பட மூலாதாரம், Rubaiyat Biswas
- எழுதியவர், சல்மான் ரவி
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
2015ஆம் ஆண்டில், ‘என்க்ளேவ்’ பகுதியில் வசிக்கும் வங்கதேசத்தினருக்கு இந்தியாவில் சிறப்பு குடியுரிமை வழங்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ‘புதிய இந்திய குடிமக்களுக்கு’ தற்போது, இந்தியாவின் பிற பகுதிகளில் தங்கள் குடியுரிமையை நிரூபிப்பது கடினமாக இருக்கிறது.
மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் என்ற பகுதியில் வசிக்கும் இந்த ‘புதிய இந்திய குடிமக்கள்’, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக வந்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் நடவடிக்கைகளுக்கு இரையாகி வருகின்றனர்.
2015 ஆம் ஆண்டுக்கு முன்பு அவர்களின் இந்திய குடியுரிமையை நிரூபிக்க முடியாததால், அவர்கள் கூச் பெஹாருக்குத் திரும்ப வேண்டியிருக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் இதுபோன்ற ‘சந்தேகத்திற்கிடமான’ 31 வழக்குகள் காவல்துறையில் பதிவாகி இருப்பதாகவும், இந்த ‘சந்தேகத்திற்குரிய நபர்களின்’ அடையாள அட்டைகளைச் சரிபார்க்க, காவல்துறை அதிகாரிகள் அவர்கள் கொடுத்த முகவரிகளுக்குச் சென்று விசாரித்து வருவதாகவும் டெல்லி காவல்துறை துணை ஆணையர் எம். ஹர்ஷ் வர்தன், காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.
2015 ஆம் ஆண்டுக்கு முன்பு, இந்தியா மற்றும் வங்கதேசத்தின் இருபுறமும் ‘சித்மஹால்’ அதாவது என்க்ளேவ்’ என்று அழைக்கப்பட்ட பகுதிகள் இருந்தன.
இவை சிறிய குடியிருப்புகளாக இருந்தன. வங்கதேச எல்லைக்குள் இதுபோன்ற 111 பகுதிகள் இருந்தன. அவை இருந்த நிலங்களின் உரிமை இந்தியாவிடம் இருந்தன.
இதேபோல், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கூச் பெஹார் பகுதியில் இதுபோன்ற 51 பகுதிகள் இருந்தன. இந்த சிறிய அளவிலான குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வங்கதேச குடிமக்களாக இருந்தனர்.
இந்த இடத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, நான் கல்கத்தா பல்கலைக் கழக பேராசிரியர் தேபர்ஷி பட்டாச்சார்யாவைத் தொடர்பு கொண்டேன். அவர் இந்த விஷயத்தில் நிறைய ஆராய்ச்சி செய்துள்ளார்.
“சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவிற்குள் பல ‘சுதேச அரசுகள்’ (princely states) இருந்தன. சுதந்திரத்தின் போது அவை இந்தியாவுடன் இணைக்கப்படவில்லை”, என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
“கூச் பெஹார் மற்றும் ரங்பூர் ஆகியவை சுதந்திரத்தின் போது இந்தியாவுடன் இணைக்கப்படாத சுதேச அரசுகளாகும். பின்னரே அவை இணைக்கப்பட்டன”.
“1948 ஆம் ஆண்டு, கூச் பெஹார் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது, 1952 ஆம் ஆண்டு, ரங்பூர் கிழக்கு பாகிஸ்தான் அல்லது வங்கதேசத்தின் ஒரு பகுதியாக மாறியது. இதற்குப் பிறகுதான், இந்த இரண்டு பகுதிகளுக்கும் இடையே சர்வதேச எல்லை வரையப்பட்டது. எனவே அங்கிருந்த பகுதிகள் வங்கதேச எல்லைக்குள் இருந்தாலும், அவை இந்தியாவுக்கு சொந்தமானவையாக இருந்தன. கூச் பெஹாரிலும் இதேதான் நடந்தது. அதனால்தான் அவை ‘என்கிளேவ்ஸ்’ என்று அழைக்கப்பட்டன”, என்று அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Rubaiyat Biswas
‘என்கிளேவ்ஸ்’ மற்றும் ‘புதிய இந்திய குடிமக்கள்’
இரு நாடுகளும் பிரிக்கப்பட்டதில் இருந்து, இந்த என்கிளேவ்களில் வசிக்கும் மக்கள் வரையறைக்கு உட்பட்ட வாழ்க்கையையே வாழ வேண்டியிருந்தது.
வங்கதேசத்தில் இதுபோன்ற பல என்கிளேவ்கள் இருந்தன. அவற்றில் வசித்தவர்கள் இந்திய குடிமக்கள் ஆவர். அவர்களின் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. அந்நாட்டில் வேலை பெறும் உரிமையும் அவர்களுக்கு இல்லை.
இந்தியாவின் பகுதியில் இருந்த அத்தகைய பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் இதே கதைதான். பல நூற்றாண்டுகளாக, இங்கு வாழும் மக்கள் இந்திய குடிமக்கள் அல்லாத காரணத்தினால் மட்டுமே அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களின் அடையாளத்தை இழந்தனர்.
இந்த பிரச்னையை தீர்க்க வங்கதேசம் மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே முயற்சிகள் எடுக்கப்பட்டன. வங்கதேச எல்லைக்குள் உள்ள இந்தியக் குடியிருப்புகள் அல்லது நிலப்பகுதிகள் வங்கதேசத்தின் கட்டிப்பாட்டில் வரவும், இந்திய எல்லைக்குள் உள்ள நிலப்பகுதிகள் இந்திய அரசாங்கத்தின் கீழ் வரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டு, இந்திய அரசியலமைப்பில் 119வது திருத்தம் செய்யப்பட்டது.
2015ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோதிக்கும் அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது .
இந்த ஒப்பந்தத்தின் கீழ், வங்கதேச எல்லைக்குள் இருந்த 111 இந்திய நிலங்கள் வங்கதேசத்திற்குச் சொந்தமானவையாக மாறின. மறுபுறம், இந்திய எல்லைக்குள் இருந்த 51 வங்கதேச பகுதிகள் இந்தியாவுக்கே சொந்தமாயின.
பட மூலாதாரம், Rubaiyat Biswas
இதன் பிறகு நடந்த மாற்றங்கள் என்ன?
அது 2014 மக்களவைத் தேர்தல் நடைபெற்ற சமயம். மேற்கு வங்க மாநிலத்தின் கூச் பெஹாரில் உள்ள தின்ஹாட்டாவில் அமைந்துள்ள ‘மஷால்டாங்கா’ வுக்குச் சென்றேன்.
‘மஷால்டாங்கா’ அப்போது வங்கதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது, ஆனால் அது இந்திய எல்லைக்குள் அமைந்திருந்தது. இந்தியாவிற்குள் இதேபோன்ற 51 பகுதிகள் இருந்தன. இங்கு வசிப்பவர்கள் வங்கதேச குடிமக்கள்.
இரு நாடுகளின் பழைய எல்லையை குறிக்கும் கற்கள் இன்னும் மேற்கு வங்க மாநிலத்தின் தின்ஹாட்டாவில் உள்ளன.
ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தால் அது வங்கதேச எல்லை, ஒரு அடி பின்னால் எடுத்து வைத்தால் அது இந்திய எல்லையாக இருந்தது.
ஆனால் இப்போது அந்த பகுதி முழுவதுமாக இந்தியாவின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அப்போது நாங்கள் சதாம் ஹுசைனை சந்தித்தோம், அப்போது அவருக்கு சுமார் 18 வயது இருக்கலாம்.
அப்போது, சதாம் ஹுசைன் பிபிசி குழுவை இதுபோன்ற பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார். அங்கு மின்சாரம், சாலை வசதி இல்லை. மக்களிடம் எந்த வகையான அடையாள அட்டையும் இல்லை.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, சதாமின் தாத்தா அனீஸ் ஹுசைன், 2016 ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் அவரது 90 வயதில் முதல் முறையாக வாக்களிக்க முடிந்தது.
இன்று, அவர் வசிக்கும் ‘மஷால்டாங்கா’ பகுதியில் மின்சாரம், குடிநீர் மற்றும் தார் சாலை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
இந்த புதிய இந்திய குடிமக்களுக்காக மத்திய அரசு ரூ.1,000 கோடி நிதியை அறிவித்தது.
இங்கு வசிக்கும் மக்களுக்கு புதிய அடையாள அட்டைகள் மற்றும் வாக்காளர் அட்டைகள் கொடுக்கப்பட்டன. வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு ஒரு அறை கொண்ட வீடுகள் கிடைத்தன. அவர்கள் வசித்து வந்த அதே நிலத்தை அவர்களின் பெயரிலே சிலருக்கு பதிவு செய்து கொடுக்கப்பட்டது.
இவை தவிர, 16,777 புதிய இந்தியர்கள் இன்னும் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
அவர்களில் 15,856 பேர் இந்தியாவில் ஏற்கனவே என்கிளேவ் பகுதிகளில் வாழ்ந்தவர்கள். 921 பேர் வங்கதேசத்தில் இருந்த என்கிளேவ் பகுதிகளில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள்.
இந்தப் பகுதியில் வேலைவாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இதன் காரணமாக, மக்கள் வேலை தேடி இந்தியாவின் பிற நகரங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
பட மூலாதாரம், Rubaiyat Biswas
குடியுரிமையை நிரூபிப்பதில் சிக்கல்
இந்த மக்கள் இங்கிருந்து வெளியே செல்லும் போது, தங்கள் குடியுரிமையை நிரூபிக்க மத்திய அரசு கொடுத்த ஆவணங்களையும் தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள். இருப்பினும், அரசாங்கத்தால் வழங்கப்படும் குடியுரிமைச் சான்றிதழ்களை எந்த மாநிலமும் ஆதாரமாக கருத்தில் கொள்வதில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
அவர்களின் பெயர் ‘தேசிய மக்கள் தொகை பதிவேட்டிலும்’ சேர்க்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிறுவனங்கள் அவர்களை ‘வங்கதேச குடிமக்கள்’ (Bangladeshis) என்று அழைத்து துன்புறுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதன் விளைவாக, பெருநகரங்களில் வேலைக்குச் சென்ற இந்த மக்கள் இப்போது கூச் பெஹார் மற்றும் மேற்கு வங்கத்தின் பிற பகுதிகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
சமீபத்தில் டெல்லியிலிருந்து திரும்பிய ஜஹீருல் ஷேக்கை சந்தித்தோம்.
சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து வந்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட காவல்துறையின் நடவடிக்கைகளினால் தனது குடும்பமும் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
“நான் கிராமத்திற்கு வந்து 10 நாட்களுக்குப் பிறகு, எனது இரு உறவினர்கள் டெல்லி காவல்துறையினரால் பிடிக்கபட்டனர். அவர்கள் 2015க்கு முந்தைய குடியுரிமைச் சான்றிதழை கேட்டுள்ளனர். 2015-இல் தான் எங்களுக்கு அந்த குடியுரிமைச் சான்றிதழ் கிடைத்தது. காவல்துறை கேட்ட ஆதாரத்தை நாங்கள் எப்படி கொடுப்பது? எங்களிடம் அது இல்லை” என்று அவர் கூறுகிறார்.
“எங்களுக்கு இந்திய குடியுரிமை கிடைத்ததும், ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டையைப் பெற முடிந்தது. எங்கள் தாத்தாக்கள் வயதாகி இங்குள்ள பகுதியில் வசித்து இறந்து போயினர். அவர்களிடம் எந்த அடையாள அட்டையோ, நில ஆவணங்களோ இல்லை. 2015க்கு முன்பு எங்களிடம் எதுவும் இல்லை. எல்லாவற்றையும் அறிந்த பிறகு எங்களுக்கு குடியுரிமை வழங்கியது மோதி அரசாங்கம்தான்”. என்றார் அவர்.
அமினா பீவியும் இங்கு வசிக்கிறார். அவர் இதற்கு முன்பும் இந்த என்கிளேவில்தான் வசித்து வந்தார்.
முன்னதாக, இந்த என்கிளேவ் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெளியில் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனால் குடியுரிமை பெற்ற பிறகு, அவர்கள் ‘சிறந்த வாழ்க்கையை வாழ’ பணம் சம்பாதிக்க பெரிய நகரங்களுக்குச் செல்லத் தொடங்கினர் என்று அவர் கூறினார்.
“நாங்கள் டெல்லி அல்லது பிற நகரங்களுக்கு வேலை செய்யச் செல்கிறோம். காவல்துறையினர் எங்களை அங்கே கைது செய்கிறார்கள். நாங்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கிறோம். எப்போதும் மனதில் பயம் இருக்கிறது” என்று பிபிசியிடம் அவர் கூறினார்.
“குடியுரிமைச் சான்றாக எங்களிடம் உள்ள ஆவணங்கள் பயனற்றவை மற்றும் போலியானவை என்று அங்குள்ள காவல்துறை எங்களிடம் கூறினர்” என்று அவர் கூறுகிறார்.
‘நாங்கள் புதிய இந்திய குடிமக்கள்’
ஷம்சுல் ஹக் மியான், தின்ஹாட்டாவில் வசிப்பவர், புதிதாக இந்திய குடியுரிமை பெற்றவர்.
“குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள், தந்தை, மகன், மகள், பேத்தி, மனைவி என அனைவருக்கும் ஒரே நாளில் குடியுரிமை வழங்கப்பட்டது. எங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து ஆதாரங்களுடனும், நாங்கள் உத்தரபிரதேசம், டெல்லி, கேரளா, பெங்களூரு, மும்பை அல்லது குஜராத்திற்கு வேலை செய்யச் சென்றோம். மேற்கு வங்கத்திலிருந்து வந்தவர்கள் என்று தெரிந்ததும், அங்குள்ள காவல்துறையும் அரசாங்கமும், இவர்கள் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக வந்தவர்கள் என்று கூறுகிறார்கள்” என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
“இது யாருடைய பொறுப்பு? இந்த அதிகாரிகளிடம் நாங்கள் புதிதாக இந்திய குடியுரிமை பெற்றவர்கள், பத்து வருடங்களுக்கு முன்பு இந்திய குடிமகனாக்கப்பட்டோம் என்று யார் சொல்வார்கள்?”
தின்ஹாட்டாவின் மற்றொரு பகுதியில், வங்கதேசத்திலிருந்து வரும் மக்களுக்கு அரசாங்கம் ஒரு அறை கொண்ட வீடுகளை வழங்கியுள்ளது. இது கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ளது. இது தவிர, ஜல்பைகுரி மாவட்டத்தின் மெக்லிகஞ்ச் மற்றும் ஹால்டிபாரியிலும் இதேபோன்ற ஒரு அறை வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
தின்ஹாட்டாவில் உள்ள இந்த முகாமில் அபு தாஹிர் வசிக்கிறார்.
அவர் டெல்லியில் பணிபுரிந்தார். ஆனால் இப்போது திரும்பி வந்துவிட்டார்.
டெல்லி காவல்துறையிடம் தனது குடியுரிமைக்கான ஆதாரத்தை வழங்க முடிந்தது. ஆனால் தனது மூதாதையரின் ஆதாரத்தை அவர்களிடம் வழங்க முடியவில்லை என்று அவர் கூறுகிறார்.
“எங்களுக்கு காவல்துறையினரிடமிருந்து அழைப்பு வந்தது. அவர்கள் ‘குடியுரிமை சரிபார்ப்பதற்கான ஆவணங்களை பெற்றிருந்தால், நீங்கள் உங்கள் தந்தை, தாய், தாத்தா மற்றும் பாட்டியின் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்பட அனைத்தையும் கொடுக்க வேண்டும்’ என்று கூறினார்கள்”, என்கிறார் அபு தாஹிர்.
“என்க்ளேவ் மாற்றத்திற்குப் பிறகு நாங்கள் வசித்த வங்கதேச எல்லைக்குட்பட்டிருந்த என்க்ளேவ் பகுதியில் இருந்து நான் மட்டும் இந்தியாவிற்கு வந்துவிட்டேன் என்று சொன்னேன். மத்திய அரசு எனக்கு மறுவாழ்வுக்காக ஒரு வீட்டையும் கொடுத்துள்ளது. எனது குடும்பத்தில் இருந்து யாரும் என்னுடன் வரவில்லை. எனவே நான் எப்படி அவர்கள் கேட்கும் ஆவணங்களை வழங்கி நிரூபிப்பேன்?”
“உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் அச்சத்துடன் உள்ளோம். நாங்கள் எங்கள் குடும்பத்துடன் தின்ஹாட்டாவுக்குத் திரும்பி வந்துட்டோம். இனி இங்கிருந்து நாங்கள் எங்கும் போக மாட்டோம்.”
பட மூலாதாரம், ANI
காவல்துறை கூறுவது என்ன?
மறுபுறம், இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளதாக டெல்லி காவல்துறை கூறுகிறது.
இதன் கீழ், மேற்கு வங்கத்தின் சில பகுதிகளுக்கு மக்களின் அடையாள அட்டைகளைச் சரிபார்க்க டெல்லி காவல்துறையின் ஒரு குழுவும் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை காவல் ஆணையர் மண்டவ ஹர்ஷவர்தன், “சட்டவிரோதமாக வாழும் பல பிரிவுகளை சேர்ந்த மக்கள் உள்ளனர். உதாரணமாக, விசாக்கள் காலாவதியாகி, ஆனால் இன்னும் தங்கள் நாட்டிற்குத் திரும்பாதவர்கள். எந்த ஆவணங்களும் இல்லாமல் இந்தியாவிற்குள் வசிக்கும் ஒரு பிரிவினரும் உள்ளனர்” என்று கூறினார்.
வங்கதேசத்தில் இருந்து மக்கள் சட்டவிரோதமாக வருவது குறித்த கேள்விக்கு, துணை காவல் ஆணையர் ஹர்ஷ் வர்தன் பதில் கூறுகையில், “சட்டவிரோதமாக வருபவர்கள் பெரும்பாலும் மேற்கு வங்கம் வழியாக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் நுழைகிறார்கள் என்று முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. நாங்கள் சிலரைப் பிடித்து அவர்களின் நாட்டிற்கே அனுப்பியுள்ளோம்” என்றார்.
“எங்கள் குழுக்கள் மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாபூர் மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டங்களுக்கும் சென்று ஆவணங்களைச் சரிபார்க்கின்றன. சில சந்தேகத்திற்குரிய நபர்கள் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளனர், அவர்களின் அடையாளத்தைச் சரிபார்க்க நாங்கள் குழுக்களை அனுப்பியுள்ளோம்.”
“மேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் என்று கூறிக் கொள்ளும் சுமார் 31 சந்தேகத்திற்கிடமான நபர்கள் உள்ளனர். அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இந்த 31 பேரில் கூச் பெஹாரைச் சேர்ந்த மக்களும் அடங்குவர்.”
பட மூலாதாரம், Rubaiyat Biswas
“நாங்கள் வந்திருக்கவேமாட்டோம்”
வங்கதேசத்திலிருந்து வரும் ஏராளமான இந்துக்கள் மூன்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தின்ஹாட்டாவில் உள்ள முகாம் கடந்த 10 ஆண்டுகளில் மோசமடைந்துள்ளது. இங்கு கட்டப்பட்ட வீடுகளில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளன.
இங்குள்ள மக்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வீடுகள் தங்கள் பெயரில் பதிவு செய்யப்படவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் மின்சாரத்திற்கான மீட்டர் மட்டும் தங்கள் பெயரில் இருப்பதாக கூறுகின்றனர்.
வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு வந்த நமீதா பர்மன் இப்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார். ஆரம்பத்தில் அவர் இந்தியாவுக்கு வருவதில் மகிழ்ச்சியடைந்தார், ஆனால் அந்த மகிழ்ச்சி குறுகிய காலமே நீடித்தது.
“எங்கள் குழந்தைகளும் கணவர்களும் வேலைக்காக வேறு இடங்களுக்குச் செல்லும் போது, அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களை சட்டவிரோதமாக வந்தவர்கள், பயங்கரவாதிகள் என்று சொல்கிறார்கள். இப்போது இந்தியாவுக்கு வந்ததன் மூலம், எங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல, எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையையும் நாசமாக்கிவிட்டதாக உணர்கிறோம். இவ்வாறு நடக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால், நாங்கள் வந்திருக்க மாட்டோம்” என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.
அவர்களுடன் அமர்ந்திருந்த பிங்கி ராணி ராய், வங்கதேச எல்லைக்குள் இருந்த இந்தியப் பகுதிகளில் வசித்தவர்களுக்கு வங்கதேச அரசு எந்த அடையாள அட்டைகளையும் வழங்கவில்லை என்று கூறினார்.
“வங்கதேச எல்லைக்குள் இருந்த இந்தியப் பகுதியில் வசித்த எங்களுக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆனால், இந்தியாவில் இப்போது காவல்துறை எங்கள் மூதாதையர் அடையாள அட்டைகளைக் கேட்கிறது,” என்று அவர் கூறுகிறார்.
“நாங்கள் இந்தியாவுக்கு வந்த பிறகுதான் எங்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்றோம். இப்போது நாங்கள் திரும்பிச் செல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம், ஏனென்றால் அங்குள்ளவர்களும் இப்போது எங்களை அவதூறு செய்வார்கள்.”
பட மூலாதாரம், Rubaiyat Biswas
தீப்திமான் சென்குப்தா பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆவார். அவர் பல தசாப்தங்களாக ‘என்கிளேவ்களின்’ பிரச்னைகள் குறித்து போராடி வருகிறார். இந்திய எல்லைக்குள் என்க்ளேவ் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் அவர் தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.
தின்ஹாட்டாவில் உள்ள தனது இல்லத்தில் பிபிசி உடன் பேசிய போது, அரசியலமைப்பில் 119வது திருத்தம் செய்யப்பட்ட பின்னரே இந்த மக்கள் குடியுரிமை பெற முடிந்தது என்று அவர் கூறினார்.
புதிய குடியுரிமை வழங்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எட்டப்பட்ட திருத்தம் மற்றும் ஒருமித்த கருத்து குறித்து மத்திய அரசு எந்த மாநிலத்திற்கும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.
“இந்த என்க்ளேவ் பற்றி எந்த மாநிலத்தின் காவல்துறையினரிடம், ஐஏஎஸ் அதிகாரிகளிடம், ஐஜி-யிடம், டிஜி-யிடம் கேளுங்கள், யாருக்கும் ‘என்க்ளேவ்’ பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது” என்று அவர் கூறுகிறார்.
“இந்த 921 மற்றும் 15,856 பேருக்கு மத்திய அரசு ‘சிறப்பு குடியுரிமை அட்டை’ வழங்கினால், பிரச்னை முடிவுக்கு வரும்.”
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக வந்தவர்கள் தொடர்பாக மேற்கு வங்க அரசுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையே எப்போதும் விரிசல் இருந்து வருகிறது.
இப்போது அந்தப் பகுதி மக்களின் பிரச்னைகள் தொடர்பாக மாநில அரசின் மீது அழுத்தமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்திற்கு தீர்வு காண முயற்சிப்பதாக மேற்கு வங்க மாநில அரசாங்கம் கூறுகிறது.
வட வங்காள மேம்பாட்டு அமைச்சர் உதயன் குஹா பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், “மாநில அரசு இந்த பிரச்னையை மத்திய அரசிடம் எழுப்பியுள்ளது. இது குறித்து இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.வங்கதேசத்தில் இருந்து வரும் அனைத்து புதிய குடிமக்களுக்கும் நில குத்தகை வழங்குவது குறித்தும் மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இது அவர்களுக்கு குடியுரிமைக்கான வலுவான சான்றாக அமையும்” என்றார்.
அரசாங்கங்களின் உத்தரவாதங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால், 2015 ஆம் ஆண்டில் புதிதாக இந்திய குடிமக்களாக மாறிய சுமார் இந்த 17,000 பேர் ‘தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த’ இன்னும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.