பட மூலாதாரம், Getty Images
இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் என்றாலே அது பாக்ஸ் ஆபிஸ்தான். இத்தனை வருடங்கள் கடந்த பின்பும், சுவாரஸ்யம் குறையாத ஒன்றாகவே அது திகழ்கிறது.
தற்போது இரு அணிகளும் சமபலத்தில் இல்லாவிட்டாலும், களத்துக்கு வெளியே நிகழும் சம்பவங்கள் இந்தியா–பாகிஸ்தான் ஆட்டத்துக்கு பரபரப்பை குறையாமல் பார்த்துக்கொள்கின்றன. சமீபத்திய உதாரணம், ஆசிய கோப்பை லீக் போட்டியில் இரு அணி கேப்டன்களும் பரஸ்பரம் கைக்குலுக்காததும், அதையடுத்து ஏற்பட்ட சர்ச்சைகளும்.
இந்தியா–பாகிஸ்தான்: மாறுபட்ட கிரிக்கெட் பாரம்பரியங்கள்
ஆசிய கண்டத்தை சேர்ந்த அணிகள் என்றபோதும், இரு அணிகளின் கிரிக்கெட் பாரம்பரியம் முற்றிலும் மாறுபட்டவை. தொடக்கம் முதலே இந்தியா பேட்டிங்கிலும் பாகிஸ்தான் பந்துவீச்சிலும் பலம்வாய்ந்ததாக திகழ்கின்றன. இந்தக் கதை தேசப் பிரிவினைக்கு முன்பாக ஆரம்பிக்கிறது.
பாகிஸ்தான் என்கிற தேசம் மட்டுமல்ல; பாகிஸ்தான் கிரிக்கெட்டும் எப்போதுமே ஒரு புதிர்தான் என்கிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாறு குறித்து எழுதிய பீட்டர் ஓபான்.
1947 வரை ஒரே தேசமாக இருந்தாலும் கிரிக்கெட் பாரம்பரியத்தைப் பொறுத்தவரை இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரெதிர்த் துருவங்கள். 1845 வரை இன்றைக்குப் பாகிஸ்தான் வரைபடத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்டிருக்கவில்லை. அதனால் மேற்கத்திய ஆட்டமான கிரிக்கெட்டும் மேற்கத்திய நாகரிகமும் தாமதமாகப் பாகிஸ்தானுக்கு அறிமுகமாயின.
கிரிக்கெட் இந்தியர்களுக்குக் கிழக்கிந்திய கம்பெனி வணிகர்கள் மூலமாகவும் பாகிஸ்தானியர்களுக்கு பிரிட்டிஷ் ராணுவத்தினர் மூலமாகவும் அறிமுகமானது. பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ள இதுவொரு முக்கியமான கண்ணி.
பிரிவினைக்குப் பிறகு முதல் தர கிரிக்கெட்டின் தரத்தைத் தக்கவைப்பதற்குப் பாகிஸ்தானிடம் போதிய நிதி வலிமையோ உள்கட்டமைப்பு வசதிகளோ இருக்கவில்லை. இந்தக் கட்டமைப்பு குறைபாடு இன்றளவும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நீடித்துவருகிறது.
பட மூலாதாரம், Getty Images
“நல்ல பேட்ஸ்மேன் உருவாவதற்குக் கட்டமைப்பு தேவை. ஆனால் பந்துவீச்சாளருக்கு அது பெரிதாகத் தேவையில்லை” என்கிறார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆதர்டன்.
பாகிஸ்தானில் பேட்டிங் ஒரு பாரம்பரியமாக எழுந்து நிற்காதற்கு பாகிஸ்தானியர்கள் தங்கள் சுற்றத்தாரை நகலெடுத்து அவர்களை போல அப்படியேச் செய்யும் கேட்ச் பிஹேவியர் (Catch Behaviour) ஒரு காரணம் என்கிறார் பீட்டர் ஓபான்.
அப்படி பிந்தொடர்வதற்கு பாகிஸ்தானியர்களுக்கு ஃபாசல் மகமூத் தொடங்கி இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயிப் அக்தர் என வெற்றிகரமான வேகப்பந்துவீச்சுப் படை இருக்கிறது.
இந்திய ரசிகர்களுக்கு கவாஸ்கர், சச்சின், கோலி ஆதர்சம் என்றால் பாகிஸ்தானியர்களுக்கு வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அக்தர் போன்றவர்களே ஆதர்ச நட்சத்திரங்கள்.
இத்தனை குறைபாடுகளுக்கு பிறகும், பாகிஸ்தானில் கிரிக்கெட் ரசிகர்களின் மனங்கவர்ந்த விளையாட்டாக உள்ளது. பாகிஸ்தான் என்ற தேசத்தின் இருப்புக்கும் கருத்துக்கும் ஏதோவொரு வகையில் கிரிக்கெட் பங்களிக்கிறது என்கிறார் பீட்டர் ஓபான்.
இந்தியா–பாகிஸ்தான் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு அணிகளின் கிரிக்கெட் பாரம்பரியமும் (பேட்டிங், பவுலிங்) துலக்கமாக வெளிப்பட்ட இரு முக்கிய போட்டிகள் குறித்து பார்க்கலாம்.
2007 டி20 ஃபைனல்: கடைசி ஓவர் திரில்லரில் சொதப்பிய மிஸ்பா–உல்–ஹக்
பட மூலாதாரம், Getty Images
2007 டி20 உலகக்கோப்பை ஃபைனல் இந்தியா–பாகிஸ்தான் மோதல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக கருதப்படுகிறது.
டி20 ஃபார்மட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சச்சின், டிராவிட் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஒதுங்கிக்கொள்ள, இளம் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி தென்னாபிரிக்காவுக்கு பறந்தது.
இந்த தொடரில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி சமனில் முடிய, பெனால்டி ஷூட் அவுட் பாணியில் நடைபெற்ற பவுல்–அவுட் டை-பிரேக்கரில், சேவாக், உத்தப்பா, ஹர்பஜன் ஆகியோர் ஸ்டம்புகளை தகர்த்து, இந்தியாவை 3-0 என்ற கணக்கில் பவுல் அவுட் முறையில் வெற்றி பெறவைத்தனர்.
பாகிஸ்தான் கேப்டன் சோயப் மாலிக், முன்னணி பந்துவீச்சாளர்கள் யாசர் அராஃபத், உமர் குல், ஷாஹித் அஃப்ரிடி ஆகியோரிடம் பொறுப்பை ஒப்படைக்க, சொல்லி வைத்தது போல அனைவரும் சொதப்பினர்.
டை-பிரேக்கர் நிலை ஏற்பட்டால் தயாராக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த தோனி, ஆட்டத்துக்கு முன்பாக சேவாக், உத்தப்பா, ஹர்பஜன் ஆகியோரை அதற்கேற்றவாறு பயிற்சிபெற அறிவுறுத்தினார். தோனியின் மதிநுட்பமான கேப்டன்சி வெளிப்பட்ட தருணம் அது.
பட மூலாதாரம், Getty Images
ரோஹித்தின் அதிரடி கேமியோ
ஐசிசி கூட்டத்தில் டி20 உலகக்கோப்பைக்கு கடைசிவரை எதிர்ப்பு தெரிவித்த, இந்தியா–பாகிஸ்தான் அணிகள் ஃபைனலில் பலப்பரீட்சை நடத்தியது வரலாற்று நகைமுரண். கடைசியாக 83–ல் உலகக்கோப்பை வென்ற இந்தியாவும், 92–ல் உலகக்கோப்பை வென்ற பாகிஸ்தானும் மல்லுக்கட்டுவதால் இரு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவியது.
ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. காயம் காரணமாக சேவாக் விலக, கம்பீருடன் தொடக்க ஆட்டக்காரராக யூசுஃப் பதான் களமிறங்கினார். அதிரடி தொடக்கத்துக்கு பிறகு அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தபோதும், 14–வது ஓவரிலேயே இந்திய அணி 100 ரன்களை எட்டியதால், 170–180 ரன்கள் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், யுவராஜ் சிங், தோனி விக்கெட்களை அடுத்தடுத்த ஓவர்களில் உமர் குல் கைப்பற்றியதால், இந்திய அணியின் ரன் வேகம் மட்டுப்பட்டது. கடைசிக் கட்டத்தில் ரோஹித் சர்மாவின் (30) அதிரடி கைகொடுக்க, இந்தியா இன்னிங்ஸ் முடிவில் 157 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் கம்பீர் அதிகபட்சமாக 75 (54) ரன்கள் குவித்தார்.
தோனியின் நம்பிக்கையை காப்பாற்றிய ஜோஹிந்தர் சர்மா
பட மூலாதாரம், Getty Images
முதல் ஓவரிலேயே ஹபீஸ் (1) விக்கெட்டை கைப்பற்றிய ஆர்பி சிங், தனது இரண்டாவது ஓவரில் கம்ரான் அக்மலை டக் அவுட் செய்து பெவிலியன் அனுப்பினார். அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தபோதும் அதிரடியை குறைக்காத இம்ரான் நசீர், புயல் வேகத்தில் ரன் சேர்க்க, 6 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 53 ரன்களை குவித்தது.
ஆனால், நசீர், யூனிஸ் கான், மாலிக், அஃப்ரிடி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 12–வது ஓவரில் 77 ரன்களுக்கு 7 விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது. ஆட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என நினைக்கையில், தனி ஒருவனாக தாக்குப்பிடித்த மிஸ்பா–உல்–ஹக், ஹர்பஜன் வீசிய 17–வது ஓவரில் 3 சிக்சர்களை விளாசினார்.
ஶ்ரீசாந்த் வீசிய அடுத்த ஓவரில், தன்வீர் 2 சிக்சர்களை அடிக்க, கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலைக்கு ஆட்டம் சூடுபிடித்தது; களத்தில் இருந்தது கடைசி விக்கெட் என்பதால் இந்தியாவுக்கும் நம்பிக்கை இருந்தது. ஹர்பஜனின் முந்தைய ஓவரை மிஸ்பா சிதறடித்ததால் வேறு வழியின்று அனுபவமற்ற மித வேகப்பந்து வீச்சாளர் ஜோஹிந்தர் சர்மாவிடம் பொறுப்பை ஒப்படைத்தார் தோனி.
முதல் பந்தை வைடாக வீசிய ஜோஹிந்தர் சர்மா, மாற்றுப்பந்தை சரியாக வீசினார். பதற்றத்தில் அடுத்த பந்தை ஃபுல் டாஸாக ஜோஹிந்தர் வீச, அதை அநாயாசமாக சிக்சருக்கு அனுப்பினார் மிஸ்பா. 4 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்திய ரசிகர்கள் கிட்டத்தட்ட நம்பிக்கை இழந்துவிட்டனர்.
கடும் அழுத்தத்தில் இருந்த ஜோஹிந்தரிடம், கேப்டன் தோனி ஓடிச்சென்று ஆற்றுப்படுத்தி சில ஆலோசனைகளை கூறினார். ஓவரின் மூன்றாவது பந்தை முழு நீளத்தில் ஸ்டம்ப் லைனில் ஜோஹிந்தர் வீச, அதை தனக்கு பிடித்தமான ஸ்கூப் ஷாட் அடிக்க முயன்ற மிஸ்பா, ஶ்ரீசாந்த்திடம் கேட்ச் கொடுத்து பாகிஸ்தான் ரசிகர்களின் கனவை தகர்த்தார். இன்றளவும் இரு அணி ரசிகர்களுக்கும் மறக்க முடியாத போட்டியாக இது திகழ்கிறது.
1999 சென்னை டெஸ்ட்: சிவசேனா எதிர்ப்பும் சச்சின் போராட்டமும்
பட மூலாதாரம், Getty Images
இந்திய–பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத போட்டிகளின் வரிசையில், 1999 சென்னை டெஸ்ட்டுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. இந்த டெஸ்ட், முதலில் டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடத்தப்படவிருந்தது.
பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியில் இருந்த சிவசேனா கட்சியின் தொண்டர்கள் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தை சேதப்படுத்தியதால், சென்னை சேப்பாக்கத்துக்கு மாற்றப்பட்டது.
சென்னை டெஸ்ட் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பாக, பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பையில் பிசிசிஐ தலைமையகம் அடித்து நொறுக்கப்பட்டது.
டெஸ்ட் தொடங்குவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக, சென்னையில் பாகிஸ்தான் உடனான போட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தீக்குளித்தார்.
இதன் காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 9 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் மோதும் டெஸ்ட் என்பதால், கிரிக்கெட் உலகம் சென்னை டெஸ்ட்டை உன்னிப்பாக கவனித்தது.
டக் அவுட்டாகி ஏமாற்றிய சச்சின்
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம், இந்திய அணியை பந்துவீச பணித்தார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 238 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பாகிஸ்தானின் முகமது யூசுஃப், விக்கெட் கீப்பர்–பேட்டர் மொயின் கான் தலா 60 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் அனில் கும்ப்ளே 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் டிராவிட், அசாருதீன் இருவரின் அரை சதங்களின் உதவியுடன் 16 ரன்கள் முன்னிலை பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிராக தனது ஐந்தாவது டெஸ்ட்டை விளையாடிய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின், முதல் இன்னிங்ஸில் சக்லைன் முஷ்டாக்கின் தூஸ்ராவை கணிக்க முடியாமல் டக் அவுட்டாகி 3 பந்துகளில் வெளியேறினார்.
பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சக்லைன் முஷ்டாக் 5 விக்கெட்களும் அப்ரிடி 3 விக்கெட்களும் கைப்பற்றினர். பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் ஷாஹித் அப்ரிடியின் அதிரடி சதத்தின் (141) துணை கொண்டு 286 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இந்தியாவுக்கு 271 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பாகிஸ்தானை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சென்னை ரசிகர்கள்
பட மூலாதாரம், Getty Images
சுழலுக்கு சாதகமான களத்தில் இலக்கை விரட்டிய இந்தியா, ஒருகட்டத்தில் 82 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. சச்சின்– நயன் மோங்கியா இணை 136 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தது. அரைசதம் அடித்த மோங்கியா ஆட்டமிழந்தவுடன் அணியை கரைசேர்க்க வேண்டிய பொறுப்பு சச்சின் தலையில் இறங்கியது.
ஒருபக்கம் சீட்டுக்கட்டு போல விக்கெட்டுகள் சரிந்தாலும் முதுகு காயத்தையும் பொருட்படுத்தாமல் அதிரடியாக வெற்றி இலக்கை துரத்திய சச்சின், கடைசியில் சக்லைன் முஷ்டாக் பந்தில் 136 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி தோற்றபோதும் சிறந்த டெஸ்ட் ஆட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த டெஸ்ட்டில் இந்தியா ஒரு மகத்தான போராட்டத்தை வெளிப்படுத்தியும் 12 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது. வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணிக்கு சென்னை ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி தங்கள் பரந்த மனப்பான்மையை வெளிப்படுத்தி, பாகிஸ்தான் அணியினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு