ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இரண்டு நாள் பயணமாக டிசம்பர் 4ஆம் தேதி இந்தியா வந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு யுக்ரேன் மீதான தாக்குதல் தொடங்கிய பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை. 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்கவில்லை.
புதின், இன்று (டிசம்பர் 5) டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்தார். இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ அவரை வரவேற்றார். அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர் மகாத்மா காந்தி நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து ஹைதராபாத் ஹவுஸ் வந்த புதினை, பிரதமர் மோதி வரவேற்றார். ஹைதராபாத் ஹவுஸில் இருவருக்கும் இடையே முக்கியமான சந்திப்பு நடைபெற்றது. பிரதமர் மோதி இந்தச் சந்திப்பை ‘வரலாற்றுச் சிறப்புமிக்கது’ என்று விவரித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, இந்தியா, ரஷ்யா இடையே, ஒத்துழைப்பு மற்றும் புலம்பெயர்தல், சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள், துருவக் கப்பல்கள் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு, உரங்கள் இறக்குமதி தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
பிரதமர் மோதி பேசியது என்ன?
ஹைதராபாத் மாளிகையில் நடந்த சந்திப்பின்போது, பிரதமர் மோதி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை வெகுவாகப் பாராட்டினார்.
இந்தியா மற்றும் ரஷ்யாவின் 23வது உச்சி மாநாட்டிற்கு அதிபர் புதினை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் இந்தியாவுடனான ரஷ்யாவின் நட்புக்கு, அதிபர் புதினுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோதி தெரிவித்தார்.
“அதிபர் புதினின் வருகை, 25 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட அடித்தளத்தின் மீது நமது கூட்டாண்மை வலுப்பெற்று வரும் நேரத்தில் நடக்கிறது. இந்தப் பயணம் இருதரப்பு வணிகத்திற்கு ஒரு புதிய திசையை அளிக்கும். இரு நாடுகளும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) விரைவாக முடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன,” என்று பிரதமர் மோதி தெரிவித்தார்.
மேலும், “யுக்ரேன் விவகாரத்தில் இந்தியா ஓர் அமைதியான தீர்வுக்கு ஆதரவு அளித்துள்ளது. யுக்ரேன் பிரச்னைக்கு அமைதியான, நீண்ட கால அடிப்படையிலான தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது. இந்தத் திசையில்தான் இந்தியா எப்போதும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது, தொடர்ந்தும் அவ்வாறே செய்யும்” என்று தெரிவித்தார்.
அதேபோல, “பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை ரஷ்யா எப்போதும் ஆதரித்துள்ளது. இந்தியா-ரஷ்யா நட்பு புதிய சவால்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது” என்றும் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
‘ரஷ்யா இந்தியாவுக்கு தொடர்ந்து எரிபொருள் வழங்கும்’ – புதின்
பிரதமர் மோதியை தொடர்ந்து பேசிய ரஷ்ய அதிபர் புதின், தனது நாடு எந்த இடையூறுமின்றி இந்தியாவுக்கு எரிபொருள் விநியோகத்தைத் தொடரும் என்று கூறினார்.
ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா மீது அமெரிக்கா கூடுதலாக 25 சதவிகிதம் வரி விதித்துள்ளது. இது இந்தியாவின் மீதான அமெரிக்காவின் வரியை 50 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்க வேண்டாம் என்று இந்தியா மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நேரத்தில், ரஷ்ய அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேற்கொண்டு பேசிய அதிபர் புதின், “நானும் இந்திய பிரதமர் மோதியும் தொலைபேசியில் பல முக்கியமான விஷயங்களைப் பற்றி தொடர்ந்து விவாதித்து வருகிறோம். ரஷ்யா, இந்தியா இடையிலான பரஸ்பர உறவுகள் மிகவும் வலுவாக உள்ளன. பொருளாதார பிரச்னைகள் உள்படப் பல துறைகளில் எங்கள் பரஸ்பர உறவுகள் வலுவடைந்து வருகின்றன” என்று புதின் கூறினார்.
“எங்கள் வர்த்தகம் ரூபிள் (ரஷ்ய நாணயம்) மற்றும் ரூபாயில் மேற்கொள்ளப்படுகிறது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு நாங்கள் ஒத்துழைப்போம். இரு நாடுகளுக்கான தளவாட வழித்தடங்களை உருவாக்குவது குறித்தும் விவாதித்து வருகிறோம். பிரதமர் நரேந்திர மோதியின் மனதுக்கு நெருக்கமான ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கும் உதவத் தயாராக உள்ளோம்” என்று கூறினார்.
அதோடு, “வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்பம் குறித்த பேச்சுவார்த்தைகளை நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம். ரஷ்யாவும் இந்திய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பும் இணைந்து செயல்படுகின்றன” என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை உருவாக்க உதவும் ரஷ்யாவின் ‘முதன்மைத் திட்டம்’ பற்றியும் புதின் தனது உரையில் குறிப்பிட்டார்.
“ரஷ்யா டுடே (RT) செய்தி முகமையின் இந்தியப் பணியகம் இன்று தொடங்கப்பட்டது. இந்திய மக்கள் ரஷ்யா குறித்து மேலும் அறிந்து கொள்ள இது வாய்ப்பளிக்கும். ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் அறிய உதவும் வகையில் ‘பாரபட்சமற்ற, உண்மையான தகவல்களை’ இந்தியாவில் ‘ரஷ்யா டுடே’ ஒளிபரப்பும்” என்று புதின் கூறினார்.
வெளியுறவுக் கொள்கையில் இந்தியா-ரஷ்யா ஒத்துழைப்பைக் குறிப்பிட்ட அவர், இந்தியாவும் ரஷ்யாவும், பிரிக்ஸ் நாடுகளுடன் சேர்ந்து, ‘நியாயமான’ மற்றும் ‘பன்முகத்தன்மை கொண்ட உலகத்தை’ நோக்கிச் செயல்படுகின்றன என்றும் புதின் கூறினார்.
பிரிக்ஸ் (BRICS) என்பது பல பெரிய வளரும் நாடுகளின் குழுவாகும். ஆரம்பத்தில், இதில் இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் ஆகியவை உறுப்பினர்களாக இருந்தன. பின்னர் தென்னாப்பிரிக்காவும் இணைந்தது.
உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ‘ஒருதலைபட்ச ஆதிக்கத்தை’ எதிர்க்கவும், வளரும் நாடுகளின் குரலை வலுப்படுத்தவும் இந்த குழு 2006இல் உருவாக்கப்பட்டது.