பட மூலாதாரம், Getty Images
இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ‘பிளவுபட்ட உலகத்திற்கு’ ஒரு மாற்று வழியை வழங்குகின்றன என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறியுள்ளார்.
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் இந்தியாவின் குடியரசு தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர்.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர் கூறியுள்ள நிலையில், இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் டெல்லி பயணத்தின் தொடக்கத்தில் இது கூறப்பட்டது.
நிலம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பிரச்னைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பதற்றங்கள் நிலவும் நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
“இந்தியாவும் ஐரோப்பாவும் ஒரு தெளிவான தேர்வை எடுத்துள்ளன: மூலோபாய கூட்டாண்மை, உரையாடல் மற்றும் வெளிப்படைத்தன்மை,” என்று உர்சுலா வான் டெர் லேயன் தனது ‘எக்ஸ்’ சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“பிளவுபட்ட உலகிற்கு மற்றொரு பாதை சாத்தியம் என்பதை நாங்கள் காட்டுகிறோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
வான் டெர் லேயன் சனிக்கிழமை (ஜனவரி 24) டெல்லிக்கு வந்தார். இதற்கு முன்னர், அவர் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் கலந்துகொண்டார். அங்கு பல ஐரோப்பிய தலைவர்கள் கிரீன்லாந்து மற்றும் வரிகள் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தனர்.