பட மூலாதாரம், Riaz Hamidullah/X
இன்குலாப் மஞ்ச் மாணவர் தலைவர் உஸ்மான் ஹாடியின் மரணத்தைத் தொடர்ந்து, வங்கதேசத்தின் டாக்கா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வன்முறை வெடித்தது. இரண்டு செய்தித்தாள் அலுவலகங்கள் மீது நடந்த தாக்குதல்களில், அவை சூறையாடப்பட்டு தீவைக்கப்பட்டன.
இந்தச் சம்பவங்கள் ஒருபுறமிருக்க, இந்தியத் தூதரகத்தின் வெளியே ஒரு கும்பல் திரண்டு கல்வீச்சு சம்பவங்களிலும் ஈடுபட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை டாக்காவில் உஸ்மான் ஹாடி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவர் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக இந்த வாரம் சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தார்.
சமீபத்திய நிகழ்வுகள் வங்கதேசம் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கிடையில், சில வங்கதேசத் தலைவர்கள் இந்தியாவிற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.
கடந்த புதன்கிழமை, வங்கதேசத்தின் தேசிய குடிமக்கள் கட்சியின் (NCP) தெற்குத் தலைமை அமைப்பாளர் ஹஸ்னத் அப்துல்லா, ‘வங்கதேசம் சீர்குலைக்கப்பட்டால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான ‘ஏழு சகோதரிகள்’ (Seven Sisters) என அழைக்கப்படும் மாநிலங்கள் தனிமைப்படுத்தப்படும்’ என்று எச்சரித்திருந்தார். இந்தியத் தூதரை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த அறிக்கை ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே இருந்த ‘பலவீனமான உறவை’ மேலும் சிக்கலாக்கியது. இதனைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கம் டெல்லியில் உள்ள வங்கதேசத் தூதரை நேரில் அழைத்து, இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பு குறித்த கவலையை வெளிப்படுத்தியது.
இருப்பினும், இந்தியா மீதான வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் அணுகுமுறை மிகவும் மென்மையாக இருக்கவில்லை.
வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சக ஆலோசகர் முகமது தௌஹீத் உசேன் புதன்கிழமை, ‘1971 விடுதலைப் போரில் வங்கதேசத்தின் பங்களிப்பை இந்தியா தொடர்ந்து குறைத்து மதிப்பிடுவதாக’ குற்றம் சாட்டினார்.
வங்கதேசத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது என்றும் தௌஹீத் உசேன் குறிப்பிட்டார்.
புதன்கிழமை முழு சூழ்நிலையையும் மாற்றியமைத்தது என்ன?

டெல்லியில், இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவின் ஒட்டுமொத்த சூழலும் ஒரே இரவில் தலைகீழாக மாறியது.
இந்தியாவின் தற்போதைய மற்றும் முன்னாள் தூதர்கள், ராணுவ அதிகாரிகள் மற்றும் சிந்தனைக் குழு உறுப்பினர்கள், டெல்லியில் உள்ள வங்கதேச தூதரின் அழைப்பின் பேரில், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவைக் கொண்டாடும் நிகழ்வில் செவ்வாய்க்கிழமை மாலை கலந்து கொண்டனர்.
ஆனால், அடுத்த நாள் புதன்கிழமை காலையில், தெற்கு பிளாக்கிற்கு வங்கதேச தூதரை நேரில் வருமாறு இந்தியா அழைத்தது.
டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தைச் சுற்றி ‘சில குழுக்களால்’ ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலே தூதரை அழைத்ததற்கான முக்கியக் காரணம் என்று இந்திய அரசு கூறியது இருந்தாலும், சில வங்கதேச அரசியல்வாதிகள் சமீபத்தில், ‘கோபத்தை தூண்டும் விதமாக’ இந்தியாவுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கைகளும் மற்றொரு காரணம் என்று அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு டெல்லி சாணக்கியபுரியில் உள்ள வங்கதேச தூதரக வளாகத்தில் நடைபெற்ற விஜய் திவாஸ் நிகழ்வில், வங்கதேச தூதர் ரியாஸ் ஹமிதுல்லா பேசுகையில், இந்தியாவுடனான வங்கதேசத்தின் உறவு மிகவும் ஆழமானது மற்றும் பன்முகத்தன்மை கொண்டது என்றும், வளமான கடந்த காலத்தின் பின்னணியில், ஒன்றையொன்று சார்ந்திருக்கும் அவற்றின் தன்மையைப் புரிந்துகொள்வது முக்கியம் என்றும் கூறியிருந்தார்.
இந்த உறவை ஒரு ‘இயற்கையான உறவு’ என்று வர்ணித்த அவர், 1971-ஆம் ஆண்டு போரில் வங்கதேச மண்ணில் உயரிய தியாகங்களைச் செய்த 1,668 இந்திய வீரர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
இந்த நிகழ்வில் வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற பல இந்திய வீரர்கள், இந்திய ராணுவத்தின் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராகேஷ் கபூர், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் வங்கதேசம்-மியான்மர் பிரிவின் தலைவர் பி. ஷியாம், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், டாக்காவில் பணியாற்றிய நான்கு முன்னாள் இந்திய தூதர்கள், ஓஆர்எப்ஃ -ப்ரூகிங்ஸ்- ஐடிஎஸ்ஏ (ORF-Brookings-IDSA) போன்ற சிந்தனைக் குழுக்களின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டெல்லியைச் சேர்ந்த பல முன்னணி பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வு முடிந்தவுடன், “பரஸ்பர நம்பிக்கை, கண்ணியம், முன்னேற்றம், பொதுவான நலன்கள் மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் மட்டுமே இரு நாட்டு மக்களின் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவை உறுதி செய்யப்பட முடியும்” என்று சமூக ஊடகங்களில் பதிவிட்ட ரியாஸ் ஹமிதுல்லா, இந்திய வெளியுறவு அமைச்சகத்தையும் அப்பதிவில் டேக் செய்திருந்தார்.
ஆனால், இரவு நேரத்தில், வெளியுறவுத் துறை அமைச்சகம் வங்கதேச தூதர் ரியாஸ் ஹமிதுல்லாவை தெற்கு பிளாக்கிற்கு வரவழைத்தது.
வங்கதேசத்தில் பாதுகாப்புச் சூழல் வேகமாகச் சீர்குலைந்து வருவதாகவும், இந்தச் சூழ்நிலை குறித்து இந்தியா கவலையும் அச்சமும் கொண்டுள்ளதாகவும் இந்திய அரசு அவரிடம் தெரிவித்தது.
குறிப்பாக, ‘டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த சில குழுக்கள் திட்டமிட்டுள்ளன’ என்று அவரது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
தெற்கு பிளாக்கில் நடந்த சந்திப்பிற்குப் பிறகு வங்கதேச அரசாங்கத்திடமிருந்து உடனடி அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் வரவில்லை. ஆனால் கடந்த வார இறுதியில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடந்த ‘வார்த்தைப் போருக்குப்’ பிறகு, இந்த அழைப்பு முற்றிலும் எதிர்பார்க்கப்படாத ஒன்று அல்ல என்று வங்கதேசத்தின் ராஜ்ஜீய வட்டாரங்கள் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தன.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சகம் டாக்காவிற்கான இந்திய தூதர் பிரணாய் வர்மாவை அழைத்து, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருப்பது குறித்து கவலை தெரிவித்தது.
அவர் இந்தியாவில் இருப்பது “வங்கதேசத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தூண்டுவதற்கும் வரவிருக்கும் தேர்தல்களைச் சீர்குலைப்பதற்கும் வாய்ப்பளிக்கக் கூடும்” என்றும் கூறியது.
உண்மையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கமும், இந்தியாவில் நரேந்திர மோதி அரசாங்கமும் தூதர்களை அழைப்பதும், பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதும், பல்வேறு விவகாரங்களில் அறிக்கைகளை வெளியிடுவதுமான பல சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன.
புதன்கிழமை நடந்த சம்பவமும் அந்த வகையில் தான் அமைந்துள்ளது.
வங்கதேச தூதர் அழைக்கப்பட்டது ஏன்?
பட மூலாதாரம், Getty Images
வங்கதேசத்தில் ‘ஜூலை ஓய்க்யா’ என்ற அமைப்பு, புதன்கிழமை மதியம் டாக்காவில் உள்ள ‘இந்தியத் தூதரகத்தை நோக்கி ஒரு பேரணிக்கு’ அழைப்பு விடுத்திருந்தது. தூதரகத்தின் முன்னால் ஒரு ‘எதிர்ப்புப் போராட்டத்தை’ நடத்துவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
இருப்பினும், அன்று உள்ளூர் நேரப்படி மாலை 3:30 மணியளவில், வங்கதேச போலீசார் தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை பாதியிலேயே தடுத்து நிறுத்தினர்.
விஜய் திவாஸ் தினத்தன்று (டிசம்பர் 16), சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையால் (BSF) கொல்லப்பட்ட வங்கதேசச் சிறுமி ஃபெலானி கதுனின் நினைவாக, டாக்காவில் உள்ள ஒரு முக்கியமான சாலைக்கு ‘ஃபெலானி அவென்யூ’ என்று பெயரிடப்படும் என வங்கதேச இடைக்கால அரசாங்கம் அறிவித்தது.
“எல்லை கொலைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று வங்கதேச மக்கள் விரும்புகிறார்கள். எங்களது சகோதரி ஃபெலானி உயிரிழந்தார். இந்தியா செய்த இந்தக் கொடுமையின் நினைவை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்தச் சாலைக்கு ஃபெலானி சாலை என்று பெயரிட்டுள்ளோம்,” என்று வங்கதேசத்தின் கிராமப்புற மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சகம் மற்றும் வீட்டுவசதி மற்றும் பொதுப்பணி அமைச்சகத்தின் ஆலோசகர் அடிலூர் ரஹ்மான் கான் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில், உஸ்மான் ஹாடியைச் சுட்ட துப்பாக்கிதாரிகள் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று மூத்த என்சிபி தலைவர் ஹஸ்னத் அப்துல்லா சில நாட்களுக்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தார்.
அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா தனது மண்ணில் வங்கதேசத்தின் எதிரிகளுக்கு அடைக்கலம் கொடுத்தால், வங்கதேசமும் இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கு அடைக்கலம் கொடுத்து, இந்தியாவின் ‘ஏழு சகோதரிகள்’ என அழைக்கப்படும் மாநிலங்களை இந்தியாவிலிருந்து தனிமைப்படுத்த முயற்சிக்கும்,” என்று கூறினார்.
இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு வடகிழக்கு மாநிலங்கள் மிகவும் முக்கியமான மற்றும் உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால், ஹஸ்னத் அப்துல்லாவின் இந்தக் கருத்துகளை இந்தியா “தூண்டுதல்” நோக்கம் கொண்டதாகக் கருதியது.
குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பல ஆயுதமேந்திய பிரிவினைவாதக் குழுக்கள் முன்பு வங்கதேசத்தில் தஞ்சமடைந்திருந்ததாகவும், அந்நாட்டின் முந்தைய சில அரசாங்கங்கள் அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்ததாகவும் இந்தியா நம்புகிறது.
எனவே, ஹஸ்னத் அப்துல்லாவின் கருத்துகளைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று இந்திய அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதன் காரணமாகவே புதன்கிழமை காலை வங்கதேச தூதர் அழைக்கப்பட்டதாக தெற்கு பிளாக்கின் உயர்மட்ட அதிகாரிகள் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தனர்.
பின்னர், இந்தியாவின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “வங்கதேசத்தின் சமீபத்திய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு ‘தவறான பிம்பத்தை’ உருவாக்க சில குழுக்கள் முயல்கின்றன. அதை இந்தியா முற்றிலும் நிராகரிக்கிறது,” என்று கூறப்பட்டது.
மேலும் அந்த அறிக்கையில், “அந்நாட்டின் இடைக்கால அரசாங்கம் இந்தச் சம்பவங்களைச் சரியாக விசாரிக்கவோ அல்லது இந்தியாவுடன் அர்த்தமுள்ள ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ளவோ இல்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் ‘அமைதி மற்றும் நிலைத்தன்மை’ நிலவ, அங்கு ‘நேர்மையான, சுதந்திரமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கத் தேர்தல்கள்’ நடைபெற வேண்டும் என்று இந்தியா விரும்புவதாக வங்கதேச தூதர் ரியாஸ் ஹமிதுல்லாவிடம் மீண்டும் ஒருமுறை கூறப்பட்டது.
விடுதலைப் போரின் போது மேலோங்கிய நட்பு
பட மூலாதாரம், Riaz Hamidullah/X
செவ்வாய்க்கிழமை டெல்லியில் இந்தியா-வங்கதேச நட்புறவின் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தை இந்தியா கண்டது. இரு நாடுகளையும் சேர்ந்தவர்கள் 1971-ஆம் ஆண்டின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்திய வெளியுறவு கொள்கை தொடர்பாக மிகப்பெரும் ஆளுமையாகக் கருதப்படும் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் எம்.கே. ராஸ்கோத்ரா , வங்கதேச தூதரகத்தில் நடைபெற்ற விஜய் திவாஸ் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.
தற்போது 101 வயதாகும் ராஸ்கோத்ராவை, வங்கதேச தூதர் ரியாஸ் ஹமிதுல்லா நேரில் சென்று இந்த நிகழ்விற்கு அழைத்திருந்தார்.
டிசம்பர் 16, 1971 அன்று டெல்லியில் நடந்த நிகழ்வுகள் குறித்த தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதாகவும் ராஸ்கோத்ரா உறுதியளித்திருந்தார். அந்த காலகட்டத்தில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் நெருக்கமான ஆலோசகராக அவர் இருந்தார்.
கடைசி நேரத்தில் உடல்நலக் குறைவு காரணமாக அவரால் வர முடியாவிட்டாலும், வங்கதேச தூதர் அவரை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
உண்மையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வங்கதேச விடுதலைப் போரில் இந்தியாவும் வங்கதேசமும் தோளோடு தோள் நின்று போராடிய அந்த புகழ்பெற்ற வரலாற்றை அழிப்பதற்கான திட்டமிட்ட முயற்சிகள் அங்கு நடப்பதாக இந்தியாவில் உள்ள பல பார்வையாளர்கள் நம்புகின்றனர்.
இத்தகைய சூழலில், செவ்வாய்க்கிழமை வங்கதேச தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வெற்றி தினக் கொண்டாட்டமானது, இருதரப்பு உறவுகளுக்கு மிகவும் தேவையான ஒரு முயற்சி என்றும், ஒரு நேர்மறையான அறிகுறி என்றும் பார்வையாளர்கள் கருதினர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் இந்திய தூதர் ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், “டாக்காவில் உள்ள இடைக்கால அரசாங்கம் விஜய் திவாஸ் அணிவகுப்பைத் தொடர்ந்து இரண்டு முறை ரத்து செய்திருந்த நிலையில், இங்குள்ள அவர்களின் தூதரகம் இவ்வளவு ஆடம்பரமாக விஜய் திவாஸை கொண்டாடும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை,” என்றார்.
ஆனால், நட்புணர்வால் சூழப்பட்டிருந்த அந்த சூழல் வெகு விரைவில் சிதைந்துவிட்டது.

அந்த நிகழ்வு முடிந்து சில மணிநேரத்திலேயே, ‘வங்கதேச தூதர் உடனடியாக தெற்கு பிளாக்கிற்கு அழைக்கப்பட்டுள்ளார்’ என்ற செய்தி புதன்கிழமை முக்கியச் செய்திகளில் இடம்பெற்றபோது, உறவுகளை மேம்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் மீறி, இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையே சூழல் சரியாக இல்லை என்பதை அனைவரும் மீண்டும் ஒருமுறை உணர்ந்தனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு