படக்குறிப்பு, வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் தௌஹித் ஹொசைன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை ஜனவரி மாதம் சந்தித்தார்.கட்டுரை தகவல்
எழுதியவர், எத்திராஜன் அன்பரசன்
பதவி, பிபிசி உலக சேவை, தெற்காசிய ஆசிரியர்
அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை கொண்ட வங்கதேச குழு ஒன்று சீனாவுக்கு 10 நாள் பயணத்தை தொடங்கியுள்ளது.
அவர்கள் சீன அரசு அதிகாரிகளுடனும், அங்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடனும் ஆலோசனை நடத்துவார்கள் என அந்த குழுவில் இடம்பெற்ற தலைவர் ஒருவர் பிபிசியிடம் உறுதி செய்தார்.
பல்வேறு விவகாரங்களில் இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் சீனா வங்கதேசத்தை கவர முயற்சி செய்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வங்கதேசத்தில் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஷேக் ஹசீனா இந்தியாவில் வசிப்பதும் அதில் ஒன்று. அவரை ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேசம் கேட்டுக்கொண்டது. இந்தியா அதை ஏற்க மறுத்துவிட்டது.
“அடிப்படையில் இது சீனா முன்னெடுத்துள்ள ஒரு நல்லெண்ண பயணம்” என பெய்ஜிங் சென்றுள்ள குழுவிற்கு தலைமை தாங்கியிருக்கும் பி என்பி எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சியை சேர்ந்த அப்துல் மொயின் கான் பிபிசியிடம் தெரிவித்தார்.
“வங்கதேசத்தின் பல்வேறு குழுக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளை சீனா அழைத்திருப்பதால் இந்த பயணம் தனித்துவமானது.” என்றார் அவர்.
அந்த குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் பலரும் வங்கதேச தேசியவாத கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
ஹசீனா தலைமையிலான அவாமி லீக் தவிர முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சியும் வங்கதேசத்தில் ஒரு முக்கிய கட்சியாகும்.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்படுவதற்கு காரணமான எழுச்சியை தொடங்கிய மாணவர் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகளும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, வங்கதேசத்தில் தற்போது பதவியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை எதிர்கொள்ள ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டை ஆளும் இடைக்கால அரசு இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் போராட்டத்தை ஒடுக்க ஹசீனா அரசு எடுத்த நடவடிக்கையில் சுமார் 1400 பேர் கொல்லப்பட்டதாக ஐநா கூறுகிறது.
மறுபுறம், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஹசீனாவை ஒப்படைக்க இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவரது எதிர்ப்பாளர்களால் இந்தியாவுக்கு ஆதரவானவராக பார்க்கப்படும் ஹசீனாவின் 15 ஆண்டு ஆட்சி காலத்தில் இந்தியாவும் வங்கதேசமும் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தன.
டெல்லியுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்த அதே நேரம், அவர் சீனாவுடனான உறவையும் பராமரித்து வந்தார்.
ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, வங்கதேச தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் இஸ்லாமிய கட்சிகள் உள்ளிட்டவற்றின் குழுக்களோடு சீனாவின் தொடர்பு அதிகரித்துள்ளது.
ஜனவரியில் வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவு கொள்கை ஆலோசகர் தௌஹித் ஹொசைன், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை பெய்ஜிங்கில் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து, இந்த வாரம் வங்கதேச குழு சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் பிஎன்பி குழு பெஜிங் சென்று வந்த நிலையில் அதன் நிர்வாகிகள் சீனாவிற்கு பயணம் மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும்.
வங்கதேசத்தில் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதுடன், இந்தியாவின் செல்வாக்கும் இல்லாத நிலையில், சுமார் 170 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டின் மீது சீனா தனது பிடியை வலுப்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வங்கதேசத்தின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக சீனா உள்ளது. அதில் பெரும்பாலானவை, சீனாவின் ஏற்றுமதியாக தெற்காசிய நாடான வங்கதேசத்துக்குச் செல்கிறது.
சீன உபகரணங்கள் மற்றும் வெடிமருந்துகளையே, வங்கதேச ராணுவம் பெரிதும் நம்பியுள்ளது. அதற்குத் தேவையான 70 சதவீதத்துக்கும் அதிகமான பொருட்கள் சீனாவிலிருந்தே வருகின்றன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வங்கதேச தேசியவாதக் கட்சியின் மூத்த தலைவரான அப்துல் மொயீன் கான், பெய்ஜிங்கில் உள்ள தூதுக்குழுவிற்கு தலைமை தாங்குகிறார்.
சீனாவின் அணுகுமுறையோடு ஒப்பிடுகையில், கடந்த ஆறு மாதங்களில் வங்கதேச இடைக்கால அரசு மற்றும் பிற வங்கதேச அரசியல் தலைவர்களுடன் இந்தியா மிகக் குறைவான தொடர்புகளையே மேற்கொண்டுள்ளது.
ஹசீனாவுக்கு இடமளிப்பதன் மூலம் வங்கதேசத்தின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாகக் கூறி வங்கதேச தேசியவாத கட்சி கடந்த டிசம்பர் மாதம் போராட்டம் நடத்தியது.
கூடுதலாக, இடைக்கால அரசின் சில ஆலோசகர்களும் இதே காரணத்திற்காக இந்தியாவை விமர்சித்துள்ளனர்.
இந்த விமர்சனத்திற்கு இந்தியாவில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
“எங்களுடன் என்ன வகையான உறவைப் பேண விரும்புகிறார்கள் என்பதை வங்கதேசம் முடிவு செய்ய வேண்டும்” என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த வாரம் கூறினார்.
வங்கதேச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இந்தியாவை விமர்சிப்பது “முற்றிலும் அபத்தமானது” என்றும் அவர் கூறினார்.
வங்கதேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த வாக்குவாதம் வங்கதேசத்தை சீனாவை நோக்கி தள்ளக்கூடும் என்று சிலர் வாதிடுகின்றனர்.
இலங்கை, மாலத்தீவு, நேபாளத்திற்கு அடுத்தபடியாக வங்கதேசமும் இந்தியா – சீனா இடையிலான போட்டியின் இலக்காக மாறியுள்ளது என்பதை சமீபத்திய நிகழ்வுகள் வெளிக்காட்டுகின்றன. ஏனெனில் இந்தியாவும் சீனாவும் தங்களின் செல்வாக்கை அதிகரிக்க முயற்சி செய்கின்றன.
“இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள நாடுகள் முழுவதும் இந்தியாவின் செல்வாக்கிற்கு உட்பட்ட பிராந்தியமாக வருவதாக இந்தியா கருதக் கூடாது என்று நான் நம்புகிறேன். அந்த அணுகுமுறை இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்,” என்று பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக் கழகத்தின் மூத்த சீன ஆய்வாளர் ஜோ போ பிபிசியிடம் தெரிவித்தார்.