பட மூலாதாரம், ANI
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருநாள் பயணமாக டிசம்பர் 4-ஆம் தேதி இந்தியாவிற்கு வந்தார். புதினின் இந்திய வருகை அதிகளவில் விவாதிக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகள் இந்த வருகையை கூர்ந்து கண்காணித்து வருகின்றன.
டிசம்பர் 1-ஆம் தேதி பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் இணைந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் ஒன்றை எழுதியிருந்தனர். அதில் யுக்ரேன் போரை நீட்டிப்பதற்கு ரஷ்யாவை குற்றம்சாட்டியிருந்தனர்.
அதற்குப் பதிலாக இந்தியாவுக்கான ரஷ்யா தூதர் டெனிஸ் அலிபோவ் அதே நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் தூதரக அதிகாரிகள் இணைந்து எழுதிய கட்டுரை யுக்ரேன் போர் தொடர்பாக இந்திய மக்களை ‘தவறாக வழிநடத்துகிறது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
மூன்று நாடுகளின் தூதரக அதிகாரிகள் இணைந்து எழுதிய கட்டுரையை ரஷ்யாவுக்கான முன்னாள் இந்திய தூதரும் இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளருமான கன்வால் சிபல் கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஆனால் பெர்லினில் உள்ள குளோபல் பப்ளிக் பாலிசி இன்ஸ்டிடியூட்-இன் இயக்குநர் தோர்ஸ்டன் பென்னர் அந்த கட்டுரைக்கு ஆதரவு தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “அந்தக் கட்டுரையில் ஒரு வரி கூட இந்திய வெளியுறவு கொள்கை பற்றி இல்லை. இதை எவ்வாறு ஒருவர் ராஜ்ஜிய அவமானம் அல்லது தலையீடு எனக் கருத முடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.” என அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த கன்வால் சிபல், இதனை ‘நட்பு ரீதியிலான பயணத்தை சர்ச்சையாக்கும்’ முயற்சி எனக் குறிப்பிட்டிருந்தார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
ரஷ்ய வல்லுநர்களின் பார்வை என்ன?
ரஷ்யன் அகாடெமி ஆஃப் சயின்ஸின் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓரியண்டல் ஸ்டடீஸில் உள்ள சென்டர் ஃபார் சயின்டிபிக் அன்ட் அனாலடிகள் இன்ஃபர்மேஷன் பிரிவின் தலைவரான நிகோலாய் ப்ளாட்நிகோவ் தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவின் வெளியுறவு கொள்கையை ‘நடைமுறை சார்ந்தது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
“இருநாடுகளும் நீண்ட கால நட்பு மற்றும் உத்தி சார்ந்த ஒத்துழைப்பை கொண்டுள்ளன. சர்வதேச அமைப்புகள் உடனான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பும் தொடர்ந்து முன்னேறி வருகிறது. டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் முக்கிய அம்சம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடமிருந்து வரும் அதிகப்படியான வெளிப்புற அழுத்தத்திற்கு எப்படி தகவமைத்துக் கொள்வது என்பதுதான்.” என்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் பொருளாதார தடைகளை தவிர்ப்பதற்காக ரஷ்ய எண்ணெயை வாங்குவதை இந்தியா குறைத்துவிட்டதாக சில செய்திகள் தெரிவிக்கும் நிலையில், அதனால் இந்தியாவிற்கு நல்ல பலன்கள் கிடைக்கின்றன என்கிறார் ப்ளாட்நிகோவ்.
“இந்தியாவின் இறக்குமதியில் ரஷ்ய எண்ணெய்கள் கணிசமான பங்கு வகிக்கிறது, அதனை வாங்குவதன் மூலமாக இந்தியா நல்ல லாபம் சம்பாதித்து வருகிறது. அரசாங்கத்தின் கஜானாவை நிரப்புவதற்கான வாய்ப்பை வழங்கும் இத்தகைய லாபகரமான திட்டத்திற்கு யார் மறுப்பு தெரிவிப்பார்கள்?” என தி இந்துவிற்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், @narendramodi
எனினும், எண்ணெயை தவிர்த்து மற்ற துறைகளிலும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகளை இந்தியாவும் ரஷ்யாவும் தேடி வருவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
புதன்கிழமை அன்று ஒரு நிகழ்வில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அரசாங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் என்று வருகையில் “இயக்கம் என்பது நமது ராஜ்ஜிய உறவுகளில் மிக முக்கியமான அங்கம்” என்று கூறினார்.
“இந்தியாவின் திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கான தேவை ரஷ்யாவில் அதிகம் உள்ளது. கிட்டத்தட்ட 5 லட்சம் இந்திய தொழிலாளர்களுக்கான தேவை இருக்கலாம்,” என மாஸ்கோவைச் சேர்ந்த வல்லுநரான அரிஃப் அசலியோக்ளு தி இந்து நாளிதழிடம் தெரிவித்திருந்தார்.
யுக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளின் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு இந்தியா மற்றும் சீனாவின் ஆதரவு ரஷ்யாவிற்கு மிகவும் முக்கியமாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய வல்லுநர்கள் எப்படி பார்க்கிறார்கள்?
பட மூலாதாரம், AFP via Getty Images
யுக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து உலக ஒழுங்கில் அதிகார சமநிலை மாறி வருவதாக ரஷ்யா கூறி வருகிறது.
இந்தியாவின் கொள்கை எப்போதும் அணிசேராமையாக இருந்துள்ளது, ஆனால் சர்வதேச ராஜ்ஜிய அழுத்தங்கள் அதிகரித்துள்ளதால் ஏதேனும் ஒரு தரப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற அழுத்தம் இந்தியா மீது, குறிப்பாக அமெரிக்காவால் கொடுக்கப்படுகிறது.
தி நியூ ரைசிங் பவர்ஸ் இன் எ மல்டிபோலார் வேர்ல்ட் என்கிற நூலின் ஆசிரியரும் புவிசார் அரசியல் விவகார வல்லுநருமான ஸோராவார் தௌலத் சிங், புதிய உலக ஒழுங்கிற்கு இந்தியா தன்னை தயார்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
“2000களின் மத்தியில் அமெரிக்காவின் சில அரசியல் ஆலோசகர்கள் இந்தியாவுக்கான ஒரு திட்டம் வைத்திருந்தனர். அவர்கள் விரும்பியது என்னவென்றால், இந்தியாவை ரஷ்யாவிலிருந்து பிரித்து, இந்தியா–ரஷ்யா உறவை பலவீனப்படுத்துவது. அதற்குப் பதிலாக இந்தியா அமெரிக்காவை மட்டும் நம்பும் நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் ரஷ்யாவின் எழுச்சி அவர்களின் திட்டங்களை தகர்த்தது,” என தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருந்தார்.
ராஜ்ஜிய விவகார வல்லுநரான பிரவீன் சாஹ்னி தனது எக்ஸ் தளப் பதிவில், “2025-இல் இந்தியாவிற்கு மிக முக்கியமான நிகழ்வு புதினின் வருகை தான். குவாட் உச்சிமாநாட்டிற்கு டிரம்ப் இந்தியாவிற்கு வந்திருந்தால் புதின் தனது வருகையை தள்ளிவைத்திருந்திருப்பார். புதினின் வருகை இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.” என்று குறிப்பிட்டிருந்தார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட்-இல் மூத்த ஆராய்ச்சியாளராக இருக்கும் தன்வி மதன், புதினின் வருகை மூலம் ஒரு சமிக்ஞையை அனுப்ப வேண்டும் என்பது இருநாடுகளின் நோக்கம் என ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார்.
“அமெரிக்காவின் அழுத்தத்தைக் கடந்து இந்திய அரசு தனது சுதந்திரத்தைக் காட்ட விரும்பும். அதே நேரம், இந்த வருகை மூலம் மேற்குல நாடுகளுடனான இந்தியாவின் உறவு தொடர்பாக இந்தியா மீது அழுத்தம் கொடுக்கவும் ரஷ்யா விரும்பும்,” எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
“ரஷ்யா பாதுகாப்பு ஒத்துழைப்பின் மீது கவனம் செலுத்தும். அதே வேளையில் இந்தியா தனது பொருளாதார மற்றும் இதர உறவுகளை விரிவுபடுத்த முயற்சிக்கும். ரஷ்யா தனது நவீன சுகோய்-57 போர் விமானங்களை வழங்கலாம். தற்போது ரஷ்ய எண்ணெய் இறக்குமதி சரிந்துவரும் நிலையில் பாதுகாப்பு துறையில் மட்டுமே ரஷ்யா டாலர்களைப் பெற முடியும்.” என்று தெரிவித்தார் தன்வி மதன்.
அவரின் கூற்றுப்படி, “இந்தியா எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு விநியோகம் மற்றும் சுகோய்-30 மேம்பாடு தொடர்பான ஒப்பந்தத்தை எதிர்பார்க்கிறது. ஆர்க்டிக் பிராந்தியம் மற்றும் இந்தியப் பெருங்கடலில் இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கான ஒப்பந்தமும் இருக்கலாம்.”
பட மூலாதாரம், AFP via Getty Images
பாதுகாப்பு துறையைக் கடந்த உறவுகள்
யுக்ரேன் போரை இந்தியா கண்டித்ததில்லை, மறுபுறம் ரஷ்யா உடனான இந்தியாவின் வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இது மேற்கத்திய நாடுகளை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்ஸ்டிடியூட் ஆஃப் சௌத் ஏசியன் ஸ்டடீஸில் வருகைதரு பேராசிரியராக உள்ள சி ராஜ்மோகன் இந்த விவகாரம் தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் எழுதியுள்ளார்.
“அமெரிக்கா-இந்தியா கூட்டணியில் ரஷ்யா உடனான இந்தியாவின் உறவு தடையாக இருக்க ஜோ பைடன் அனுமதிக்கவில்லை. மறுபுறம் பைடனை விட கூடுதல் ரஷ்ய எதிர்ப்பு மனநிலை இல்லாதபோதிலும், ரஷ்ய எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி டிரம்ப் இந்தியா மீது 25% கூடுதல் வரிகளை விதித்தார்.” என்று குறிப்பிட்டிருந்தார் ராஜ்மோகன்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகவும் ரஷ்ய சார்பு கொண்ட அமெரிக்க அதிபராக டிரம்பைக் கருதலாம் எனக் குறிப்பிடும் அவர், “ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவை தண்டித்தபோதிலும் அமெரிக்காவிற்கு ரஷ்யாவின் ஹைட்ரோகார்பன் மற்றும் கனிமங்கள் வேண்டும் என்கிறார் டிரம்ப். டிரம்பின் அமைதி ராஜதந்திரம் என்பது ரஷ்யாவில் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக வாய்ப்புகள் மற்றும் யுக்ரேனின் கனிம வளங்களை அணுகுவதற்கான சிறப்பு அனுமதி ஆகியவற்றுடன் தொடர்புடையது என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.” என்றார்.
“யுக்ரேன் போர் மீதான இந்தியாவின் நிலைப்பாட்டால் ஐரோப்பா அசௌகரியமாக உணர்கிறது. அமெரிக்காவிற்குப் பிறகு இந்தியாவின் மிகவும் முக்கியமான கூட்டாளியாக ஐரோப்பா உள்ளது. எனினும் டிரம்ப் செய்ததைப் போல ஐரோப்பிய நாடுகள் இந்தியா மீது வரிகள் விதிக்கவில்லை. ஐரோப்பா உடனான தனது உறவுகளை ஆழப்படுத்த இந்தியா விரும்புகிறது. எனவே ஐரோப்பா மற்றும் ரஷ்யா இடையே அமைதி நிலவ வேண்டும் என இந்தியா விரும்புகிறது.” என்று தெரிவிக்கிறார் ராஜ்மோகன்.
ஐரோப்பா தற்போது இரண்டு கவலைகளைச் சந்திப்பதாக குறிப்பிடுகிறார் ராஜ்மோகன். தொடர்ந்து கூறுகையில், “தற்போதைய அமெரிக்கா தனது கூட்டாளிகளை பாதுகாப்பதை விடவும் ரஷ்யா உடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதிலே மேலும் ஆர்வம் காட்டுவதாக ஐரோப்பா பார்க்கிறது. இந்தப் போர் ஐரோப்பா மற்றும் ரஷ்யாவின் பரஸ்பர சார்பை தகர்த்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல் மற்றும் அமெரிக்காவால் கைவிடப்படலாம் என்கிற அச்சம் ஆகிய இரு கவலைகளை ஐரோப்பா சந்திக்கிறது. டிரம்ப் மற்றும் புதின் மேற்கொள்ளும் அமைதி ஒப்பந்தத்தை ஐரோப்பா விரும்பவில்லை.” என்றார்.
சீனா – ரஷ்யா உறவு
பட மூலாதாரம், AFP via Getty Images
சீனா உடனான ரஷ்யாவின் நெருங்கிய உறவுக்கு முன்பாக இந்தியா-ரஷ்யா ஒத்துழைப்பு எந்த அளவிற்குச் செல்ல முடியும் என்பதில் முன்னாள் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் ராஜ்ஜிய வல்லுநர்கள் இடையே குழப்பம் நிலவுகிறது.
“சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான ரஷ்யாவின் உறவுகளால் இந்திய-ரஷ்ய உறவுகளில் சில கட்டுப்பாடுகள் இருக்கவே செய்யும். புதினின் வருகையின்போது என்னென்ன அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன, என்ன செயல்படுத்தப்பட உள்ளது, மேற்கத்திய நாடுகள் எவ்வாறு எதிர்வினை ஆற்றுகின்றன மற்றும் யுக்ரேன் போரின் முடிவு என்னவாக இருக்கும் ஆகியவற்றை பொருத்தே எதுவும் அமையும்,” என்று குறிப்பிடுகிறார் தன்வி மதன்.
மேற்கத்திய நாடுகள் உடனான உறவுகள் தொடர்ந்து நிலைக்கும் என இந்தியா எதிர்பார்க்கலாம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். ”அதற்கான காரணங்களும் உள்ளன, ரஷ்ய அதிபர் புதினிடம் டிரம்ப் நிர்வாகமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, மேலும் இந்தியா உடனான உறவுகளை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை மேற்கத்திய கூட்டாளிகளும் புரிந்துள்ளனர்.” என்றார் அவர்.
புதினின் இந்திய வருகை, அந்த நாடு இந்தியா உடனான கூட்டணியை மதிப்பதையும் சீனாவுக்கு தான் ஜூனியர் கூட்டாளியாக விரும்பவில்லை என்பதையும் காட்டுகிறது என்கிறார் ராஜ்ஜிய விவகார வல்லுநரான பிரம்மா செல்லானி.
“இந்தியா-ரஷ்யா உறவுகள் என்பது கொந்தளிப்பான காலகட்டத்தில் எவ்வாறு நிலைத்தன்மையை பராமரிப்பது என்பதற்கான உதாரணம். இந்த உறவு பலரும் பொறாமைப்படுவதற்கான காரணமாக உள்ளது.” என்று அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கொள்கை நிலையாக இருந்து வருகிறது எனக் கூறும் அவர், “அதன் வளர்ச்சி அதில் மையமாக உள்ளது. உலகளவில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கிற நோக்கம் இந்தியாவிற்கு இல்லை. அதன் அதிகரித்து வரும் அரசியல் வலிமை என்பது அதன் அதிகரித்து வரும் நோக்கங்களின் விளைவு அல்ல. மாறாக உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் விளைவாக அது உருவாகியுள்ளது. இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கான சில முக்கிய நாடுகளின் அதிகரித்து வரும் ஆசையின் விளைவாக உள்ளது.” என்றும் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு