பட மூலாதாரம், ICC/Getty Images
மும்பையில் பிறந்த ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் ஒரு நாள் வான்கடே மைதானத்தில் உலகக் கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்ற கனவு இருக்கும்.
இதற்கு சுபம் ரஞ்சனே, சௌரப் நேத்ரவால்கர் மற்றும் ஹர்மீத் சிங் ஆகியோர் மட்டும் விதிவிலக்கல்ல. இவர்கள் மூவரும் தற்போது தங்கள் கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் இந்தியாவுக்காக அல்ல, மாறாக அமெரிக்கா அணிக்காக இந்தியாவுக்கு எதிராக விளையாடுவார்கள்.
பிப்ரவரி 7-ஆம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டி இந்த மூவருக்கும், அவர்களது குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கும் மிகவும் சிறப்பானதாக இருக்கப் போகிறது.
தான் ஒரு முழு வட்டத்தை நிறைவு செய்ததைப் போல் உணர்வதாகக் கூறுகிறார் சௌரப் நேத்ரவால்கர், “நான் இங்கே கிரிக்கெட் விளையாட கற்றுக்கொண்டேன், மும்பையில் வளர்ந்தேன். வான்கடேயில் விளையாட வாய்ப்பு பெறுவது எனது குழந்தைப் பருவ கனவு. பல நினைவுகள், உணர்ச்சிகள் திரும்பி வருகின்றன. எனது குடும்பம், நண்பர்களைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன், நான் எனது சிறந்த ஆட்டத்தை விளையாட விரும்புகிறேன்.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
உண்மையில், உலகக் கோப்பை போட்டிகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்த தருணத்தைப் பற்றி அனைவரும் ஆர்வமாக இருந்தனர்.
வான்கடேயில் இந்தியாவுக்கு எதிராக தான் விளையாடப் போகிறேன் என்பதை அறிந்தபோது தனக்கு ஏற்பட்டு உணர்வுகளை விவரிக்கிறார் சுபம் ரங்கனே, “அதைக் கேட்டபோது, நான் உணர்ச்சிவசப்பட்டேன். இது ஒரு எளிய போட்டி அல்ல. இது எனது சொந்த ஊர். எனது வான்கடே மைதானம், என் நினைவுகள்,” என்று கூறினார்.
“இந்தியாவுக்கு எதிராக, வான்கடேயில், உலகக் கோப்பையில் விளையாடுவது வாழ்நாளில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பு. நான் வான்கடேயில் நுழையும்போது எப்போதும் என் இதயத்தில் ஒரு சிலிர்ப்பு இருக்கும்.” என்றும் தெரிவித்தார்.
அன்று சூர்யகுமாரின் கூட்டாளி, இன்று போட்டியாளர்
சுவாரஸ்யம் என்னவென்றால், சுபம் ஒரு காலத்தில் இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவுடன் மும்பைக்காக விளையாடியிருக்கிறார். இருவரும் ஒரு காலத்தில் அறைத் தோழர்களாகவும் இருந்துள்ளனர்.
அதனால்தான் சூர்யகுமார் போட்டிக்கு முந்தைய நாள் செய்தியாளர் சந்திப்பில் நகைச்சுவையாக, “அவர்கள் டாலர்கள் சம்பாதிக்கத்தான் வெளியே போயிருக்கிறார்கள். ஆனால் நான் அதை நேர்மறையாகப் பார்க்கிறேன்.” என்று கூறினார்.
“மக்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன, அவர்கள் வேறொரு நாட்டிற்காக விளையாடினாலும், இது ஒரு நல்ல வாய்ப்பு. நான் அவர்களுடன் நிறைய கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். நான் மும்பையில் விளையாடியிருக்கிறேன், அங்குள்ள சூழ்நிலைகள் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். அவர்களுக்கு எதிராக விளையாடுவது வேடிக்கையாக இருக்கும்.” என்றும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
சையது முஷ்தாக் அலி டிராபி போட்டிகளில் சுபம், சூர்யகுமாரின் தலைமையிலும் விளையாடினார். இவர்களுடன் சிவம் துபேயும் அந்த அணியில் இருந்தார்.
அதைப் பற்றி பேசுகையில் சுபம், “அது ஒரு அருமையான அனுபவமாக இருந்தது. ஓய்வறையைப் பகிர்ந்து கொள்வது, வீரர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக்கொள்வது, அதுதான் உங்களை ஒரு வீரராக வளர்க்கிறது.”
“நாங்கள் ஒன்றாக கிளப் கிரிக்கெட் விளையாடியிருக்கிறோம், முதல் தர போட்டிகளில் ஒன்றாக விளையாடியிருக்கிறோம். இப்போது சூழ்நிலை வித்தியாசமானது. இப்போது நாங்கள் எதிரணிகளில் இருக்கிறோம்,” என்று கூறினார்.
இரண்டு சூட்கேஸ்களில் வாழ்க்கை
சுபமுக்கு, கிரிக்கெட் வெறும் விருப்பமான விளையாட்டு அல்ல, மாறாக ஒரு மரபு. அவர் ரஞ்சனே குடும்பத்தில் மூன்றாம் தலைமுறை கிரிக்கெட் வீரர்.
சுபமின் தாத்தா வசந்த் ரஞ்சனே இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினார், அதே சமயம் அவரது தந்தை சுபாஷ் ரஞ்சனே முதல் தர கிரிக்கெட் விளையாடினார்.
சுபமின் கிரிக்கெட் பயணம் மும்பையில் தொடங்கியது. அவர் பார்சி ஜிம்கானாவுக்காக ரன்களை அடித்துக் குவித்தார்.
அவர் சுமார் 10-12 ஆண்டுகள் மும்பையில் விளையாடினார். அவர் மைதானங்களில் வியர்வை சிந்தினார், பல்வேறு கிளப்புகள், குழுக்களுக்காக விளையாடினார், இறுதியாக மும்பை சீனியர் அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். இந்த நகரம் அவரை வலிமையாக்கியது, போட்டி கிரிக்கெட்டின் உண்மையான அர்த்தத்தை அவருக்குக் கற்றுக் கொடுத்தது.
ஆனால் கடும் போட்டி உள்ள இந்த நகரத்தில், அவர் வாய்ப்புக்காக நிறைய போராட வேண்டியிருந்தது. ரிசர்வ் வீரர்களின் பெஞ்சில் அவர் நிறைய நேரத்தை செலவிட வேண்டியிருந்தது. அவர் சில காலம் கோவாவையும் பிரதிநிதித்துவப்படுத்தினார், ஆனால் இறுதியில் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
பட மூலாதாரம், Getty Images
எந்த உத்தரவாதமும் இல்லாமல், தனது கனவைத் தொடர கடல் கடந்து செல்வது என்பது கடினமான முடிவு என்று சுபம் ஒப்புக்கொள்கிறார்.
“உங்கள் நாட்டை, உங்கள் அன்புக்குரியவர்களை, குடும்பம் மற்றும் நண்பர்களை விட்டுவிட்டு செல்ல வேண்டும், அவை அனைத்தையும் கைவிடுவது எளிதானது அல்ல. நீங்கள் உங்கள் வாழ்க்கையை 2 சூட்கேஸ்களில் எடுத்துச் செல்கிறீர்கள், புதிய நாட்டில் எல்லாவற்றையும் புதிதாக தொடங்குகிறீர்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று உங்களுக்கு தெரியாது.” என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் எதுவும் எளிதாக வரவில்லை. அசோசியேட் கிரிக்கெட் என்றால் குறைவான வசதிகள் மற்றும் அதிக பொறுப்பு என்று அர்த்தம். ஆனால் படிப்படியாக சுபம் அணியில் தனது வழியை உருவாக்கினார் மற்றும் உலகக் கோப்பைக்கான இடத்தையும் சம்பாதித்தார்.
ஹர்மீத் சிங்கின் கதையும் ஓரளவு இவரின் கதையைப் போன்றது தான்.
சர்ச்சை மற்றும் உலகக் கோப்பை – ஹர்மீத்தின் பயணம்
2012-இல் இந்தியா 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையை வென்றபோது, இடது கை ஸ்பின்னர் ஹர்மீத் சிங் அந்த அணியின் முக்கியப் அங்கமாக இருந்தார்.
அப்போது மும்பையின் கிரிக்கெட் வட்டாரங்களில் உதயமாகிக் கொண்டிருந்த ஹர்மீத், திடீரென்று கவனத்தை ஈர்த்தார். சிறந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் இயன் சாப்பல் கூட அந்தப் பையனுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று கூறியிருந்தார்.
ஆனால் பின்னர் சர்ச்சைகள் அவரைச் சுற்றி வளைத்தன. ஸ்பாட் ஃபிக்சிங் வழக்கில் ஹர்மீத்தின் பெயர் குறிப்பிடப்பட்டது. ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியது.
பின்னர் 2017-இல், அந்தேரி ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் காரை ஓட்டியதற்காக அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
அந்த வழக்கிலிருது அவரது பெயர் விடுவிக்கப்பட்ட பிறகு, ஹர்மீத் மைதானத்தில் தொடர்ந்து விளையாடினார். ஆனால் தேசிய அணிக்கான கதவு அவருக்கு உறுதியாக மூடப்பட்டது.
அவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு செல்ல முடிவு செய்தார். விரைவில் அமெரிக்க அணிக்கான நம்பகமான ஆல்ரவுண்டராக மாறினார்.
பட மூலாதாரம், Getty Images
2024-இல் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் குயின்டன் டி காக் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரின் விக்கெட்டுகளை எடுத்து அவர் கவனத்தை ஈர்த்தார்.
இப்போது 33 வயதான ஹர்மீத், தனது சொந்த ஊரான வான்கடேயில் பழைய அணித் தோழர்களுக்கு எதிராக விளையாடுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்.
“நான் இந்த போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். அமெரிக்கா எனக்கு நிறைய தந்துள்ளது. நான் இங்கே தேடிக் கொண்டிருந்த வாய்ப்பு எனக்கு அமெரிக்காவில் கிடைத்தது. நான் இந்த தருணத்தை அனுபவித்து வருகிறேன். இந்த வாய்ப்பை அதிகபட்சமாகப் பயன்படுத்த விரும்புகிறேன்,” என்று ஹர்மீத் பிடிஐயிடம் கூறினார்.
“என்னுடைய பேட்ச் தோழர்கள் சிலர் இந்தியாவுக்காக விளையாடுகிறார்கள். வாழ்க்கையில் ஒரு வட்டம் முழுமையாக நிறைவடைந்ததைப் போல் உணர்கிறேன். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நான் தொடர்ந்து விளையாடினேன், நான் நிறுத்தவில்லை, இன்று நான் இங்கே இருக்கிறேன்.” என்றும் குறிப்பிட்டார்.
கல்வியும் கிரிக்கெட்டும்
சௌரப் நேத்ரவால்கரின் பயணம் கொஞ்சம் வித்தியாசமானது. கிரிக்கெட்டுடன் சேர்த்து, அவருக்கு படிப்பிலும் ஆர்வம் இருந்தது.
மும்பை ரஞ்சி அணியில் இடம் கிடைக்கவில்லை, இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை உணர்ந்து, அவர் தனது பொறியியல் கல்வியை முடித்து, முதுநிலை படிப்புக்காக 2015-இல் அமெரிக்கா சென்றார். ஒரு மென்பொருள் நிறுவனத்திலும் பணியாற்றினார்.
அதோடு, அவர் கிளப் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடினார், இது அமெரிக்க அணிக்கான கதவைத் திறந்தது. அந்தப் பயணத்தைப் பற்றி சௌரப் பிபிசி நியூஸ் மராத்திக்கு அளித்த பேட்டியில் விரிவாகப் பேசியிருந்தார்.
2024 டி20 உலகக் கோப்பையில் சௌரப்பின் செயல்திறன் கவனம் பெற்றது. அந்தப் போட்டியில், அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எதிராகப் பரபரப்பான வெற்றியைப் பெற்றது. அதில் சௌரப் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்களிப்பை செய்தார். அதே சமயம் இந்தியாவுக்கு எதிரான போட்டியில், அவர் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் விக்கெட்டுகளை எடுத்தார்.
பட மூலாதாரம், Getty Images
உங்கள் கனவுகளை கைவிடக்கூடாது, வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.
அந்த அனுபவத்தைப் பற்றி பேசிய சௌரப், “அந்த போட்டிக்குப் பிறகு, எங்கள் அனுபவம் அதிகரித்தது, நாங்கள் ஒரு அணியாக மிகவும் முதிர்ச்சி அடைந்துள்ளோம். மூன்று சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் நடந்துள்ளது, எங்கள் வீரர்களில் சிலருக்கு வெளிநாட்டில் பிரான்சைஸ் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவமும் பயனுள்ளதாக இருக்கும்.” என்றார்.
“நாங்கள் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தகுதி பெற முயற்சி செய்கிறோம், நாங்கள் லீக்கில் முதலிடத்தில் இருக்கிறோம்,” என்றும் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
“நான் கடைசியாக மும்பையில் விளையாடியது 2014-15-இல் என்று நினைக்கிறேன். அதன் பிறகு நிறைய மாறிவிட்டன. விளையாட்டும் நிறைய மாறிவிட்டது,” என்று அவர் கூறுகிறார்.
சுபம், சௌரப் மற்றும் ஹர்மீத்தைப் போல, குஜராத்தைச் சேர்ந்த மோனாங்க் படேல் மற்றும் டெல்லியைச் சேர்ந்த மிலிந்த் குமார் இருவரும் அமெரிக்காவுக்காக விளையாடுகிறார்கள்.
“இந்தியாவுக்கு வந்து இங்கே உலகக் கோப்பையில் விளையாடுவது உணர்வுப்பூர்வமாக இருக்கிறது. குழந்தையாக இருந்தபோது, நான் எப்போதும் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று கனவு கண்டேன். ஆனால் நான் இந்தியாவில் உலகக் கோப்பையில் விளையாடுவேன் மற்றும் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்துவேன் என்று நான் நினைக்கவே இல்லை. இது எனக்கு மட்டுமல்ல, அணியில் உள்ள பலருக்கும் சிறப்பான உணர்வு, இந்த உலகக் கோப்பையில் விளையாடுவதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்,” என்று மோனாங்க் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு