பட மூலாதாரம், Getty Images
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், இந்தியா மீதான இறக்குமதி வரிகளை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அமெரிக்கா குறைக்கும். இந்த அறிவிப்பு இரு நாடுகளுக்கும் இடையே பல மாதங்களாக நீடித்து வந்த பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வரும் என நம்பப்படுகிறது.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ள டிரம்ப், “திங்கள்கிழமை பிரதமர் மோதியுடன் வர்த்தகம், யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “பிரதமர் மோதி மீதான நட்பு மற்றும் மரியாதையின் காரணமாக, அவரது வேண்டுகோளுக்கிணங்க அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஒப்புதல் அளித்துள்ளோம். இதன் கீழ் அமெரிக்கா தனது வரிகளை 18 சதவீதமாகக் குறைக்கும்” என்று டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் தனது பதிவில் கூறியுள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் யுக்ரேன் போருக்கு இந்தியா உதவுவதாக டிரம்ப் இதற்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தார்.
இதன் காரணமாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா மீது 25 சதவீத கூடுதல் வரியை டிரம்ப் விதித்திருந்தார். ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த வரிகளுடன் சேர்த்து இது மொத்தமாக 50 சதவீதமாக உயர்ந்தது.
தற்போது இந்தியா அமெரிக்கப் பொருட்கள் மீதான தனது வரிகளைப் பூஜ்ஜியமாகக் குறைக்கும் என்றும், எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாயப் பொருட்கள் உட்பட 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்கும் என்றும் டிரம்ப் திங்களன்று தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் – மோதி அறிக்கைகளுக்கு இடையே முரண்பாடு
டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து பிரதமர் மோதி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டார். அதில் “எனது இனிய நண்பர் அதிபர் டிரம்புடன் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு’ இனி 18 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறோம். இந்த அற்புதமான அறிவிப்பிற்காக 1.4 பில்லியன் இந்திய மக்கள் சார்பில் அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இருப்பினும், டிரம்ப் சொன்னதற்கும் பிரதமர் மோதி சொன்னதற்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் என்று டிரம்ப் கூறியிருந்தார், ஆனால் பிரதமர் மோதி அவ்வாறு எதுவும் கூறவில்லை.
அதேபோல், அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியை இந்தியா பூஜ்ஜியமாகக் குறைக்கும் என்றும், 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்கும் என்றும் டிரம்ப் கூறினார்.
ஆனால், இந்தியாவின் தரப்பில் இருந்து இது போன்ற எந்த ஒரு உறுதிமொழியும் பொதுவெளியில் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
தெற்காசிய அரசியல் ஆய்வாளர் மைக்கேல் குகல்மேன் இது குறித்து கூறுகையில், “ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோதி ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறுகிறார். ஆனால் எனக்கு இதில் பலத்த சந்தேகம் உள்ளது” என எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
“நவம்பரில் அமெரிக்கா ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்ததிலிருந்து இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைத்திருந்தாலும், அமெரிக்க-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. குறிப்பாக, விவசாயம் போன்ற முக்கியமான துறைகளை இந்தியா அமெரிக்காவிற்காகத் திறந்துவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த காலத்தில் ஒப்பந்தம் ஏற்படாததற்கு இதுவே முக்கிய காரணமாக இருந்தது”என்றும் அப்பதிவு கூறுகிறது.
அமெரிக்காவிலிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியா வாங்கும் என்ற டிரம்பின் கூற்றும் சந்தேகத்திற்குரியதாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில், 2024-ல் இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் 212 பில்லியன் டாலர் மட்டுமே.
பிரிட்டன் பத்திரிகையான ஃபைனான்ஷியல் டைம்ஸ்-க்கு பேட்டியளித்த பிரிட்ஜ் இந்தியா சிந்தனைக் குழுவின் நிறுவனர் பிரதிக் தத்தானி கூறுகையில், கடந்த ஆண்டு இந்தியா அமெரிக்காவிலிருந்து வாங்கிய பொருட்களின் மதிப்பு வெறும் 41.5 பில்லியன் டாலர் மட்டுமே என்பதால், அதை 500 பில்லியன் டாலராக உயர்த்துவது சாத்தியமற்றதாகத் தோன்றுகிறது என்றார். டிரம்ப் தற்போது பெரும்பாலும் வர்த்தகம் குறித்தே பேசுகிறார் என்பதால், அந்த இலக்கை எட்டுவது இன்னும் கடினம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா ஏற்கனவே ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைக்கத் தொடங்கிவிட்டது என்றும், ஆனால் ரஷ்யாவுடனான அதன் உறவுகளைக் கருத்தில் கொண்டு, அதை முற்றிலுமாக நிறுத்துவது கடினம் என்றும் அவர் கூறினார்.
2022-ல் யுக்ரேன் போர் தொடங்கிய பிறகு, ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் உலகின் மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் முன்னாள் ஆலோசகர் இவான் ஏ. ஃபீன்பாம், வருங்காலத்தில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை இந்தியா வாங்கும் என்பது மிகவும் கடினமான காரியம் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
டிரம்பின் நம்பிக்கைகள்
“2024ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்த பொருட்களின் மதிப்பு 41.5 பில்லியன் டாலராக இருந்தது. அதே ஆண்டு இந்தியாவிற்கு அமெரிக்கா வழங்கிய சேவைத் துறையின் ஏற்றுமதி மதிப்பு 41.8 பில்லியன் டாலராக இருந்தது. இதன் பொருள், மொத்த வர்த்தக மதிப்பு 83 பில்லியன் டாலரிலிருந்து 500 பில்லியன் டாலராக உயர வேண்டும் என்பதாகும். இது கிட்டத்தட்ட 500 சதவீத உயர்வு ஆகும். வெளிப்படையாகச் சொன்னால், இது சற்று மிகைப்படுத்தப்பட்ட கணிப்பாகத் தெரிகிறது. அமெரிக்கா–இந்தியா வர்த்தகம் நீண்ட காலமாகவே தனது முழுத் திறனையும் எட்டாமல் இருந்து வந்துள்ளது. எனவே, அதிக இலக்கை நோக்கி கனவு காணும் மனப்பாங்கு இருப்பது நல்லது தான்” என இவான் குறிப்பிட்டார்.
மேலும், “உண்மையானச் சிக்கல் இந்த ஒப்பந்தத்தின் நுணுக்கங்களில் தான் உள்ளது. ரஷ்ய எண்ணெய் தொடர்பான எந்த ஒரு உறுதிமொழியையும் இந்திய அரசாங்கம் எழுத்துப்பூர்வமாக ஏற்கும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரிஸை தளமாகக் கொண்ட ஜாக் டெலோர்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு ஆலோசகர் நிக்கோலஸ் கோஹ்லர்-சுசுகி பைனான்சியல் டைம்ஸிடம் பேசுகையில், இந்தியா அனைத்து வரிகளையும் பூஜ்ஜியமாகக் குறைக்க ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறியது சாத்தியமில்லை என்று கூறினார்.
“இந்தியா சுங்க வரிகளை பூஜ்யமாகக் குறைக்கத் தயாராக இருக்கும் என்பது சந்தேகம் தான். ஏனெனில், தோஹா மாநாட்டிலிருந்து இந்தியாவின் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் நிலைப்பாடு எப்போதும் எச்சரிக்கையாகவே இருந்து வருகிறது, குறிப்பாக வேளாண் பொருட்கள் தொடர்பாக அது எச்சரிக்கையாக நடந்துகொள்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையாளர் சதானந்த் துமே தனது எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்டிருந்தார். அதில், “எனது கணிப்புப்படி, இந்தியா சில குறிப்பிட்ட அமெரிக்கப் பொருட்களுக்கு மட்டும் வரியைப் பூஜ்ஜியமாகக் குறைக்கும். அதை வைத்துக்கொண்டு, இந்தியா அமெரிக்கப் பொருட்களுக்கு வரியை முழுமையாக நீக்கிவிட்டதாக டிரம்ப் விளம்பரப்படுத்துவார்” என்று கூறியுள்ளார்.
கடந்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தமும், அதற்கு முன்பு பிரிட்டனுடன் செய்யப்பட்ட ஒப்பந்தமும், இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்ய டிரம்பிற்கு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
டிரம்ப் பல கூற்றுகளைச் சொன்னாலும், எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் இல்லாத நிலையில் எச்சரிக்கையாக இருப்பது முக்கியம் என்றும் கூறப்படுகிறது.
கார்னெல் பல்கலைக்கழகத்தின் வர்த்தகக் கொள்கைப் பேராசிரியர் ஈஸ்வர் பிரசாத் நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், “இந்த ஒப்பந்தம் இறுதியானால், இந்தியாவை அமெரிக்காவின் ஒரு முக்கிய பொருளாதார மற்றும் உலக அரசியல் கூட்டாளியாக மாற்றும். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்திற்கு முன்னரே இது முடிந்தால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
“இந்தியாவில் விவசாயம் என்பது அரசியல் ரீதியாக மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். அப்படியிருந்தும் அமெரிக்க விவசாய ஏற்றுமதி மீதான தடைகளை நீக்க மோதி தயாராக இருப்பதாகத் தெரிகிறது. இந்த ஒப்பந்தம் பொருளாதார ரீதியாகவும் உலக அரசியல் ரீதியாகவும் இந்தியாவையும் அமெரிக்காவையும் மீண்டும் ஒரே நேர் கோட்டில் கொண்டு வரும். ஆனாலும், அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் வரிகள் தொடர்பான சிக்கல்கள் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பிரச்னையாகவே தொடரும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
டிரம்பின் அறிவிப்பு இந்தியாவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
சீனாவுக்கு மாற்றாக இந்தியா ஒரு சிறந்த உற்பத்தி மையமாக உருவெடுப்பதற்கு இந்த வரி குறைப்பு ஒரு பெரிய வாய்ப்பாக அமையும் என்று ‘கேபிடல் எகனாமிக்ஸ்’ நிறுவனத்தின் துணைத் தலைவர் ஷிலான் ஷா அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க்கிடம் தெரிவித்தார்.
“இது 2026ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை சுமார் 0.2 முதல் 0.3 சதவீத புள்ளிகள் வரை அதிகரிக்கக்கூடும், இது 2026 மற்றும் 2027 ஆகிய இரண்டிற்கும் கேபிடல் எகனாமிக்ஸின் 6.5 சதவீத வளர்ச்சி கணிப்போடு ஒப்பிடும்போது 7 சதவீதத்தை நெருங்க வாய்ப்புள்ளது” என்று ஷா கூறினார்.
“இது உலக அரசியலில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இந்தியாவில் பலர் மூலோபாய ரீதியாக அணிசேரா நிலையில் இருக்க விரும்புகிறார்கள், ஆனால் இப்போது அப்படி இல்லை. இந்தியா அமெரிக்க கூட்டணியை நோக்கி மீண்டும் சாய்ந்துவிடும் வாய்ப்பு உள்ளது” என்றும் ஷா கருதுகிறார்.
கோடக் மஹிந்திரா ஏஎம்சியின் நிர்வாக இயக்குநர் நிலேஷ் ஷா, ப்ளூம்பெர்க்கிடம் பேசுகையில், இந்த ஒப்பந்தத்தின் முழு விபரங்கள் தெரியவில்லை என்றாலும் இது இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் பங்குச் சந்தை மீது இருந்த அழுத்தத்தை குறைத்துள்ளதாகக் கூறினார்.
இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் பெரிதும் பலன் பெறக்கூடிய நிலையில் உள்ளதால், இது இரு தரப்புக்கும் வெற்றி கிடைக்கக்கூடியச் சூழ்நிலையாக அமையும் என்று நம்புவதாக அவர் கூறினார்.
அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாகும். சமீபத்திய வரி விதிப்புகளால் இந்தியாவின் ஜவுளி, தோல், காலணி மற்றும் ஆபரணத் தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

டெல்லியைச் சேர்ந்த ‘குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ்’ இயக்குனர் அஜய் ஸ்ரீவஸ்தவா, இந்த அறிவிப்பை உடனே கொண்டாட வேண்டாம் என்று கூறுகிறார்.
“அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக அறிவிப்பை இந்தியா அவசரமாகக் கொண்டாட வேண்டாம்,” என்று குளோபல் ட்ரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் தனது குறிப்பில் தெரிவித்தது.
“ட்ருத் சோஷியல் பதிவில் பல முக்கியமான கேள்விகளுக்கு விடை இல்லை. எந்தப் பொருட்கள் இதில் அடங்கும், காலக்கெடு என்ன, குறிப்பாக வேளாண்மை போன்ற நுணுக்கமான துறைகளில் இந்தியா உண்மையில் பூஜ்ஜிய சுங்க வரிக்கு ஒப்புக்கொண்டதா என்பதுபோன்ற விஷயங்கள் தெளிவில்லை”என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து 500 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியா கொள்முதல் செய்யும் என்பது குறித்த புள்ளிவிவரமும் தெளிவற்றதாகவே உள்ளது.
“தற்போது இந்தியா ஆண்டுக்கு அமெரிக்காவிலிருந்து 50 பில்லியன் டாலருக்கும் குறைவாகவே இறக்குமதி செய்கிறது. இதனால், இது உறுதியான ஒப்பந்தமாக அல்லாமல், ஓர் இலக்காகவே தோன்றுகிறது. ஒரு கூட்டறிக்கை வெளியிடப்படும் வரை, அதை இறுதி ஒப்பந்தமாக பார்க்காமல் ஒரு அரசியல் சமிக்ஞையாக பார்க்க வேண்டும். இந்நேரம் கொண்டாடுவதற்கல்ல, எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்” எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி, டிரம்பின் ட்ருத் சோசியல் பதிவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, “ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள். அமெரிக்க ஏற்றுமதிக்கு சுங்கவரி இல்லை. இந்திய ஏற்றுமதிக்கு 18 சதவீத சுங்கவரி. இந்தியா அமெரிக்காவிலிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண் பொருட்கள் மற்றும் நிலக்கரியை இறக்குமதி செய்யும். இந்தியாவின் மூலோபாய தன்னாட்சி எங்கே போனது?” என்று எழுதியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு