பட மூலாதாரம், VCG via Getty Images
இந்தியா, ரஷ்யா, சீனாவின் நட்புறவு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்ரூத் சோசியல் வலைதளத்தில், “நாம் இந்தியா மற்றும் ரஷ்யாவை ஆழமான மற்றும் இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டதைப் போல தெரிகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், “அவர்களுக்கு நீண்ட மற்றும் வளமான எதிர்காலம் அமையட்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை, சீனா தனது ராணுவ சக்தியை முழுமையாக வெளிப்படுத்தியது. இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ராணுவ அணிவகுப்பில் இந்த ஆயுத வலிமை காட்சிப்படுத்தப்பட்டது.
சீனாவிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் வாஷிங்டன் டிசி-இல் இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இதைக் கண்காணித்து வந்தார்.
“நான் அதைப் பார்க்க வேண்டும் என்று சீனா விரும்பியது, நானும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்” என்றார் டிரம்ப்.
தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான விழாவைப் பற்றி அமெரிக்க அதிபர் விரிவாக எதுவும் கூறவில்லை, ஆனால் அதை ‘மிகவும் சுவாரஸ்யமான’ ஒரு நிகழ்வு என்று விவரித்தார்.
டிரம்புக்கும் உலகின் பிற பகுதிகளுக்குமான சீனாவின் செய்தி மிகவும் தெளிவாக இருந்தது.
அந்த செய்தி என்னவென்றால் – உலகில் இப்போது ஒரு புதிய அதிகார மையம் உருவாகி வருகிறது, அது நூறு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள அமெரிக்க ஆதிக்க அமைப்பிற்கு சவால் விடுக்கத் தயாராக உள்ளது.
டிரம்பின் மாறுபட்ட அறிக்கைள்
இந்த ராணுவ அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்ட அதே நாளில், டிரம்ப், போலந்து அதிபர் கரோல் நவ்ரட்ஸ்கியை ஓவல் அலுவலகத்தில் சந்தித்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் அவர் சீனாவின் இந்த ராணுவ அணிவகுப்பு பற்றி அதிகம் பேசவில்லை.
சீனாவுடனான ‘வரிவிதிப்புப் போரின்’ போது நடந்த நிகழ்வுகள் தொடர்பான அதிபர் டிரம்பின் அறிக்கைகளில் அலட்சியம், புகார்கள் மற்றும் கவலை ஆகியவற்றின் கலவை தெளிவாகத் தெரிந்தது.
ஒரு பாட்காஸ்ட் நேர்காணலின் போது, சீனாவின் ராணுவ அணிவகுப்பு பற்றி தான் கவலைப்படவில்லை என்று டிரம்ப் கூறினார்.
புதின், வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் சீனா தனது வலிமையைக் காட்டுவது குறித்து தாம் ‘கவலைப்படவில்லை’ என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், Reuters
இருப்பினும், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) இரவுக்குள் அவர் வேறொரு தொனியை வெளிப்படுத்தினார், ‘இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா அளித்த பங்களிப்புக்கு சீனா அங்கீகாரம் அளிக்கவில்லை’ என்று ட்ரூத் சோஷியலில் பதிவிட்டார்.
“அமெரிக்காவிற்கு எதிராக நீங்கள் (சீனா) சதி செய்யும் இந்தத் தருணத்தில், விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உன்னுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்” என்றும் அவர் கூறினார்.
சீனாவின் தலைமை
பட மூலாதாரம், Reuters
இதையெல்லாம் தாண்டிப் பார்க்கும்போது, அணிவகுப்புகள் மற்றும் ராணுவ வலிமையைக் காட்டுவதில் டிரம்புக்கு ஒரு தனி விருப்பம் உள்ளது.
கடந்த மாதம் அவர் புதினுக்கு அலாஸ்காவில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார் – அப்போது ஸ்டெல்த் பாம்பர் போர் விமானங்கள் மற்றும் அமெரிக்க ஜெட் விமானங்கள் வானில் பறந்தன.
இரண்டு மாதங்களுக்கு முன்புதான், அமெரிக்க ராணுவத்தின் 250வது ஆண்டு நிறைவைக் கொண்டாட வாஷிங்டனில் ஒரு ராணுவ அணிவகுப்பை அவர் ஏற்பாடு செய்தார்.
சீனாவின் சமீபத்திய ராணுவ அணிவகுப்பு, அதன் உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள் மற்றும் ஒழுக்கமான அணிவகுப்புக்காக செய்திகளில் இடம்பெற்றது. ஆனால், அமெரிக்காவின் ராணுவ அணிவகுப்பு, அதன் ராணுவ வரலாற்றை நினைவுகூரும் ஒரு எளிய நிகழ்வாக இருந்தது.
இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட டாங்கிகள் மற்றும் புரட்சிகர சகாப்தத்தின் வீரர்கள் வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள கான்ஸ்டிடியூஷன் அவென்யூவில் நிதானமாக நடந்து செல்வதைக் காண முடிந்தது.
‘மேக் அமெரிக்கா க்ரேட் அகேன்’ என்ற டிரம்பின் முழக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த நிகழ்வு, நாட்டின் புகழ்பெற்ற கடந்த காலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. டிரம்ப் இந்த நிகழ்வின் மூலம், ‘அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய சகாப்தம்’ என்று அவர் அழைக்கும் 19ஆம் நூற்றாண்டின் காலத்தை நினைவு கூர்ந்தார்.
சீனாவின் இந்த ராணுவ அணிவகுப்பில், அதன் எதிர்கால ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதன் மூலம் சீனாவின் கம்யூனிச அரசாங்கமும் இரண்டாம் உலகப் போரில் ‘பாசிசம் மற்றும் ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்பதில்’ சீனா பெரும் பங்கு வகித்ததாகக் காட்ட முயன்றது.
அந்தப் போர் ‘அமெரிக்க நூற்றாண்டு’ என்று அழைக்கப்படும் காலகட்டத்திற்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்தது என்றால், இப்போது இந்த புதிய சகாப்தத்தில் சீனாவை அடிப்படையாகக் கொண்ட உலக முறைமையை உருவாக்குவதில் வெற்றி பெறமுடியும் என்று சீனா நம்புகிறது.
“விதிகளை திருத்தி எழுதுவதற்கான திட்டமிட்ட முயற்சியின் முதல் படி இது. அதற்கு நீங்கள் செய்யும் முதல் விஷயம் வரலாற்றை திருத்தி எழுதுவதுதான்.” என்று டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் அவரது உதவியாளராக இருந்த ரிச்சர்ட் வில்கி கூறினார்.
“இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் தோல்விக்கு சீன தேசியவாதிகள் மற்றும் அமெரிக்கப் படைகளின் பங்களிப்பு, சீன கம்யூனிஸ்ட் ராணுவத்தின் பங்களிப்பை விட மிக அதிகம்” என்று அவர் கூறினார்.
புதிய நட்பு
பட மூலாதாரம், Reuters
இருப்பினும், இந்த வாரம் அமெரிக்காவிற்கு கவலையை ஏற்படுத்திய ஒரே நிகழ்வு என்றால் அது சீனாவின் ராணுவ அணிவகுப்பு மட்டுமே அல்ல. அது தவிர, அமெரிக்க அரசியல்வாதிகளை கவலைக்குள்ளாக்கிய மேலும் பல விஷயங்களும் நிகழ்ந்தன.
திங்களன்று, தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தனர்.
இது சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இடைவெளி குறைந்து வருவதற்கான அறிகுறியாகும். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்பை மோசமாகப் பாதிக்கும் வகையில், டிரம்ப் இந்தியாவின் மீது விதித்த வரிகள் ஆகும்.
உலக வர்த்தகத்தில் டொனால்ட் டிரம்பின் ‘அமெரிக்கா முதலில்'(America First) கொள்கை, உலகின் பொருளாதார மற்றும் அரசியல் சார்புகளை உலுக்கியுள்ளது.
மாறிவரும் சூழ்நிலைகளில் போட்டியாளர்களாகக் கருதப்படும் நாடுகள் எவ்வாறு ஒன்றிணைய முடியும் என்பதற்கு சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் வளர்ந்து வரும் கூட்டணி ஒரு வலுவான எடுத்துக்காட்டு.
அமெரிக்க தொழில்துறையைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்திற்கு புதிய வருவாயை திரட்டுவதற்குமான தனது திட்டத்தின் ஒரு பகுதியே இந்த வரிகள் என டிரம்ப் விவரிக்கிறார்.
“அமெரிக்காவுடனான வர்த்தக கூட்டாண்மையில் ஏற்படும் சிறிய இடையூறுகள் பிரச்னை அல்ல, மாறாக சீனாவின் வளர்ந்து வரும் ராணுவ சக்தியே உண்மையான அச்சுறுத்தல் என்பதை “கொரியர்கள், ஜப்பானியர்கள், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமியர்கள் நன்கு அறிவார்கள்” என்று ரிச்சர்ட் வில்கி கூறுகிறார்.
மற்ற நாடுகளின் மோதல்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து டிரம்ப் பெரும்பாலும் அலட்சியமாகவே இருந்து வருகிறார். மாறாக, கிரீன்லாந்து, பனாமா மற்றும் கனடா போன்ற அமெரிக்காவிற்கு புவியியல் ரீதியாக நெருக்கமான நாடுகளில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார்.
ஆனால் டிரம்பிற்கு ஆபத்து என்னவென்றால், அவரது வர்த்தகக் கொள்கைகள் அமெரிக்காவிற்கு நன்மை பயக்கும் என்பதற்குப் பதிலாக தோல்வியடையும் அபாயத்தில் உள்ளன.
அமெரிக்காவை மையமாகக் கொண்ட வர்த்தக ஏற்பாட்டின் கீழ் டிரம்ப் விதித்த வரிகள் அமெரிக்க நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படலாம் என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரம், ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றம், ‘டிரம்பின் பல வரிகள் கூட்டாட்சி சட்டம் குறித்த தவறான புரிதலை அடிப்படையாகக் கொண்டவை’ என்று தீர்ப்பளித்தது.
ஆனால் இந்த முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளார் டிரம்ப். டிரம்பின் ஆதரவாளர்களாகக் கருதப்படும் பழமைவாத நீதிபதிகளால் உச்ச நீதிமன்றம் ஆதிக்கம் செலுத்தப்பட்டாலும், நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி முக்கிய கொள்கைகளை செயல்படுத்த முயன்ற அதிபர்களுக்கு எதிராக அவர்கள் இதுவரை மிகவும் கடுமையான நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், டிரம்பின் வரி தொடர்பாக அவர்கள் தாராளவாத நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பது சாத்தியமில்லை.
வர்த்தகத்தைப் பொறுத்தவரை, டிரம்ப் எப்போதும் தான் நினைத்ததையே பின்பற்றி வருகிறார். அவர் பல பாரம்பரியக் கொள்கைகளை மாற்றி, புதிய வர்த்தக கூட்டாளிகளை உருவாக்கியுள்ளார்.
‘இது ஒரு லட்சிய உத்தி. தனது வர்த்தகக் கொள்கை அமெரிக்காவை அதன் இரண்டாவது பொற்காலத்திற்கு இட்டுச் செல்லும்’ என்று டிரம்ப் கூறியுள்ளார்.
ஆனால் அது தியனன்மென் சதுக்கத்தில் நடந்த சீன ராணுவ அணிவகுப்பாக இருந்தாலும் சரி அல்லது அமெரிக்க நீதிமன்றங்களாக இருந்தாலும் சரி, டிரம்பின் வரிகளால் ஏற்படும் அச்சுறுத்தல் கற்பனையானது அல்ல, மாறாக முற்றிலும் உண்மையானது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு