பட மூலாதாரம், AFP via Getty Images
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்கள், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளன. இதற்கிடையில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா 30 நாட்கள் விலக்கு அளித்துள்ளது.
ஆனால் இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள உத்தியை அமெரிக்க எரிசக்தித் துறை செயலாளர் கிறிஸ் ரைட் தெளிவுபடுத்தியுள்ளார்.
வெள்ளிக்கிழமை செய்தி சேனல் ஒன்றில் பேசிய அவர், இரானுடனான அதிகரித்து வரும் மோதலால் கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கை இது என்று கூறினார்.
இது ரஷ்யா மீதான அமெரிக்க கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் அல்ல, இது ஒரு குறுகிய கால ஏற்பாடு மற்றும் ‘நடைமுறை அணுகுமுறை’ மட்டுமே என்று ஏபிசி நியூஸிடம் கிறிஸ் ரைட் தெரிவித்தார்.
இதற்கு ஒரு நாள் முன்னதாக, இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்க கருவூலத் துறை 30 நாட்கள் விலக்கு அளித்துள்ளதாக அதற்கான செயலாளர் ஸ்காட் பெசன்ட் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து இந்தியா இதுவரை அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால் எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பியுள்ளன.
உண்மையில், ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்தியாவுக்கு அமெரிக்கா முன்னதாக 25 சதவீத அபராத வரி விதித்திருந்தது.
இருப்பினும், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதில்லை என்று இந்தியா உறுதியளித்திருப்பதாகக் கூறி, கடந்த மாத தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் நிபந்தனையுடன் பரஸ்பர வரியைக் குறைத்தார். ரஷ்ய எண்ணெய் கொள்முதலைக் கண்காணிப்பில் வைப்பதை டிரம்ப் ஒரு நிபந்தனையாக விதித்திருந்தார்.
கிறிஸ் ரைட் என்ன கூறினார்?
“நாங்கள் இந்தியாவில் உள்ள எங்களது நண்பர்களைத் தொடர்புகொண்டு, ‘அந்த எண்ணெயை வாங்கி உங்கள் சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லுங்கள்’ என்று கூறினோம்” என அமெரிக்க எரிசக்தி அமைச்சர் கிறிஸ் ரைட், ஏபிசி நியூஸிடம் தெரிவித்தார்.
ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், “குறுகிய காலத்தில் சந்தைக்கு கூடுதல் எண்ணெயைக் கொண்டு வர வேண்டியது அவசியம். நீண்ட கால விநியோகம் போதுமானதாக உள்ளது, அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஆனால் ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் சூழ்நிலை காரணமாக, எண்ணெய் விலையில் லேசான உயர்வு ஏற்பட்டுள்ளது” என்றார்.
“நாங்கள் ஒரு குறுகிய கால நடவடிக்கையை எடுத்து வருகிறோம். தெற்காசியாவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் ரஷ்ய எண்ணெயுடன் கப்பல்கள் ஏற்கனவே நிற்கின்றன. சீனா தனது விநியோகஸ்தர்களைச் சரிவர நடத்தாததால், அங்கு பெருமளவிலான எண்ணெய் உள்ளது. அதனால்தான் எங்களது நண்பரான இந்தியாவைத் தொடர்புகொண்டு, அந்த எண்ணெயை வாங்கி அவர்களின் சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டோம்” என்றார் கிறிஸ் ரைட்.
“இது இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உடனடியாக எண்ணெய் வழங்கும். சந்தையில் இந்தியாவுடன் போட்டியிடாத உலகின் பிற பகுதிகளில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும்” என்று கிறிஸ் ரைட் கூறினார்.
இது ஒரு குறுகிய கால நடவடிக்கை என்றும், இதனை ரஷ்யா மீதான கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றமாகப் பார்க்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
“எண்ணெய் விலையைக் குறைவாக வைத்திருப்பதற்காக மிகக் குறுகிய காலத்திற்கு இந்தக் கொள்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
ஸ்காட் பெசன்ட் கூறுகையில், “இந்தியா அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டாளி. இந்தியா அமெரிக்காவிலிருந்து தனது எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கும் என்று நாங்கள் முழுமையாக எதிர்பார்க்கிறோம். உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை இரான் பணயமாக வைக்க முயல்வதால் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை இந்தத் தற்காலிக நடவடிக்கை குறைக்கும்” என்றார்.
இது “வேண்டுமென்றே எடுக்கப்பட்ட குறுகிய கால நடவடிக்கை” என்றும், கடலில் ஏற்கனவே கப்பல்களில் உள்ள எண்ணெய் தொடர்பான பரிவர்த்தனைகளை மட்டுமே இது அனுமதிப்பதால், ரஷ்ய அரசாங்கத்திற்கு இது பெரிய பொருளாதார நன்மைகளை வழங்காது என்றும் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் நீடிக்கும் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய பாதுகாப்பு சிந்தனைக் குழுவான சிஎஸ்ஐஎஸ்-இன் படி, போர் தொடங்குவதற்கு முன்பு 70.50 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, வெள்ளிக்கிழமை நிலவரப்படி 92 டாலரை எட்டியுள்ளது.
கடலில் எவ்வளவு ரஷ்ய எண்ணெய் உள்ளது?
பட மூலாதாரம், AFP via Getty Images
இந்த வர்த்தகங்கள் குறித்து நேரடியாக அறிந்துள்ள நபர்களை மேற்கோள் காட்டி ப்ளூம்பெர்க் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், ஏற்கனவே 10 மில்லியன் பேரல்களுக்கும் அதிகமான ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணெய் கொள்முதலில் பெரும்பாலானவை அமெரிக்காவில் வியாழக்கிழமை இரவு அறிவிக்கப்பட்ட ஒரு மாத கால விலக்குக்கு முன்னரே செய்யப்பட்டிருக்கலாம்.
ப்ளூம்பெர்க் கப்பல் கண்காணிப்பு தரவுகளின்படி, அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் உள்ள டேங்கர்களில் சுமார் 15 மில்லியன் பேரல் ரஷ்ய கச்சா எண்ணெய் உள்ளது.
சுமார் 7 மில்லியன் பேரல் எண்ணெயைச் சுமந்து செல்லும் சில கப்பல்கள் சிங்கப்பூருக்கு அருகில் நங்கூரமிட்டுள்ளன. இந்த எண்ணெய் அனைத்தும் ஒரு வாரத்திற்குள் இந்தியத் துறைமுகங்களைச் சென்றடையக்கூடும்.
இது தவிர, ரஷ்ய எண்ணெய் ஏற்றப்பட்ட சில டேங்கர்கள் மத்திய தரைக்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் வழியாக இந்தியத் துணைக்கண்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன.
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, டிசம்பர் மாதம் முதல் ரஷ்ய எண்ணெயை வாங்காமல் இருந்த இந்திய அரசுக்குச் சொந்தமான சுத்திகரிப்பு நிறுவனங்களான மங்களூர் ரிஃபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவை மீண்டும் கொள்முதல் செய்ய சந்தையில் தீவிரமாக இறங்கியுள்ளன.
முக்கிய தனியார் துறை சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தனது உள்நாட்டு எரிபொருள் சுத்திகரிப்பு ஆலைகளுக்காக ரஷ்ய எண்ணெயை வாங்க முயன்று வருவதாக மற்றொரு ஆதாரம் தெரிவிக்கிறது. இருப்பினும், அதன் ஏற்றுமதி சார்ந்த ஆலைகள் தொடர்ந்து ரஷ்யா அல்லாத கச்சா எண்ணெயைக் கொண்டே இயங்கும்.
அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பே, ரஷ்ய எண்ணெயைச் சுமந்து சென்ற டேங்கர்கள் தங்களது இலக்குகளை இந்தியத் துறைமுகங்களுக்கு மாற்றத் தொடங்கிவிட்டன.
கப்பல் கண்காணிப்பு நிறுவனமான கெப்ளர் கூற்றுப்படி, யூரல் ரக எண்ணெயைச் சுமந்து செல்லும் குறைந்தது 18 கப்பல்கள் இப்போது இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
சூயஸ் கால்வாய் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் இருந்தும் எண்ணெய் டேங்கர்கள் இந்தியத் துணைக்கண்டத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
தரவு நுண்ணறிவு நிறுவனத்தின் ஆய்வாளர் சுமித் ரிடோலியா ப்ளூம்பெர்க்கிடம் கூறுகையில், “சுத்திகரிப்பு நிலையங்கள் விரைவில் கொள்முதலை மீண்டும் அதிகரிக்கலாம். இறக்குமதி அளவு விரைவில் ஒரு நாளைக்கு 2 மில்லியன் பேரல்களுக்கு மேல் உயரக்கூடும். ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு முன்பு கிடைத்து வந்த பெரும் தள்ளுபடிகள் கணிசமாகக் குறையக்கூடும். அதன் விலை பிரீமியம் விலையாக மாறவும் வாய்ப்புள்ளது” என்றார்.
இது தற்போது நடந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து நன்கு அறிந்த நபர்களின் கூற்றுப்படி, ரஷ்யாவின் முதன்மை யூரல் ரக எண்ணெயை விநியோக அடிப்படையில் பெறுவதற்கு இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ப்ரெண்ட் விலையை விட பேரலுக்கு 2 முதல் 4 டாலர்கள் வரை கூடுதலாக வழங்குகின்றன.
கடந்த மாதம் நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது. தெற்காசியாவில் இருந்து வாங்குபவர்கள் பின்வாங்கியதால், ப்ரெண்ட் விலையை விட 15 முதல் 20 டாலர்கள் வரை மலிவாக அந்த எண்ணெய் கிடைத்தது.
இந்தியா மீண்டும் தனது கொள்முதலைத் தொடங்கியுள்ளதால், ரஷ்யாவிலிருந்தான இறக்குமதி 2024-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்தது போல ஒரு நாளைக்கு 2 மில்லியன் பேரல்களுக்கும் அதிகமான அளவை மீண்டும் எட்டக்கூடும்.
கெப்ளர் தரவுகளின்படி, கடந்த மாதம் இந்த இறக்குமதி சராசரியாக ஒரு நாளைக்கு 1.06 மில்லியன் பேரல்களாகக் குறைந்தது, இது செப்டம்பர் 2022-க்குப் பிறகான மிகக் குறைந்த அளவாகும்.
ஹோர்முஸ் மூடப்பட்டது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தியது?
பட மூலாதாரம், AFP via Getty Images
பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரான் மீது தாக்குதல்களை நடத்தின, இதில் அந்நாட்டின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டார். அதன் பின்னர் மோதல் தீவிரமடைந்து, மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதையும் சூழ்ந்துள்ளது.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை (20 சதவீதம்) கொண்டு செல்லும் பாதையான ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளது.
இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை , இதனை முழுமையாக மூடப் போவதாக எச்சரித்துள்ளது.
இரானின் பதிலடி நடவடிக்கைகள் காரணமாக, அந்தப் பிராந்தியத்தில் உள்ள பல எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களும் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க கடற்படை ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் டேங்கர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார், ஆனால் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தொடர்ந்து அமெரிக்க தளங்களைக் குறிவைத்து வருவதால், இது நடைமுறையில் சாத்தியமானதாகத் தெரியவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க போர்க்கப்பல்கள் அவ்வாறு செய்தால் அவற்றுக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு