பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா 50 சதவிகிதம் வரி விதித்துள்ளது. அதாவது, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பல பொருட்களுக்கு இந்த வரியை விதித்துள்ளது.
டிரம்ப் நிர்வாகம் முன்னதாக இந்தியா மீது 25% வரி விதித்திருந்தது. ஆனால், ஆகஸ்ட் 6ஆம் தேதி ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதற்குக் கூடுதலாக 25% வரி அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் இந்த முடிவு இந்தியாவின் சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதிகளைப் பாதிக்கும்.
இந்தியாவிலுள்ள பல தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஏராளமான மக்கள் வேலைவாய்ப்பு நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.
ஆனால், இதற்கு மற்றுமோர் அம்சமும் உள்ளது.
அமெரிக்காவில் பொருட்களை விற்பனை செய்வதில் இந்தியா சிரமங்களை எதிர்கொண்டால், பல நாடுகள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் சூழல் ஏற்படலாம்.
ஆசியா, ஐரோப்பா, தென் அமெரிக்காவின் பல நாடுகள் இப்போது இந்தியா முன்பு விற்பனை செய்த அதே பொருட்களை அமெரிக்காவுக்கு விற்கலாம்.
இதில் முக்கியமான கேள்வி என்னவெனில், அமெரிக்கா விதிக்கும் வரிகளால் பாதிக்கப்படும் இந்தியாவின் ஐந்து முக்கியமான துறைகளில் வேறு எந்தெந்த நாடுகள் பயனடையக்கூடும்?
1. ஆடை உற்பத்தித் துறை
பட மூலாதாரம், IDREES MOHAMMED/AFP via Getty Images
அமெரிக்க வரிகள் அமல்படுத்தப்பட்ட பிறகு ஜவுளி மற்றும் ஆடைகள் துறை மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று. அங்கு ஆயத்த ஆடைகள் மீதான வரிகள் கிட்டத்தட்ட 64 சதவிகிதத்தை எட்டியுள்ளன.
ஜவுளித் துறை மிக அதிகமான வரிகளை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ளது. அதனால், ரூ.90 ஆயிரம் கோடிக்கும் மேல் மதிப்புள்ள ஏற்றுமதிகள் பாதிக்கப்படும்.
வியட்நாம், வங்கதேசம், கம்போடியா போன்ற நாடுகள் இதன்மூலம் பயனடையலாம்.
வியட்நாம் ஏற்கெனவே அமெரிக்காவுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டில், வியட்நாம் அமெரிக்காவுக்கு 15.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆடைகளை விற்பனை செய்தது.
வங்கதேசம் அதன் மலிவான ஃபேஷன் தயாரிப்புகளுக்குப் பெயர் பெற்றது. 2024ஆம் ஆண்டில், வங்கதேசம் அமெரிக்காவுக்கு 7.49 பில்லியன் மதிப்பிலான ஆடைகளை ஏற்றுமதி செய்தது. இந்த ஏற்றுமதி அமெரிக்காவுக்கு இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியைவிட 2.22 பில்லியன் டாலர் மட்டுமே குறைவு.
எனவே, வரி அதிகரிப்பதால் இந்தியாவுக்கு ஏற்படும் இழப்புகளில் இருந்து வங்கதேசம் மிகப்பெரிய அளவில் பலனடையும்.
அதோடு, மெக்சிகோ, இந்தோனீசியா, கம்போடியா போன்ற நாடுகளும் அமெரிக்காவுக்கான புதிய கதவுகளைத் திறக்க வாய்ப்புள்ளது.
2. நகைகள் மற்றும் ரத்தினங்கள்
பட மூலாதாரம், PUNIT PARANJPE/AFP via Getty Images
அமெரிக்காவின் வரி அதிகரிப்பால் இந்திய நகைகள், ரத்தினங்கள் விற்பனை பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும்.
இந்தத் துறையில் சுமார் ரூ.85,000 கோடி மதிப்புள்ள இந்திய ஏற்றுமதி பாதிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வெட்டப்பட்ட வைரங்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது. சூரத், மும்பை போன்ற நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வரி சர்வதேச போட்டியில் இந்தியாவின் வைரத் தொழிலை பலவீனப்படுத்தக்கூடும். வைரம் வெட்டுதல், மெருகூட்டுதல் ஆகியவற்றில் இந்தியா நீண்டகாலமாக முன்னணியில் இருக்கிறது. இப்போது, வரி அதிகரிப்பது பல நாடுகளின் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு இந்தியாவை தள்ளியுள்ளது.
குறிப்பாக, இத்தாலி, பிரான்ஸ், தாய்லாந்து, துருக்கி, சீனா ஆகிய நாடுகள் இந்தத் தொழிலில் தங்கள் பிடியை வலுப்படுத்தியுள்ளன.
தாய்லாந்து ரத்தினக் கற்கள் வெட்டுதல் மற்றும் வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. மேலும், இந்தியாவின் மீதான வரிகள் அமெரிக்க சந்தையில் தாய்லாந்தின் ஈடுபாட்டை அதிகரிக்கக் கூடும்.
அதேபோல, துருக்கி தங்க நகைகள் ஏற்றுமதியில் முக்கிய நாடாக உள்ளது. இந்தியாவுக்கு அதனால் ஒரு மாற்றாக இருக்க முடியும். செயற்கை ரத்தினக் கற்கள் துறையில் சீனா முன்னிலையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
3. ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள்
பட மூலாதாரம், Dhiraj Singh/Bloomberg via Getty Images
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் மீது 50 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது இந்திய ஆட்டோமொபைல் பாகங்கள் உற்பத்தித் துறைக்கு விழுந்துள்ள பெரிய அடியாக இருக்கும்.
ஒவ்வோர் ஆண்டும், இந்தியா சுமார் ரூ.58 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆட்டோமொபைல் பாகங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இப்போது, இவற்றில் பெரும்பாலானவற்றின் மீது அதிக வரி விதிக்கப்படுவதால், ஏற்றுமதி குறையக்கூடும்.
இந்த நிலைமை அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ள அல்லது இந்தியாவைவிட மிகக் குறைந்த கட்டண விகிதங்களைக் கொண்டுள்ள நாடுகளுக்குப் பலனளிக்கும்.
அமெரிக்கா–மெக்சிகோ-கனடா ஒப்பந்தத்தின் கீழ் பூஜ்ஜிய வரி சலுகைகளைப் பெற்றுள்ள மெக்சிகோ இதன்மூலம் அதிகம் பலனடைய வாய்ப்புள்ளது.
மெக்சிகோ ஏற்கெனவே அமெரிக்காவின் முக்கியமான ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விநியோகஸ்தராக உள்ளது. புவியியல் ரீதியாக அது அந்நாட்டுக்கு அருகிலும் உள்ளது. ஆகவே, மெக்சிகோ இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதேவேளையில், வியட்நாம், தாய்லாந்து, இந்தோனீசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளும் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நாடுகளின் மீதான அமெரிக்க வரி விகிதங்கள் 15-20 சதவிகிதத்திற்கு இடையில் இருக்கிறது. இது இந்தியா மீது விதிக்கப்பட்ட புதிய வரிகளைவிட மிகக் குறைவு.
ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா போன்ற தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய நாடுகளும் அமெரிக்காவுக்கு உயர்தர ஆட்டோமொபைல் பாகங்களை ஏற்றுமதி செய்கின்றன.
இந்த நாடுகள் இந்தியாவைவிட குறைந்த வரி விகிதங்களைக் கொண்டுள்ளன. அசல் உதிரிபாக உற்பத்தியாளர்களை (OEM) கொண்டுள்ளன. இது அவர்களுக்குக் கூடுதல் நன்மைகளைத் தரக்கூடும்.
அமெரிக்கா சீனா மீது அதிக வரிகளை விதித்திருந்தாலும், சீனாவின் மிகப்பெரிய உற்பத்தித் திறனும் குறைந்த விலையும் அதை போட்டித் தன்மையுடன் வைத்திருக்கின்றது. அமெரிக்காவுக்கு சீனாவின் வாகன பாகங்கள் ஏற்றுமதி 56.7 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
4. இறால் மற்றும் கடல் உணவு
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் வரி விதிப்பு, கடல் உணவு ஏற்றுமதியில், குறிப்பாக இறால் ஏற்றுமதியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறால் மற்றும் பிற கடல் பொருட்கள் ஏற்றுமதி இப்போது சுமார் ரூ.20 ஆயிரம் கோடி வரை பாதிக்கப்படலாம். உலகின் முன்னணி இறால் ஏற்றுமதியாளர்களில் இந்தியாவும் ஒன்று.
இருப்பினும், புதிய வரிகள் விதிக்கப்பட்டதன் மூலம் இப்போது அமெரிக்க சந்தையில் தனது போட்டி நிலையை இந்தியா இழக்கக்கூடும்.
இந்தியாவின் இறால் மற்றும் கடல் உணவு துறை, குறிப்பாக ஆந்திர பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு போன்ற கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. ஈக்வடார், வியட்நாம், இந்தோனீசியா போன்ற நாடுகள் இந்தியாவின் இழப்பால் பயனடையக்கூடும்.
ஈக்வடார் உலகின் மிகப்பெரிய இறால் ஏற்றுமதியாளர்களில் ஒன்று. ஏற்கெனவே அமெரிக்காவுக்கு அதிக அளவில் விநியோகிக்கிறது.
வியட்நாம் வலுவான பதப்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் தளவாடங்களைக் கொண்டுள்ளது. அமெரிக்காவுக்கு கடல் பொருட்களை வழங்கும் முக்கிய விநியோகஸ்தராகவும் உள்ளது.
மறுபுறம், இந்தோனீசியா இறால் மற்றும் சூரை மீன்களை ஏற்றுமதி செய்வதில் முக்கியமான நாடாக உள்ளது. அமெரிக்காவின் தேவையைப் பூர்த்தி செய்யும் திறனையும் அந்நாடு கொண்டுள்ளது.
5. ரசாயனங்கள் மற்றும் கரிம சேர்மங்கள்
பட மூலாதாரம், Getty Images
இந்தத் துறையில் இந்தியாவின் சுமார் ரூ.23,000 கோடி மதிப்பிலான ஏற்றுமதி அமெரிக்க வரி விதிப்பால் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த ஏற்றுமதியில் சுமார் 40 சதவிகித பங்களிப்பை வழங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்தத் துறையில் பெரும் பங்காற்றுகின்றன.
அதிகரித்த வரிகள் காரணமாக, இந்திய பொருட்கள் அமெரிக்க சந்தையில் விலை உயர்ந்து, அவற்றின் போட்டித் தன்மையைக் குறைப்பதோடு, ஆர்டர்களையும் குறைக்கலாம்.
களைக் கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகல், கரிம உரங்கள், ஹைபோகுளோரைட் போன்ற பொருட்களுக்கான தேவை குறைய வாய்ப்புள்ளது. இந்தப் பொருட்களின் விலை உயர்வு அமெரிக்க டீலர்களை மாற்றும் விநியோகஸ்தர்களை நோக்கி திருப்பக்கூடும்.
இப்போது இந்தியாவுக்கு பதிலாக பல நாடுகள் அமெரிக்காவுக்கு ரசாயனங்கள் மற்றும் கரிம சேர்மங்களை வழங்க முடியும். இந்தியாவுடன் ஒப்பிடுகையில் ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்காவில் குறைந்த வரியே விதிக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றின் தயாரிப்புகள் மலிவாக இருக்கும் என்பதால், அவற்றால் இந்தியாவுக்கு மாற்றாக இருக்க முடியும்.
சீனா மீது சில வரிகள் இருந்தாலும், அதன் தொழிற்சாலைகள் பெரியவை. அவற்றால் மலிவான விலையில் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். எனவே அதன் மூலமும் இந்தியா பாதிக்கப்படலாம்.
தாய்லாந்து, வியட்நாம், வங்கதேசம் போன்ற நாடுகளும் அமெரிக்காவுக்கு சில ரசாயனங்கள் மற்றும் உரங்களை மலிவான விலையில் வழங்க முடியும். இதேபோல, ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் உயர்தர ரசாயனங்களை உற்பத்தி செய்கின்றன. எனவே அமெரிக்கா அவர்களிடம் இருந்தும் அதிகமாக வாங்கலாம்.
இந்தியா மீதான வரி விதிப்பின் தாக்கம்
பட மூலாதாரம், Getty Images
பேராசிரியர் பிஸ்வஜித் தார் ஒரு பிரபலமான பொருளாதார நிபுணர். இந்தியா புதிய சந்தைகளைக் கண்டுபிடிப்பது இப்போது மிகவும் அவசியம் என்று அவர் கூறுகிறார்.
“அமெரிக்காவை சார்ந்திருப்பது சிக்கல்கள் நிறைந்தது. சீனாவில் இருந்து அதற்கான உதாரணத்தை நாம் பார்த்துள்ளோம். அதிபர் டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் சீனா பின்னடைவை சந்தித்தது. ஆனால், அதன் பிறகு மெதுவாக அமெரிக்காவிடம் இருந்து தன்னை விலக்கிக் கொள்ளத் தொடங்கியது. சீனா அமெரிக்காவில் இருந்து தனது ஏற்றுமதியில் 8-9 சதவிகிதத்தை குறைத்துள்ளது.
முன்பு 2017-18ஆம் ஆண்டில் இது 18-19 சதவிகிதமாக இருந்தது. இப்போது அது 12 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. சீனா இப்போது மிகவும் சீரான நிலையில் உள்ளதால் இத்தகைய நிகழ்வுகளால் அது குறைவாகப் பாதிக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது,” என்கிறார் அவர்.
அமெரிக்கா வரி விதிப்பை அமல்படுத்திய பிறகு நிலைமை தற்போது சேதமடைந்து இருப்பதாகவும், ஆனால் நீண்ட காலத்திற்கு சந்தை சக்திகள் செயல்படும் என்பதால் நிலைமை மேம்படும் எனவும் மோகன் குமார் கூறுகிறார். பிரான்சுக்கான இந்திய தூதராக பணிபுரிந்துள்ள அவர், சர்வதேச வர்த்தகம் மற்றும் பலதரப்பு பேச்சுவார்த்தைகள் துறையில் நிபுணராக உள்ளார்.
இதுகுறித்து விரிவாகப் பேசிய அவர், “நாம் நமது பொருட்களுக்கான சந்தையை பன்முகப்படுத்த வேண்டும். சில காரணங்களால் உள்நாட்டில் தேவை அதிகரிக்கும். மாற்று சந்தைகளைத் தேட வேண்டும். அதைச் செய்தால், பின்னர் என்ன நடக்கும் என்பது பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. இந்நிலையில், தற்போது நடப்பது கவலைக்குரிய விஷயம். 25 சதவிகித வரியை இந்தியா சமாளித்திருக்கும். ஆனால், 50 சதவிகித வரி அதிக இழப்புகளை ஏற்படுத்தும்,” என்று விளக்கினார்.
ஆனால், டிரம்ப் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கை நிலையற்றதாகவே இருக்கும் என்று பேராசிரியர் தார் நம்புகிறார்.
“அவர்கள் நிலையற்ற தன்மைக்கான சூழலை உருவாக்கியுள்ளனர். இந்தியா போன்ற ஒரு பெரிய நாடு அதன் மொத்த ஏற்றுமதியில் கால் பங்குக்கு ஒரு நாட்டை மட்டுமே சார்ந்திருப்பது சரியல்ல” என்கிறார் அவர்.
அவரது கூற்றுப்படி, இந்தியா புதிய சந்தைகளைக் கண்டுபிடித்தாக வேண்டும். “வளரும் நாடுகளுடனான உறவுகளை இந்தியா வலுப்படுத்த வேண்டும். இந்த உறவுகள் மட்டுமே நீண்ட காலத்திற்கு நிலையானதாக இருக்கும். இந்திய ஏற்றுமதிகளுக்கு நிலையான பாதையையும் அது வழங்கும்.”
புதிய ஒப்பந்தங்களை எதிர்பார்க்கலாமா?
பட மூலாதாரம், Getty Images
அவரது கூற்றுப்படி, இந்தியா அமெரிக்கா மீதிருந்து தனது கவனத்தை மாற்றி, ஆசியா, ஆப்பிரிக்கா அல்லது ஐரோப்பா போன்ற பிற சந்தைகள் மீது செலுத்த வேண்டுமா?
“இந்தியா தனது அனைத்து நம்பிக்கைகளையும் ஒரேயொரு வாய்ப்பில் வைத்து இருப்பதாகக் குற்றம் சாட்ட முடியாது” என்கிறார் மோகன் குமார்.
“இறால், ரத்தினக் கற்கள், நகைகள், ஆடைகள் போன்ற சில விஷயங்களுக்கு அமெரிக்க சந்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தது. தற்போது, ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தைகளில் இந்தியா தரப்பில் இருந்து உந்துதல் இருக்கும். இந்தியா இப்போது அந்த ஒப்பந்தத்தை முடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கும்,” என்கிறார் அவர்.
“இந்தியா ஏற்கெனவே பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளது. மற்ற சந்தைகளையும் கவனிக்கும். ஒரு கட்டத்தில் பிராந்திய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் இணைவதையும் பரிசீலிக்க வேண்டியிருக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.
இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் இருப்பதால், இந்த அதிகப்படியான வரிவிதிப்பு நீண்ட காலம் நீடிக்காது என்று மோகன் குமார் கருதுகிறார்.
எப்படி இருப்பினும், இந்தியா புதிய சந்தைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று பேராசிரியர் தார் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, ஐரோப்பா தவிர இந்தியா இப்போது ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.
ரஷ்யாவில் எண்ணெய் வாங்குவதை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டுமா?
அமெரிக்காவை பொறுத்தவரை, இந்தியா தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதால் அதன் மீது கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, வரிச் சுமையைத் தவிர்க்க ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது பற்றி இந்தியா மீண்டும் பரிசீலிக்க வேண்டுமா?
இதுகுறித்துப் பேசிய பேராசிரியர் பிஸ்வஜித் தார், “இந்தியா மலிவான எண்ணெயை பெறும் வரை, இதில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டியதில்லை. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கியபோது, மற்ற நாடுகள் பணவீக்கத்தால் போராடிக் கொண்டிருந்தன.
மேலும், அவற்றின் கோவிட்-19 பேரிடரில் மீள்வதை அது பாதித்தது. இந்தப் பிரச்னையில் இருந்து தப்பிய சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இப்போது நமது பொருளாதாரம் 6 முதல் 6.5 சதவிகிதம் வரை வளரும் என எதிர்பார்க்கும் நேரத்தில், பணவீக்கத்தை எதிர்கொள்ள முடியாது. எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ஒபெக் (OPEC) கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்கினால், அதன் விலை ரஷ்யாவிடம் கிடைப்பதைவிட அதிகமாக இருக்கும்,” என்றார்.
ரஷ்யாவில் இருந்து மட்டுமே எண்ணெய் வாங்குவதில் இந்தியா பிடிவாதமாக இல்லை என்கிறார் மோகன் குமார். அதோடு, “விலை குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து அல்லது நிலைமை மிகவும் சாதகமாக இருக்கும் இடத்தில் இருந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு” என்றும் அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு