பட மூலாதாரம், PTI
-
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி செய்திகள்
-
இந்தியா சமீபத்தில் உச்ச நீதிமன்றத்திற்கும் சில உயர் நீதிமன்றங்களுக்கும் புதிய நீதிபதிகளை நியமித்தது. அந்த பட்டியலில் மிகக் குறைவான பெண் நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.
2021 செப்டம்பரில், இந்திய உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி என்.வி. ரமணா நான்கு பெண் நீதிபதிகளுடன் எடுத்த புகைப்படம் வைரலானது.
34 நீதிபதிகள் உள்ள அந்த நீதிமன்றத்தில் அதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பெண்கள் இருந்த தருணம் அது. பலரும் இதை “வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம்” எனக் கொண்டாடினர்.
இந்திய நீதித்துறையில் இது ஒரு முக்கிய மாற்றத்தின் தொடக்கமாக அமையும் என பலரும் கருதினர்.
ஆண் – பெண் சமநிலையை ஏற்படுத்தும் முயற்சி, இதிலிருந்து தொடங்கும் என்ற நம்பிக்கையும் எழுந்தது.
ஆனால், நான்கு ஆண்டுகள் கழித்து அந்த நம்பிக்கை தகர்ந்து போய், உச்ச நீதிமன்றம் மீண்டும் “ஆண்கள் மட்டுமே இருக்கும் சங்கமாக” மாறிவிட்டதாக வழக்கறிஞர் சினேகா கலிதா கூறுகிறார்.
நீதிபதி ரமணாவின் புகைப்படத்தில் காணப்பட்ட மூன்று பெண்களான நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஹிமா கோலி மற்றும் நீதிபதி பேலா எம். திரிவேதி ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர். அதன்பின் பெண் நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை. இப்போது நீதிபதி பி.வி. நாகரத்னா மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஒரே பெண் நீதிபதி.
“இது மிகவும் கவலையளிக்கிறது. இது பெரும் பின்னடைவைத் தவிர வேறொன்றுமில்லை” என்று நீதிமன்றங்களில் பெண்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினரான கலிதா பிபிசியிடம் தெரிவித்தார்.
வரலாறு முழுவதும், இந்திய நீதித்துறையில் ஆண்கள் தான் பெரும்பங்கு வகித்துள்ளனர். 1950-இல் உச்ச நீதிமன்றம் உருவானபோதும், அதில் முதல் பெண் நீதிபதியை நியமிக்க 39 ஆண்டுகள் எடுத்தது. 1989-இல் பாத்திமா பீவி இந்தியாவின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
“நான் மூடிய ஒரு கதவைத் திறந்தேன்,” என்று அவர் 2018 இல் ஸ்க்ரோல் செய்தி வலைத்தளத்திடம் கூறினார். ஆனால் 75 ஆண்டுகளில் மொத்தம் 287 நீதிபதிகளில் 11 பெண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது, சுமார் 3.8% தான்.
“இப்போது உச்ச நீதிமன்றத்தில் ஒரே ஒரு பெண் நீதிபதி மட்டுமே இருக்கிறார். பெண்களின் பிரதிநிதித்துவமே இல்லாத நிலைக்கு மீண்டும் சென்றுவிட்டது. இது ஆண்கள் மட்டுமே உள்ள ஒரு கிளப்பாக மாறிவிட்டது,” என்று கலிதா கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், உயர் நீதிமன்றங்களில் 670 ஆண் நீதிபதிகள் இருக்கையில், 103 பெண் நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். குறைந்தது நான்கு உயர் நீதிமன்றங்களில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை.
சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் புதிய நியமனங்கள் செய்யப்பட்ட போது, பெண்களின் குறைவான பிரதிநிதித்துவம் மீண்டும் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
அங்கு இரண்டு காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டியிருந்தது. தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகளை கொண்ட உச்ச நீதிமன்ற கொலீஜியம் அரசாங்கத்திற்கு பெயர்களை பரிந்துரைக்கிறது. அவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பாலின விகித ஏற்றத்தாழ்வை சரிசெய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆகஸ்ட் மாத இறுதியில், இரண்டு ஆண் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு தரப்பட்டது. ஊடக தகவல்படி, இந்தியாவில் உள்ள குறைந்தது மூன்று பெண் நீதிபதிகள், அந்த பதவி பெற்றவர்களில் ஒருவரை விட மூத்தவர்கள்.
சமீபத்திய கொலீஜியம் தேர்வுகளிலும் பெண்கள் இல்லை. மும்பை உயர்நீதிமன்றத்திற்கு கடந்த வாரம் 14 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். அதில் ஒரே ஒரு பெண் நீதிபதி மட்டுமே உள்ளார். அதேபோல், அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு முன்மொழியப்பட்ட 26 பேரில், பெண்கள் ஐந்து பேர் மட்டுமே.
உச்ச நீதிமன்றத்திலும், “நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களிலும்” பெண்களின் குறைவான பிரதிநிதித்துவம், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தை (SCBA) வலுவான அறிக்கை வெளியிடத் தூண்டியது. அந்த அறிக்கையில் அவர்கள் “ஆழ்ந்த ஏமாற்றத்தையும்” “கவலையையும்” வெளிப்படுத்தினர்.
“கீழமை நீதிமன்றங்களில், அதாவது மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் அதற்குக் கீழான நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளில் 40% பெண்கள் உள்ளனர். அங்கு , தகுதி அடிப்படையில் ஆள்சேர்ப்பு செய்யப்படுகிறது, எழுத்துத் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களின் மூலம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால் உயர் நீதித்துறையில், கொலீஜியம் தேர்வு செய்யும் போது, பெண்கள் 10% க்கும் குறைவாகவே உள்ளனர். மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதிகமான பெண்களைத் தேடிக் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்”என்று எஸ்சிபிஏ (SCBA) தலைவரும் மூத்த வழக்கறிஞருமான விகாஸ் சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.
பிபிசி பேசிய பெரும்பாலான பெண் வழக்கறிஞர்கள் எஸ்சிபிஏ (SCBA) குரல் கொடுத்திருப்பதை வரவேற்றனர்.
“வழக்கறிஞர் சங்கம் இதுகுறித்து குரல் கொடுத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இது பெண்களின் பிரச்னை மட்டும் அல்ல. ஒரு சமூகமாக நம்மைப் பிரதிபலிக்கும் விஷயம் இது”என்கிறார் மூத்த வழக்கறிஞர் மாதவி திவான்.
பட மூலாதாரம், Getty Images
பெண் நீதிபதிகள் அனைவரும் பாலின சமநிலையை ஆதரிப்பார்கள் என்றால் அது தவறான புரிதல்.
கடந்த காலங்களில், ஆண்கள் மட்டுமல்ல, சில பெண் நீதிபதிகளும் பெண்களுக்கு எதிரான தீர்ப்புகளை வழங்கியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு, நீதித்துறைக்கும் அந்த பன்முகத்தன்மை அவசியம் என்கிறார் மூத்த வழக்கறிஞர் ஜெய்னா கோத்தாரி.
“உச்ச நீதிமன்றம் முழு நாட்டிற்கும் சொந்தமானது. எனவே அது பிராந்திய பன்முகத்தன்மையை பிரதிபலிக்க பல்வேறு உயர் நீதிமன்றங்களில் இருந்து நீதிபதிகளை தேர்ந்தெடுக்கிறது. அப்படி என்றால், பாலின பன்முகத்தன்மை ஏன் இருக்கக் கூடாது? இந்திய மக்கள் தொகையில் பெண்கள் சரிபாதி உள்ளனர். அதுபோலவே நீதித்துறையிலும் அவர்களுக்கு சமமான இடம் இருக்க வேண்டும்”என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெவ்வேறு வாழ்க்கை அனுபவங்கள், ஒரே வழக்கை மக்கள் வெவ்வேறாக அணுக வழிவகுக்கும். பல்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள் இருந்தால், சிறந்த தீர்ப்புகள் கிடைக்கும் என்று அவர் சொல்கிறார்.
பெண் நீதிபதிகள் அமர்வில் இருப்பது மட்டுமே, மற்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பாலின ரீதியிலான கருத்துகளை வெளியிடுவதில் சரிவர செயல்படச் செய்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன என கோத்தாரி கூறுகிறார்.
ஆனால் அதிகமான பெண் நீதிபதிகளை எப்படிக் கொண்டு வருவது? என்ற கேள்வி இன்னும் எஞ்சி நிற்கிறது.
சிலர், பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களை ஒதுக்கும் இட ஒதுக்கீட்டு முறையை பரிந்துரைத்துள்ளனர். இதனால் நீதித்துறை தன்னைச் சீர்படுத்தும் என்று அவர்கள் நம்புகிறார்கள். மறுபுறம், ஒதுக்கீடு மற்றும் தகுதி ஆகியவை ஒன்றுக்கொன்று முரண்படுவதால் தரம் குறையும் அபாயம் உள்ளது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
பெண் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், மற்ற பெண்களைப் போலவே கடுமையாக உழைக்கிறார்கள். குடும்ப வாழ்க்கை, குழந்தை பராமரிப்பு, தொழில் என அனைத்திலும் சமநிலை பேணுகிறார்கள் என்று கலிதா கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “பல பெண்கள், சக ஆண் ஊழியர்களை விட அதிக தகுதியானவர்கள். நாங்கள் பெண்கள் என்பதற்காக எங்களை புறக்கணிக்க முடியாது. இது பாகுபாடு,” என்றும் குறிப்பிட்டார்.
பாலின விகித பேதத்தை, “பெண்களின் பிரச்னை” என்று மட்டும் பார்க்கக் கூடாது.
இது ஒரு பொதுப் பிரச்னை.
நாம் 50% பிரதிநிதித்துவத்தை இலக்காகக் கொள்ள வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 30% என்ற யதார்த்தமான இலக்கோடு தொடங்கலாம் என்றும் கோத்தாரி கூறுகிறார்.
“உயர் நீதித்துறையில் பெண்களை நியமிப்பது பெருமைக்குரிய விஷயமாக இருக்க வேண்டும். உயர்நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் அதிக பெண்கள் இருப்பது, சட்டத் துறையில் சேரவும், தொடர்ந்து நீடிக்கவும் மேலும் பல பெண்களை ஊக்குவிக்கும்.
இல்லையென்றால், “நாம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் உயர் நிலையை அடைய முடியாதென்றால் இவ்வளவு கடினமாக உழைப்பதில் என்ன பயன்? என்று பல பெண்கள் எண்ணிவிடுவார்கள்,” என்கிறார் கோத்தாரி.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு