பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு மேலும் 25% வரி விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
ஏற்கனவே இந்தியப் பொருட்களுக்கு 25% வரியை டிரம்ப் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய அளவில் எரிசக்தியை வாங்கும் நாடாக இந்தியா உள்ளதால் இந்த கூடுதல் வரி விதிக்கப்படுவதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”இந்திய அரசு தற்போது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷ்யாவில் இருந்து எண்ணெயை இறக்குமதி செய்வதை நான் காண்கிறேன்.” என டிரம்ப் கையெழுத்திட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், “இந்த நடவடிக்கைகள் முற்றிலும் நியாயமற்றவை என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.” என்று கூறியுள்ளது.
ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட 25 சதவீத வரியுடன் கூடுதலாக புதிய வரியும் செயல்படுத்தப்படும். டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவின்படி, இந்தக் கூடுதல் வரி 21 நாட்களுக்குள் அமலுக்கு வரும்.
அமெரிக்காவின் இந்த முடிவைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்துள்ளது
“நரேந்திர மோதியின் நண்பர் டிரம்ப், இந்தியாவின் மீது 50% வரி விதித்துள்ளார். டிரம்ப் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார், ஆனால் நரேந்திர மோதி அவரது பெயரைக் கூட குறிப்பிடுவதில்லை. நரேந்திர மோதி, தைரியமாக இருங்கள், டிரம்பிற்கு பதில் சொல்லுங்கள்” என்று காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.
டிரம்பின் 50% வரி ஒரு பொருளாதார அச்சுறுத்தல் – இந்தியாவை நியாயமற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்குள் தள்ளும் முயற்சி என நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்
மேலும், ” பிரதமர் மோடி தனது பலவீனத்தை இந்திய மக்களின் நலன்களை விட மேலோங்க விடாமல் வைத்திருப்பது நல்லது” எனவும் கூறியுள்ளார்
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
2022-ஆம் ஆண்டில் ரஷ்யா யுக்ரேன் மீது முழு அளவிலான போரை தொடங்கியபோது, பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகத்தை குறைத்தன. அதனைத் தொடர்ந்து, இந்தியா ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக மாறியது.
இந்திய அரசின் பதில் என்ன?
பட மூலாதாரம், Getty Images
டிரம்பின் இந்த 50% வரி விதிப்பு தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை இன்று (ஆகஸ்ட் 6) வெளியிட்டுள்ளது.
அதன்படி, “ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்கிறது என்பதற்காக, சமீபகாலமாக அமெரிக்கா இந்தியாவை குறிவைத்துள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.
“எங்கள் இறக்குமதிகள் சந்தை காரணிகளை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் ஒட்டுமொத்த நோக்கத்துடன் செய்யப்படுகின்றன என்பது உள்பட, இந்த விஷயங்களில் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்.”
“எனவே, மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் தங்கள் சொந்த தேசிய நலனுக்காக நடவடிக்கைகளை எடுக்கிறது. ஆனால் அதற்காக அமெரிக்கா இந்தியா மீது கூடுதல் வரிகளை விதிக்க முடிவு செய்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.”
“இந்த நடவடிக்கைகள் முற்றிலும் நியாயமற்றவை என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.”
இந்தியாவின் விமர்சனம்
பட மூலாதாரம், Win McNamee/Getty Images
அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை இன்று (ஆகஸ்ட் 6) மாஸ்கோவில் சந்தித்த பிறகு டிரம்ப் இந்தியா மீதான 50% வரி விதிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில், இந்தியா மீது அதிக வரிகளை விதிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டியிருந்தார். அமெரிக்காவின் வரிவிதிப்பு நிலைப்பாட்டிற்கு எதிர்வினையாற்றும் வகையில் இந்தியாவும் ஒரு அறிக்கையை சில நாட்களுக்கு வெளியிட்டது.
அந்த அறிக்கையில், “அமெரிக்கா இன்னும் அதன் அணுசக்தித் தொழிலுக்கு யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைடையும், அதன் மின்சார வாகனத் தொழிலுக்கு பல்லேடியத்தையும், உரங்கள் மற்றும் ரசாயனங்களையும் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்கிறது” என்று இந்தியா கூறியது.
இது தொடர்பாக டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
“அமெரிக்கா ரஷ்யாவிடமிருந்து யுரேனியம், ரசாயனங்கள் மற்றும் உரங்களை வாங்குவதாகவும், ஆனால் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா எதிர்க்கிறது என்றும் இந்தியா கூறுகிறது. இதற்கு உங்கள் பதில் என்ன?” என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது. நான் அதைப் பற்றி கண்டுபிடிக்க வேண்டும். இது பற்றிய தகவல்களை பின்னர் உங்களுக்குத் தெரிவிப்போம்” என்றார்.
இந்தியா ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கி, அதை மற்ற நாடுகளுக்கு விற்று லாபம் ஈட்டுவதாக டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தியா மீதான டிரம்பின் வரி விதிப்பு தொடர்பான செய்திகளைப் படிக்க…
“உலகளாவிய எரிசக்தி சந்தை நிலைத்திருக்க வேண்டும்” என்பதற்காக, ரஷ்யா-யுக்ரேன் மோதல் தொடங்கியபோது, அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எரிவாயுவை இறக்குமதி செய்ய ஊக்குவித்தது என இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
அத்துடன், “எல்லா பெரிய பொருளாதார நாடுகளையும் போலவே, இந்தியா அதன் தேசிய நலன்கள் மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், “இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது” என்றும் அது குறிப்பிட்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு