படக்குறிப்பு, வங்கதேசத்தில் இந்து நபர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு எதிராக இந்தியாவில் போராட்டங்கள் வெடித்தன.கட்டுரை தகவல்
வங்கதேசத்தில் அண்மையில் நடந்த வன்முறைப் போராட்டங்களின்போது இந்து நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம், ஏற்கெனவே சிக்கலில் இருக்கும் இந்தியா – வங்கதேச உறவை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
இரு அண்டை நாடுகளும் உறவைச் சீர்குலைப்பதாகப் பரஸ்பரம் குற்றம் சாட்டி வரும் நிலையில், ஒரு காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த இருதரப்பு உறவு, சரிசெய்ய முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம், இந்தியாவில் இந்து தேசியவாத அமைப்புகளின் போராட்டங்களைத் தூண்டியுள்ளது. கடந்த வாரம், வங்கதேசத்தின் சிறுபான்மை இந்து சமூகத்தைச் சேர்ந்த 27 வயதான திபு சந்திர தாஸ், ‘மதநிந்தனை செய்ததாக’ குற்றம் சாட்டப்பட்டு, வடக்கு வங்கதேசத்தின் மைமென்சிங் என்ற பகுதியில் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
தலைநகர் டாக்காவில் மாணவர் தலைவரான ஷெரீப் உஸ்மான் ஹாதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வன்முறைப் போராட்டங்கள் வெடிப்பதற்குச் சில மணிநேரத்திற்கு முன்னதாக இந்தச் சம்பவம் நடந்தது.
ஹாதியின் ஆதரவாளர்கள், இந்தக் கொலையில் சந்தேகிக்கப்படும் முக்கிய நபர் அவாமி லீக் கட்சியுடன் (முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சி) தொடர்புடையவர் என்றும், அவர் இந்தியாவுக்கு சென்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டினர். இது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வை மேலும் தூண்டியது.
இருப்பினும், அந்தச் சந்தேகத்திற்குரிய நபர் நாட்டைவிட்டு வெளியேறியதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று வங்கதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய நாட்களில், டெல்லி உள்படப் பல நகரங்களில் இரு நாடுகளும் விசா சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன. மேலும், தத்தமது தூதரகங்களுக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்டதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.
பாதுகாப்பு தொடர்பான தங்களது கவலைகளைத் தெரிவிக்க, இரு நாடுகளும் தூதர்களை நேரில் வரவழைத்து விளக்கம் கோரியுள்ளன.
“இரு தரப்பிலும் பதற்றம் மேலும் அதிகரிக்காமல் இருக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக” கூறுகிறார் வங்கதேசத்திற்கான முன்னாள் இந்திய தூதர் ரிவா கங்குலி தாஸ்
அதேவேளையில் பிபிசியிடம் பேசிய அவர், வங்கதேசத்தில் நிலவும் ‘குழப்பமான சூழல்’ காரணமாக, அடுத்து என்ன நடக்கும் என்று கணிப்பது கடினம் எனவும் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஷெரீப் உஸ்மான் ஹாதி
வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு
வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு என்பது புதிய விஷயமல்ல.
வங்கதேசத்தின் ஒரு பகுதியினர், ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுக்கால ஆட்சியில் தங்கள் நாட்டின் மீது இந்தியாவின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகக் கருதி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மக்கள் எழுச்சியால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு இந்த எதிர்ப்பு அதிகரித்துள்ளது.
ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்ததில் இருந்தும், அவரைத் திருப்பி அனுப்புமாறு வங்கதேசம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இந்தியா இதுவரை அதற்குச் சம்மதிக்காததாலும் இந்தக் கோபம் மேலும் அதிகரித்துள்ளது.
ஹாதியின் கொலைக்குப் பிறகு, வங்கதேசத்தின் சில இளம் தலைவர்கள் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அண்மைய வாரங்களில், டாக்காவிலுள்ள இந்திய தூதரகத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை வங்கதேச பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்த வேண்டியிருந்தது.
கடந்த வாரம், சிட்டகாங்கில் உள்ள இந்திய துணைத் தூதரக கட்டடத்தின் மீது ஒரு கும்பல் கல்வீச்சு நடத்தியது. இது இந்தியாயை கடுமையாக அதிருப்தி அடையச் செய்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக 12 பேரை காவல்துறை கைது செய்தது, ஆனால் பின்னர் அவர்கள் எந்தக் குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்கப்பட்டனர்.
இந்தியாவிலும் இதற்குப் போட்டியாகப் போராட்டங்கள் நடந்தன. டெல்லியில் உள்ள தனது தூதரகத்திற்கு வெளியே இந்து அமைப்பினர் நடத்திய போராட்டத்திற்கு வங்கதேசம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், அது ‘நியாயமற்றது’ என்றும் கூறியது.
“இரு தரப்புக்கும் இடையே இத்தகைய சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் நான் இதற்கு முன் பார்த்ததில்லை,” என்று முன்னாள் வங்கதேச தூதர் ஹுமாயூன் கபீர் கூறினார்.
இரு நாடுகளும் சர்வதேச நடைமுறைகளின்படி தூதரகங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, திபு சந்திர தாஸ் கொலையைக் கண்டித்து வங்கதேசத்தில் நடந்த மௌனப் போராட்டம்.
சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த கேள்விகள்
(கீழே உள்ள சில விவரங்கள் வாசகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்)
வங்கதேசத்தில், ஆடைத் தொழிற்சாலை ஊழியரான தாஸ் கொடூரமான முறையில் ஒரு கும்பலால் கொல்லப்பட்டது இந்தியா தரப்பில் கோபத்தை அதிகரித்துள்ளது.
‘முகமது நபியை அவமதித்ததாகக்’ குற்றம் சாட்டப்பட்ட அவர், ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். பின்னர் அவரது உடல் ஒரு மரத்தில் கட்டப்பட்டு, தீ வைக்கப்பட்டது.
இந்தக் கொலையின் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன, இதற்கு இரு நாடுகளிலுமே கடுமையான கண்டனங்கள் எழுப்பப்பட்டன.
நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசு, “புதிய வங்கதேசத்தில் இத்தகைய வன்முறைக்கு இடமில்லை” என்று கூறியதுடன், கொலையில் தொடர்புடைய எவரும் தப்பிக்க முடியாது என்றும் உறுதியளித்தது.
தாஸ் கொலை தொடர்பாக 12 பேரை கைது செய்துள்ளதாக வங்கதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹசீனாவின் வெளியேற்றத்திற்குப் பிறகு மத அடிப்படைவாதிகள் அதிக ஆதிக்கம் செலுத்தி வருவதால், இந்தக் கொலை சம்பவம் வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மற்றும் சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தீவிர இஸ்லாமிய அமைப்புகள் நூற்றுக்கணக்கான சூபி தர்காக்களை சேதப்படுத்தியுள்ளன, இந்துக்களைத் தாக்கியுள்ளன, சில பகுதிகளில் பெண்கள் கால்பந்து விளையாடுவதைத் தடுத்துள்ளன மற்றும் இசை, கலாசார நிகழ்ச்சிகளையும் முடக்கியுள்ளன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கடந்த வாரம் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு எதிரான பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர்
கடந்த ஓராண்டில் வங்கதேசத்தில் அதிகரித்து வரும் ‘கும்பல் வன்முறை’ குறித்து மனித உரிமை அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளன.
“சமூகத்தின் கடும்போக்குவாதிகள் இப்போது தங்களை முதன்மையானவர்களாகக் கருதுகின்றனர். அவர்கள் நாட்டில் பன்மைத்துவத்தையோ, கருத்து வேறுபாடுகளையோ விரும்பவில்லை,” என்று வங்கதேச அரசியல் ஆய்வாளர் ஆசிப் பின் அலி கூறுகிறார்.
கடந்த வாரம் ‘தி டெய்லி ஸ்டார்’, ‘புரோதம் ஆலோ’ ஆகிய இரு வங்கதேச நாளிதழ்கள் மற்றும் ஒரு கலாச்சார மையம் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்த கும்பலில் இஸ்லாமிய கடும்போக்குவாதிகள் இருக்கலாம் என்று வங்கதேசத்தில் பலர் சந்தேகிக்கின்றனர். அந்த நாளிதழ்களும் மையமும் இந்தியாவுக்கு ஆதரவானவை என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
இடைக்கால அரசு மீதான விமர்சனங்கள்
சமீபத்திய வன்முறைகளைத் தடுக்கத் தவறியதற்காக வங்கதேச இடைக்கால அரசாங்கத்தை சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். போராட்டங்களுக்கு முன்பே, அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் முடிவுகளை எடுக்கவும் இடைக்கால அரசு தடுமாறியதால், அது விமர்சனங்களுக்கு ஆளானது.
அசோக் ஸ்வைன் போன்ற நிபுணர்கள், ‘இரு தரப்பிலும் உள்ள வலதுசாரி தலைவர்கள் தங்களின் நலனுக்காக மக்களைத் தூண்டும் விதமான அறிக்கைகளை வெளியிட்டு பதற்றத்தையும் பொதுமக்களின் கோபத்தையும் தூண்டுவதாக’ கூறுகின்றனர்.
ஸ்வீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தின் அமைதி மற்றும் மோதல் குறித்த ஆய்வுகளின் பேராசிரியரான ஸ்வைன், “இந்திய ஊடகங்களில் ஒரு பெரும் பகுதி, வங்கதேச நிகழ்வுகளை மிகைப்படுத்திக் காட்டுகின்றன. அந்த நாடு மதவாத குழப்பத்தில் மூழ்கி வருவதாகச் சித்தரிக்கின்றன” என்றார்.
பட மூலாதாரம், EPA/Shutterstock
படக்குறிப்பு, டாக்காவில் டிசம்பர் 19 அன்று ஷெரீஃப் உஸ்மான் ஹாதியின் மரணத்திற்குப் பிறகு நடந்த போராட்டத்தின் போது, போராட்டக்காரர் ஒருவர் அவரது புகைப்படத்தை ஏந்தியுள்ளார்.
மேலும், “வங்கதேசத்தின் ஸ்திரத்தன்மை இந்தியாவின் பாதுகாப்பிற்கு, குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களுக்கு மிக முக்கியமானது என்பதை மக்கள் உணர வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
வங்கதேசத்தின் இடைக்கால அரசு, அதன் கட்டுப்பாடு மற்றும் அதிகாரம் குறித்து விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், வங்கதேசத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களை எதிர்கொள்ள முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கமே சிறந்ததாக இருக்கும் என்று பரவலான கருத்து நிலவுகிறது.
பிப்ரவரி 12ஆம் தேதி வங்கதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் அதுவரை வன்முறை ஏற்படாமல் தடுப்பது யூனுஸுக்கு கடினமான பணியாக இருக்கும்.
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற இஸ்லாமிய அரசியல் கட்சிகள் பிஎன்பி-க்கு சவாலாக இருக்கலாம்.
தீவிர மதவாதக் கட்சிகள் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளைப் பயன்படுத்துவதால் வரும் நாட்களில் மேலும் வன்முறை ஏற்படக்கூடும் என்ற கவலை உள்ளது.
“இந்தியாவுக்கு எதிரான இத்தகைய அரசியலால் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியா அல்ல, வங்கதேச குடிமக்கள்தான் – குறிப்பாக மதச்சார்பற்ற சிந்தனை கொண்டவர்கள், நடுநிலையாளர்கள் மற்றும் சிறுபான்மையினர்,” என்று ஆசிப் பின் அலி எச்சரிக்கிறார்.
அடிப்படைவாதிகளை விமர்சிக்கும் எவரையும் “இந்தியாவுக்கு ஆதரவானவர்கள் என்று முத்திரை குத்தி அவர்களைத் தாக்குவதை நியாயப்படுத்த முடியும் என்பதே தற்போதைய சூழல்” என்று ஆசிப் பின் அலி கூறுகிறார்.
இந்தியாவின் அரசியல் தலைவர்கள் வங்கதேசத்தில் மாறி வரும் சூழலை அறிந்துள்ளனர்.
“வங்கதேசத்தின் 1971ஆம் ஆண்டு விடுதலைப் போருக்குப் பிறகு, அந்நாட்டின் தற்போதைய மாற்றங்கள், இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய ராஜ்ஜீய ரீதியிலான சவால்” என்று இந்திய நாடாளுமன்றக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
முன்னாள் வங்கதேச தூதர் ஹுமாயூன் கபீர், “இந்தியா எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு இருதரப்புக்கும் இடையிலான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வங்கதேசத்தை அணுக வேண்டும்” என்று கருதுகிறார்.
“நாம் அண்டை நாடுகள். ஒருவரையொருவர் சார்ந்து இருக்கிறோம்,” என்கிறார் கபீர்.
வங்கதேசத்தில் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவோம் என்று இந்தியா ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளது. இது தூதரக உறவில் புதிய தொடக்கத்திற்கு வழிவகுக்கும்.
அதுவரை, வீதிகளில் நிலவும் கோபம் இருதரப்பு உறவுகளை மேலும் பாதிக்க அனுமதிக்கக்கூடாது என்று இரு தரப்பு நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.