பட மூலாதாரம், AFP via Getty Images
இந்த ஆண்டு ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற போது, ரஷ்யா குறித்த அவரது நிலைப்பாட்டைக் கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டனர்.
யுக்ரேன் -ரஷ்யா போரில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை ஆதரித்தது.
பிப்ரவரியில், யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வந்தபோது, அவர் மிகவும் மோசமாக நடத்தப்பட்டார்.
அவ்வாறான சூழலில், இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நட்பில் டிரம்பிற்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என்று தோன்றியது.
ஆனால் கடந்த ஐந்து மாதங்களில் நிலைமை வேகமாக மாறிவிட்டது.
இப்போது ரஷ்யாவுடனான எரிசக்தி மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மைக்காக இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக இரட்டிப்பாக்கியுள்ளார் டிரம்ப் .
டிரம்ப் இந்தியா மீது அழுத்தம் கொடுத்து, ரஷ்யாவுடன் உள்ள உறவில் இருந்து விலக்க முடியுமா என்பது குறித்த விவாதம் ரஷ்ய ஊடகங்களிலும் தீவிரமாக நடந்து வருகிறது.
ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் (TASS) ஆகஸ்ட் 9-ஆம் தேதி அரசியல் ஆய்வாளர்களிடம் இந்தக் கேள்வியை எழுப்பியது.
டிரம்புடைய அழுத்தத்தின் கீழ் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை காட்டும் வழியை இந்தியா பின்பற்ற முடியாது என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ஆண்ட்ரூ சுஷென்ட்சோவ் கூறினார்.
அமெரிக்காவின் இந்த கொள்கை இந்தியாவைப் பொறுத்தவரை தோல்வியடைந்துவிட்டது என்றும், அத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவின் இந்த அழுத்தம் நீண்ட காலம் நீடிக்காது என்றும் அவர் கூறினார்.
எண்ணெய் ஒரு காரணம் மட்டும்தான், பின்னால் வேறு என்ன காரணம் ?
பட மூலாதாரம், Getty Images
“முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியா மீதான வரியை இரட்டிப்பாக்கும் டிரம்பின் முடிவு, அவரது சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மாஸ்கோவில் அதிபர் புதினை சந்திப்பதற்கு முன்பே எடுக்கப்பட்டது.
இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால் அமெரிக்கா வரியை இரட்டிப்பாக்கியது, இது உண்மையான காரணம் அல்ல. இந்தியா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதற்கான காரணம் வேறு ” என்று டாஸ் (TASS) ஊடகத்திடம் ஆண்ட்ரூ சுஷென்கோவ் கூறினார்.
“மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா உலகின் மிகப்பெரிய நாடு. இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. சீனாவுடன் மோதல் ஏற்பட்டால் அமெரிக்கா இந்தியாவை ஒரு உத்தி சார்ந்த பங்காளியாகப் பார்க்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியா தனது தலைமையை ஏற்றுக்கொண்டு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை வலியுறுத்துவதை கைவிட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் அமெரிக்காவின் ஆசை இந்த உத்தியால் நிறைவேறாது. எனவே, இந்தியாவின் மீதான அமெரிக்க அழுத்தம் நீண்ட காலம் நீடிக்காது” என்று ஆண்ட்ரூ சுஷென்கோவ் கூறினார்.
பிறகு, “அழுத்தம் என்பது அமெரிக்காவின் உத்தியில் ஒரு பகுதி. அது வெற்றி பெறவில்லை என்றால், அதிபர் தானே வென்றதாக அறிவித்து, பழைய முடிவுகளை அமைதியாக மாற்றிவிடுகிறார். அமெரிக்கா வர்த்தகத்தை ஒரு கேடயமாகப் பயன்படுத்துகிறது. அப்படி இருக்கும் போது, ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “டிரம்ப், பிரேசிலின் உள் விவகாரங்களில் தலையிடத் தொடங்கியுள்ளார். அங்குள்ள எதிர்க்கட்சிகளை ஆதரிக்கிறார். இதன் விளைவாக எதிர்ப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது, பாதிக்கப்பட்ட நாடுகள் பதிலளிப்பதற்கான வழிகளைத் தேடத் தொடங்குகின்றன”என்றும் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 6 ஆம் தேதி, டிரம்ப் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியை அறிவித்தார், ஆகஸ்ட் 7 ஆம் தேதி, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா சென்றார்.
அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மத்தியில் அஜித் தோவலின் ரஷ்யா பயணம்
பட மூலாதாரம், AFP via Getty Images
அஜித் தோவல் ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்தார்.
இந்த பயணத்தின் போது, இந்த ஆண்டு இறுதிக்குள் அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவார் என்று தோவல் கூறியிருந்தார்.
இதன் பின்னர், ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று பிரதமர் மோதி அதிபர் புதினைத் தொடர்பு கொண்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்ய அதிபர் இந்தியாவுக்கு வருவார் என்று கூறினார்.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி ரஷ்யா டுடே (RT) ஒரு செய்தியை வெளியிட்டது.
அதில் அதிபர் புதின் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவுக்கு வருவார் என்றும், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்த மாத இறுதியில் ரஷ்யாவுக்கு வருவார் என்றும் கூறப்பட்டது.
“ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட போது, அஜித் தோவல் ரஷ்யாவிற்குப் பயணம் செய்தார். இந்தியா-ரஷ்யா இரு நாடுகளும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது பற்றி பேசி வருகின்றன. இதில், விமான பாகங்கள் மற்றும் ரயில் உற்பத்தியில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பேசப்படுகிறது” என்று ஆர்டி ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
“ரஷ்யாவுடன் கூடுதல் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவது குறித்து தோவல் பேசியுள்ளதாக, இந்திய ஊடகங்களில் கூறப்படுகிறது. தற்போது இந்தியாவிடம் மூன்று எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் உள்ளன. இந்தியா அவற்றை ஆபரேஷன் சிந்தூரின் போது பயன்படுத்தியது.”
ரஷ்ய ஊடகக் குழுவான ரோசியா செகோட்னியாவின் இயக்குநர் ஜெனரல் டிமிட்ரி கிசெலெவ் கடந்த வாரம் வியாழக்கிழமை ஸ்புட்னிக் நியூஸிடம் கூறுகையில் , “இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நட்பு இரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியமானது. அமெரிக்காவின் இறுதி எச்சரிக்கையின் போதும், இந்தியாவின் நிலைப்பாடு தர்க்க ரீதியானதாகவும் சமநிலையானதாகவும் இருந்தது. ரஷ்யாவுடனான உறவுகளைப் பொறுத்தவரை இந்தியா யாருடைய அழுத்தத்திற்கும் ஆளாகாது. இந்தியா மற்றும் ரஷ்யாவின் பொது மக்களும் ஒருவரையொருவர் நம்புகிறார்கள்”என்று தெரிவித்தார்.
இந்தியாவிற்கு தண்டனையா?
பட மூலாதாரம், Getty Images
2008 முதல் 2012 வரை யுக்ரேனுக்கான பிரிட்டனின் தூதராக லீ டர்னர் இருந்தார்.
ஆகஸ்ட் 11-ஆம் தேதி மாஸ்கோ டைம்ஸில் புதினுக்கும் டிரம்பிற்கும் இடையில் நடக்கவிருக்கும் சந்திப்பு குறித்த பகுப்பாய்வை டர்னர் எழுதினார் .
“முன்னர் அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக 100 சதவீத வரியை விதிக்கும் என்று கூறப்பட்டது, ஆனால் இப்போது 50 சதவீத வரியை அறிவித்துள்ளது. இந்த வரி ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு முன்பு செயல்படுத்தப்படாது. இதற்கு முன், அதிபர் புதினும் டிரம்பும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சந்திக்க உள்ளனர். இந்தியாவைத் தவிர, வேறு எந்த நாடும் ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக குறி வைக்கப்படவில்லை” என்று டர்னர் மாஸ்கோ டைம்ஸில் எழுதியிருந்தார்.
யுக்ரேனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்காக இந்தியாவை தண்டிப்பது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஒரு தலைகீழ் மாற்றம் என்று டர்னர் கருதுகிறார், ஏனெனில் முன்னதாக டிரம்ப் யுக்ரேன் அதிபரை ஒரு சர்வாதிகாரி என்று அழைத்திருந்தார்.
இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு டிரம்ப் ரஷ்யாவின் பக்கம் சாய்ந்தார்.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத் கூட, யுக்ரேன் 2014க்கு முன்பு வைத்திருந்த எல்லைகளை மீண்டும் பெற முடியாது என்றும், நேட்டோவில் சேர முடியாது என்றும் கூறியிருந்தார்.
“புதின்-டிரம்ப் சந்திப்பில் யுக்ரேனின் நலன்களைப் புறக்கணிப்பதன் மூலம் அமெரிக்கா ஒரு உடன்பாட்டை எட்டியிருக்கலாம். ரஷ்யாவிற்கு எதிராக புதிய வரிகளை விதிக்க டிரம்ப் எதுவும் செய்யவில்லை. ஆனால் அமெரிக்கா செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. ரஷ்ய எண்ணெய் டேங்கர்களுக்கு எதிராக அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்திற்கு உதவும் வங்கிகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது அமெரிக்கா எந்த தனித் தடைகளையும் விதிக்கவில்லை” என்றும் டர்னர் குறிப்பிட்டிருந்தார் .
“இப்போது யுக்ரேன் தனது நிலத்தை இழக்க வேண்டிய ஒரு ஒப்பந்தத்திற்கு டிரம்ப் ஒப்புக் கொள்ளக்கூடும் என்ற அச்சம் உள்ளது. யுக்ரேன் அவ்வாறு செய்ய மறுத்தால், அமெரிக்கா அதை ஒப்புக்கொள்ள அழுத்தம் கொடுக்கும்” என்று டர்னர் விளக்கியுள்ளார் .
“ஜனவரியில் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அமெரிக்கா இதை பலமுறை செய்துள்ளது. யுக்ரேனுக்கான ஆயுத விநியோகங்களை அமெரிக்கா துண்டித்தது, உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்ளும் செயல்முறையையும் சீர்குலைத்தது. மறுபுறம், அது ரஷ்யா மீது எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை.”
“அழுத்தம் வேலை செய்யாது”
பட மூலாதாரம், Getty Images
யூரோசெர்பியா.நெட் (Euroserbia.net) இன் ஆசிரியர் கான்ஸ்டான்டின் வான் ஹோப்மெய்ஸ்டெர் (Konstantin von Hofmeister) ஆகஸ்ட் 7-ஆம் தேதி இந்தியாவிற்கு எதிரான டிரம்பின் வரிகள் குறித்து ஒரு கட்டுரை எழுதினார்.
“இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மிகவும் ஆழமாகிவிட்டன. 2021-22 ஆம் ஆண்டில் வெறும் 13 பில்லியன் டாலர்களாக இருந்த இருதரப்பு வர்த்தகம், 2024-25 நிதியாண்டில் 68 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும்” என்று வான் கூறியுள்ளார்.
“இந்தியா ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் மற்றும் உரங்களை இறக்குமதி செய்கிறது. இதன் விளைவாக, ரஷ்யா இந்தியாவின் சிறந்த வர்த்தக கூட்டாளிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்தியா தற்போது அதன் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 35 முதல் 40 சதவீதம் வரை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. 2024-25 நிதியாண்டில் இந்தியா 50 பில்லியன் டாலர் மதிப்புள்ள எரிசக்தியை இறக்குமதி செய்துள்ளது.
“ரஷ்யாவும் இந்தியாவும் இருதரப்பு வர்த்தகத்தில் டாலரைச் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவருகின்றன. இரு நாடுகளும் மேற்கத்திய நிதி அமைப்பைத் தவிர்த்து வணிகம் செய்கின்றன. கிட்டத்தட்ட 90 சதவீத இருதரப்பு வர்த்தகம் உள்ளூர் நாணயங்களில் செய்யப்படுகிறது. இப்போது ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு வர்த்தகம் நடக்கிறது.” என்று வான் எழுதினார்.
முன்னாள் ரஷ்ய அதிபர் மெத்வதேவ் அமெரிக்காவின் நிலைப்பாட்டை அடிக்கடி விமர்சித்து வருகிறார்.
ஜூலை 28-ஆம் தேதி தனது எக்ஸ் தளப் பதிவு ஒன்றில், மெத்வதேவ் பின்வருமாறு பதிவிட்டிருந்தார்.
“டிரம்ப் ரஷ்யாவுடன் இறுதி எச்சரிக்கை விளையாட்டை விளையாடுகிறார். 50 நாட்களோ அல்லது 10 நாட்களோ … டிரம்ப் இரண்டு விஷயங்களை மறக்காமல் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
1. ரஷ்யா ஒன்றும் இஸ்ரேல் அல்லது இரான் அல்ல.
2. ஒவ்வொரு புதிய இறுதி எச்சரிக்கையும் ஒரு அச்சுறுத்தலாகவும், போரை நோக்கிய ஒரு படியாகவும் இருக்கிறது. இது யுக்ரேன்-ரஷ்யா இடையிலான போர் அல்ல. தூக்கத்தில் இருக்கும் பைடனின் பாதையை டிரம்ப் பின்பற்றக்கூடாது.
மெத்வதேவின் இந்த கருத்துக்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவரை ரஷ்யாவின் தோல்வியுற்ற அதிபர் என்றும் குறிப்பிட்டார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு