பட மூலாதாரம், Getty Images
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸை, காரகாஸ் நகரில் இருந்து அமெரிக்கா சிறைபிடித்தபோது, அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் ஒட்டுமொத்த உலகமே பிளவுபட்டது போலத் தோன்றியது.
ஒருபுறம், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சிக்கும் பல நாடுகளும், மறுபுறம் இதை ஆதரிக்கும் தரப்பும் உள்ளன.
ஆனால் இந்தியா இரு தரப்பிலும் இல்லை. அதாவது, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வகுத்த அணிசேரா கொள்கையில் இந்தியா உறுதியாக இருந்தது.
இந்தியாவின் அறிக்கை எந்த எதிர்ப்பையோ அல்லது ஆதரவையோ வெளிப்படுத்தவில்லை. மலேசியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் இந்தத் தாக்குதல் தொடர்பாக வெனிசுவேலாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்ததுடன், அமெரிக்காவின் நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்தன.
இந்நிலையில், தெற்குலக நாடுகளின் தலைவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்தியா, ஏன் மலேசியா அல்லது தென்னாப்பிரிக்காவை போல வலுவாக எதிர்வினையாற்றவில்லை என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.
ஆனால், ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தும்போது, இந்தியா எந்தப் பக்கமும் சாராமல் இருக்கும் தனது பழைய நிலைப்பாட்டைப் போலவே தற்போதைய எதிர்வினையையும் பல நிபுணர்கள் பார்க்கிறார்கள்.
அதில் இந்தியா எந்தவொரு பக்கத்திற்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியா மட்டுமல்ல, தெற்காசியாவில் உள்ள பிற நாடுகளின் எதிர்வினையும் நடுநிலையாக இருந்தது. வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் தாக்குதலை தெற்காசியாவில் எந்த நாடும் கண்டிக்கவில்லை.
”வெனிசுவேலாவில் அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளுக்கு தெற்காசிய நாடுகளின் அரசுகள் வரையறுக்கப்பட்ட அளவிலேயே பதிலளித்துள்ளன. இதனால் அவர்கள் (அமெரிக்க) நடவடிக்கைகளை ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தமல்ல.
பல நாடுகளின் பொருளாதாரம் பலவீனமாக இருப்பதால், அமெரிக்காவின் வரி நடவடிக்கைகள் மற்றும் முக்கிய வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைக் கருத்தில் கொண்டு, எச்சரிக்கையுடனும் நடைமுறையுடனும் செயல்படுகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது” என்று தெற்காசிய அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வரும் நிபுணர் மைக்கேல் குகல்மேன் எழுதியுள்ளார்.
மேலும், ”சில சந்தர்ப்பங்களில், இதற்கு முன் பின்பற்றப்பட்ட நடைமுறையையே தொடர்வதாகவும் கூறலாம். இந்தியா தனிப்பட்ட முறையில் எதிர்த்திருந்தாலும், வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்காத பல ராணுவ தலையீடுகள் மற்றும் படையெடுப்புகள் உள்ளன. இதற்கு மிகச்சிறந்த சமீபத்திய உதாரணம், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இத்தகைய எதிர்வினைக்கு காரணம் என்ன?
பட மூலாதாரம், Getty Images
வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கையைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுகுறித்த தனது முதல் அறிக்கையை வெளியிட்டது.
அதில், “வெனிசுவேலாவின் சமீபத்திய நிகழ்வுகள் மிகவும் கவலைக்குரியவை. அங்கு உருவாகி வரும் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்,” என்று கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை லக்ஸம்பேர்க்கில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இதே நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் வெனிசுவேலா மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
“இந்த நிகழ்வுகள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம், ஆனால் அனைத்துத் தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து, வெனிசுவேலா மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கு உகந்த ஒரு தீர்வை எட்டுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்றார் எஸ். ஜெய்சங்கர்.
இந்தியா ஏன் கண்டிக்கவில்லை?
மூலோபாய மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரான ஹேப்பிமோன் ஜேக்கப், இந்தியா முன்னெடுத்துள்ள இந்த நிலைப்பாடு ஒன்றும் புதியதல்ல என்று கூறுகிறார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள தொடர்ச்சியான பதிவுகளில், இந்தியாவின் இந்த எதிர்வினைக்குப் பின்னால் இருக்கும் ஐந்து காரணங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
பட மூலாதாரம், XNY/Star Max/GC Images
“இந்தியா யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலையே கண்டிக்கவில்லை, எனவே வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கையை அது கண்டிக்கும் வாய்ப்பு குறைவு. வல்லரசு நாடுகள் தங்களின் செல்வாக்கு மண்டலத்தில் இவ்வாறே செயல்படுகின்றன என்ற பொதுவான கருத்து இந்தியாவில் நிலவுவதாக நான் நினைக்கிறேன். ஒரு தரப்பு செய்வதையே மற்றொரு தரப்பு செய்யும்போது, ஒரு தரப்பை மட்டும் கண்டிக்குமாறு நெருக்கடி கொடுக்கப்படுவதை இந்தியா விரும்புவதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இது இரட்டை நிலைப்பாடா? இந்தியா ஒரு தரப்பை மட்டும் கண்டித்துவிட்டு மறுதரப்பை கண்டிக்காமல் இருந்தால்தான் அது இரட்டை நிலைப்பாடாக இருந்திருக்கும். டிரம்பின் கொள்கைகள் எப்படி இருந்தாலும், இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளுமே முக்கியமான கூட்டாளிகள். அத்தகைய கூட்டாளிகள் ஒரு நடவடிக்கையை எடுக்கும்போது, அதுவொரு பெரிய சட்டபூர்வ தவறாக இருந்தாலும், அதைப் பற்றி பேச மாட்டார்கள். மாறாகத் தமது நலன்களைப் பாதுகாக்கவும், தகவல் தொடர்பு வழிகளைத் திறந்து வைக்கவும் சில நேரங்களில் மௌனமாக இருப்பதுமே சிறந்தது” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“தனது வெளியுறவுக் கொள்கை மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டைத் தடுப்பதில் இந்தியாவுக்கு நீண்ட வரலாறு உண்டு. இந்தியா தம்மிடம் தனிப்பட்ட முறையில் பேசும் கூட்டாளிகளையே மதிக்கிறது. நாங்கள் ‘மெகாஃபோன் டிப்ளோமசி’ மீது நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல” என்கிறார் அவர்.
“ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது அமெரிக்காவிடம் இருந்து உறுதியான ஆதரவு கிடைக்காததன் மூலம், அமெரிக்காவின் அணுகுமுறை பரிவர்த்தனை சார்ந்தது என்பதை இந்தியா முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளது. இப்போது நாம் அமெரிக்காவை கண்டித்தால், அடுத்த நெருக்கடியின்போது அது நமது எதிரிகளின் பக்கம் நிற்கும் என்பது கிட்டத்தட்ட உறுதி” என்று ஜேக்கப் குறிப்பிட்டுள்ளார்.
யுக்ரேனோ அல்லது வெனிசுவேலாவோ இந்தியாவின் அண்டை நாடுகளைப் போல் மூலோபாய ரீதியாக மிக முக்கியமானவை அல்ல என்றும் ஜேக்கப் கூறியுள்ளார்.
எனவே, அமெரிக்காவின் நடவடிக்கைகளைக் கண்டிப்பதால் கிடைக்கும் நன்மைகளைவிட, அதன் விளைவாக அதிக விலையைக் கொடுக்க நேரிடும் என்பது முக்கியமானது என்று அவர் கருதுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவை நோக்கி எழுப்பப்படும் கேள்விகள்
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோரின் எதிர்வினைகள் இந்தியாவில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.
அன்வர் இப்ராகிம் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை தெளிவாக மீறுவதாகும் மற்றும் இறையாண்மை கொண்ட ஒரு நாட்டிற்கு எதிராக நியாயமற்ற முறையில் பலத்தைப் பயன்படுத்துவதற்குச் சமமாகும். அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி காலதாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டும். காரணம் எதுவாக இருந்தாலும், வெளிப்புற சக்திகளால் ஓர் அரசாங்கத்தின் தலைவரை வலுக்கட்டாயமாக அகற்றுவது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
“வெனிசுவேலா மக்கள் தங்கள் சொந்த அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிப்பார்கள். வரலாற்றின்படி வெளிப்புற சக்திகளால் ஏற்படும் எந்தவொரு திடீர் அதிகார மாற்றமும் நன்மையைவிட தீமையையே அதிகம் விளைவித்துள்ளது” எனவும் அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரு, அன்வர் இப்ராகிமின் பதிவை மேற்கோள் காட்டி, “இந்தியா ஏன் மலேசியாவை போல எதிர்வினையாற்றவில்லை? மலேசிய பிரதமரின் எதிர்வினை ஆச்சரியமாக இருக்கிறது” என்று எழுதியுள்ளார்.
இதற்கிடையில், சிரில் ராமபோசா ஒரு வீடியோ அறிக்கையில் அமெரிக்காவின் நடவடிக்கையைக் கண்டித்தார்.
அவரது அறிக்கையைப் பாராட்டிய ஒரு சமூக ஊடக பயனர், “இந்தியா ஒரு காலத்தில் உரிமை கோரிய தெற்குலக தலைமைத்துவத்தை தென்னாப்பிரிக்கா மீண்டும் ஒருமுறை நிரூபித்து வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல், ”யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ராணுவத் தலையீட்டை நாம் கண்டிக்கவில்லை, மாறாகப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தோம் மற்றும் இது போருக்கான காலம் அல்ல என்பதை வலியுறுத்தினோம். இதைக் கருத்தில் கொண்டு மற்றும் நமது நிலைப்பாட்டில் ஒரு சீரான தன்மையை வெளிப்படுத்த, நாம் கண்டனம் தெரிவிக்கத் தேவையில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை நாம் நினைவூட்டலாம்” எனத் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
”நாடுகளின் இறையாண்மை, சமத்துவம் மற்றும் சுதந்திரத்தை மதிப்பதன் அவசியத்தை நாம் வலியுறுத்தலாம். தன்னிச்சையான நடவடிக்கைகளைத் தவிர்க்கவும், ஐநா சாசனத்தைக் கடைபிடிக்கவும், சர்வதேச சட்டத்தை மீறாமல் இருக்கவும் நாம் அழைப்பு விடுக்கலாம்.”
“சர்வதேச ஒழுங்கின் அடிப்படை அடித்தளங்களைச் சிதைக்கும் முன்னுதாரணங்களை சர்வதேச அளவில் உருவாக்குவதற்கு எதிராக நாம் ஆலோசனை வழங்கலாம். கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய முயற்சிகளுக்கு அழைப்பு விடுக்கலாம் மற்றும் இரட்டை நிலைப்பாடுகளைத் தவிர்க்கலாம். பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்களில் அதிகரித்து வரும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மையால் வளரும் நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நாம் கவலை தெரிவிக்கலாம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் அணிசேராக் கொள்கை
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா யுக்ரேன் மீது தாக்குதல் நடத்தியபோதும் இந்தியாவின் நிலைப்பாடு நடுநிலையாகவே இருந்தது.
ரஷ்யாவின் அந்தத் தாக்குதலை இந்தியா இதுவரை பகிரங்கமாகக் கண்டிக்கவில்லை.
யுக்ரேனில் அமைதி நிலவ வேண்டும் என்றும் ராஜ்ஜீய பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இந்தியா பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், எந்தவொரு தனிப்பட்ட தரப்புடனும் சேராமல் இருக்கும் இந்தியாவின் இந்தக் கொள்கை ஒன்றும் புதியதல்ல.
இந்திய வெளியுறவுக் கொள்கையில் இந்த அணிசேரா கொள்கைக்கான அடித்தளம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் அமைக்கப்பட்டது. அவருக்குப் பின் வந்த அரசுகளும் இந்தக் கொள்கையைத் தங்கள் பாணியில் பின்பற்றி வருகின்றன.
கடந்த 1957ஆம் ஆண்டு, ஹங்கேரியில் சோவியத் யூனியன் தலையிட்டு ஓர் ஆண்டு கழித்து, இந்தியாவின் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்த விஷயத்தில் இந்தியா சோவியத் யூனியனை ஏன் கண்டிக்கவில்லை என்பது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கினார்.

“உலகில் ஆண்டுதோறும், நாளுக்கு நாள் நமக்குப் பிடிக்காத பல விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் நாம் அவற்றைக் கண்டிக்கவில்லை, ஏனெனில் ஒரு பிரச்னைக்குத் தீர்வு தேடும்போது கண்டனம் தெரிவிப்பது எந்த வகையிலும் உதவாது,” என்று நேரு கூறினார்.
தி இந்து நாளிதழின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆசிரியர் ஸ்டான்லி ஜோனி, இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்படும் காலங்களில் நேருவின் இந்தக் கொள்கையே இந்தியாவை வழிநடத்தி வந்ததாக எழுதியுள்ளார்.
கடந்த 1956இல் ஹங்கேரியில் சோவியத் யூனியனின் தலையிட்டதாக இருந்தாலும், 1968இல் செக்கோஸ்லோவாக்கியாவில் தலையிட்டதாக இருந்தாலும், 1979இல் ஆப்கானிஸ்தானில் தலையிட்டதாக இருந்தாலும், இவை அனைத்திலும் இந்தியாவின் நிலைப்பாடு ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே இருந்தது.
கடந்த 2003இல் அமெரிக்கா இராக் மீது படையெடுத்தபோதும் இந்தியாவின் நிலைப்பாடு அதே போன்றுதான் இருந்தது.
யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பைக் கண்டிக்காததும், ஐ.நா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் தவிர்த்ததும், இந்தியாவின் வரலாற்று ரீதியான நடுநிலை நிலைப்பாட்டில் இருந்து அடிப்படையில் மாறுபட்டவை அல்ல என்று ஸ்டான்லி ஜோனி குறிப்பிட்டுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு