பட மூலாதாரம், Getty Images
இந்திய தலைநகர் புது டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தின் முன்பாக சனிக்கிழமை இரவு சிலர் போராட்டம் நடத்தினர்.
வேறொரு சூழ்நிலையில், இதுவொரு சிறிய சம்பவமாக இருந்திருக்கும். ஆனால் வங்கதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் நிகழ்வுகளும், இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள சூழலும் கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம், திங்கட்கிழமை இரவு முதல் அனைத்து விசா சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
முன்னதாக, பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, அடுத்த அறிவிப்பு வரும் வரை சிட்டகாங் மற்றும் ராஜ்ஷாஹியில் உள்ள இந்திய தூதரகங்களிலும் விசா சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக இந்தியா அறிவித்திருந்தது.
வங்கதேசம் என்ன சொன்னது?
இந்தச் சம்பவத்திற்கு வங்கதேச வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் முன் நடந்த ஆர்ப்பாட்டம் மிகவும் கவலையளிக்கிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கதேச வெளியுறவு ஆலோசகர் தௌஹித் ஹுசைன், தூதரகப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அந்நாட்டின் பொறுப்பு என்று கூறினார். ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு வளையங்களை உடைத்துக் கொண்டு தூதரகத்தின் முன்பாக கோஷங்களை எழுப்பியதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வங்கதேச அரசு இந்தியாவிடம் முறைப்படி தனது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியா என்ன சொன்னது?
அதேநேரம், வங்கதேச தூதரகத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தை, வங்கதேசத்தில் இந்து இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் தாக்கி கொன்ற சம்பவத்துடன் இந்தியா தொடர்புபடுத்துகிறது.
அனைத்து வெளிநாட்டு தூதரக அதிகாரிகளின் பாதுகாப்புக்கும் இந்திய அரசு அதிக முன்னுரிமை அளிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், “இந்தச் சம்பவம் குறித்து வங்கதேச ஊடகங்களில் தவறான மற்றும் வலுவான பிரசாரம் பரப்பப்படுவதைக் கண்டுள்ளோம். உண்மையில், வங்கதேசத்தின் மைமென்சிங் பகுதியில் 20–25 இளைஞர்கள் மட்டுமே கூடினர்.
அவர்கள் இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியும், வங்கதேசத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரியும் போராட்டம் நடத்தினர்” என்று தெரிவித்தார்.
மேலும், “அந்த நேரத்தில் பாதுகாப்பை அச்சுறுத்தும் முயற்சி எதுவும் நடக்கவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சில நிமிடங்களில் அந்தக் குழுவினரைக் கலைத்தனர். சம்பவத்தின் வீடியோ ஆதாரம் அனைவரும் பார்க்கும் வகையில் பொதுவெளியில் உள்ளது” என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், @MEA
அமைச்சகத்தின் தகவல்படி, சம்பந்தப்பட்ட அமைப்புகள் உடனடியாக நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, தூதரக அதிகாரிகள் மற்றும் தூதரகத்திற்கு எந்தவிதச் சேதமும் ஏற்படாததை உறுதி செய்தன.
வியன்னா உடன்படிக்கையின்கீழ் அனைத்து வெளிநாட்டு தூதரகங்களுக்கும் பாதுகாப்பை வழங்க உறுதி பூண்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. அதோடு, வங்கதேச அதிகாரிகளுடன் தனது அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும் இந்தியா கூறியுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம், “சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்து எங்கள் ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தியுள்ளோம். திபு தாஸ் கொலைக்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளோம்” என்றார்.
இந்தியா, வங்கதேசம் இடையே அதிகரித்து வரும் ராஜ்ஜீய பதற்றம்
இந்தியா, வங்கதேசம் இடையிலான உறவு ஏற்கெனவே விரிசல் அடைந்துள்ள நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வங்கதேசத்தில் சமீபத்திய வன்முறை சம்பவங்கள் மற்றும் சில உயர்மட்ட கொலைகளைத் தொடர்ந்து, இந்தியா-வங்கதேச உறவுகள் பற்றிய விவாதங்கள் அரசியல் மற்றும் ராஜ்ஜீய மட்டங்களில் தீவிரமடைந்துள்ளன.
டாக்காவில் வெளியிடப்பட்ட பல நாளிதழ்களும் இந்தச் சம்பவத்திற்கு முக்கியத்துவம் அளித்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளுக்கு இதுவொரு முக்கியமான திருப்புமுனை என்று கூறியுள்ளன.
இதுபோன்ற சம்பவங்கள் இந்தியா, வங்கதேசம் இடையே, ஏற்கெனவே பதற்றமாக இருக்கும் இருதரப்பு உறவுகளை மேலும் சிக்கலாக்கும் என்று ராஜ்ஜீய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
எதிர்காலத்தில் தனது தூதரகப் பணிகளின் பாதுகாப்பில் எந்தக் குறைவும் ஏற்படாது என்று இந்தியாவிடம் தெளிவான உத்தரவாதத்தை வங்கதேசம் கோரியுள்ளது.
அதேநேரம், இந்தியா தனது சர்வதேச கடமைகளுக்கு உறுதி அளிப்பதாகவும், அனைத்து ராஜ்ஜீய அமைப்புகளின் பாதுகாப்பையும் தொடர்ந்து உறுதி செய்வதாகவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இளைஞர் தலைவர் உஸ்மான் ஷரீஃப் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வங்கதேசம் வன்முறை போராட்டங்களால் உலுக்கப்பட்டு வருகிறது. பல செய்தி அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன. தலைநகர் டாக்கா உள்பட நாடு முழுவதும் பல நகரங்களில் பெருமளவிலான போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதற்கிடையில், மைமென்சிங் பகுதியில் திபு சந்திர தாஸ் என்ற இளம் இந்து இளைஞர் ஒரு கூட்டத்தால் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. திபு தாஸ் மீது மதநிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இந்து இளைஞரின் இந்தக் கொலை, இந்தியாவையும் சர்வதேச சமூகத்தையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு எதிராக டெல்லியிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
பதற்றத்தை அதிகரிக்கும் தேர்தல் சூழல்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், நீண்டகால போராட்டங்களுக்குப் பிறகு வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பிரதமர் ஷேக் ஹசினா நாட்டை விட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்றார். அதன் பின்னர், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தில் செயல்பட்டு வருகிறது.
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தேசிய தேர்தல்கள் பிப்ரவரி 12 அன்று வங்கதேசத்தில் நடத்தப்படவுள்ளன. இதற்கிடையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை விதித்து ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இத்தகைய சூழலில்தான், இளம் தலைவர் உஸ்மான் ஹாதி கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் வங்கதேச அரசியல் சூழ்நிலையை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது. இதன் காரணமாக இந்தியா, வங்கதேசம் இடையிலான பதற்றமும் அதிகரித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
இந்தியா மீதான கோபம் வங்கதேசத்தில் அதிகரித்து வருவதற்கு அங்குள்ள அதிகார மாற்றம்தான் காரணம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும் தெற்காசிய விவகாரங்களில் நிபுணருமான பேராசிரியர் சஞ்சய் பார்த்வாஜ், “வங்கதேசத்தில் இரண்டு அரசியல் சித்தாந்தங்கள் உள்ளன. ஒன்று, இந்தியாவை போல மதச்சார்பற்ற தன்மையைக் கொண்டது. கலாசார தேசியத்துவத்தை முன்னிறுத்துவது. இதற்கு அவாமி லீக் தலைமை வகிக்கிறது.
இரண்டாவது அரசியல் சித்தாந்தம் இந்திய எதிர்ப்பு, அவாமி லீக் எதிர்ப்பு, வங்க கலாசார தேசியவாதம். இது மத அடையாளத்தை வலியுறுத்துகிறது. தற்போது, வங்கதேசத்தில் இரண்டாவது சித்தாந்தம் ஆட்சியில் உள்ளது. அதனால்தான் இந்தியாவுக்கு எதிரான சூழல் உருவாக்கப்படுகிறது” என்று கூறினார்.
வங்கதேசத்தின் தற்போதைய நிலவரத்திற்கு முக்கியக் காரணம், பிப்ரவரியில் நடைபெறவுள்ள தேசிய தேர்தல்கள் என்று பேராசிரியர் பார்த்வாஜ் நம்புகிறார்.
வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு வலுப்பெற்று வருவதாகவும், இரு நாடுகளில் நிலவும் உள்நாட்டு அரசியல் சூழலே இதற்கு முக்கியக் காரணம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் தெற்காசிய விவகாரங்களில் நிபுணரான பேராசிரியர் மகேந்திர லாமா, “இந்தக் கசப்புத் தன்மை அதிகரித்து வருவதற்கு மிகப்பெரிய காரணம் வரவிருக்கும் தேர்தல்கள்தான். அரசியல் கட்சிகள் இந்திய‑விரோத உணர்வை ஊக்குவித்து ஆட்சியைப் பிடிக்க விரும்புகின்றன. இது தெற்காசியாவில் முன்பு நடந்துள்ளது; உள்நாட்டுத் தேர்தல்களில் இந்திய‑விரோத உணர்வு ஒரு பிரச்னையாக பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

வங்கதேசம் பாகிஸ்தானுடன் நெருக்கமாகிறதா?
வங்கதேசம் 1971இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியாவுடன் நெருக்கமாக உள்ளது. இந்தியாவும் முந்தைய ஷேக் ஹசீனா அரசுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தது. இருப்பினும், கடந்த ஆண்டு நடந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, வங்கதேசம் இந்தியாவிடம் இருந்து விலகி இருப்பது போலத் தெரிகிறது.
வங்கதேசத்தில் பாகிஸ்தானின் செல்வாக்கு அதிகரித்து வருவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
வங்கதேசத்திற்கான முன்னாள் இந்திய தூதர் வீணா சிக்ரி இதுகுறித்துப் பேசியபோது, “முகமது யூனுஸ், உஸ்மான் ஹாதியின் அதே சித்தாந்தத்தைக் கொண்டவர். உஸ்மான் ஹாதி தனது இந்திய-விரோத கருத்துகளுக்காக அறியப்பட்டவர். அவர் வடகிழக்கு இந்தியாவை உரிமை கொண்டாடினார். யூனுஸ் ஆற்றிய உரையும், ஒரு மண்டபத்திற்கு உஸ்மான் ஹாதியின் பெயரைச் சூட்டுவதும், யூனுஸ் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளை ஊக்குவிப்பதாக ஷேக் ஹசீனா முன்வைத்த கூற்று சரியானது என்பதைக் காட்டுகிறது” என்று குறிப்பிட்டார்.
சமீபத்தில் ஏஎன்ஐ செய்தி முகமைக்குக் கொடுத்த நேர்காணலில் பேசிய வீனா சிக்ரி, “வங்கதேசத்தில் உருவாகியுள்ள கடுமையான இந்தியா‑விரோத போக்குகள் தானாக உருவானவை அல்ல. இதற்குப் பின்னால் வெளிப்புற தாக்கம் உள்ளது. கடந்த காலத்தில் பாகிஸ்தான் இவ்வாறான குழுக்களுக்கு வங்கதேசத்தில் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது. தற்போதைய நிகழ்வுகள் அந்தப் போக்கை நினைவூட்டுகின்றன” என்று விளக்கினார்.
மறுபுறம், இந்தியா, வங்கதேசம் இடையே அதிகரித்து வரும் பதற்றத்திற்கு ஒரு முக்கியக் காரணம் வங்கதேசத்தின் வெளியேற்றப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பதுதான் என்று பேராசிரியர் மகேந்திர லாமா நம்புகிறார்.
“வன்முறைப் போராட்டங்களைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. பிறகு அவர் இந்தியாவுக்கு வந்தார். இதற்காகவும் வங்கதேசம் இந்தியா மீது கோபமாக உள்ளது” என்று பேராசிரியர் லாமா கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
பேச்சுவார்த்தையே அடுத்தகட்ட நகர்வுக்கான வழி
இந்தியாவும் வங்கதேசமும் ஒரு நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. அவை தந்திரோபாய ரீதியாக முக்கியமானவை. இரு நாடுகளும் வலுவான வர்த்தக உறவுகளையும் கொண்டுள்ளன.
சமீப காலமாக வங்கதேசம் இந்தியாவுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது என்றாலும், இந்தியாவும்கூட கசப்பான அணுகுமுறையை வெளிப்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களின் அவலநிலை குறித்து இந்தியா வெளிப்படையாகக் கருத்து தெரிவித்து வருகிறது.
தற்போது இரு தரப்பிலும் கசப்புத்தன்மை அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதுகுறித்துப் பேசிய பேராசிரியர் லாமா, “வங்கதேசம் மற்றும் இந்தியா இடையிலான உறவுகள் மிகவும் நுட்பமான சூழ்நிலையில் உள்ளன. எந்தவொரு சிறிய சம்பவம் எங்கு நடந்தாலும், இரு தரப்பில் இருந்தும் மிகவும் கூர்மையான எதிர்வினைகள் ஏற்படுகின்றன” என்று கூறினார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட நின்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “இரு நாடுகளின் அரசுகளும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்க முடியும். இரு நாடுகளுக்கு இடையிலான இந்தக் கசப்பான உறவுகள் இந்தியாவுக்கும் சரி, வங்கதேசத்துக்கும் சரி நல்லதில்லை. வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, இரு நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்களும், பத்திரிகையாளர்களும், அரசியல்வாதிகளும் சந்திப்பதில்லை. இந்த நிலைமையை மாற்ற வேண்டும்,” என்றும் விவரித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு