பட மூலாதாரம், Indiaportsgloballimited
மத்திய பட்ஜெட்டில், இரானில் உள்ள சாபஹார் துறைமுகத் திட்டத்திற்காக இந்தியா எந்த நிதியையும் ஒதுக்கவில்லை.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில், சாபஹார் துறைமுகத்திற்காக 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
2017–18 ஆம் ஆண்டிலிருந்து சாபஹார் துறைமுகத்தில் இந்தியா முதலீடு செய்து வருகிறது. இரானுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது இதுவே முதல்முறையாகும்.
சாபஹார் துறைமுகத்திலிருந்து இந்தியா விலகுவதற்கான முக்கிய காரணங்களாக, அமெரிக்காவின் அதிகரித்து வரும் அழுத்தமும், மாறி வரும் புவிசார் அரசியல் சூழலும் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இரானின் உலகளாவிய நிலை பலவீனமடைந்துள்ளதும், சாபஹார் திட்டத்தில் இந்தியா தொடர்ந்து முதலீடு செய்யாததற்கான மற்றொரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
அமெரிக்கா விதித்த தடைகள், பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை மற்றும் மாறிவரும் புவிசார் அரசியல் சூழல் காரணமாக கடந்த காலத்திலேயே சாபஹார் திட்டத்தின் முன்னேற்றம் தேக்கமடைந்தது.
தற்போது, இந்தியா நிதி ஒதுக்கவில்லை என்பதால், இந்தத் திட்டம் முற்றிலும் நின்றுவிடக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
சாபஹார் துறைமுகம் இந்தியாவிற்கு ஏன் முக்கியம்?
சாபஹாரில் இரண்டு முனையங்கள் உள்ளன. ஹோர்முஸ் நீரிணைக்கு வெளியே இது அமைந்துள்ளதால், பெரிய கப்பல்களுக்கு இது பாதுகாப்பான துறைமுகமாகக் கருதப்படுகிறது. மேலும் இது பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்திலிருந்து வெறும் 170 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
இந்த துறைமுகம் அமைத்துள்ள கடற்பகுதியை இந்தியா நீண்ட காலமாக ஒரு மாற்று உத்தி சார்ந்த பாதையாகக் கருதி வருகிறது.
சர்வதேச வட – தெற்கு போக்குவரத்து வழித்தட திட்டத்தில் சாபஹார் துறைமுகம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால், இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் பாதை எளிதாகியிருக்கும். அதே நேரத்தில், இரான் மற்றும் ரஷ்யாவுக்கும் இது பெரும் பயன் அளித்திருக்கும்.
2016 மே மாதத்தில், பிரதமர் நரேந்திர மோதி இரானுக்கு பயணம் செய்தார். அந்த பயணமானது 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் இந்தியப் பிரதமர் இரானுக்கு மேற்கொண்ட முதல் பயணம் ஆகும்.
அந்தப் பயணத்தின்போது, இந்தியா– இரான் –ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுக்கிடையேயான கூட்டுறவின் கீழ், சாபஹார் துறைமுகத்தை மேம்படுத்தி, இயக்க 550 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படும் என மோதி அறிவித்தார்.
அதன் பின்னர், மாறி வரும் புவியியல் அரசியல் சூழல்களைப் பொறுத்து, சாபஹாரில் இந்தியாவின் பங்கு மற்றும் ஆர்வம் ஏற்ற இறக்கத்தை கண்டுள்ளது.
பாகிஸ்தானைத் தவிர்த்து, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய சந்தைகளை நேரடியாக இந்தியா அணுகுவதற்கு இந்த துறைமுகம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
உத்தி சார்ந்த முக்கியத்துவம்
பட மூலாதாரம், AFP via Getty Images
சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் மற்றும் குவாதர் துறைமுகத்திற்கு இடையேயான சமநிலையாகவும் சாபஹார் துறைமுகம் பார்க்கப்படுகிறது.
2024 மே 13 அன்று, சாபஹார் துறைமுகத்தின் ஷஹீத் பெஹிஷ்தி முனையத்தை 10 ஆண்டுகள் இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
ஆப்கானிஸ்தானுடன் வர்த்தகம், மனிதாபிமான உதவி மற்றும் பிராந்திய இணைப்பை தொடர்ந்து பேணுவதற்காக, சாபஹார் துறைமுகத்தின் ஷஹீத் பெஹிஷ்தி முனையத்தின் செயல்பாட்டில் இந்தியா பங்கெடுத்தது.
2016-ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் உடன்படிக்கையின் கீழ், சாபஹார் துறைமுகத்தின் ஷஹீத் பெஹிஷ்தி முனையத்தை இந்தியா தொடர்ந்து இயக்கி வந்தது.
2018-ஆம் ஆண்டு, அமெரிக்கா சாபஹார் திட்டத்துக்கு தடைகளிலிருந்து விலக்கு அளித்திருந்தது. ஆனால், டிரம்ப் ஆட்சி காலத்தில் அந்தத் தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டன.
டெல்லியில் நடைபெற்ற ஜி–20 உச்சி மாநாட்டின் போது, புதிய வர்த்தக வழித்தடத்தை உருவாக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்ட பிறகு, சாபஹார் திட்டத்தின் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழத் தொடங்கின.
இந்தியா–ஐரோப்பா–மத்திய கிழக்கு வழித்தடம் உருவாக்கப்பட்டால், சாபஹார் துறைமுகம் தனது முக்கியத்துவத்தை இழக்கக்கூடும் என்றும், இது இரானுக்கு ஒரு புறக்கணிப்பாகவும் பார்க்கப்பட்டது.
ஆனால், 2024ஆம் ஆண்டில் இந்தியா – இரான் இடையே கையெழுத்தான வரலாற்றுச் சிறப்பு மிக்க சாபஹார் ஒப்பந்தத்திற்குப் பிறகு, இந்தத் துறைமுகத்தின் முக்கியத்துவம் குறையவில்லை என்ற கருத்து நிலவியது. இப்போது, அதன் எதிர்காலம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், இந்தத் துறைமுகம் வழியாக இந்தியா ஆயிரக்கணக்கான டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது. இருப்பினும், இந்த முக்கியமான துறைமுகம் செயல்படுவதில் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
பட மூலாதாரம், Getty Images
இந்தியா மீது அமெரிக்காவின் அழுத்தம் உள்ளதா?
கடந்த ஆண்டு செப்டம்பரில், இரானின் சாபஹார் துறைமுகத்துடன் தொடர்புடைய தரப்புகள் மீது அமெரிக்கா தடைகள் விதிப்பதாக அறிவித்தது.
இருப்பினும், இந்தத் தடைகளிலிருந்து இந்தியாவுக்கு ஆறு மாத விலக்கை அமெரிக்கா வழங்கியது. தற்போதும் அந்த விலக்கு அமலில் உள்ளது. ஆனால், அது அடுத்த சில மாதங்களில் முடிவடைய உள்ளது.
மத்திய பட்ஜெட்டில் சாபஹார் துறைமுகத்திற்காக இந்தியா நிதி ஒதுக்காததற்கான மிகப் பெரிய முக்கியமான காரணம் அமெரிக்கத் தடைகள் குறித்த அச்சமே என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மனோஹர் பரிக்கர் பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்தின் சர்வதேச விவகார ஆய்வாளர் முனைவர் முதாசிர் கமார், “சாபஹார் துறைமுகம் தொடர்பான அமெரிக்கத் தடைகளிலிருந்து இந்தியாவுக்கு வழங்கப்பட்ட ஆறு மாத விலக்கு அடுத்த சில மாதங்களில் முடிவடையவுள்ளது. அமெரிக்கத் தடைகளே இந்தியாவின் மிகப்பெரிய கவலையாக உள்ளது. அதனால்தான் இந்த பட்ஜெட்டில் சாபஹாருக்கு இந்தியா நிதி ஒதுக்கவில்லை.” என்றார்.
சர்வதேச விவகார நிபுணர் பேராசிரியர் ஃபஜ்ஜூர் ரஹ்மான் கானும், சாபஹார் திட்டத்திலிருந்து இந்தியா விலகுவதற்கான முதன்மை காரணமாக இதையே குறிப்பிடுகிறார்.
இந்தியா அமெரிக்கா உறவுகளில் சில இடர்ப்பாடுகள் காணப்பட்டாலும், அமெரிக்காவுடன் உள்ள உறவுகளுக்கு இந்தியா தொடர்ந்து முக்கியத்துவம் அளிப்பதாகவும், அந்த நாட்டை கோபப்படுத்த இந்தியா விரும்பாது என்றும் பேராசிரியர் ஃபஜ்ஜூர் ரஹ்மான் கான் வாதிடுகிறார்.
“இந்தியாவுக்கு அமெரிக்கா தேவை. உலகின் ஒரு சூப்பர் பவரை கோபப்படுத்தும் அபாயத்தை இந்தியா தவிர்த்து வருகிறது,” என்று ஃபஜ்ஜூர் ரஹ்மான் கூறுகிறார்.
இதற்கிடையில், அமெரிக்கத் தடைகளை நீக்க வாய்ப்பு இருந்திருந்தால், சாபஹார் துறைமுகத்தில் இந்தியா நிச்சயமாக தனது முதலீட்டைத் தொடர்ந்திருக்கும் என முதாசிர் கமார் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியா பின்வாங்குகிறதா?
சமீபத்தில், சாபஹார் துறைமுகத்திலிருந்து இந்தியா விலகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
சாபஹார் துறைமுகத்தின் செயல்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுக்க, அமெரிக்காவுடன் மட்டுமல்லாது இரானுடனும் தொடர்பில் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

“புவிசார் அரசியலில் நிலையற்ற தன்மை அபாயத்தை அதிகரித்துள்ளது. இரான் போரின் விளிம்பில் உள்ளது. இத்தகைய சூழலில், இரானில் பெரிய முதலீடு செய்வது மிகுந்த அபாயத்தை ஏற்படுத்தும். தற்போதைய சூழல் எப்போது வேண்டுமானாலும் மோசமடையக்கூடும் என்பதால், இந்தியா அங்கு பெரிய முதலீட்டை அபாயமாகவே பார்க்கிறது.” என்கிறார் பேராசிரியர் ஃபஜ்ஜூர் ரஹ்மான்.
இதுபோன்ற கருத்தையே முனைவர் முதாசிர் கமாரும் கூறுகிறார்.
“புவிசார் அரசியல் சூழலும், இரானில் நீடிக்கும் நிலையற்ற தன்மையும் முக்கிய காரணங்களாக உள்ளன. ஆனால், இந்தியா சாபஹாரிலிருந்து முற்றிலும் விலகிவிட்டதாகச் சொல்ல முடியாது,” என்று அவர் கூறுகிறார்.
” 2024-ஆம் ஆண்டு சாபஹார் துறைமுகத்தை இயக்குவதற்கான புதிய 10 ஆண்டுகால ஒப்பந்தத்தை இந்தியா கையெழுத்திட்டுள்ளது. ஆகவே, இந்தியா சபஹாரிலிருந்து முழுமையாக விலகாது, எனத் தெரிவித்தார்.
சாபஹார் துறைமுகத்திலிருந்து முற்றிலும் விலகுவதற்குப் பதிலாக, இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு தூதரகத் தீர்வை கண்டுபிடிக்கும் என முனைவர் முதாசிர் கமார் கூறுகிறார்.
”சாபஹார் துறைமுகம், குறிப்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவுடன் இந்தியாவின் அணுகலுக்கு மிகவும் முக்கியமானது. எனவே, இந்த முக்கிய துறைமுகத்திலிருந்து இந்தியா எளிதில் விலகாது. இங்கு இந்தியாவுக்கு பெரிய முதலீடு உள்ளது” என்று முனைவர் முதாசிர் கமார் கூறுகிறார் .
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு