பட மூலாதாரம், Getty Images
ஆசிய கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றுள்ளது.
ஆனால் இந்திய அணியின் வெற்றியை விடவும் அதற்குப் பிறகு நடந்தவை தான் விவாதப் பொருளாகியுள்ளன.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மொஷின் நக்வியிடம் கோப்பையை பெற இந்திய அணி மறுத்துவிட்டது.
இறுதிப்போட்டியில் 147 ரன் என்கிற இலக்கை கடைசி ஓவரில் எட்டிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.
ஷிவம் துபே 33 ரன்களும், திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 69 ரன்களும் எடுத்தனர்.
போட்டிக்குப் பிறகு என்ன நடந்தது?
பட மூலாதாரம், Getty Images
போட்டி முடிந்த பின்பு உடனடியாக நடைபெற வேண்டிய பரிசளிப்பு விழா 1 மணி நேரம் கழித்து தான் நடைபெற்றது. பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது “இந்திய அணி பரிசளிக்கும் விழாவில் கலந்து கொள்ளாது, கோப்பையையும் பெற்றுக் கொள்ளாது” என நியூசிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் சைமன் டோல் அறிவித்தார்.
இந்திய அணி பரிசளிப்பு விழா மேடைக்கு வரவில்லை, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமாரிடம் கோப்பை வழங்கப்படவில்லை.
ஆட்ட நாயகன் விருது பெற்ற திலக் வர்மாவும் தொடர் நாயகன் விருது பெற்ற அபிஷேக் ஷர்மாவும், மிகவும் மதிப்புமிக்க வீரர் விருது பெற்ற குல்தீப்பும் தங்களின் தனிப்பட்ட விருதுகளை பெற்றுக்கொள்ள மேடைக்கு வந்தனர். அவர்கள் மொஷின் நக்வி பக்கம் கவனத்தை திருப்பவே இல்லை.
இந்திய வீரர்கள் மேடைக்கு வந்த போது அங்கிருந்தவர்களில் மொஷின் நக்வி மட்டும் தான் கை தட்டவில்லை என ராய்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.
யார் வெற்றிக் கோப்பையை வழங்குவார்கள் என முடிவெடுக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சிலும் மைதான நிர்வாகமும் ஆலோசித்தன. இதனால், ஒருங்கிணைப்பாளர்கள் கோப்பையை ட்ரஸ்ஸிங் அறைக்கு எடுத்துச் சென்றதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
வெற்றிக் கோப்பையை பெறாவிட்டாலும் இந்திய அணி வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இறுதிப் போட்டிக்கு முந்தைய தினம் மொஷின் நக்வி வெளியிட்ட அறிக்கையில், “சிறப்பான இறுதி போட்டியைக் காண நான் ஆவலுடன் உள்ளேன். வெற்றி பெறும் அணிக்கு கோப்பையை வழங்குவதை எதிர்நோக்கியுள்ளேன்.” எனத் தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோதி பதிவும் மொஷின் நக்வி பதிலும்
பட மூலாதாரம், SAJJAD HUSSAIN/AFP via Getty Images
இந்திய அணியின் வெற்றி குறித்த தனது எக்ஸ் தள பதிவில் பிரதமர் மோதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி குறிப்பிட்டுள்ளார்.
“விளையாட்டு களத்தில் ஆபரேஷன் சிந்தூர். ஆனால் முடிவு ஒன்று தான் – இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. நமது கிரிக்கெட்டர்களுக்கு வாழ்த்துகள்,” என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பதிவுக்கு மொஷின் நக்வி பதிலளித்துள்ளார்.
“போர் தான் பெருமைக்கான உங்களின் அளவீடு என்றால் பாகிஸ்தானிடம் இந்தியாவின் அவமானகரமான தோல்வியை வரலாறு பதிவு செய்துள்ளது, அதை எந்த கிரிக்கெட் போட்டியாலும் மாற்ற முடியாது. விளையாட்டிற்குள் போரை இழுப்பது ஏமாற்றமளிக்கிறது மற்றும் விளையாட்டு உத்வேகத்தை அவமதிப்பதாக உள்ளது.” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் வெற்றி பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “சிறப்பான வெற்றி. நமது விளையாட்டு வீரர்களின் ஆற்றல் மீண்டும் ஒருமுறை எதிராளிகளை துவம்சம் செய்துவிட்டது. எந்தக் களமாக இருந்தாலும் இந்தியாவின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று.” என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
கோப்பையைப் பெற வேண்டாம் என்ற முடிவை எடுத்தது யார்?
பட மூலாதாரம், Surjeet Yadav/MB Media/Getty Images
வெற்றிக் கோப்பையை பெற வேண்டாம் என்ற முடிவு பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சூர்யகுமார், இது அணியின் கூட்டு முடிவு என்றார். வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கப்படாத நிகழ்வை இதற்கு முன்னர் பார்த்ததில்லை என்று அவர் கூறினார்.
மேலும் அவர், “கடின உழைப்பால் பெறப்பட்ட கோப்பை எங்களுக்கு தகுதியானது என நம்புகிறேன். நான் வேறு எதுவும் கூற முடியாது. என்னுடைய கருத்தை தெளிவாகக் கூறிவிட்டேன். நீங்கள் என்னிடம் கோப்பையைப் பற்றி கேட்டால் என்னுடைய கோப்பைகள் (அணி வீரர்களைக் குறிப்பிட்டு) ட்ரஸ்ஸிங் அறையில் உள்ளார்கள். என்னுடன் உள்ள 14 வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் தான் உண்மையாக கோப்பைகள்.” எனத் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
கோப்பையைப் பெற வேண்டாம் என்கிற முடிவு அதிகாரப்பூர்வமானதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சூர்யகுமார், “நாங்கள் இந்த முடிவை களத்திலேயே எடுத்துவிட்டோம், யாரும் எங்களிடம் கூறவில்லை. நீங்கள் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றால் கோப்பையை பெற தகுதியானவர்களா, இல்லையா? நீங்களே கூறுங்கள்.” என்றார்.
ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா, இது இந்திய அணியின் முடிவு என்று தெரிவித்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கூட்டத்தில் இதுபற்றி முறையிட உள்ளதாகவும் அவர் கூறினார்.
“மொஷின் நக்வி பாகிஸ்தானின் முக்கியமான தலைவர் என்பதால் அவரிடமிருந்து கோப்பையை பெற வேண்டாம் என முடிவு செய்தோம். அதனால் கோப்பையும் பதக்கங்களும் அவர்களிடமே இருக்கும் என அர்த்தமில்லை. அவை கூடிய விரைவில் இந்திய அணியிடம் ஒப்படைக்கப்படும் என நம்புகிறேன். நவம்பர் மாதம் துபையில் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் ஏசிசி தலைவருக்கு எதிராக முறையிட உள்ளோம்.” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர், “இந்திய அணியை பிசிசிஐ வாழ்த்துகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகளும் சவாலின்றியே முடிவுகள் சாதகமாக கிடைத்துள்ளன. நமது அணியை நினைத்து பெருமையாக உள்ளது. எல்லையில் நமது பாதுகாப்பு படைகளும் இதையே செய்தன. இந்திய அணிக்கு 21 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்க முடிவெடுத்துள்ளோம்.” என்றார்.
பாகிஸ்தான் கேப்டன் கூறியது என்ன?
பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அகா செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
பாகிஸ்தான் அணியின் செயல்பாடு பற்றி அவர் கூறுகையில், “நாங்கள் எப்போதுமே விமர்சிக்கப்பட்டுள்ளோம். கிரிக்கெட்டைப் புரிந்தவர்கள் கிரிக்கெட் பற்றி மட்டுமே பேசுவார்கள். மற்ற அனைத்தும் இரண்டாம் பட்சம் தான். இந்தத் தொடரில் எங்கள் பேட்டிங் சிறப்பாக இல்லை, மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் உள்ளன. நாங்கள் அதைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்துவதில்லை.” என்றார்.
இந்திய வீரர்களின் நடத்தை ஏமாற்றமளிப்பதாகவும் சல்மான் அகா கூறினார்.
“நீங்கள் கிரிக்கெட்டைப் பார்த்தால் அவர்கள் கை குலுக்க மறுத்தது எங்களுக்கு அவமரியாதை அல்ல, அது கிரிக்கெட்டுக்கு அவமரியாதை. கிரிக்கெட்டை அவமதிப்பவர்கள் வேறு இடத்தில் அம்பலப்படுவது நிச்சயம். எந்தவொரு சிறந்த அணியும் அவர்கள் போல் செய்யமாட்டார்கள். ஒரு சிறந்த அணி எங்களைப் போல தனியாகச் சென்று, கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு பதக்கங்களைப் பெற்றுக் கொள்வார்கள்.” என்று அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
இந்தத் தொடரின் ஆரம்பத்தில் செய்தியாளர் சந்திப்பின்போதும் நடுவர் கூட்டங்களின்போதும் தன்னிடம் கை குலுக்கிய சூர்யகுமார் களத்தில் வருகிறபோது அதைச் செய்யவில்லை என்று விமர்சித்த சல்மான், “அவருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைதான் பின்பற்றுகிறார் என நினைக்கிறேன். அது தான் விஷயமென்றால் சரி.” என்றார்.
பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது, “நாங்கள் இந்திய அணிக்கு எதிராக தற்போது சிறப்பான கிரிக்கெட் விளையாடவில்லை. ஆனால் நீங்கள் ஒட்டுமொத்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் நாங்கள் அவர்களை விட அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளோம். இதன் அர்த்தம் ஒவ்வொரு அணிக்கும் ஒரு காலகட்டம் உள்ளது என்பது தான். நாங்கள் 90-களில் அவர்களை தோற்கடித்தது போல தற்போது அவர்களின் காலகட்டமாக உள்ளது, அவர்கள் எங்களை தோற்கடிக்கிறார்கள். கூடிய விரைவில் நாங்கள் அதே போல இந்தியாவை தோற்கடிப்போம்.” என்றார் சல்மான் அகா.
லீக் சுற்றில் இருந்து தொடரும் சர்ச்சைகள்
பட மூலாதாரம், FADEL SENNA/AFP via Getty Images
இந்தத் தொடரில் இரு அணிகளும் 3 முறை சந்தித்துக் கொண்டன. முதல் 2 போட்டிகளில் இந்திய அணி எளிதாக வென்றது. இந்தப் போட்டிகளும் களத்திற்கு வெளியே தான் பதற்றம் நிறைந்தவையாக இருந்தன.
முதல் போட்டியின் வெற்றிக்குப் பிறகு பேசிய சூர்யகுமார் இந்த வெற்றியை பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்குச் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார்.
லீக் போட்டியிலும் டாஸின் போது இரு கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்டை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது.
போட்டி நடுவருக்கு எதிராக ஐசிசியிடம் முறையிட்டதாக மொஷின் நக்வி தெரிவித்திருந்தார்.
கைகுலுக்காதது பற்றி பதிலளித்த சூர்யகுமார், “சில விஷயங்கள் விளையாட்டு உத்வேகத்தை விடவும் பெரியவை.” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.