2026 – 27ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் நிதிநிலை அறிக்கை ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ச்சியாக அவர் தாக்கல் செய்யும் ஒன்பதாவது நிதி நிலை அறிக்கை இது. பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவில் தாக்கல் செய்யப்பட்ட இந்த நிலை அறிக்கையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் பெரிய அளவில் இடம்பெறவில்லை. ஆனால், கவனிக்கத்தக்க சில அம்சங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
சுமார் 53.47 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்த நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சரியாகச் சொன்னால், 53,47,315 கோடி ரூபாய். நிதிப் பற்றாக்குறை 16,95,768 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. வருவாய் பற்றாக்குறையைப் பொறுத்தவரை கடந்த நிதியாண்டைவிட அதிகரித்து 5,92,344 லட்சம் கோடி ரூபாயாக இருந்தாலும், அதே 1.5 சதவீதமாக நீடிக்கும் என இந்த நிதிநிலை அறிக்கை கூறுகிறது.
கடந்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக இருந்தது. அது இந்த நிதியாண்டில் 4.3 சதவீதமாகக் குறையும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. கடன்களைப் பொறுத்தவரை, ஜிடிபியில் 56.1 சதவீதத்தில் இருந்து 55.6 சதவீதமாகக் குறையும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டில்தான் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் செய்யப்பட்டது என்பதால், கடந்த நிதியாண்டில் இருந்த அளவுக்குத்தான் வரி வருவாய் இருக்குமென மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த வரி வருவாய், 8 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செலவுகளைப் பொறுத்தவரை, இந்த நிதி நிலை அறிக்கையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது முதலீட்டுச் செலவுகள்தான். மொத்தச் செலவான 53.47 லட்சம் கோடி ரூபாயில் 12,21,821 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டுச் செலவுகள் செய்யப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது.
நிதிப் பற்றாக்குறை குறைப்பு, மூலதனச் செலவு அதிகரிப்பு போன்ற அம்சங்கள் இருந்தபோதும் பங்குச் சந்தை நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது. நிதியமைச்சர் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து கொண்டிருந்தபோதே, பங்குச் சந்தை வீழ ஆரம்பித்தது. நிதி நிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்த மற்றொரு அம்சம், வீழ்ச்சியை இன்னும் துரிதப்படுத்தியது.
அதாவது, ஃபியூச்சர்ஸ் (Futures) வர்த்தகம் மீதான பங்குப் பரிவர்த்தனை வரி (STT) தற்போதைய 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் ஆப்ஷன்ஸ் பிரீமியம் (options premium) மற்றும் ஆப்ஷன்ஸ் செயல்படுத்தல் (exercise of options) ஆகிய இரண்டிற்குமான பங்குப் பரிவர்த்தனை வரி முறையே தற்போதைய 0.1 சதவீதம் மற்றும் 0.125 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார்.
சிறு முதலீட்டாளர்கள் ப்யூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் ஈடுபட்டு தொடர்ந்து இழப்புகளைச் சந்தித்துவருவதாக ‘செபி’ சுட்டிக்காட்டிவந்த நிலையில் இந்தக் கட்டண அதிகரிப்பு, அந்தத் திசையில் ஒரு கவனிக்கத்தக்க நடவடிக்கையாக இருந்தது. ஆனால், பங்குச் சந்தை இதனை எதிர்மறையாக அணுகியதில், பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
மோதி பாராட்டு
மத்திய பட்ஜெட்டைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோதி, உள்கட்டமைப்பை வலுப்படுத்த பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
“இந்த பட்ஜெட் நிகழ்கால கனவுகளை நனவாக்குகிறது மற்றும் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துகிறது. உள்கட்டமைப்பை வலுப்படுத்த பட்ஜெட் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பிரத்யேக சரக்கு வழித்தடங்கள், நாடு முழுவதும் நீர்வழிகளை விரிவுபடுத்துதல், அதிவேக ரயில் வழித்தடங்கள், அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 நகரங்களின் மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்துதல் மற்றும் நகரங்களுக்கு வலுவான பொருளாதார அடித்தளத்தை வழங்க நகராட்சி பத்திரங்களை ஊக்குவித்தல், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தை மேலும் துரிதப்படுத்தும்.” என்று அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இல்லாத இந்த நிதி நிலை அறிக்கை எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப. சிதம்பரம், நிதி நிலை அறிக்கை குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். “வேலை வாய்ப்பின்மை, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது போன்ற நிஜமான பிரச்னைகளை நிதியமைச்சர் கவனத்தில் கொள்ளவில்லை” என்று குறிப்பிட்டார் ப. சிதம்பரம்.
பொருளாதார நிபுணர்களைப் பொறுத்தவரை நிதி நிலை அறிக்கையின் சில அம்சங்கள் கவனிக்கத்தக்கவை என்றாலும் வேறு சில எதிர்பார்ப்புகளை இந்த நிதி நிலை அறிக்கை பூர்த்தி செய்யவில்லை என்கிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
“2025 – 26ஆம் நிதியாண்டில் 4.4 சதவீதமாக இருந்த நிதிப் பற்றாக்குறை, வரும் நிதியாண்டில் 4.3 சதவீதமாக இருக்கும் என்கிறது நிதிநிலை அறிக்கை. இது பேரியல் பொருளாதாரத்தில் (Macro Economics) நல்ல குறியீடாகப் பார்க்கப்படும். ஆகவே, அது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகள் குறைந்துவருகின்றன. கடந்த மூன்று மாதங்களில் நிறைய வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியிருக்கின்றன. நேரடி அந்நிய முதலீடும் வருவதில்லை, பங்குச் சந்தையிலும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில்லை. இந்தியாவில் உள்ள தொழில் முனைவோரும் இங்கு முதலீடு செய்வதில்லை. காரணம், பொருளாதாரம் மீதான நம்பிக்கையின்மைதான். அதற்கு இந்த நிதி நிலை அறிக்கையில் தீர்வில்லை” என்கிறார் ஓய்வுபெற்ற பொருளாதாரப் பேராசிரியரான கே. பிரபாகர்.
ஆனால், இந்த நிதி நிலை அறிக்கை இந்தியப் பொருளாதாரம் குறித்து கவலை அளிக்கக்கூடிய தகவலைச் சொல்கிறது என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் முன்னாள் பேராசிரியரான ஜோதி சிவஞானம்.
“கடந்த ஆண்டின் நிதி நிலை அறிக்கைக்கும் இந்த ஆண்டின் நிதி நிலை அறிக்கைக்கும் பெரிய வித்தியாசமில்லை. கடன்கள், நிதிப் பற்றாக்குறை ஆகியவை கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கிறன. ” என்கிறார் அவர்.
படக்குறிப்பு, ஓய்வுபெற்ற பொருளாதாரப் பேராசிரியரான கே. பிரபாகர்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பால், பொருளாதாரத்திற்குப் பலன்கள் ஏதும் கிட்டவில்லை என்ற நிலையில் அந்தச் சலுகையைத் தொடர்வது ஏன் என்கிறார் கே. பிரபாகர். “இந்த நிதிநிலையை அறிக்கையைப் பார்க்கும்போது வருமான வரியும் ஜிஎஸ்டியும்தான் பெரும் அளவிலான வருவாயைத் தருகின்றன. கார்ப்பரேட்களுக்கு வரியைக் குறைத்தால், அவர்களுக்குக் கிடைக்கும் லாபத்தில் அவர்கள் கூடுதலாக முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.”
“ஆனால், அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு முதலீடு செய்யவில்லை. காரணம், ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்தே 75 சதவீதம்தான் உற்பத்தி செய்கிறோம் எனும்போது, புதிதாக முதலீடுசெய்து என்ன செய்வது என்கிறார்கள். அதற்குக் காரணம், நுகர்வு குறைந்திருப்பதுதான். கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிதாக முதலீடுசெய்வதில்லை என்பதால் அவர்களுடைய லாபம் அதிகரித்திருக்கிறது. இருந்தும் இந்தச் சலுகை தொடர்கிறது” என்கிறார் கே. பிரபாகர்.
இந்த இரு பொருளாதார பேராசிரியர்களும் சுட்டிக்காட்டும் இன்னொரு விஷயம், மாநிலங்களோடு பகிரப்படாத வருவாயை மத்திய அரசு அதிகரித்துக்கொண்டே செல்வது. கே. பிரபாகர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக விதிக்கப்படும் சிறப்பு வரி (cess – செஸ்) அதிகரித்துக்கொண்டே போவதைச் சுட்டிக்காட்டுகிறார். “2014ல் 10 சதவீதமாக இருந்த செஸ் தற்போது 18 சதவீதமாகிவிட்டது. இந்த சிறப்பு வரிகளில் இருந்து கிடைக்கும் வருவாய் மாநிலங்களோடு பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை. இதற்கென தேசிய அளவில் திட்டங்களைத் தீட்டி, நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். இதில் எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கிறது என்பது தெரியவில்லை” என்கிறார் கே. பிரபாகர்.
படக்குறிப்பு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் முன்னாள் பேராசிரியரான ஜோதி சிவஞானம் (கோப்புப் படம்)
ஜோதி சிவஞானம் இதேபோன்ற மாநிலங்களோடு பகிரப்படாத மற்றொரு வருவாயைச் சுட்டிக்காட்டுகிறார். அதாவது, பொதுத் துறை நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் ஈவுத் தொகை, ரிசர்வ் வங்கியில் இருந்து கிடைக்கும் டிவிடென்ட் போன்ற வரி அல்லாத வருவாய் இந்த ஆண்டில் 6.6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என நிதிநிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்டிருக்கிறது. “இப்படி மாநிலங்களோடு பகிரப்படாத தொகை அதிகரித்துக்கொண்டே போவது நல்லதல்ல” என்கிறார் அவர்.
பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்திற்கு மேல் இருக்கும் எனக் கணிக்கப்பட்டாலும் அந்தப் புள்ளிவிவரங்கள் சரியானவையா என பல பொருளாதார நிபுணர்கள் கேள்வியெழுப்புவதைச் சுட்டிக்காட்டுகிறார் கே. பிரபாகர்.
“சராசரி பணவீக்கத்தை மிகக் குறைவாகக் கணக்கிட்டு வளர்ச்சி மதிப்பிடப்படுகிறது. இந்தியாவின் ஜிடிபி மதிப்பீடுகள் தற்போதைய பொருளாதாரத்தின் நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்பதால், இந்தப் புள்ளிவிவரங்களுக்கு சர்வதேச நிதியம் சி கிரேடு (C Grade) கொடுத்திருக்கிறது. அரவிந்த் சுப்ரமணியம் போன்ற பொருளாதார நிபுணர்கள் இந்தியாவின் வளர்ச்சி 2.5 சதவீதம் அதிகமாகக் கணக்கிடப்படுகிறது என்கிறார்கள். மத்திய அரசு சொல்வதைப் போல வளர்ச்சி இருந்தால் ரூபாயின் மதிப்பு ஏன் சரிந்துகொண்டே வருகிறது என்பதற்கு விளக்கமில்லை” என்கிறார் கே. பிரபாகர்.
மத்திய அரசே செயல்படுத்தக் கூடிய வகையில் பல திட்டங்களை அறிவித்தாலும், அவை சரியாக செயல்படுத்தப்படுவதில்லை என்கிறார் அவர். அவர் சொல்வதைப் போலவே கடந்த நிதியாண்டில் பல மத்திய அரசின் திட்டங்களுக்கு பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு குறிப்பிடப்பட்டாலும் மிகக் குறைந்த அளவில் செலவிடப்பட்டதை இந்த நிலை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
உதாரணமாக, கடந்த நிதி ஆண்டில் தேசிய ஆயுஷ் மிஷனுக்கு 1,275 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு 781 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு 7,500 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் 4,500 கோடி ரூபாய் மட்டுமெ செலவிடப்பட்டது. பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா – நகர்ப்புறம் 2.0 திட்டத்திற்கு 3,500 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு 300 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது.
தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்திற்கு 67,000 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு 17,000 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டங்கள் அனைத்திற்கும் இந்த நிதி நிலை அறிக்கையில் கடந்த நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அளவுக்கு அல்லது அதைவிட அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
“இப்போது நிறைய நகரங்களை மேம்படுத்த வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே இதற்கென போடப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ன ஆனதெனத் தெரியவில்லை. இப்போது, கிளஸ்டர் மேம்பாடு (Clusters Development) குறித்துச் சொல்கிறார்கள். 200 கிளஸ்டர்கள் மேம்படுத்தப்படும் என்கிறார்கள். இந்தியாவில் ஏற்கனவே தொழில் சார்ந்து 5,000 கிளஸ்டர்களாவது இருக்கும். உதாரணமாக, கோயம்புத்தூர் கிரைண்டர் உற்பத்தி தொழிலுக்கான ஒரு கிளஸ்டர். இப்போது உள்ள 5,000 கிளஸ்டர்களில் இருந்து 200ஐ எப்படி தேர்வுசெய்வார்கள் என தெரியவில்லை. இறுதியாகப் பார்க்கும்போது நம் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையோடு இருக்கலாம். ஆனால், நாம் போகும் பாதை சரியா என்ற கேள்வி இருக்கிறது” என்கிறார் கே. பிரபாகர்.