அமெரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் இந்திய பொருட்கள் மீதான வரி விதிப்பில் செய்துள்ள மாற்றம் திருப்பூர் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கான வரியை பொதுவான விருப்பத்தேர்வு (Generalised system of procedures – GSP) முறையில் இருந்து மிகவும் விருப்பமான நாடுகள் (Most Favoured Nation) பிரிவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மாற்றியுள்ளது. இந்த மாற்றம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இதனால் தோல், உணவு மற்றும் வேளாண் பொருட்களுக்கு இந்த மாற்றம் பொருந்தாது என்றாலும் ஜவுளி, ரசாயனப் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் போன்ற ஏற்றுமதிகளுக்கு இனி கூடுதல் வரி செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதனால், ஐரோப்பிய சந்தையை பெரிதும் எதிர்நோக்கி இருக்கும் திருப்பூர் ஜவுளித் தொழிலும் கணிசமாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அறிவிப்பு என்ன?
இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் 87% பொருட்கள் தற்போது ஜி.எஸ்.பி. பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
இதனால், இனி மிகவும் விரும்பத்தக்க நாடுகளாக – எம்.எஃப்.என் (Most Favoured Nation) வகைப்படுத்தப்பட்ட நாடுகளுக்கு விதிக்கப்படும் வரியை செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. 2026 ஜனவரி மாதம் முதல் 2028 டிசம்பர் வரை மூன்று ஆண்டுகளுக்கு இந்த முடிவு அமலில் இருக்கும்.
ஜி.எஸ்.பி – எம்.எஃப்.என் வித்தியாசம் என்ன?
ஐரோப்பிய ஒன்றியத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி,
– ஜி.எஸ்.பி என்பது குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் ஏற்றுமதி செய்யும் சில பொருட்களின் மீது சற்று குறைவான வரி விதிக்கும் முறை.
– எம்.எஃப்.என் என்பது அனைத்து வர்த்தக கூட்டாளிகளையும் சமமாக நடத்தும் கொள்கை. இதன் பொருள் வர்த்தக கூட்டாளிகளுக்கு இடையே ஒரு தரப்புக்கு சார்பும் இன்னொரு தரப்புக்கு பாகுபாடும் காட்டக்கூடாது என்பதாகும்.
ஜி.எஸ்.பி என்பது சில பிரத்யேக சந்தர்ப்பங்கள் மற்றும் ஏற்பாடுகளின் கீழ் சில நாடுகளுக்கு மட்டும் சட்டப்பூர்வமான விலக்கு வழங்கும் முறை.
எம்.எஃப்.என் நாடுகள் அனைத்திற்கும் வரி விகிதம் ஒரே அளவில் இருக்கும். ஜி.எஸ்.பி அந்தஸ்து உள்ள நாடுகளுக்கு வரி சற்று குறைவாக இருக்கும்.
இப்போது சில இந்திய பொருட்களுக்கு ஜி.எஸ்.பி அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளதால் அனைத்து நாடுகளும் செலுத்தும் வரி விகிதத்தையே இந்தியாவும் செலுத்த வேண்டும்.
விதிவிலக்காக சில நாடுகள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் வளரும் நாடுகளுக்கு தங்களின் சந்தைக்கான அணுகலை வழங்கலாம் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிக்கிறது.
முன்னதாக விருப்ப நாடுகளாக வகைப்படுத்தப்பட்ட நாடுகளை விடவும் ஜி.எஸ்.பியின் கீழ் இந்தியா குறைவான வரியையே செலுத்தி வந்தது. தற்போது இந்திய ஏற்றுமதியாளர்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டிய சூழல் இருப்பதால் இழப்புகளைச் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
எனினும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்பட உள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இந்த பின்னடைவு சரி செய்யப்படும் என இந்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.
ஜவுளித் துறைக்கு என்ன பாதிப்பு?
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றம், ஜவுளி ஏற்றுமதியில் வங்கதேசம் மற்றும் வியட்நாமுடன் இந்தியா போட்டியிட முடியாத நிலையை ஏற்படுத்திவிடும் என இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு (எஃப்.ஐ.இ.டி) தெரிவித்துள்ளது. ஜவுளி ஏற்றுமதியில் இந்த இரு நாடுகள் தான் இந்தியாவிற்கு போட்டியாளர்களாக இருக்கின்றன.
மத்திய ஜவுளித் துறை தரவுகளின்படி, 2023-2024-ஆம் ஆண்டுகளில் இந்திய ஏற்றுமதிகளில் ஜவுளி மற்றும் ஆடைகளின் மதிப்பு 8.21% ஆக உள்ளது. இந்திய ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 47% அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்குச் செல்வதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மனித வளம் மற்றும் மூலப் பொருள் இருப்பு மிகுதியாக இருந்தும் ஜவுளி உற்பத்தியில் தொடர்ந்து பின் தங்கிய நிலையிலே இருப்பதாக தெரிவிக்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் அமைப்பின் தலைவர் எம்.பி.முத்துரத்தினம்.
அமெரிக்க வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் ஜவுளித்துறையினர் ஐரோப்பிய சந்தையைத் தான் மாற்றாக எதிர்நோக்கி இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
“திருப்பூர் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் பெரும்பான்மை அமெரிக்க சந்தைக்கு தான் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் அமெரிக்கா அண்மையில் விதித்த வரிகளால் இது கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பா இன்னொரு பெரிய சந்தையாக இருக்கிறது. அங்கு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன,” என்றார்.
ஐரோப்பாவில் உள்ள வாய்ப்புகள் என்ன?
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவின் வர்த்தகத்தில் 11.4% ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. 2024-ஆம் ஆண்டு இதன் மதிப்பு சுமார் 140 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்துள்ளது.
ஏற்றுமதிக்கான புதிய சந்தையை உருவாக்குவது எளிதில் நடக்கக்கூடிய ஒன்றல்ல என்கிறார் முத்துரத்தினம். அமெரிக்க சந்தைக்கும் ஐரோப்பிய சந்தைக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கிய அவர், “அமெரிக்காவைப் பொருத்தவரை ஏற்றுமதியின் அளவு அதிகமாக இருக்கும், லாபம் குறைவாக இருக்கும். ஆனால் ஐரோப்பிய சந்தையைப் பொருத்தவரை ஏற்றுமதி மதிப்பு குறைவாக இருந்தாலும் லாபம் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு அமெரிக்காவில் 5% லாபம் கிடைக்கிறது என்றால், ஐரோப்பாவில் 20% வரை கிடைக்கும்.” என்றார்.
“புதிய உற்பத்தியாளர்கள் ஐரோப்பிய சந்தையால் உடனடி பலன்களை சந்திக்கலாம் என்றாலும் பாரம்பரியமாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் உற்பத்தியாளர்கள் இதற்கு தகவமைத்துக் கொள்ள சில ஆண்டுகள் பிடிக்கும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய அறிவிப்பு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம் (கோப்புப் படம்)
ஜி.எஸ்.பி வரிச் சலுகை ரத்தின் தாக்கத்தை விளக்கிப் பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சுப்ரமணியன், அது சமாளிக்கக்கூடிய அளவில் தான் இருக்கும் என்கிறார்.
“இந்திய ஏற்றுமதிக்கு சுமார் 2% அளவுக்கு வரி குறைவாக இருந்துவந்தது. இந்த புதிய அறிவிப்பால் ஐரோப்பிய இறக்குமதியாளர்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும். இது தற்போது உற்பத்தியில் உள்ள ஆர்டர்கள் மற்றும் புதிய ஆர்டர்களுக்கும் பொருந்தும். அவர்கள் அதனை இந்திய உற்பத்தியாளர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் அல்லது முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்பார்கள். இதனால் சிறிதளவு பொருளாதார இழப்பு ஏற்படலாம்,” என்றார்.
அமெரிக்க சந்தையிலிருந்து வெளியேறும் இந்திய உற்பத்தியாளர்கள் குறிவைக்கும் புதிய சந்தைகளில் ஐரோப்பாவுக்கு முக்கியமான இடம் இருப்பதாகக் கூறுகிறார் சுப்ரமணியன்.
“ரஷ்யா, ஐரோப்பா மற்றும் பிரிட்டன் தான் நமது புதிய இலக்காக உள்ளது. ஐரோப்பாவில் நமது ஏற்றுமதியை அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த கூடுதல் வரியால் ஐரோப்பிய வர்த்தகர்கள் மாற்றுச் சந்தையைப் பரிசீலிக்கும் அபாயம் உள்ளது என்றாலும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்த உடன் படிப்படியாக இந்த நிலை சீராகும் நம்பிக்கையும் உள்ளது,” என்றார்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மீதான எதிர்பார்ப்பு!
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜவுளி பொருட்களுக்கு வரி விலக்கு கிடைத்தால் அது ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும் என்பதே உற்பத்தியாளர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
“அமெரிக்கா போன்ற சந்தைகளில் நமது வர்த்தகம் மற்றும் வளர்ச்சி சீரற்று இருந்தாலும், ஐரோப்பிய சந்தை தொடர்ந்து சீரான நிலையிலே இருந்து வருகிறது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டாலும் அது நடைமுறைக்கு வர சிறிது காலம் எடுக்கும். அது வரையில் சிறிது பொருளாதார இழப்பு மற்றும் நிலையற்ற தன்மையை சமாளித்துவிட்டால் ஐரோப்பாவில் ஜவுளிச் சந்தையை வளர்ப்பதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது,” என்று சுப்ரமணியன் தெரிவித்தார்.