இந்தியா vs பாகிஸ்தான்: ராணுவ வலிமை யாருக்கு அதிகம்?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் உச்சத்தில் உள்ளது.
இரு நாடுகளின் அரசியல் தலைமையும் பரஸ்பரம் பதிலடி கொடுக்கும் விதமாகக் கடுமையான எச்சரிக்கைகளையும், காட்டமான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு முழுமையான பெரிய போருக்கு வழிவகுக்கும் வகையிலான ராணுவ நடவடிக்கைகளை இந்தியா எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் புறந்தள்ளிவிட முடியாது என்று தெற்காசிய நாடுகளின் அரசியலை கண்காணிக்கும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ராணுவ வலிமை குறித்த 2025 ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் இந்தியாவைவிட 8 இடங்களில் பின்தங்கியுள்ளது என்று குளோபல் ஃபயர் பவர் இணையதளத்தில் உள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய ராணுவ சக்தியைப் பொறுத்தவரை, 2025ஆம் ஆண்டில் 145 நாடுகளில் இந்தியா 4வது இடத்தில் இருக்கிறது, பாகிஸ்தான் 12வது இடத்தில் இருக்கிறது.
இந்திய ராணுவத்திடம் சுமார் சுமார் 22 லட்சம் ராணுவ வீரர்கள், 4,201 டாங்கிகள், 1.5 லட்சம் கவச வாகனங்கள், 100 சுயமாக இயக்கப்படும் பீரங்கிகள் மற்றும் 3,975 இழுத்துச் செல்லக்கூடிய பீரங்கிகள் உள்ளன. இது தவிர, 264 பீப்பாய் ராக்கெட் பீரங்கிகளும் இருக்கின்றன.
இந்திய விமானப் படையில் 3 லட்சத்து 10 ஆயிரம் விமானப்படை வீரர்கள், 513 போர் விமானங்கள், 270 போக்குவரத்து விமானங்கள் உள்பட மொத்தம் 2,229 விமானங்கள் இருக்கின்றன. மொத்த விமானங்களில் 130 தாக்குதல் விமானங்கள், 351 பயிற்சி விமானங்கள், 6 டேங்கர் கடற்படை விமானங்கள் ஆகியவை அடங்கும்.
இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளும் வைத்திருக்கும் மொத்த
ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கை 899. அவற்றில் 80 ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்த வல்லவை.
இந்திய கடற்படையில் 1.42 லட்சம் கடற்படை வீரர்கள் உள்ளனர். மேலும் 2 விமானம் தாங்கிக் கப்பல்கள், 13 டெஸ்டிராயர் எனப்படும் அழிக்கும் கப்பல்கள், 14 போர்க்கப்பல்கள், 18 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 18 சிறிய போர் கப்பல்கள் உள்பட மொத்தம் 293 கப்பல்கள் உள்ளன.
தளவாட வசதிகளைப் பொறுத்தவரை, இந்திய ராணுவத்திடம் 311 விமான நிலையங்கள், 56 துறைமுகங்கள், 6.3 மில்லியன் கிலோமீட்டர் நீளத்திற்கு சாலைகள் மற்றும் 65,000 கிலோமீட்டர் ரயில் பாதைகள் இருக்கின்றன.
முழு விவரம் காணொளியில்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.