலாரி விமானப்படை தளம் உள்ளது. பாகிஸ்தானில் உள்ள மிகவும் நவீன விமான தளங்களில் ஒன்றான இந்தத் தளம் 2017 டிசம்பரில் திறக்கப்பட்டது.
இதேபோல், பாகிஸ்தானின் நூர் கான் விமானத் தளம், ரஹீம் யார் கான் விமான நிலையம் மற்றும் சர்கோதா விமானத் தளம் ஆகியவற்றிற்கு ஏற்பட்ட சேதங்களையும் செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு டஜன்களுக்கும் மேற்பட்ட இந்தியாவின் ராணுவ நிலைகள் மற்றும் தளங்களை குறிவைத்ததாக பாகிஸ்தான் கூறியது. இதில் உதம்பூர் விமான தளமும் அடங்கும். ஆனால் மே 12ஆம் தேதி உதம்பூர் விமானப்படை தளத்திலிருந்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில் சேதங்கள் ஏதும் தெரியவில்லை.
பட மூலாதாரம், Getty Images
பட மூலாதாரம், Planet Labs
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
‘ஆபரேஷன் சிந்தூர்’ தனது மூலோபாய நோக்கங்களை அடைந்துவிட்டதாகவும், இந்தியா மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் பாதுகாப்பு நிபுணர் ஜான் ஸ்பென்சர் நம்புகிறார்.
எக்ஸ் வலைதளத்தில் ஜான் ஸ்பென்சர், “நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளில் இந்தியா பெரிய வெற்றியைப் பெற்றது. ஆபரேஷன் சிந்தூர், அதன் மூலோபாய நோக்கங்களை அடைந்தது மட்டுமல்ல, வேறுசில மேலதிக செயல்களையும் செய்தது. தீவிரவாத உள்கட்டமைப்பை அழித்தது, இந்திய ராணுவத்தின் திறனை நிரூபித்தது மற்றும் ஒரு புதிய தேசிய பாதுகாப்பு கோட்பாட்டை விளக்கியது. ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் அடையாளமாக இல்லை, இந்த தீர்க்கமான சக்தி, தெளிவாகப் பயன்படுத்தப்பட்டது.” என்று கூறியுள்ளார்.
“இந்தியா பழிவாங்குவதற்காக சண்டையிடவில்லை. தடுப்புக்காகப் போராடியது, அது வேலை செய்தது” என்கிறார் ஸ்பென்சர். “பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத மறைவிடங்கள், டிரோன் மையங்கள், விமான தளங்கள் உட்பட எந்தவொரு இலக்கையும் தாக்கும் திறன் தங்களிடம் உள்ளது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. ஆனால், இந்தியாவின் எந்தவொரு பாதுகாப்பான மண்டலத்தையும் பாகிஸ்தானால் ஊடுருவ முடியவில்லை. இது இரு நாடுகளும் சமநிலையில் இல்லை என்பதையும், இந்தியாவின் கை மேலோங்கி இருந்தது என்பதையும் காட்டுகிறது” என்கிறார் அவர்.
ஃபாரின் பாலிசி பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ரவி அகர்வால், இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து சிஎன்என் பத்திரிகையாளர் ஃபரீத் ஜகாரியாவுடன் பேசினார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அண்மை மோதலின் விளைவு என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த ரவி அகர்வால், “பாகிஸ்தானைப் பொருத்தவரை, தனது பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்க அந்நாட்டு ராணுவம் விரும்புகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. மிகவும் வலிமையான அண்டை நாட்டைத் தடுக்க முடியும் என்பதை நிரூபிக்க விரும்புவதாக தெரிகிறது. ஆனால் முதலில் ராணுவம் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், இறுதியில் அதைத்தான் அவர்கள் செய்ய விரும்புகிறார்கள்” என்று கூறினார்.
இந்தியா ஒவ்வொரு முறையும் எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதிலும், இந்த முறை முன்பை விட தீவிரமாக பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தது. அதேசமயம் பாகிஸ்தான் அணுசக்தி கொண்ட நாடு என்ற நிலையில் இந்தியா எப்படி இவ்வளவு துணிச்சலைக் காட்டியது?
இந்தக் கேள்விக்கு ரவி அகர்வால் பதில் அளிக்கையில், “இந்தியாவின் பொருளாதாரம் 1999இல் பாகிஸ்தானை விட ஐந்து மடங்கு மட்டுமே பெரிதாக இருந்தது. ஆனால் அது தற்போது 11 மடங்கு பெரியதாக அதிகரித்துவிட்டது. எனவே இந்தியாவின் நம்பிக்கையும் அதிகரித்திருக்கிறது. எல்லை தாண்டிய தாக்குதல்கள் அதிகரித்திருப்பதால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா நினைக்கிறது. ஆனால் இந்த காரணங்கள் அனைத்திற்கும் மேலாக, பிரச்னையின் மூல காரணம், பாகிஸ்தான் ராணுவத்தால் அதன் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனபதுதான், அதை இந்தியா மாற்ற விரும்புகிறது” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
சண்டை நிறுத்தம் நல்லதா? இல்லை மூலோபாய தவறா?
சண்டை நிறுத்தம் ஒரு மூலோபாய தவறாகக் கருதப்படும் அபாயத்தை சுட்டிக்காட்டுகிறார், நன்கு அறியப்பட்ட மூலோபாய விவகார ஆய்வாளரான பிரம்மா செலானி.
“ராணுவ மோதலில் பாகிஸ்தானின் கை மேலே இருந்திருந்தால், அது இந்தியாவிற்கு தீர்க்கமான மற்றும் அவமானகரமான முடிவை கொடுக்கவே நினைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை” என்று பிரம்மா செலானி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
“மாறாக, தனது ஆயுதப் படைகள் மேலாதிக்கம் செலுத்திய நிலையிலும் இந்தியா சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. இந்த நடவடிக்கை இந்தியாவின் கட்டுப்பாடு அல்லது ராஜ்ஜீய கணக்கீட்டைப் பிரதிபலிக்கும் அதே வேளையில், இது மூலோபாயத் தவறு என்று கருதப்படும் அபாயமும் உள்ளது. இந்தியாவின் முடிவு, நன்றாக திட்டமிடப்பட்டது, அது மீண்டும் வேட்டையாடக்கூடும்.”
இந்த சண்டையில் இருந்து படிப்பினையை கற்றுக் கொள்ளும் இரு நாடுகளும், எதிர்காலத்தில் ஆயுதக் கொள்முதல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்று அமெரிக்க சிந்தனைக் குழுவான ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தின் உறுப்பினரான ஜோசுவா டி. வொயிட் கூறுகிறார்.
“பாகிஸ்தான் சீனாவுடனான அதன் நெருக்கத்தை இரட்டிப்பாக்குவதோடு, டிரோன்களுக்காக துருக்கியுடனான கூட்டாண்மையையும் அதிகரிக்கும். முதல் பார்வையில், பாகிஸ்தானின் விமானப்படை வான் இலக்குகளை தாக்குவதில் ஒப்பீட்டளவில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக தோன்றுகிறது” என்று ஜோசுவா டி. வொயிட் குறிப்பிட்டுள்ளார்.
“சண்டையில் ஏற்பட்ட சேதங்களைப் பற்றி மதிப்பிடும்போது பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுகின்றன. அதிலும் இந்தியாவிற்குள் சொற்ப சேதத்தை மட்டுமே ஏற்படுத்தும் டிரோன்கள் அதிக எண்ணிக்கையில் ஏவப்பட்டது ஏன் என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.”
இந்தியாவைப் பற்றி கூறுகையில், “இந்தியா பல சிக்கல்களை எதிர்கொண்டாலும், அதன் வான் பாதுகாப்பு அமைப்பு மிகவும் சிறப்பாக செயல்பட்டதாகத் தெரிகிறது. அத்துடன் இந்திய ராணுவம் ஒரே நேரத்தில் வான் மற்றும் தரைவழித் தாக்குதல்கள் மூலம் பாகிஸ்தானை அடைய முடியும் என்பதை நிரூபித்துள்ளது. ஆனால் இந்த நெருக்கடி தொடர்ந்தால், ஏவுகணைகள் மற்றும் போர்ப் பொருட்களின் மிகப் பெரிய கையிருப்பு தேவை என்ற கவலை இந்தியாவிற்கு அதிகரிக்கும்.” என்றார் ஜோசுவா.
லண்டன் கிங்ஸ் கல்லூரியின் மூத்த விரிவுரையாளரான வால்டர் லாட்விக், கத்தாரின் ஊடக நிறுவனமான அல் ஜசீராவிடம் பேசியதன் சாரம்சம் இது:
“சமீபத்திய மோதல், பாகிஸ்தானின் நீண்டகால மூலோபாய இலக்காக இருந்து வரும் காஷ்மீர் பிரச்னையை சர்வதேசமயமாக்குவதற்கான வாய்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. ராஜ்ஜிய ரீதியாக, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாதக் குழுக்கள் மீது சர்வதேச கவனத்தை ஈர்க்கச் செய்வதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது” என்று கூறினார்.
தீவிரவாதத்தை எதிர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதை சர்வதேச மன்றங்களில் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு தற்போது பாகிஸ்தானிடம் வந்துவிட்டது என்று லைட்விக் கூறுகிறார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு