பட மூலாதாரம், Getty Images
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இந்தியப் பயணத்தின் முடிவில், இரு நாடுகளும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன.
இந்த அறிக்கை 70 அம்சங்களை கொண்டது. இரு நாடுகளும் பொருளாதார கூட்டுறவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகின்றன என்பதை அந்த அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.
வர்த்தகம், அணுசக்தி, எரிபொருள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், திறமையான தொழிலாளர்களை அனுப்புதல் மற்றும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேசப்பட்டன.
ஆனால் அது குறித்த லட்சியம் மட்டும் போதுமா? முக்கிய முடிவுகளில் இரு நாடுகளும் என்னென்ன சவால்களை எதிர்கொள்ளக்கூடும்?
பட மூலாதாரம், AFP via Getty Images
வணிகத்துக்கு முன்னுரிமை
கூட்டு அறிக்கையில் வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது .
இதில் பல அம்சங்கள் அடங்கும். இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கு ஏற்றுமதியை அதிகரித்தல், வர்த்தகத்திற்கான வரிகள் மற்றும் பிற தடைகளை குறைத்தல், முக்கியமான கனிமங்கள் தொடர்பாக ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் அந்தந்த நாடுகளின் பணத்தில் வர்த்தகம் செய்தல் போன்றவை குறித்து இதில் பேசப்பட்டுள்ளன.
“இந்தப் பயணத்தின் முக்கிய கவனம் பொருளாதாரப் பிரச்னைகள் மீது இருந்தது. தொழில்துறை மற்றும் முதலீட்டு கூட்டணியை வலுப்படுத்துவதே எங்கள் நோக்கமாக இருந்தது. இன்று, உலகில் விநியோகச் சங்கிலிகள் மற்றும் வர்த்தக உறவுகள் அழுத்தத்தில் உள்ளன. முதலீடு நிச்சயமற்றதாகி வருகிறது. இதுபோன்ற நேரத்தில், இரு நாடுகளும் இந்தப் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதே ஒரு செய்தியாகும்” என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
திறமையான தொழிலாளர்களை அனுப்புவதை எளிதாக்கும் ஒப்பந்தங்களை இரு நாடுகளின் தலைவர்களும் பாராட்டினர்.
2030 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தில் 100 பில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த வர்த்தகம் 2024-25 ஆம் ஆண்டில் 68.7 பில்லியன் டாலர் என்ற அளவில் உயர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
“கடந்த ஆண்டு 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் இலக்கை நிர்ணயித்திருந்தோம், ஆனால் தற்போதைய சாத்தியக்கூறுகளைப் பார்க்கும்போது, நாம் அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதில்லை” என்று பிரதமர் மோதி வெள்ளிக்கிழமையன்று கூறினார்.
‘ரஷ்யா ரெடி ஒர்க் போர்ஸை’ இந்தியா தயாரிக்க விரும்புவதாகவும் மோதி தெரிவித்தார்.
இருப்பினும், சில நிபுணர்கள் இதுகுறித்து சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
“100 பில்லியன் டாலர் இலக்கு கடினம்தான், ஆனால் சாத்தியமற்றது அல்ல. இரு நாடுகளும் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்” என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த முனைவர் அமிதாப் சிங் பிபிசி இந்தியிடம் கூறினார்.
“எண்ணெய் தற்போது வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவிற்கு எண்ணெய் விற்பனையைத் தொடர வேண்டும் என்று புதின் விரும்புகிறார். ஆனால் அமெரிக்கத் தடைகள் இந்தியா எண்ணெய் வாங்குவதை கடினமாக்குகின்றன. நிறுவனங்கள் தடைகளால் பாதிக்கப்படலாம் என்று அஞ்சுகின்றன. இச்சிக்கல் தீர்க்கப்படும் வரை, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெயை எப்படி வாங்கும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேடிவ் அமைப்பின் தரவுககள் மூலம் வர்த்தகத்தில் எண்ணெய் கொண்டிருக்கக்கூடிய தாக்கத்தின் மதிப்பை அளவிட முடியும். 2024 ஆம் ஆண்டில், இந்தியா ரஷ்யாவிலிருந்து 52.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணெயை இறக்குமதி செய்தது.
எண்ணெயின் முக்கியத்துவத்தைக் குறைக்க, இந்தியாவும் ரஷ்யாவும் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உருவாக்க பணியாற்றுகின்றன. இந்த ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் யூரேஷியன் பொருளாதார ஒன்றிய நாடுகளும் சேர்க்கப்படுகின்றன. இது எண்ணெய் அல்லாத பிற பொருட்களின் பரிமாற்றத்தை எளிதாக்கும்.
பட மூலாதாரம், AFP via Getty Images
பாதுகாப்பு மற்றும் உத்தி சார் உறவுகள்
பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் நடக்கவில்லை. கூட்டு உற்பத்தி, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“பிரதமரும் அதிபரும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் வலிமை மற்றும் நீண்ட வரலாற்றைப் பற்றி விவாதித்தனர். ரஷ்யாவும் ‘மேக் இன் இந்தியா’ பாதுகாப்புத் திட்டங்களில் பங்கேற்கிறது” என்று மிஸ்ரி கூறினார் .
இருப்பினும், எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பின் விநியோகம் தாமதமாகியுள்ளது.
இந்த ஆண்டு ரஷ்யாவிடமிருந்து இந்தியா ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலைப் பெறவிருந்தது, ஆனால் இப்போது அது 2028-ஆம் ஆண்டில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, புதிய ஆர்டர்களை மேற்கொள்வதற்கு முன், தற்போதைய ஆர்டர்கள் வரும் வரை காத்திருக்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை. டிசம்பர் 4-ஆம் தேதி இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பும் இந்த விவகாரத்தில் எந்தத் தெளிவையும் அளிக்கவில்லை.
ஆனால் அந்த உறவு இனி வாங்குவதும் விற்பதும் பற்றியது மட்டுமல்ல, மாறாக கூட்டு உற்பத்தி பற்றியதும் கூட என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.
“இந்தியாவின் பாதுகாப்பு விநியோகச் சங்கிலியில் தொடர்ந்து நீடித்திருக்க, கூட்டு உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதை ரஷ்யா இப்போது உணர்ந்துள்ளது” என்று பிரமோஸ் ஏரோஸ்பேஸின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சுதிர் குமார் மிஸ்ரா பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
நிபுணர்கள் கூறுவது என்ன?
ஹட்சன் நிறுவனத்தைச் சேர்ந்த அபர்ணா பாண்டே கூறுகையில், “என்னைப் பொறுத்தவரை, இதில் உள்ள மிகப்பெரிய செய்தி குறியீட்டு ரீதியானது. புதினின் டெல்லி வருகை, இந்த உறவை அவர் எவ்வளவு மதிக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அமெரிக்காவைப் போல, ஆட்சிமாற்றத்தால் கொள்கை மாறக்கூடிய சூழல் இல்லை. ரஷ்யா நிலைத்தன்மையை வழங்குகிறது” என்றார்.
“அமெரிக்காவில் இந்தப் பயணம் குறித்து இன்னும் அதிக விவாதம் நடக்கவில்லை, ஆனால் வல்லுநர்கள் அதை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். கூட்டு அறிக்கையில் அமெரிக்காவை வருத்தப்படுத்தும் எதுவும் இல்லை. அதாவது, ஒரு பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் அல்லது எண்ணெய் வாங்குவதற்கான வாக்குறுதி போன்றவை இல்லை. அமெரிக்கா ரஷ்யாவுடன் பேச முடிந்தால், இந்தியாவும் பேச முடியும்” என்றும் அவர் விளக்கினார்.
“இந்தியாவையும் ரஷ்யாவையும் நெருக்கமாகக் கொண்டு வந்ததற்காக டொனால்ட் டிரம்ப் நோபல் பரிசு பெறத் தகுதியானவர்” என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் .
“ரஷ்யாவின் பார்வையில், இந்த வருகை மிகவும் நேர்மறையானது, மேலும் உலகில் வேறு எங்கும் பெற முடியாத மரியாதையை இந்தியா புதினுக்கு வழங்கியுள்ளது. டொனால்ட் டிரம்ப் நோபல் பரிசைப் பெற வேண்டும் என்று கூட நான் கூறுவேன். ஏனெனில் அவரால் தான் இந்தியாவும் ரஷ்யாவும் ஒன்றுக்கொன்று நெருக்கமாகிவிட்டன…” என்று அவர் கூறியிருந்தார்.
மேலும் “இந்தியாவில் எட்டப்பட்ட பல ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வுகள் குறித்து கொண்டாட்டங்கள் இருக்கலாம். ஆனால் கேள்வி என்னவென்றால், இவற்றில் எத்தனை ஒப்பந்தங்கள் உண்மையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்? எத்தனை முடிவுகள் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை? மேலும் எத்தனை முடிவுகள், அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோதியையும் இந்தியாவையும் நடத்தும் விதத்தால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக எடுக்கப்பட்டன?” என்றும் அவர் குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு