தற்போது, இந்தியாவின் பொருளாதாரம் சீனாவை விட பின்தங்கிய நிலையில் இருப்பதாக புகழ்பெற்ற எழுத்தாளர், கட்டுரை ஆசிரியர் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர் ருசிர் ஷர்மா கருதுகிறார்.
இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த, அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மக்களுக்கான நலத்திட்டங்களையும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான திட்டங்களையும் சமநிலைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் கூறினார்.
சமீபத்தில், பிபிசியின் ஆசிரியர்கள் மற்றும் ஹிந்தியின் பத்திரிகையாளர்களுடன் ருசிர் ஷர்மா நீண்ட நேரம் உரையாடினார்.
இந்த உரையாடலில், உலகப் பொருளாதாரம், அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான போட்டி, இந்தியப் பொருளாதாரம் மற்றும் நரேந்திர மோதி அரசின் திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
ருசிர் ஷர்மா 2002 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். அமெரிக்கா சென்று தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட இந்தியர்களில் அவரும் ஒருவர்.
டிரம்பின் மறுவருகை இந்தியாவிற்கு பலனளிக்குமா? பாதிக்குமா?
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு திரும்பியிருப்பது எந்த அளவு இந்தியாவிற்கு பலனளிக்கும் என்ற கேள்விக்கு, “டிரம்பின் சிந்தனை உத்தி சார்ந்தது என்பதைவிட பரிவர்த்தனை சார்ந்தது. எனவே, இந்தியாவுடன் எப்படி தொழில் செய்யலாம் என்பதில்தான் அவரது கவனம் இருக்கும். இந்தியா சீனாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டால் அதில் அமெரிக்காவின் பங்கு என்னவாக இருக்கும் என்றுதான் சிந்திப்பார். எனவே ஒட்டுமொத்தமாக இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் பரிவர்த்தனை சார்ந்து இருக்கும்” என்று அவர் பதில் அளித்தார்.
இந்திய பிரதமர் மோதி மற்றும் டிரம்ப் இடையிலான பரஸ்பர உறவு குறித்தும் சாமானிய இந்தியர்கள் அக்கறை கொண்டுள்ளனர். இதன் மூலம் இந்தியா பலனடையாதா என கேட்டபோது அவர், “நட்புக்கு பலன் உண்டு. ஆனால் டிரம்பை பொறுத்தவரை பரிவர்த்தனைகளே மிக முக்கியமானவை. டிரம்பிற்கு நண்பர்கள் இல்லை, அவருக்கு மக்களை தெரியும் அவ்வளவுதான் என டிரம்பை தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். அவருக்கு உண்மையான நண்பர்கள் யாரும் இல்லை. அவருக்கு பலரைத் தெரியும், ஆனால் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை என்பதுதான் அவரது இயல்பு. எனவே டிரம்பை தனது நண்பர் என்றும், அதன்மூலம் ஏதாவது பலன் கிடைக்கும் என ஏதாவது நாடு கருதினால், அது நடப்பது கடினம்”, என்று கூறினார்.
டிரம்ப் அதிபரானபிறகு அமெரிக்காவில் என்ன மாற்றங்கள் ஏற்படும், அவர் சந்திக்கவேண்டிய சவால்கள் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த ருசிர் ஷர்மா, “இன்றைய அமெரிக்கா இரண்டு திசைகளில் சென்றுகொண்டிருக்கிறது. ஒரு புறம் அமெரிக்காவில் அரசியல் துருவமயமாக்கப்படுவதாக கேள்விப்படுவீர்கள். குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயக கட்சியினரிடையே பகைமையுணர்ச்சியுள்ளது. அதே நேரம் அந்நாட்டிலுள்ள நிலை குறித்து மக்கள் திருப்தியில்லாமல் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் உள்ள அரசியல் அமைப்பு மக்களுக்காக செயல்படவில்லை என அங்கிருக்கும் ஒவ்வொரு சராசரி அமெரிக்க மக்களுக்கும் தோன்றுகிறது,” என்றார்.
“மறுபக்கம், உலகில் இருக்கும் அத்தனை பணமும் அமெரிக்காவிற்கு சென்றுகொண்டிருக்கிறது. அதனால்தான் டாலரின் மதிப்பு, ரூபாய் மற்றும் இதர கரன்சிகளை விட மிக அதிகமாக உள்ளது. டிரம்ப் பதவிக்கு வந்தபின் இது இன்னமும் வேகம் கண்டுள்ளது. ஒரு புறம் அமெரிக்காவிற்குள் இவ்வளவு பணம் செல்வது, பங்குச் சந்தைகள் வளர்ச்சி காண்பது, டாலரின் மதிப்பு உயர்வது என இந்த முரண்பாட்டை டிரம்பால் எப்படி சமாளிக்க முடியும் என எனக்குத் தெரியவில்லை. அதே நேரம் செயற்கை நுண்ணறிவை பொறுத்தவரை அமெரிக்கா மிகவும் வலுவான நிலையில் இருக்கின்றது.”
முதலாளித்துவம் மற்றும் ஜனநாயகம் குறித்து அவர் என்ன சொன்னார்?
‘வாட் வென்ட் ராங் வித் கேப்பிடலிசம்’ என்ற தனது புத்தகத்தில் முதலாளித்துவத்தை வலுப்படுத்த ஜனநாயகம் அவசியம் என குறிப்பிடுகிறார் ருசிர் ஷர்மா.
“பல முதலாளித்துவ நாடுகளில் அரசின் பங்கு அதிகரித்திருக்கிறது, எனவே அதை முதலாளித்துவம் என சொல்வது சரியாக இருக்காது. முதலாளிதுவ நாடுகளில் ஒரு தனி நபரின் பொருளாதார சுதந்திரத்தில் எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்காது. ஆனால், தொழில்கள் மீது பல விதிகள் திணிப்பு, பெரிய நிறுவனங்களுக்கு உதவுவது, அவை நொடிந்து விடாமல் காப்பது என அரசின் பங்கு அதிகமாவிட்டது. எனவே மேற்கத்திய சமுதாயத்தில் முதலாளித்துவம் என்பதன் வரையறை மாறிவிட்டது.” என்றார்
எனினும், ஜனநாயக நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் நாட்டிற்குள் அபாயங்கள் அதிகரித்து விட்டன.
ஜனநாயகம் பலவீனமடைந்துவரும் நாடுகளுக்கு முதலாளித்துவம் பரவினால், அது மக்களுக்கு எவ்வளவு பாதுகப்பானதாக இருக்கும் என கேட்கப்பட்ட போது, அவர் “ஜனநாயக நாடுகள் மிகவும் பாதிப்படைந்திருக்கின்றன என சொல்வது மிகவும் சரியானதுதான். ஆனால், நீங்கள் சீனாவை பார்த்தால், கடந்த ஐந்து முதல் பத்து வருடங்களில் அங்கும் ஏராளமான பிரச்னைகள் இருந்திருக்கின்றன” என்று சொன்னார்.
“எனவே ஒரு சர்வாதிகார அரசு ஆட்சிக்கு வந்தால், பொருளாதாரம் முன்னேறும் என சொல்வதானால், அவ்விதம் நடக்கவில்லை என சொல்வதற்கு சீனா ஒரு உதாரணம். சீனாவில் ஷி ஜின்பிங் ஏராளமான தவறுகளை செய்ததைப் போல, நாட்டின் ஆளுமை தவறு செய்தால், அதுவும் பொருளாதாரத்தை கவிழ்க்க முடியும்.”
முதலாளித்துவம் மற்றும் சோசியலிசம் என்ற இரண்டு பொருளாதார கொள்கைகளில் எது சிறந்தது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ” மேற்கத்திய நாடுகளில் நாம் இன்று காணும் முதலாளித்துவம் உண்மையான முதலாளித்துவம் அல்ல. முதலாளித்துவத்திற்கான அடித்தளத்தை அமைத்த தத்துவவாதிகள் இன்றைய முதலாளித்துவத்தை பார்த்தால், இது முதலாளித்துவம் அல்ல என சொல்வார்கள். முதலாளித்துவ அமைப்பில் ஏராளமான போட்டிகள் தேவை. அங்கு மக்களுக்கு கூடுதல் சுதந்திரம் தேவை,” என்றார்.
சீனா எவ்விதம் இந்தியாவிற்கு முன்னிலையில் உள்ளது?
ஏழைகளின் உரிமை பற்றியும் முதலாளித்துவம் பேசுவதாக ருசிர் ஷர்மா நம்புகிறார். 1960 மற்றும் 1970 வரை சீனா முழுவதும் சோசியலிசம் அடிப்படையிலேயே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
1970-க்கு பின், சீனா முதலாளித்துவத்தை பின்பற்றத் தொடங்கியது , அதன் பின்னர் சீனாவில் எவ்வளவு வளர்ச்சி ஏற்பட்டது என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால் முக்கியமான கேள்வி என்னவென்றால், கடந்த நூறு ஆண்டுகளில் உலகம் முழுவதும் எங்கேனும் முதலாளித்துவதிற்கான சிறந்த உதாரணம் பார்க்கப்பட்டிருக்கிறதா? என்பதுதான்.
இதற்கு, ருசிர் ஷர்மா,” முதலாளித்துவம் கொள்கை செயல்படும் மூன்று நாடுகளை எனது நூலில் குறிப்பிட்டுள்ளேன். அதில் முதல் நாடு ஸ்விட்சர்லாந்து. இன்று உலகிலேயே மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்று ஸ்விட்சர்லாந்து ஆகும். அவர்களது தனிமனித வருமானம் அமெரிக்காவை விடவும் அதிகம்”, என்றார்.
“இதைத் தவிர நான் தாய்வான் மற்றும் வியட்நாமை நான் உதாரணமாக குறிப்பிட்டுள்ளேன். வியட்நாமும் முன்னர் சோசியலிச நாடாகத்தான் இருந்தது. பின்னர் கடந்த 20-30 ஆண்டுகளில் அவர்கள் தங்களது பொருளாதாரத்தை பெருமளவு தாராளமயமக்கியுள்ளனர். இன்று, இந்தியாவுக்கு வருவதைவிட அதிகமான அன்னிய நேரடி முதலீடு வியட்நாமிற்கே செல்கிறது.”
இந்தியாவை பொறுத்தவரை, “இந்தியாவில் அரசின் பங்களிப்பு மிகவும் அதிகமாக இருந்திருக்கிறது தொழில்களை ஆதரிப்பதும், முதலாளித்துவத்தை ஆதரிப்பதும் வெவ்வேறானவை. இந்தியாவில் பெரும்பாலான கொள்கைகள் வெகு சிலரை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இதில் பெரும் தொழிலதிபர்களுக்கு ஒரு முக்கிய பங்கிருக்கிறது.”
“சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அரசு நிறைய சுதந்திரம் தரவேண்டும் என நான் சொல்லி வந்திருக்கிறேன். ஆனால் இந்தியாவில் தொழில் செய்வதே கடினமானதாக மாற்றும் அளவுக்கு ஏரளாமான கட்டுப்பாடுகள் உள்ளன. நாம் இந்த வேறுபாட்டை புரிந்துகொள்ளவேண்டும். முதலாளித்துவத்திற்கு ஆதரவாக இருப்பதற்கும் பெரிய தொழில்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.” என்றார்
இந்தியாவில் நரேந்திர மோதி அரசு மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்படிருப்பதற்கான காரணங்கள் குறித்து பேசிய ருசிர் ஷர்மா, “கடந்த 5-10 வருடங்களில், இந்தியாவில் அரசுக்கு எதிர்ப்பு அலை கணிசமாக குறைந்திருக்கிறது. ஆட்சியில் இருக்கும் 50 விழுக்காட்டிற்கு மேல் அரசுகள் இப்போது தேர்தலில் வெற்றி பெற்று மீண்டு அரசு அமைக்கின்றன.”
“மிக முக்கிய மாற்றம் இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் நிறைய பலன்களை பெறுகின்றனர். அரசு ரூ.1 செலவு செய்தால் 15 பைசா தான் மக்களை சென்றடைவதாக 1980-ல் ராஜீவ் காந்தி கூறினார். ஆனால் இப்போது இதில் மாற்றம் நிகந்துள்ளது. கடந்த 5-10 ஆண்டுகளில் அரசு மக்களுக்கு பணம் அனுப்பினால், அதில் பெரும்பகுதி மக்களை நேரடியாக சென்றுச் சேர்க்கிறது. மகாராஷ்டிராவிலும், ஹரியாணாவிலும் பெருமளவு பணம் மக்களை சென்றடைவதை பார்த்தோம். அதனால் அரசு மீண்டும் வெற்றி பெற்றது.” என்றார் ருசிர் ஷர்மா
இலவச வாக்குறுதிகளின் தாக்கம் என்ன?
அரசியல் கட்சிகள் திட்டங்களைஅறிவிப்பதன் மூலம் ஒன்றோடொன்று போட்டியிடுகின்றன.
இந்த இலவசங்கள் என்ன என்றும் அது நிலையான ஒரு திட்டமாக இருக்க முடியுமா என்றும் ருசிர் ஷர்மாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ” இது நிலையான ஒன்றல்ல. இதை இரண்டு நாடுகளின் உதாரணத்தை வைத்து நாம் புரிந்துகொள்ளமுடியும். ஒருபுறம் எதிர்காலத்தில் பிரேசில் ஒரு மிகப்பெரிய பொருளாதாரமாக உருவாகும் என 1970 வரை, பலர் கருதினார். மற்றொருபுறம் 1970-ல் சீனா மிகவும் பின் தங்கியிருந்தது.”
“1980கள் மற்றும் தன்னை ஒரு நலப்பணி அரசாக உருவாக்குவதில் பிரேசில் குறியாக இருந்தது. இதற்காக அவர்கள் ஏராளமாக செலவு செய்தார்கள். இதனால் அவர்களது வளர்ச்சி விகிதம் இரண்டு விழுக்காடு அளவில் தேக்கம் கண்டதுடன், கடன்களும் மிகவும் அதிகரித்தது. அதே நேரம் சீனாவில் பொருளாதார விவகாரங்களின் அரசின் பங்கு குறையத் தொடங்கியது. 1990-ல் சீனா 10 கோடி பேரை பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து பணி நீக்கம் செய்ததுடன், மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தவும் மறுத்தது. இந்த இரண்டு நாடுகளின் மாதிரியிலிருந்து இந்தியாவும் ஏதாவது கற்றுக்கொள்ள முடியும்.”
“இந்தியாவில் ஒரு முதலீட்டாளராக எனக்கிருக்கும் மிகப்பெரிய அபாயம், கடந்த 5-7 ஆண்டுகளில் இந்தியா உருவாக்கிய சமநிலை தற்போது மோசமடைய தொடங்கியிருக்கிறது. ஏனென்றால் இப்போது அரசு நலத்திட்டங்களில் அதிகம் செலவிட்டு, கட்டமைப்பு வசதிகளில் குறைவாக செலவிடுகிறது. இதனால் நமது வளர்ச்சி விகிதம், சீனாவினுடையதைப் போல் எப்போதும் இருக்காது.”
MNREGA-விற்கு நிதியை குறைப்பதால் ஏற்படும் தாக்கம் என்ன?
இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MNREGA) ஏழைகளின் நலனுக்காக செயல்படும் ஒரு திட்டம். ஆனால் அரசு MNREGA-விற்கு நிதியை குறைத்திருப்பதுடன் மற்றொருபுறம் பணக்காரர்களுக்கு நிவாரண வசதிகள் அளிக்கப்படுகின்றன.
“நான் நிவாரண தொகுப்புகள் வழங்குவதற்கு முற்றிலும் எதிரானவன். அமெரிக்காவில் நீண்ட காலமாக தனியர் நிறுவனங்களுக்கு நிவாரண தொகுப்புகள் வழங்கப்படவில்லை. ஆனால் 1980 முதல் அது அமெரிக்காவில் வேகமாக உயர்ந்தது.” என கூறுகிறார் ருசிர் ஷர்மா.
இந்திய பொருளாதாரம், சீனாவைப் போல 9-10 விழுக்காடு வளர்ச்சி காண்பதற்கு ருசிர் ஷர்மா சில ஆலோசனைகளையும் முன்வைக்கிறார்.
“சீனாவைப் போல் 9-10 விழுக்காடு வளர்ச்சியுடன் முன்னேற விரும்பினால், இதை அடைய சீனா என்ன செய்தது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். நாம் 9 முதல் 10 விழுக்காடு வளர்ச்சி விகிதத்துடன் முன்னேறுவோம், அதுதான் அதிகபட்ச மக்களுக்கு உதவும் என சீனா கூறியது. ”
”சமமான பலன்கள் என்பது மக்களுக்கு ஒரே மாதிரியான பலன்கள் கிடைக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அனைத்து மக்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் சமமான வாய்ப்புகள் வழங்கவேண்டும் என்பதுதான் முக்கியம்”
யார் வேண்டுமானாலும் அமெரிக்காவிற்கு சென்று வெற்றி பெறாலாம் என சொல்லப்படுகிறது, இது தற்போதைய சூழ்நிலையிலும் முற்றிலும் உண்மையா?
இந்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இல்லை, இதில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆய்வு தரவுகளை ஆராய்ந்தால், அமெரிக்காவில் 50 வருடங்களுக்கு முன்னர் 80 விழுக்காடு மக்கள் தங்களது வாழ்க்கை தங்கள் பெற்றோர் வாழ்க்கையை விட சிறப்பாக இருந்தது என சொல்வார்கள். ஆனால் இன்று 30 விழுக்காடு மக்கள்தான் இதைச் சொல்கிறார்கள். எனவே அமெரிக்காவில் நிறைய மாறியிருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் இன்னமும் நிறைய நல்ல விஷயங்கள் உள்ளன. அதனால்தான் அனைத்து புலம்பெயர்வோர் மத்தியிலும் அமெரிக்கா மிகவும் விரும்பப்படும் இடமாக உள்ளது. “
இந்தியாவைப் பற்றிய உலக நாடுகளின் பார்வை குறித்து பேசிய அவர், “அமெரிக்காவில் மக்கள் பேசிக்கொள்ளும் ஒரு விஷயம் என்னவென்றால், இந்தியர்களின் மதிப்பு மிகவும் அதிகரித்திருக்கிறது என்பதுதான். இந்திய அடையாளம் மிகவும் வலுவாக உள்ளது உண்மைதான். பெரிய நிறுவனங்களில் செயல் அதிகாரிகள் இந்தியர்கள் என்பதை மக்கள் பார்க்கிறார்கள். இந்தியர்கள் மிகவும் புத்திசாலிகள் என அவர்கள் நம்புகின்றனர். இதை அரசு தனது சொந்த நன்மைக்காக பயன்படுத்திக்கொண்டால் அது வேறு விஷயம். ஆனால் பெரும்பாலான முதலீட்டாளர்கள், இந்தியா தொழில் செய்வதற்கு கடினமான நாடு என்றுதான் கருதுகின்றனர்.”
அமெரிக்க வரிகள் இந்தியாவுடனான வர்த்தகத்தை பாதிக்கிறது
ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள பல நாடுகள் அமெரிக்காவுடன் உபரி வர்த்தகமும், சீனாவுடன் வர்த்தக பற்றாக்குறையும் கொண்டிருக்கின்றன.
அமெரிக்கா வரிகளை உயர்த்த வாய்ப்புள்ள சூழலில், இந்தியா போன்ற நாடுகளில் தொழில்களுக்கு இது எவ்விதம் இருக்கும்?
இது தொடர்பாக பேசிய ருசிர் ஷர்மா, ” இந்தியாவும் அதன் வர்த்தகத்தை -குறிப்பாக அதன் அண்டை நாடுகளுடனான வர்த்தகத்தை அதிகரிக்கவேண்டும். வெற்றி பெற்ற பல நாடுகள் தங்களது அண்டை நாடுகளுடன் பெரிய அளவு வர்த்தகம் செய்கின்றன. 2014-ல் மோதி அரசு பதவியேற்றபின்னர், அண்டை நாடுகளுடனான வர்த்தகத்தை அதிகரிக்க அது அதிக அக்கறை காட்டியது.”
“இருப்பினும் கடந்த 11 ஆண்டுகளில் இந்த வர்த்தகம் அதிக வளர்சியடையவில்லை. நீங்கள் உலக அளவில் கருதினால், அண்டை நாடுகளுடனான வர்த்தகம் தெற்கு ஆசியாவில்தான் மிகவும் குறைவாக உள்ளது.”
இந்தியாவில் 2011ஆம் ஆண்டிற்கு பிறகு சமூக-பொருளாதார கணக்கெடுப்பு நடைபெறவில்லை. முக்கிய தரவுகளை வெளியிடுவதில்லை என அரசின் மீது அடிக்கடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்தியாவின் பிம்பம் சிறப்பாக தெரியும்படி தரவுகள் தயாரிக்கப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய ருசிர் ஷர்மா,”இந்தியாவின் தரவுகளின் முறை மிகவும் மோசமாக உள்ளது. அது எல்லா வகையிலும் சரிசெய்யப்படவேண்டியுள்ளது. இதற்கான போதிய வழிமுறை இல்லாததும், திறமையின்மையும்தான் பிரச்னை என கருதுகிறேன். நிதிசார் உலகில், முதலீட்டாளார்கள் அரசின் தரவுகளை கவனிப்பதைவிட அவர்களது சொந்த குறிகாட்டிகள் குறித்தே அதிக கவனம் செலுத்துவார்கள். எனவே நாங்கள் அரசின் தரவுகளை அவ்வளவாக நம்புவதில்லை”.
வரும் நாட்களில் சர்வதேச சந்தையில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறையப் போகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “‘பிரேக் அவுட் நேஷன்’ என்ற எனது புத்தகத்தில், பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரம் உலகில் ஆதிக்கம் செலுத்தும் என்றும் அமெரிக்கா சரியத் தொடங்கும் என்றும் சொல்லியிருந்தேன். ஆனால் இன்று முதலீட்டு உலகில் அமெரிக்காவே அனைத்து ஆதிக்கத்தையும் கொண்டிருப்பதாக நம்புகிறேன்.”
“எனவே 12 ஆண்டுகளுக்கு முன் என் புத்தகத்தில் நான் எழுதியிருந்ததெல்லாம் இன்று பொய்யாகி வருகின்றன. ஏனென்றால் இன்று சீனா, பிரேசில் மற்றும் இதர பிரிக்ஸ் நாடுகளில் பெரிய அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு, முதலீடு செய்ய அமெரிக்காவே ஏற்ற இடமாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். ஆனால் இதற்கு பின்னரும், அமெரிக்காவின் ஆதிக்கம் சற்று குறையும் என நான் நம்புகிறேன். எனவே எல்லாவற்றையும் ஒரே சந்தையில் முதலீடு செய்யாமல், அமெரிக்காவிற்கு வெளியே உள்ள சந்தைகளிலும் முதலீடு செய்யுங்கள் என்பதே எனது அறிவுரை.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.