பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி
-
ஆகஸ்ட் மாதத்தில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரிகளை விதித்தது.
புதன்கிழமை, “ரஷ்ய எண்ணெய் வாங்குவதை விரைவில் நிறுத்துவதாக” இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
அடுத்த நாள், ரஷ்யா எச்சரிக்கையுடன் பதிலளித்தது. இந்தியாவோ டிரம்ப் கூறிய கருத்துகளில் இருந்து விலகி இருந்தது.
டெல்லியில் உள்ள ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், “ரஷ்ய எண்ணெய், இந்திய பொருளாதாரத்துக்கும் மக்களின் நலனுக்கும் பயனளிக்கிறது” என்றார்.
இந்திய அரசு, “நிலையற்ற எரிசக்தி சூழலில் இந்திய நுகர்வோரின் நலன்களே இறக்குமதிக் கொள்கையை வழி நடத்துகின்றன” என்றது.
பின்னர், இந்திய அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர், மோதிக்கும் டிரம்புக்கும் இடையே “நேற்று எந்த உரையாடலும் நடந்ததாகத் தெரியவில்லை” தெரிவித்தார்.
ரஷ்யா என்ற நீண்டகால கூட்டாளிக்கும், அமெரிக்காவின் அழுத்தத்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டு, இந்தியாவின் எரிசக்திக் கொள்கை, நுட்பமான சமநிலையைப் பேண முயற்சிக்கிறது.
இந்த சூழலில், ரஷ்ய எண்ணெய் இந்திய பொருளாதாரத்திற்கு எவ்வளவு முக்கியம் என்ற கேள்வி எழுகிறது.
மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளர்
பட மூலாதாரம், Getty Images
உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, 2024-ஆம்ஆண்டு ரஷ்யாவிடமிருந்து 52.7 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெயை வாங்கியது. இது மொத்த எண்ணெய் செலவில் 37% ஆக உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக இராக், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் , நைஜீரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி கலவை இன்றைய வடிவத்தைப் பெற்றது எப்படி?
ரஷ்ய இறக்குமதி அதிகரிப்பதற்கு முன்பு, 2021-22-ல் இந்தியாவுக்கு அதிக அளவில் எண்ணெய் விநியோகம் செய்யும் முதல் 10 நாடுகளாக, ரஷ்யா, இராக், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, பிரேசில், குவைத், மெக்சிகோ, நைஜீரியா, ஓமன் ஆகியவை இருந்தன.
மற்ற 31 நாடுகள் சிறிய அளவிலான, விலை அடிப்படையிலான ஒப்பந்தங்களைக் கொண்டிருந்தன.
இந்தியா முழுமையாக ரஷ்ய எண்ணெயை மட்டுமே நம்பி இருக்கிறது எனும் கருத்து தவறானது. உண்மையில், இந்தியா அமெரிக்காவிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவு எண்ணெய் இறக்குமதி செய்கிறது.
2024-ஆம் ஆண்டில், இந்தியா 7.7 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க பெட்ரோலிய பொருட்களை வாங்கியது. இதில் 4.8 பில்லியன் மதிப்பிலான டாலர் கச்சா எண்ணெயும் அடங்கும்.
இருப்பினும், இந்தியாவுக்கு அமெரிக்காவுடன் 3.2 பில்லியன் டாலர் அளவிலான பெட்ரோலிய வர்த்தக பற்றாக்குறை இருந்தது என, டெல்லியை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், AFP via Getty Images
இரண்டு மாற்றம்
2018 -19 மற்றும் 2021–22- க்கு இடையில், இந்தியா நம்பியிருந்த எண்ணெய் இறக்குமதிகளில் ஒரு பெரிய மாற்றம் நடந்தது.
இரான் மற்றும் வெனிசுலாவிலிருந்து 17% இறக்குமதி ( சுமார் 41 மில்லியன் டன்) படிப்படியாக நிறுத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை இராக், செளதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பாரம்பரிய விநியோகஸ்தர்கள் நிரப்பின என்கிறது டெல்லியை தளமாகக் கொண்ட கொள்கை ஆராய்ச்சி மையத்தின் (Centre for Policy Research) பார்த்தா முகோபாத்யாய்வின் ஆய்வு.
இரானும் வெனிசுலாவும் கடுமையான அமெரிக்க தடைகளுக்கு உட்பட்டதால், அவற்றிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது இந்தியாவுக்கு கடினமாகிவிட்டது.
இரண்டாவது பெரிய மாற்றம் யுக்ரேன் போருக்குப் பிறகு நிகழ்ந்தது.
2021–22ஆம் ஆண்டில், வெறும் 4 மில்லியன் டன்னாக மட்டுமே இருந்த ரஷ்ய எண்ணெய் இறக்குமதி, 2024–25ஆம் ஆண்டில் 87 மில்லியன் டன்களுக்கு மேல் உயர்ந்தது. மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகளுக்குப் பிறகு, ரஷ்யா வழங்கிய மிகப்பெரிய தள்ளுபடிகளே இதற்கான முக்கிய காரணம். இது இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஏற்ற வகையில் இருந்தது.
பட மூலாதாரம், Getty Images
2021–22க்குப் பிறகு, ரஷ்ய எண்ணெயில் 2022–23ல் சராசரியாக 14.1% தள்ளுபடியையும், 2023–24ல் 10.4% தள்ளுபடியையும் இந்தியா பெற்றது. இதன் மூலம், இந்தியா ஆண்டுக்கு சுமார் 5 பில்லியன் டாலர் அதாவது, தனது கச்சா எண்ணெய் இறக்குமதி செலவில் 3–4% அளவுக்கு மிச்சப்படுத்த முடிந்தது.
அதே நேரத்தில், வளைகுடா நாடுகளான இராக், செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றின் சந்தைப் பங்கு சுமார் 11 சதவீதம் குறைந்தது. இருப்பினும், இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதி 196 மில்லியனிலிருந்து 244 மில்லியன் டன்களுக்கு உயர்ந்ததால், அந்த நாடுகள் விநியோகிக்கும் அளவு குறையவில்லை.
இந்த மாற்றத்தின் தாக்கம் மற்ற நாடுகளில் தெளிவாகக் காணப்பட்டது. அமெரிக்கா, பிரேசில், குவைத், மெக்சிகோ, நைஜீரியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி பாதியாகக் குறைந்தது
மேலும், சிறிய அளவிலான ஒப்பந்தங்களைக் கொண்டிருந்த “மீதமுள்ள” 31 நாடுகளும் சரிவைச் சந்தித்தன.
ஆனால் சில விதிவிலக்குகளும் இருந்தன. அங்கோலா மற்றும் தென் கொரியா போன்ற சில நாடுகள் சிறிய உயர்வைக் கண்டன.
வெனிசுலாவும் சிறிய அளவில் மீண்டும் இறக்குமதியில் இணைந்தது.
“இதனால், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி அதிகரித்ததோடு, பிற நாடுகளிலிருந்து இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது. சில நாடுகள் இந்தியாவுக்கான தங்கள் எண்ணெய் ஏற்றுமதியில் மிகப் பெரிய சரிவைச் சந்தித்தன,” என்கிறார் பார்த்தா முகோபாத்யாய்.
சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், ரஷ்யாவின் எழுச்சி, கிட்டத்தட்ட மற்ற எல்லா நாடுகளின் இடத்தையும் வென்றது.
பட மூலாதாரம், Getty Images
சேமிப்பு குறைவே, ஆனால் …
இந்தியாவைப் பொறுத்தவரை, தள்ளுபடியில் வாங்கப்படும் ரஷ்ய எண்ணெயிலிருந்து குறைந்த அளவிலான பணத்தையே சேமிக்கிறது
இந்தியா 900 பில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணெய் இறக்குமதி செலவில் 1%க்கும் குறைவான பணத்தையே சேமிக்கிறது.இருந்தாலும் அந்த 9 பில்லியன் டாலர் தொகை மிகப் பெரியது.
“இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்தினால், உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால், அந்தச் சேமிப்புகள் அழிந்து, இறக்குமதி செலவுகளும் மேலும் அதிகரிக்கும். அது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். தள்ளுபடியில் ரஷ்ய எண்ணெய் வாங்கியதால், இந்தியா தனது பொருளாதாரத்தைப் பாதுகாத்ததுடன், உலகளாவிய எண்ணெய் விலைகளையும் நிலைப்படுத்த உதவியுள்ளது,” என்கிறார் பார்த்தா முகோபாத்யாய்.
இந்த ஆண்டு எண்ணெய் விலை 27% குறைந்து, ஒரு பீப்பாய்க்கு 78 டாலரில் இருந்து 59 டாலராக சரிந்துள்ளது.
இந்த விலை மாற்றம், இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி நிறுத்தியிருந்தால் ஏற்படும் மாற்றத்தைவிட மிக அதிகமானது.
மேலும், உலக சந்தையில் உள்ள தேவையின்மை காரணமாக, ரஷ்யா இந்தியாவுக்கு வழங்கும் பங்கை (உலக உற்பத்தியின் 4–5%) பிற நாடுகள் எளிதாக ஈடுசெய்ய முடியும் என்று அவர் குறிப்பிடுகிறார்.
முன்னாள் இந்திய வர்த்தக அதிகாரியும், க்ளோபல் ட்ரேட் ரிசர்ச் இனிஷியேடிவ் (Global Trade Research Initiative – GTRI) அமைப்பின் தலைவருமான அஜய் ஸ்ரீவஸ்தவா, ரஷ்யாவில் இருந்து இந்தியா பெறும் எண்ணெய்,”நிலையான விலையும், சுத்திகரிப்பு செய்வதற்கு ஏற்ற வகையிலும்” இருப்பதாகக் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
“பெரும்பாலான இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள், ரஷ்யாவின் ‘யூரல்ஸ் கலவை’ எனப்படும் நடுத்தர முதல் கனமான கச்சா எண்ணெயின் தரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இதை லேசான அமெரிக்க ஷேல் எண்ணெயால் மாற்றவேண்டுமென்றால் அதிக விலை கொடுத்து மறுசீரமைப்பு செய்ய வேண்டும். மேலும், டீசல் மற்றும் ஜெட் எரிபொருளின் உற்பத்தி திறனும் குறையும்,” என்கிறார் ஸ்ரீவஸ்தவா.
யூரல்ஸ் கலவை என்பது ரஷ்யாவிலிருந்து வரும் ஒரு நடுத்தர முதல் கனமான வகை கச்சா எண்ணெய். இது இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சிறப்பாக பொருந்துகிறது, அதாவது பெரிய மாற்றங்கள் இல்லாமலே அதனை சுத்திகரிக்க முடியும்.
இந்தியாவுக்கு இது ஒரு கடினமான நேரம். ஒருபுறம், தள்ளுபடியில் ரஷ்ய எண்ணெயை வாங்கி அமெரிக்காவின் கோபத்தைச் சந்திக்க வேண்டிய நிலை.
மறுபுறம், விலை உயர்ந்த மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்க எண்ணெய் தரங்களுக்கு ஏற்ப மாறி உள்நாட்டு எரிபொருள் விலை உயர்வை எதிர்கொள்ள வேண்டிய சூழல் என இதனை விவரிக்கிறார் ஸ்ரீவஸ்தவா.
அமெரிக்கா தனது அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டிருக்கையில், இந்தியா ஒரு இக்கட்டான நிலையில் சிக்கியுள்ளது.
இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகி, இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.
அதிலும் முக்கியமாக, குறுகிய கால நன்மை மற்றும் நீண்டகால செலவு போன்ற இரண்டுக்கும் இடையில் இந்தியா எடுக்க வேண்டியுள்ள ஒரு முடிவு, எதிர்காலத்தில் இந்தியா–அமெரிக்க உறவுகளின் திசையை தீர்மானிக்கக்கூடும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு