பட மூலாதாரம், Tom Brenner for The Washington Post via Getty Images
படக்குறிப்பு, இந்தியா மீதான வரிகளால் அமெரிக்கா தனது சொந்த நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றானர்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 50% வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் தாக்கம் ஜவுளி, தோல், இறால், கைவினைப் பொருட்கள் மற்றும் இதர துறைகளில் தெரிய ஆரம்பித்துவிட்டது.
இந்தியா உடனான வர்த்தகப் பற்றாக்குறை நிவர்த்தி செய்வதற்காகவும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாகவும் தனித்தனியாக 25% வரிகளை அமெரிக்கா விதித்துள்ளது.
இதில் சில பொருட்களிக்கு விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான இந்தியாவின் ஏற்றுமதிகள் 50% வரிகளால் பாதிக்கப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
டிரம்பின் நடவடிக்கைக்கு அமெரிக்க பொருளாதார வல்லுநர்கள் மாறுபட்ட எதிர்வினைகளைக் கொடுத்து வருகின்றனர். சிலர் இதனை அடக்குமுறைத்தனமானது என அழைத்துள்ளனர், சிலர் இது உலகளாவிய வணிகத்தில் இந்தியா வேறு சிறந்த வாய்ப்புகளைத் தேட ஊக்குவிக்கும் எனக் கூறுகின்றனர்.
சில பொருளாதார வல்லுநர்கள் இந்த வர்த்தகப் போரால் அமெரிக்கா இழப்புகளைச் சந்திக்கலாம் என்றும் அதன் தேசிய நலன்கள் பாதிக்கப்படும் என்றும் கருதுகின்றனர்.
கடுமையான மற்றும் அடக்குமுறைத்தனமான வரிகள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பொருளாதார காரணங்களுக்காக அல்லாமல் டிரம்பின் தனிப்பட்ட கோபத்தினாலேயே இந்த வரிகள் விதிக்கப்படுவதாக வாதிடுகிறார் கிறிஸ் வுட்
அமெரிக்க முதலீட்டு நிறுவனமான ஜெப்ரீஸை சேர்ந்த வல்லுநர் கிறிஸ் வுட், இந்தியா மீதான டிரம்பின் வரிகளை கடுமையானது எனக் குறிப்பிட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி கூறுகிறது.
இதனால் இந்தியா 55 முதல் 60 பில்லியன் டாலர்கள் வரை இழப்புகளைச் சந்திக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஜவுளி, காலனி, நகை மற்றும் கைவினைப் பொருட்கள் துறை அழிவைச் சந்திக்கும் என கிறிஸ் வுட் கூறுகிறார்.
இந்தியாவில் பெரும்பாலான ஜவுளி, தோல் மற்றும் கைவினை துறை சிறு வணிகங்களாக உள்ளன. இந்த துறைகளில் பெரும்பாலான மக்கள் வேலை செய்கின்றனர்.
இந்தியாவிற்கு, அதிலும் குறிப்பாக அதன் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடுமையான காலகட்டத்தில் இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக கிறிஸ் வுட் கூறுகிறார்.
எனினும், அமெரிக்க வரிகள் இந்தியாவின் சேவை மற்றும் ஐடி துறைகளைப் பாதிக்காது.
இவை பொருளாதார காரணங்களுக்காக அல்லாமல் டிரம்பின் தனிப்பட்ட கோபத்தினாலே இந்த வரிகள் விதிக்கப்படுவதாக வாதிடும் கிறிஸ் வுட், இது இரு நாடுகளையும் பாதிக்கும் என்கிறார்.
அமெரிக்கா மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்
ரஷ்ய அரசு உதவியுடன் இயங்கும் ஊடகமான ஆர்டி-இடம் பேசிய அமெரிக்கா பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட் வுல்ஃப் அதன் தாக்கங்கள் வேறாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.
இந்தியா தனிமைப்படுத்தப்பட்டால் அது பிரிக்ஸ் உள்ளிட்ட இதர பொருளாதார குழுக்களுடன் சிறந்த வணிக உறவுகளை உருவாக்குவதை நோக்கி நகரும். இது அமெரிக்காவின் செல்வாக்கை குறைக்கும்.
அமெரிக்காவின் இந்த கடினமான அணுகுமுறை இந்தியா அதன் தயாரிப்புகளை இதர சந்தைகளில் விற்க நிர்பந்திக்கும் என்கிறார் வுல்ஃப்.
“நீங்கள் அதிக வரிகளை விதித்து அமெரிக்க சந்தையை இந்தியாவுக்கு மூடினால், அதன் தயாரிப்புகளை விற்க இந்தியா மாற்று சந்தைகளை கண்டுபிடிக்க வேண்டும். இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யாமல் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்” என்று தெரிவித்தார்.
இந்த வரிகள், பிரிக்ஸை “மேற்கு நாடுகளுக்கு மாற்றாக பெரிய, மேலும் ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் வலுவான பொருளாதார மாற்றாக உருவாக்கும்” என்கிறார் வுல்ஃப்.
மேலும் அவர், “அமெரிக்காவின் கூற்றுப்படி இந்தியா தற்போது உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு. அமெரிக்கா இந்தியாவுக்கு என்ன செய்ய வேண்டும் எனக் கூறுவது எலி யானையை அடிப்பது போன்றதாகும்” என்றார்.
அமெரிக்கா தனக்கு தானே பிரச்னை உருவாக்கிக் கொண்டது
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, முதலில் விதிக்கப்பட்ட 25% வரிகளைத் தொடர்ந்து கூடுதலாக 25% வரிகள் விதிக்கப்பட்டன.
ரிச்சர்ட் வுல்ஃப் கூற்றுப்படி தற்போதைய காலகட்டத்தில் உள்ள பொருளாதார பதற்றங்களைப் பார்ப்பது ஒரு வரலாற்று தருணத்தை எதிர்நோக்குவதைப் போன்றது.
இந்த வரிகளால் அமெரிக்கா தனக்குத் தானே பிரச்னையை உருவாக்கிக் கொண்டது என்று அவர் கூறுகிறார்.
இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்று எனக் கூறும் வுல்ஃப், அமெரிக்க அழுத்தத்திற்கு அடிபணியாமல் அதன் ஏற்றுமதி வணிகத்தை மேலும் விரிவுபடுத்தும் என்கிறார்.
டிரம்ப் முதலில் இந்தியா மீது 25% வரி விதித்தார். அந்த சமயத்தில் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது.
ஆனால் டிரம்ப் எதிர்பாராத விதமாக இந்தியாவை குறிவைத்து 25% கூடுதல் வரிகளை விதித்தார். இது ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்கான தண்டனையாக விதிக்கப்பட்டது.
யுக்ரேன் போருக்கு முன்பு இந்தியா அதன் கச்சா எண்ணெயில் 2 சதவிகிதத்துக்கும் குறைவாகவே ரஷ்யாவிடம் வாங்கி வந்தது.
ரஷ்யா தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை வழங்கி வருகிறது. அமெரிக்க பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் அதன் தேசிய நலன்களைக் குறிப்பிட்டு கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது.
ரஷ்ய எண்ணெயால் லாபம் அடைந்துவரும் இந்தியா
பட மூலாதாரம், Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images
படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9-ஆம் தேதி புதினைச் சந்தித்தார் பிரதமர் மோதி.
இந்தியா தற்போது அதன் கச்சா எண்ணெயில் 35 சதவிகிதத்தை ரஷ்யாவிடமிருந்து வாங்கி வருகிறது. இது இந்தியாவின் உள்நாட்டு தேவைகளுக்காக மட்டுமல்லாமல் ஏற்றுமதிக்காகவும் பெறப்படுகிறது.
இந்த கச்சா எண்ணெய் சுத்தகரிப்பு செய்யப்பட்டு பல ஐரோப்பிய, ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியா இதன் மூலம் லாபம் சம்பாதித்து வருகிறது.
இத்தகைய சூழலில் இந்தியாவுக்கு வலுவான செய்தியை அனுப்ப டிரம்ப் 25% வரிகள் விதித்துள்ளார்.
இந்திய வணிகர்கள் மீதான வரிகளின் தாக்கத்திற்கு மத்தியில் சிறுவணிகர்கள், நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
இதோடு பிரிட்டன், ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த சிறப்பு திட்டம் ஒன்றையும் இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியா, சீனா உடன் நெருங்க முடியுமா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சீன வெளியுறவு அமைச்சர் வேங் இய் உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
இந்தியாவை ராஜாங்க ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தண்டிக்கும் அமெரிக்காவின் கொள்கை சீனா உடன் நெருக்கமாக கொண்டு செல்லலாம் என வல்லுநர்கள் நம்புகின்றனர்.
இத்தகையதொரு சூழ்நிலையை தான் அமெரிக்க வெளியுறவு கொள்கை வகுப்பாளர்கள் நீண்ட காலமாக தவிர்த்து வந்தனர்.
சீனாவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி அதிகரித்து வருகிறது மற்றும் இருநாடுகளுக்கும் இடையேயான நேரடி விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட இருக்கிறது.
இச்சூழலில் அமெரிக்க வரிகள் தொழில்நுட்பம் மற்றும் வணிக துறைகளில் இந்தியா மற்றும் சீனா ஒருங்கிணைந்து செயல்பட ஊக்குவிக்கலாம்.
“இந்த வர்த்தகப் போர் இந்தியாவை சீனா உடன் நெருக்கமாக அழைத்து செல்லலாம். செப்டம்பர் மாதம் இருநாடுகளுக்கும் இடையே 5 ஆண்டுகள் கழித்து நேரடி விமான சேவை தொடங்க இருக்கிறது. சீனாவிலிருந்து இந்தியாவின் வருடாந்திர இறக்குமதி 118 பில்லியன் டாலர்களை எட்டியதோடு ஒவ்வொரு ஆண்டும் 13% ஆக வளர்ந்து வருகிறது. இந்தியாவிற்கு சீனாவிலிருந்து விலை குறைவான சூரிய ஒளி தகடுகள் தேவைப்படுகின்றன.” என்று தெரிவித்தார் கிறிஸ் வுட்.
சீனாவை நோக்கி இந்தியா நகர்ந்தால் அது அமெரிக்காவின் தேசிய நலனுக்கு ஏற்றது அல்ல எனத் தெரிவித்தார் கிறிஸ் வுட்.