படக்குறிப்பு, பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி (கோப்புப் படம்)
மே மாதம் இந்தியாவுடன் ராணுவ மோதல் தொடங்கிய நேரத்தில், தான் நிலத்தடி பதுங்கு குழிக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டக பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தான் அதை தேர்ந்தெடுக்கவில்லை என்றும், ‘தலைவர்கள் போர்க் களத்தில்தான் இறப்பார்கள், பதுங்குகுழியில் அல்ல’ என்று தனது உதவியாளரிடம் கூறியதாகவும் சர்தாரி குறிப்பிட்டார். ஒரு நிகழ்ச்சியின் போது அவர் இந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, மே 6 மற்றும் 7-ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதிகளில் இந்தியா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதற்கு ”ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கையின் போது ஒன்பது இடங்களில் இருந்த ‘பயங்கரவாதிகளின் முகாம்கள்’ மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் கூறியது.
அதே நேரத்தில், பாகிஸ்தான் ராணுவம் தனது பதில் நடவடிக்கையான ‘ஆபரேஷன் புனியன்-உன்-மர்சூஸ்’ மூலம் இந்தியாவின் 26 ராணுவ நிலைகளை குறி வைத்ததாகக் கூறியது.
சர்தாரி என்ன பேசினார்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மே மாதத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் தொடங்கியது (கோப்புப் படம்)
பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, சிந்து மாகாணத்தின் லர்கானா நகரில் தனது மனைவியும் முன்னாள் பிரதமருமான பெனாசிர் பூட்டோவின் 18-வது நினைவு தினத்தை முன்னட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய சர்தாரி, “எனது உதவியாளர் இங்கேயே இருக்கிறார். அவர் என்னிடம் வந்து, ‘சார் போர் தொடங்கிவிட்டது’ என்று கூறினார். உண்மையில் போர் நடக்கப்போகிறது என்று நான்கு நாட்களுக்கு முன்பே நான் அவரிடம் சொல்லியிருந்தேன். ஆனால் அவர் என்னிடம், ‘சார் பதுங்கு குழிக்குள் செல்லலாம்’ என்றார்” எனக் குறிப்பிட்டார்.
“உயிர்த்தியாகம் நடக்கவேண்டும் என்றால் அது இங்கேயே வரட்டும், தலைவர்கள் பதுங்கு குழிகளில் சாவதில்லை, களத்திலேயே சாகிறார்கள், பதுங்குகுழிகளில் பதுங்கி சாவதில்லை என்று அவரிடம் சொன்னேன். மீண்டும் எப்போது தேவைப்பட்டாலும், பாகிஸ்தான் மண்ணுக்குத் தேவைப்பட்டால் எங்களது உயிர் மற்றும் உடைமைகளை பணயம் வைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.”
மேலும் அவர், “நான் ஒருத்தியே போதும் என்று பிபி சாஹிபா (பெனாசிர் பூட்டோ) சொல்வார். அதேபோல மக்கள் கட்சியினராகிய நாங்கள் அனைவரும் போதுமானவர்கள்,” என்றார்.
“நம்மிடையே நடக்கும் இது போன்ற போர்களுக்குள் தங்கள் குழந்தைகளை தள்ள யாருக்கும் விருப்பம் இருக்காது. ஆனால் நாம் போராடுவோம், நமது அடுத்த தலைமுறைகளும் போராடும். எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை, நாங்கள் போராடுவோம். நாங்கள் போரின் மீது மோகம் கொண்டவர்கள் அல்ல.”
இந்த உரையின் போது சர்தாரி, “நாங்கள் எந்த நாட்டுடனும் போர் புரிய விரும்பவில்லை. ஆனால் யாராவது எங்களது சட்டையைப் பிடித்தால், அவருக்குத் தகுந்த பதிலடி கொடுப்போம்,” என்று கூறினார்.
‘நாம் போர் புரிய வேண்டியிருக்கலாம்’
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு காஷ்மீரிலும் எதிர்ப்பு கிளம்பியது (கோப்புப் படம்)
பாகிஸ்தானை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்களுக்குப் பாடம் புகட்டப்படும் என்று சர்தாரி கூறினார்.
“பாகிஸ்தான் ராணுவம் அவர்களுக்குப் பாடம் புகட்டும், பாகிஸ்தான் கடற்படை அவர்களுக்குப் பாடம் புகட்டும், பாகிஸ்தான் விமானப்படை அவர்களுக்குப் பாடம் புகட்டும். இதற்கான ஏற்பாடுகளை நாங்கள் ஏற்கனவே செய்து வைத்துள்ளோம்,” என மேலும் தெரிவித்தார்.
“நாம் போர் புரிய வேண்டிய சூழல் வரலாம் என்பதற்கான தயாரிப்புடன் இருக்கிறோம். பாகிஸ்தானைப் பாதுகாப்பதற்கான அந்தப் புரிதல் எங்களிடம் உள்ளது. எங்களிடம் அந்தப் புரிதல் இல்லையென்றால், எதிரி நம்மைத் தீய கண்களுடன் பார்ப்பான்.” என்றும் கூறினார்.
“அவர்கள் தாக்குதல் நடத்த வந்தபோது, நாங்கள் ஏற்கனவே வானத்தில் அவர்களுக்காகக் காத்திருந்தோம். பாகிஸ்தான் விமானப்படை அவர்கள் முன்னால் நின்றபோதுதான் அவர்களுக்கு அது தெரிந்தது. அவர்களை இப்போதே சுட்டுத் தள்ளுங்கள் என்று கட்டளை வழங்கப்பட்டபோதுதான் அவர்களுக்கு விஷயம் புரிந்தது,” என சர்தாரி குறிப்பிட்டார்.
இந்தச் செய்தி எழுதப்படும் வரை ஆசிஃப் அலி சர்தாரியின் இந்தக் கூற்றுக்கு இந்தியா தரப்பிலிருந்து எந்தப் எதிர்வினையும் வரவில்லை.
ஏப்ரல்-மே மாதங்களில் என்ன நடந்தது?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர் (கோப்புப் படம்)
ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, மே மாதத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து அது ராணுவ மோதல் என்கிற நிலைக்குச் சென்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த மோதல் நான்கு நாட்கள் நீடித்தது. போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்தியாவின் முப்படைகளும் மே 11-ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பை நடத்தின.
செய்தியாளர் சந்திப்பில் இந்திய ராணுவத்தின் டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், பஹல்காம் தாக்குதலைக் குறிப்பிட்டு, “ஆபரேஷன் சிந்துரின் நோக்கம் பயங்கரவாதச் செயல்களைச் செய்தவர்களையும், அதைத் திட்டமிட்டவர்களையும் தண்டிப்பதும், அவர்களின் பயங்கரவாதக் கட்டமைப்புகளை அழிப்பதும் ஆகும்.” என்றார்.
அதே செய்தியாளர் சந்திப்பில் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி கூறுகையில், “எல்லைக்கு அப்பால் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கிய பிறகு, மே 7-ஆம் தேதி மாலை இந்தியாவின் மேற்கு எல்லையை ஒட்டிய பல பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான பாகிஸ்தானின் ஆளில்லா பறக்கும் வாகனங்கள் மற்றும் சிறிய ட்ரோன்கள் காணப்பட்டன” என்றார்.
“இவை குடியிருப்புப் பகுதிகள் மற்றும் ராணுவ நிலைகளுக்கு மேலே காணப்பட்டன. ராணுவம் அவற்றை வெற்றிகரமாக இடைமறித்தது,” என ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி மேலும் தெரிவித்தார்.
அவற்றில் சில தாக்குதலில் வெற்றி பெற்றாலும், அதனால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி பேசுகையில், “இங்கே இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நாங்கள் அவர்களின் பயங்கரவாதிகளை குறி வைத்தோம், ஆனால் அவர்கள் எங்களது சாமானிய மக்களையும் ராணுவக் கட்டமைப்புகளையும் குறி வைத்தார்கள்,” எனக் குறிப்பிட்டார்.
அதே வேளையில், பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரீப் சவுத்ரி கூறுகையில், “இந்தியாவின் 26 ராணுவ நிலைகள் இலக்கு வைக்கப்பட்டன, அவற்றில் விமானப்படை மற்றும் விமான தளங்களும் அடங்கும். இந்தத் தளங்கள் சூரத்கர், சிர்சா, ஆதம்பூர், புஜ், நாலியா, பதிண்டா, பர்னாலா, ஹர்வாடா, அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, அம்பாலா, உதம்பூர் மற்றும் பதான்கோட் ஆகிய இடங்களில் இருந்தன.” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “பாகிஸ்தானின் ட்ரோன்கள் காஷ்மீர் முதல் தலைநகர் டெல்லி மற்றும் குஜராத் வரை பறந்தன. பாகிஸ்தான் ராணுவம் தீவிரமான சைபர் தாக்குதல்களையும் நடத்தியது. பாகிஸ்தான் அனைத்துத் தாக்குதல்களையும் மிகத் திறமையாக நடத்தியது, அதனால் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் தாக்கப்படவில்லை” என்றார்.