ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதன் ஊடாக யுக்ரேன் போருக்கு மறைமுகமாக இந்தியா ஆதரவு வழங்கியுள்ளதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சுமத்திய நிலையில், இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது வரியை அமெரிக்கா 50 சதவீதமாக அதிகரித்து அறிவித்துள்ளது.
இந்த வரி விதிப்பானது கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், தற்போது சர்வதேச அரசியலில் அது பாரிய சர்ச்சையுடனான மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது.
தெற்காசிய நாடுகளின் பட்டியலை எடுத்துக்கொண்டால், இந்தியாவிற்கே அதிகளவான வரியை அமெரிக்கா விதித்துள்ளது.
வங்கதேசத்துக்கு 20 சதவீதம், இலங்கைக்கு 20 சதவீதம், பாகிஸ்தானிற்கு 19 சதவீதம், ஆப்கானிஸ்தானிற்கு 15 சதவீதம், பூட்டானுக்கு 10 சதவீதம், மாலத்தீவுக்கு 10 சதவீதம், நேபாளத்திற்கு 10 சதவீதம் என்ற அடிப்படையில் அமெரிக்கா வரியை அறிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து தமது நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 50 சதவீத வரியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
இலங்கைக்கு என்ன நடந்தது?
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையில் இலங்கை மீது அமெரிக்கா முதலில் 44 சதவீத வரியை விதித்து அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இதையடுத்து, இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள், அமெரிக்காவிற்கு விஜயம் செய்து, அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தனர்.
இந்த கலந்துரையாடலின் பிரதிபலிப்பாக 44 சதவீதமாக அறிவிக்கப்பட்ட வரி , 30 வீதம் வரை குறைக்கப்பட்டு, பின்னர் அந்த வரி 20 சதவீதமாக அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையின் மிகப் பெரிய ஏற்றுமதி நாடாக அமெரிக்கா காணப்படுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக இலங்கையின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதியானது 23 சதவீதம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், SRI LANKA EXPORT DEVELOPMENT BOARD
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதியின் ஊடாக 1,434.99 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை இலங்கை எட்டியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த காலப் பகுதியை பொறுத்த வரை 4.61 சதவீத வளர்ச்சி இருந்தது என அதிகார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தைத்த ஆடைகள், தேயிலை, இறப்பர் (Rubber) சார்ந்த பொருட்கள், தேங்காய் சார்ந்த பொருட்கள், இரத்தினகல், தங்காபரணம், இலத்திரனியல் பொருட்கள் உணவு பண்டங்கள், மீன் வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
தரம் Vs விலை : இலங்கை கவனம் செலுத்த வேண்டியது எதில்?
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத ஏற்றுமதி வரியை அடுத்து, இலங்கையின் அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை வலுப் பெற செய்ய முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி, பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.
ஆனால், திட்டமிட்ட வகையில் இந்த ஏற்றுமதியை செய்வதன் ஊடாகவே அதனை செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
”இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கின்ற பொருட்களுக்கு 50 சதவீத வரியை செலுத்த வேண்டும். ஆனால், இலங்கையில் இருந்து போகின்ற போது 20 சதவீத வரியை செலுத்தினால் போதுமானது. அதனூடாக இலங்கைக்கு நன்மை இருக்கும்.
அமெரிக்க நுகர்வோர் இலங்கை பொருளை மலிவானதாக கருதி வாங்குவார்களாக இருந்தால், இது இலங்கை போன்ற நாடுகளுக்கு நன்மையை தரக்கூடியதாக இருக்கும். ஆனால், இலங்கையிலிருந்து செல்கின்ற பொருளை விட இந்தியாவிலிருந்து செல்கின்ற பொருள் தரம் வாய்ந்தது அல்லது வர்த்தக நாமம் பிரபலமானது (Brand) என்ற ஒரு நிலைமை இருக்குமாக இருந்தால், இலங்கை போன்ற நாடுகள் எதிர்பார்த்த வர்த்தக ரீதியான வருமானத்தை காண முடியாது.” என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
படக்குறிப்பு, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி
இலங்கை எவற்றை ஏற்றுமதி செய்யக்கூடும்?
இந்தியாவிற்கு விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத ஏற்றுமதி வரியை பயன்படுத்திக் கொண்டு, தமது ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக இலங்கை ஏற்றுமதியாளர்கள் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிபிசி தமிழ், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தியிடம் வினவியது.
”இந்தியாவின் ஏற்றுமதி பட்டியல் என்ன என்பதை இலங்கை பார்க்க வேண்டும். இந்தியா என்னென்ன பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கின்றது என்பதை இலங்கை ஏற்றுமதியாளர்கள் பார்க்க வேண்டும். அந்த பொருட்களை இலங்கையில் உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்ய முடியுமாக இருந்தால், அது நன்மையை தரக்கூடியதாக இருக்கும்.
இந்தியாவிற்கு 50 சதவீத வரி, இலங்கைக்கு 20 சதவீத வரி என்றாலும் கூட உடனடியாக இலங்கையின் ஏற்றுமதி உற்பத்தி கட்டமைப்பை மாற்றியமைக்க முடியாது. அதற்கு ஒரு கால இடைவெளி தேவைப்படும். இலங்கை எல்லா கட்டமைப்பையும் மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்ற போது டொனால்ட் டிரம்ப் என்பவரை நம்ப முடியாது.
இல்லை இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட வரியை நாங்கள் அகற்றிக் கொள்கின்றோம் என்று சொல்லக்கூடிய வாய்ப்புக்களும் இருக்கின்றது. எங்களை போன்ற நாடுகள் ஏற்றுமதி உற்பத்தி கட்டமைப்புக்களை மாற்றியமைக்குமாக இருந்தால், இந்த சூழலில் இலங்கை போன்ற நாடுகள் மிகப் பெரிய பாதிப்புக்களை சந்திக்க நேரிடும்.”
‘ அமெரிக்காவை நம்பி உற்பத்தி கட்டமைப்பை மாற்றக் கூடாது’
இந்தியா மீதான வரி அதிகரிப்பை அடுத்து, இலங்கை போன்ற நாடுகள் உடனடியாக தமது உற்பத்தி கட்டமைப்பை மாற்றிக் கொள்ளக்கூடாது என கூறும் அவர், அமெரிக்க தொடர்ந்தும் இந்த வரிக் கொள்கையை கடைபிடிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
”ஏற்கனவே நாங்கள் ஏற்றுமதி செய்கின்ற பொருட்கள் மற்றும் அதற்கு போட்டியாக இருக்கக்கூடிய பொருட்கள் பற்றி யோசிக்கலாம். அவற்றுக்கு பெரிதாக உற்பத்தி கட்டமைப்பை மாற்றியமைக்கப்பட வேண்டிய தேவை ஏற்படாது.
இன்னுமொரு 6 மாதங்களாகின்ற போது இந்த வர்த்தக கொள்கையினுடைய சூட்டை அதனுடைய தாக்கத்தை அமெரிக்க நுகர்வோர்கள் அனுபவிப்பார்கள். அப்படி அனுபவிக்கும் பட்சத்தில் பணவீக்கம் அதிகரிக்கின்ற போது டொனால்ட் டிரம்பினால் இந்த கொள்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க முடியாது. ” என விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவிக்கின்றார்.