பட மூலாதாரம், Getty Images
ரஷ்யாவிடமிருந்து இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்க கருவூலம் 30 நாள் விதிவிலக்கு அளித்திருப்பதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் நடைபெற்றுவரும் போர் காரணமாக, எண்ணெய் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அவருடைய இந்த கருத்து, இரு நாடுகளுக்கு இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பு குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.
ரஷ்யாவிடமிருந்து ஏப்ரல் 4-ஆம் தேதி வரை இந்தியா கச்சா எண்ணெயை வாங்குவதற்கு “அனுமதித்து” அமெரிக்கா எப்படி நிபந்தனைகளை விதிக்க முடியும் என எதிர்க்கட்சிகள் தீவிரமான கேள்வி எழுப்பப்படுகின்றன. ஆனால், இதை முடிவு செய்வதற்கு அமெரிக்கா “யார்” என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தத்தின்போது, அதிபர் டொனால்ட் டிரம்பால் விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்து அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க எரிசக்தி அமைச்சர் கிறிஸ் ரைட் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பின்னால் உள்ள உத்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு வெள்ளிக்கிழமை பேசிய அவர், இரானுடனான அதிகரித்து வரும் மோதலால் கச்சா எண்ணெய் சந்தை மீது ஏற்படும் அழுத்தத்தைக் குறைப்பதை நோக்கமாக கொண்ட தற்காலிக நடவடிக்கையே இது என்றார்.
ஏபிசி நியூஸிடம் பேசிய அவர், ரஷ்யா மீதான அமெரிக்க கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் இதுவல்ல என்றும், குறுகிய கால ஏற்பாடு மட்டுமே என்றும், ‘நடைமுறை சார்ந்த அணுகுமுறை’ என்றும் அவர் கூறினார்.
வேறு என்னென்ன கேள்விகள் எழுப்பப்பட்டன?
பிரபல புவிசார் உத்தி வகுப்பாளரும், பேராசிரியருமான பிராமா செல்லானி இதுகுறித்து சமூக ஊடக பக்கத்தில், “விளையாட்டின் (வர்த்தக ஒப்பந்தம்) ரகசியத்தை இந்த விலக்கு வெளிப்படுத்துகிறது,” என பதிவிட்டுள்ளார்.
“ரஷ்யாவின் எண்ணெயிலிருந்து இந்தியாவை விலக்கி வைக்க ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை வடிவமைத்த பின்னர், இந்த ஒப்பந்தத்தில் வெற்றி பெற்றதாக டிரம்ப் நிர்வாகம் கூறியதிலிருந்து, மோதி அரசாங்கம் வெளிப்படையாக மௌனமாகவே இருந்து வருகிறது. இப்போது இந்த விஷயம் வெளிப்படையாகிவிட்டது.” என அவர் தெரிவித்தார்.
ஆனால், மத்தியில் ஆளும் பாஜகவின் செய்தித் தொடர்பாளரான கோபால்கிருஷ்ண அகர்வால் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், “ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நாங்கள் நிறுத்தவில்லை. இது அவர்களின் (அமெரிக்காவின்) கருத்து. இது ஒருதலைப்பட்சமான கருத்து. எங்கிருந்து மலிவான விலையில் எண்ணெய் கிடைக்கிறதோ அங்கெல்லாம் வாங்குவோம் என்பதே எங்கள் நிலைப்பாடு.” என தெரிவித்தார்.
“(அமெரிக்க கருவூலத்துறை செயலாளர்) கருத்து குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்கவில்லை.” என அவர் தெரிவித்தார்.
கேஆர்டி டாடா தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தின் (NIAS) கௌரவ பேராசிரியரான நரேந்திர பானி, இந்த முழு விவகாரத்தையும் வேறு கோணத்தில் பார்க்கிறார்.
“பெரும்பாலான இந்தியர்களுக்கு மிகவும் எரிச்சலூட்டும் விஷயம் என்னவென்றால், நாம் என்ன செய்ய வேண்டும், என்ன வாங்க வேண்டும், எப்போது வாங்க வேண்டும் என்பதை வேறு யாரும் கட்டளையிட நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் அதை நாங்கள் ஒருபோதும் எதிர்கொண்டதில்லை.” என பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் அவர் தெரிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணை வழியே சரக்கு போக்குவரத்தை பாதித்த போர் காரணமாக, இந்தியாவுக்கு ரஷ்ய கச்சா எண்ணெயின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, சுத்திகரித்து, பல நாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றன.
இந்த எதிர்வினைக்கு என்ன காரணம்?
பட மூலாதாரம், @SecScottBessent
“அதிபர் டிரம்பின் எரிசக்தி கொள்கை எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை இதுவரை இல்லாத அளவுக்கு உச்ச நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. எண்ணெய் உலக சந்தையை சென்றடைவதை உறுதி செய்ய இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு கருவூலத் துறை தற்காலிகமாக 30 நாள் விலக்கு அளிக்கிறது” என்று அமெரிக்க கருவூல செயலாளர் பெசன்ட் தனது பதிவில் தெரிவித்தார்.
“ஆழமாக ஆராய்ந்து எடுக்கப்பட்ட குறுகிய கால நடவடிக்கை ரஷ்ய அரசாங்கத்துக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மையை வழங்காது, ஏனெனில், இது கடலில் ஏற்கெனவே சிக்கித் தவிக்கும் எண்ணெயை வாங்கவும் விற்கவும் மட்டுமே அனுமதிக்கிறது.” என தெரிவித்தார்.
“இந்தியா அமெரிக்காவின் ஒரு முக்கியமான கூட்டாளியாகும். அமெரிக்காவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா அதிகரிக்கும் என்று நாங்கள் முழுமையாக எதிர்பார்க்கிறோம்,” என்று பெசன்ட் கூறினார். “இந்த தற்காலிக நடவடிக்கை, உலகளாவிய எரிசக்தி அமைப்பை பணயமாக வைத்திருக்க இரானின் முயற்சியால் உருவாக்கப்பட்ட அழுத்தத்தைக் குறைக்கும்.”
அவரது சமூக ஊடக பதிவுக்குப் பிறகு, அமெரிக்க கருவூலத் துறை, “மார்ச் 5, 2026 வரை கப்பல்களில் ஏற்றப்படும் ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் அங்கீகாரம் அளித்தல்” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
கச்சா எண்ணெய் அல்லது பெட்ரோலியப் பொருட்களை இந்தியாவில் உள்ள ஒரு துறைமுகத்தில் வழங்க வேண்டும் என்றும், அதை வாங்குபவர் இந்திய சட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனமாக இருக்க வேண்டும் என்றும், இது தவிர வேறு எந்த கொள்முதல் மற்றும் விற்பனையும் தடை செய்யப்படும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் உத்தரவுகளை பின்பற்றுவதா?
பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, வருவாயை அதிகரிக்கவும், உள்நாட்டு தொழில்களைப் பாதுகாக்கவும், இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், பிற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்யவும் அமெரிக்கா வரிகளைப் பயன்படுத்தியது.
அந்த நேரத்தில், 2% அமெரிக்க வரிகள் மிகவும் குறைவாகக் கருதப்பட்டன. ஆனால் கடந்த ஒரு வருடமாக, இந்தியா மற்றும் பிற நாடுகளுடனான அமெரிக்கா விதிக்கும் வரி, வர்த்தகத்திற்கு அப்பாற்பட்ட ஓர் ஆயுதமாக மாறியுள்ளது.
மூத்த அரசியல் விமர்சகர் ஆனந்த் சஹாய், அமெரிக்க கருவூல செயலாளரின் கருத்தை இந்தியா “அமெரிக்காவுக்கு இணங்க நடந்துகொள்ள” கட்டாயப்படுத்தும் ஒரு தெளிவான முயற்சியாகக் கருதுகிறார்
பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், “இந்தியா இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருந்த நேரத்தில், அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்பின் உத்தரவை ரத்து செய்தது. இந்திய அரசாங்கம் அமெரிக்காவுடனான அதன் உறவின் தன்மையை மறைக்க முயன்றதால் அமெரிக்கர்கள் இந்தியாவை சங்கடப்படுத்தினர்.” என தெரிவித்தார்.
“அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களை இந்தியா வாங்கும் என்பதும் இடைக்கால ஒப்பந்தத்தில் அடங்கும். அது மட்டுமின்றி, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் அமெரிக்காவுடன் ஒத்துப்போக வேண்டும் என்றும் அவர் (டிரம்ப்) விரும்பினார்.” என்றார்.
“அதன் விளைவாக, இந்த ஒப்பந்தம் இந்தியாவை ஒரு புதிய காலனித்துவ சக்தியின் பகுதி காலனியாக மாற்றும். நாம் 1947க்கு முந்தைய சகாப்தத்திற்குத் திரும்பிச் செல்கிறோம்.”
பிப்ரவரி 2025இல், அதிபர் டிரம்பும் பிரதமர் நரேந்திரமோதியும் 2030 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இரட்டிப்பாக்க ஒப்புக்கொண்டனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், இந்தியப் பொருட்களின் இறக்குமதிக்கு அமெரிக்கா 26 சதவிகித வரி விதித்தது, இது இந்திய ஏற்றுமதியைப் பாதித்தது.
பின்னர், அமெரிக்கா 16 சதவிகித பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க முடிவு செய்தது.
பின்னர், ஜூலை காலக்கெடுவை பூர்த்தி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டன. அனைத்து இறக்குமதிகளுக்கும் 25 சதவிகித வரியை விதிக்க அமெரிக்கா முடிவு செய்தது.
சுருக்கமாகச் சொன்னால், அது இந்தியாவின் ஏற்றுமதியை மேலும் கடினமாக்கியது. ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்கா அதனை இரட்டிப்பாக்கி 50 சதவிகிதமாக உயர்த்தியது.
இதற்கிடையில், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன, இந்த ஆண்டு பிப்ரவரியில், அமெரிக்கா வரியை 18 சதவிகிதமாகக் குறைக்கும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
இருப்பினும், ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்ற குறிப்பிடத்தக்க நிபந்தனையை அதிபர் டிரம்ப், பின்னர் சேர்த்தார். தங்களின் கச்சா எண்ணெயை வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருவாயை யுக்ரேன் மோதலுக்கு நிதியளிக்க ரஷ்யா பயன்படுத்துகிறது என்று அவர் வாதிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
விலக்கு என்பது என்ன?
பேராசிரியர் செலானி தன்னுடைய பதிவில், “இந்த விலக்கு என்பது ஒரு தடைக்காலத்தை விலக்குவதாகும். சிறந்த விலையை வழங்கும் எந்தவொரு நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா இன்னும் சுதந்திரமாக இருந்தால், ரஷ்ய எண்ணெயை வாங்க அமெரிக்காவிடமிருந்து 30 நாள் அனுமதி தேவையில்லை.” என்றார்.
“விலக்குகளைக் கோருவதன் மூலம், இந்தியா-அமெரிக்கா இடையே உருவாக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் மூலம் கட்டமைக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை மோதி அரசாங்கம் மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறது. அமெரிக்க கருவூலச் செயலாளர் கூறியது போல், அமெரிக்க எண்ணெய் கொள்முதலை இந்தியா அதிகரிக்கும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது.”
மேலும் அவர், “இரானுக்கு எதிராக அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணியில் இந்தியாவை மோதி அரசாங்கம் நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது. ஆனால், விசித்திரமாக, அமெரிக்க ராணுவ நடவடிக்கையால் உருவாக்கப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட, ரஷ்யாவின் எண்ணெயை வாங்க இந்தியாவுக்கு இப்போது அமெரிக்காவின் ஒப்புதல் தேவை” என்று கூறினார்.
வரிகள் தொடர்பான போராட்டம் 1947க்கு முந்தைய சகாப்தத்தைப் போன்றது என்ற ஆனந்த் சஹாயின் கூற்றை பேராசிரியர் நரேந்திர பானி ஒப்புக்கொள்கிறார்.
“ஆனால் ‘விலக்குகள்’ கொண்டாடப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. உண்மையான முடிவெடுப்பவர்கள் அமெரிக்கர்கள் அல்ல, அது இரான்,” என்று அவர் கூறினார்.
“அவர்கள் இந்தியாவிடம் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர். ஆனால், இந்தியா ஓடிப்போய் இஸ்ரேலின் நண்பர்கள் என்று பாசாங்கு செய்தது. இரானுக்கு (ஆயதுல்லா அலி காமனெயி மரணத்திற்கு) இந்தியா இரங்கல் தெரிவிக்க தாமதமானது.” என்று அவர் கூறினார்.
“பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சர் டெல்லியில் இரானின் துணை வெளியுறவு அமைச்சரைச் சந்திக்கிறார். இரான் ஹோர்முஸ் நீரிணையத் தடுக்க முடிவு செய்தால், நாம் நம்பியிருக்கும் எண்ணெய் இந்தியாவுக்கு வராது என்பது தெளிவாகிறது.”
இது எண்ணெய் உற்பத்தி பற்றிய கேள்வி மட்டுமல்ல என்று அவர் கூறினார்.
“நம்முடைய ஸ்கூட்டர்களையோ அல்லது கார்களையோ வெளியே எடுக்க முடியாவிட்டால் மட்டுமே இந்திய மக்கள் எதிர்வினையாற்ற ஒரு காரணம் இருக்கிறது. இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பது தவறவிடப்படுகிறது. இது அமெரிக்கா, இஸ்ரேல் அல்லது சில ஐரோப்பிய நாடுகளைப் பற்றியது மட்டுமல்ல. அந்தப் பட்டியலில் ‘அவர்களை ஆதரிக்கும்’ நாடுகளும் அடங்கும்.”
அமெரிக்காவின் நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் என்ன நடக்கும்?
பட மூலாதாரம், Getty Images
“இதுவரை கூறப்படாதது போல, இந்தியா அதை நிராகரித்தால் அது சவாலானதாக இருக்கும். இருப்பினும், அவ்வாறு செய்தால், காலனித்துவ அதிகாரத்திலிருந்து இந்தியாவின் அசல் சுதந்திர உணர்வு அதன் சர்வதேச மற்றும் உள்நாட்டுக் கொள்கைகள் மீண்டும் நிலைநிறுத்தப்படலாம். இது உண்மையிலேயே ஒரு நன்மை பயக்கும் நடவடிக்கையாக இருக்கும்.” என்று அவர் கூறுகிறார்.
இருப்பினும், பேராசிரியர் நரேந்திர பானிக்கு வேறுபட்ட கருத்து உள்ளது. “இந்தியா இதை மறுக்க வேண்டும். ஆனால் அதிபர் டிரம்ப் உங்களை அவமானப்படுத்த முயற்சிக்கிறார், நீங்கள் அவமானப்படுத்தப்படவில்லை என்று பாசாங்கு செய்கிறீர்கள். இது ஏன் நடக்கிறது? யாருக்கும் தெரியாது” என்று அவர் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு