படக்குறிப்பு, கடந்த 30 ஆண்டுகளில், இந்திய ஐடி நிறுவனங்கள் லட்சக்கணக்கான பட்டதாரிகளைப் பணியில் இணைத்துள்ளனகட்டுரை தகவல்
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் சமீப காலமாக மிகக் கடுமையாகச் சரிந்துள்ளன.
இந்தியாவின் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான பேக் ஆஃபிஸ் துறைக்கு ஆதரவளிக்கும் பாரம்பரிய அவுட்சோர்சிங் மாதிரியை, செயற்கை நுண்ணறிவு சீர்குலைத்துவிடும் என்று முதலீட்டாளர்கள் கவலைப்படுவதே இதற்குக் காரணம்.
இந்தப் பங்கு விலை சரிவு, பாரம்பரிய மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பங்குகளில் ஏற்பட்டுள்ள உலகளாவிய திருத்தத்தின் ஒரு பகுதியாகும். ஆனால், இந்தியாவை பொறுத்தவரை, இது மிகவும் முக்கியமானது. ஏனெனில், தகவல் தொழில்நுட்பத் துறை பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
கடந்த 35 ஆண்டுகளாக, இந்தியாவின் மென்பொருள் துறை லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. உயர் லட்சியமும் வலுவான நுகர்வுத் திறனும் கொண்ட ஒரு புதிய நடுத்தர வர்க்கத்தை உருவாக்கவும் இது உதவியது. அதன் விளைவாக, கடந்த 30 ஆண்டுகளில் பெங்களூரு, ஹைதராபாத், குருகிராம் போன்ற முக்கிய நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், கார்கள், உணவகங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய 10 மென்பொருள் நிறுவனங்களைக் கண்காணிக்கும் நிஃப்டி தகவல் தொழில்நுட்பக் குறியீடு, இந்த ஆண்டு சுமார் 20% சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்பிலான செல்வத்தை இழந்துள்ளனர்.
ஆந்த்ரோபிக்கின் கிளாட் ஏஜென்ட் ஒரு புதிய கருவியை வெளியிட்ட பிறகு, பிப்ரவரி மாத தொடக்கத்தில் பங்குகள் விற்கப்படத் தொடங்கின. இந்தக் கருவி முக்கியமான சட்ட, இணக்க மற்றும் தரவு செயல்முறைகளைத் தானியக்கமாக்கும் என்று ஆந்த்ரோபிக் கூறியது. இது இந்தியாவின் அதிக தொழிலாளர்களைக் கொண்ட தொழில்துறை வணிக மாதிரியின் மையத்தையே நேரடியாகத் தாக்கியது.
இந்த நிச்சயமற்ற சூழலில், இந்தியாவின் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முதலீட்டாளர்களை அமைதிப்படுத்த முயன்றுள்ளன. இந்த அச்சங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். ஆனால், அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவு இந்தத் துறை முன்பு செயல்பட்டு வந்த விதத்தைக் கட்டமைப்பு ரீதியாக மாற்றும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
“வாடிக்கையாளர்களுடன் நிறுவனங்கள் செயல்படும் விதம், ஆலோசனை மற்றும் செயலாக்கத்தை நோக்கி கட்டமைப்பு ரீதியாக மாற வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், அப்ளிகேஷன் மேலாண்மை சேவைகள் (வருவாயில் 22-45%) கடுமையான வருவாய் சரிவைச் சந்திக்கும்,” என்று உலகளாவிய முதலீட்டு வங்கி நிறுவனமான ஜெஃப்ரீஸ் தெரிவித்துள்ளது.
எளிதாகக் கூறுவதெனில், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது வங்கிகள் அல்லது எண்ணெய் நிறுவனங்கள் போன்ற வாடிக்கையாளர்களிடம் இருந்து, மென்பொருளை இயக்குதல், பராமரித்தல், பிழைகளைச் சரிசெய்தல், புதுப்பிப்புகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளைச் செய்துகொடுப்பதன் மூலம் சம்பாதிக்கின்றன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியாவின் பல பெருநகரங்களில், உயர்மட்டப் பணிகளின் (white-collar jobs) அதிகரிப்பு, குடியிருப்புகள் மற்றும் உணவகங்களுக்கான தேவையைத் தூண்டியுள்ளது
ஆனால், எதிர்காலத்தில் இத்தகைய வழக்கமான பணிகளின் மூலம் அவர்கள் ஈட்டும் வருவாய் குறையக்கூடும். அதற்கு மாறாக, ஆலோசனை வழங்குதல் போன்ற, அதிக மதிப்புடைய ஆனால் அவ்வப்போது மட்டுமே கிடைக்கும் பணிகளின் மீது கவனம் திரும்பக்கூடும்.
ஜெஃப்ரீஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது வருவாய் வளர்ச்சி, பணியாளர்களுக்கான தேவை ஆகிய இரண்டிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைப் பொறுத்தவரை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் வருவாய் வளர்ச்சி 3% குறைவதும், 2031க்கு பிறகு வளர்ச்சி என்பதே இல்லாமல் போவதும் மிக மோசமான சூழலாக அமையக்கூடும் என்று ஜெஃப்ரீஸ் குறிப்பிடுகிறது.
இருப்பினும், அனைத்து தரப்பு பார்வையும் எதிர்மறையாகவே இருக்கவில்லை.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை “தொழில்நுட்ப உலகின் பிளம்பர்கள்” என்று அழைக்கும் ஜேபி மோர்கன் சேஸ், செயற்கை நுண்ணறிவு நிச்சயமாக சிக்கலான பணிகளை வேகப்படுத்தும் மற்றும் அதிக மென்பொருள் குறியீடுகளை எழுதும் என்று கூறுகிறது.
ஒன்று மற்றொன்றை மாற்றுவதற்குப் பதிலாக, “செயற்கை நுண்ணறிவு கருவி நிறுவனங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களுக்கும் இடையே பல புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய கூட்டாண்மைகள் உருவாகும்,” என்று ஜேபி மோர்கன் சேஸ் நம்புகிறது.
பட மூலாதாரம், Anadolu via Getty Images
படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவு தலைவர்களான சாம் ஆல்ட்மேன், டேரியோ அமோடி ஆகியோர் கடந்த மாதம் டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டிற்காக வந்திருந்தனர்
இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக்கும் இந்த கருத்தை ஆதரித்துள்ளார். நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் பழைய அமைப்புகளைப் புதுப்பிக்க உதவுவதில் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் வலுவான நிலையில் இருப்பதால், செயற்கை நுண்ணறிவு அவற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்ஃபோசிஸின் கூற்றுப்படி, ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு, ஃபிரன்ட்-எண்ட் டெவலப்பர்கள் மற்றும் டெஸ்டர்கள் போன்ற 92 மில்லியன் வேலைகளை நீக்கக்கூடும். ஆனால், அது தரவு குறியிடுபவர்கள் (டேட்டா அனோடேட்டர்கள்), செயற்கை நுண்ணறிவு பொறியாளர்கள், செயற்கை நுண்ணறிவு திறனுடையவர்களுக்கு சுமார் 170 மில்லியன் புதிய வேலைகளையும் உருவாக்கக்கூடும்.
இது இப்போது ஆய்வாளர்களிடையே வளர்ந்து வரும் ஒரு பொதுவான கருத்தாகத் தெரிகிறது.
ஹெச்.எஸ்.பி.சி ‘மென்பொருள் செயற்கை நுண்ணறிவை விழுங்கும்’ என்ற தனது சமீபத்திய அறிக்கையில், “உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் முழுவதும் செயற்கை நுண்ணறிவை பரப்புவதற்கான முதன்மை வழிமுறையாக மென்பொருள் நிறுவனங்கள் இருக்கும்” என்று கூறியுள்ளது. வேறுவிதமாகக் கூறுவதானால், பெரிய நிறுவனங்கள் முழுவதும் செயற்கை நுண்ணறிவைப் பரப்புவதற்கு தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் உண்மையில் உதவும் என்று ஹெச்.எஸ்.பி.சி கூறுகிறது.
பட மூலாதாரம், Getty Images
பெரிய செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் “இயல்பாகவே குறைபாடுள்ளவை” என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. பட உருவாக்க நிரல்கள் போன்றவற்றுக்கு அவை நன்றாகச் செயல்பட்டாலும், நிறுவனங்கள் பயன்படுத்தும் முக்கிய மென்பொருள் தளங்களை அப்படியே எடுத்து மாற்றுவதற்கு அவை பொருத்தமானவை இல்லை என்றும் அது கூறுகிறது.
“பல தசாப்தங்களாக நிறுவனத் தரத்திலான மென்பொருளானது, கிட்டத்தட்ட பிழையற்றதாகவும், அதிக செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையுடனும் இருக்கும் வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த முக்கியமான, தனிப்பட்ட அறிவுசார் சொத்துரிமையை பொது இணையத்தில் பயிற்றுவிக்க முடியாது,” எனவும் ஹெச்.எஸ்.பி.சி கூறுகிறது.
இதன் பொருள், பெரிய நிறுவனங்களின் மென்பொருளானது மிகக் குறைவான பிழைகள், அதிவேகம், வலுவான நம்பகத்தன்மை ஆகியவற்றுடன் செயல்படுவதற்காகப் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டுள்ளது. பொது இணைய தரவைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவுக்கு எளிமையாகக் கற்பிக்க முடியாத முக்கியமான மற்றும் தனிப்பட்ட அறிவுசார் சொத்துரிமையையும் இது உள்ளடக்கியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கும் மிகவும் கடினமான, மிக முக்கியமான மென்பொருள் கட்டமைப்பை வடிவமைப்பதில், செயற்கை நுண்ணறிவு இன்னும் பல பத்தாண்டுகள் பின்தங்கியுள்ளதாக ஹெச்.எஸ்.பி.சி கூறுகிறது.
இருப்பினும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த மாபெரும் தொழில்நுட்ப மாற்றத்தில் இருந்து பாதிப்பின்றி வெளிவராது.
பட மூலாதாரம், Getty Images
இதன் துல்லியமான தாக்கத்தை அளவிடுவது கடினம். ஆனால் அதன் விளைவுகள் ஏற்கெனவே தொழில்துறையின் பல பகுதிகளில் காணப்படுவதாக ஜேபி மோர்கன் கூறுகிறது.
இந்தியாவின் மென்பொருள் தொழில் குழுவான நாஸ்காம் (Nasscom) கருத்துப்படி, இந்தத் துறை ஏற்கெனவே இந்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டது. தொழில்நுட்ப துறை, செயற்கை நுண்ணறிவு சோதனையில் இருந்து உண்மையான பணிகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்குத் தெளிவாக மாற்றமடைந்தது 2025ஆம் ஆண்டில்தான் என்று அது கூறுகிறது.
ஆனால், செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களில் இருந்து வரும் பணம் இன்னும் மிகக் குறைவாகவே உள்ளது. 2025ஆம் ஆண்டில், தொழில்துறையின் மொத்த வருவாயான 315 பில்லியன் டாலர்களில், செயற்கை நுண்ணறிவுத் திட்டங்கள் சுமார் 10 பில்லியன் டாலர் மட்டுமே ஈட்டின.
அதே நேரத்தில், இந்த ஆண்டு ஒட்டுமொத்த துறையும் 6% மட்டுமே வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொழில்துறை அதன் அதிவேக வளர்ச்சி ஆண்டுகளில் கண்ட இரட்டை இலக்க வளர்ச்சியைவிட மிகவும் குறைவு.
வேலைக்கு ஆள் எடுப்பதிலும் பெரிய அளவில் அதிகரிப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026இல் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2.3% மட்டுமே அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
நாஸ்காம் அமைப்பின்படி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் நிர்ணயிக்கும் முறையையும் செயற்கை நுண்ணறிவு வேகமாக மாற்றி வருகிறது. முன்பு, செய்த வேலைக்கு எடுத்த மணிநேரங்களின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அது வேலையின் இறுதி முடிவுகளை மையமாகக் கொண்ட அணுகுமுறையை நோக்கி நகர்கிறது. அதாவது வாடிக்கையாளர்கள் செலவழித்த நேரத்தைவிட முடிவுகளுக்காகவே (result) அதிகமாகப் பணம் செலுத்த நேரிடலாம்.
நுவாமா இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் நிறுவனத்தின் ஆய்வாளர்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வருவாய் முதலில் குறையும் என்று கூறுகின்றனர்.
தொழில்நுட்பத்தைத் தாண்டியும் சிக்கல்கள் உள்ளன. இந்தியாவுக்கான கட்டண நிச்சயமற்ற தன்மைகள் குறைந்து இருந்தாலும், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மிகப்பெரிய சந்தையான அமெரிக்காவில் விசா கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன.
மூடிஸ் அனலிட்டிக்ஸ் நிறுவனத்தின்படி, புதிய விசா கட்டணங்கள் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவுகளை சுமார் 100 மில்லியன் டாலர் முதல் 250 மில்லியன் டாலர் வரை உயர்த்தக்கூடும். இது அவர்களின் வருவாயில் ஏறக்குறைய 1% ஆகும்.
இந்தியாவின் மொத்த சேவை ஏற்றுமதியில் சுமார் 80% பங்களிக்கும் இந்த மிக முக்கியமான துறை ஏற்கெனவே எதிர்கொண்டு வரும் கடுமையான அழுத்தத்தை இவையனைத்தும் மேலும் அதிகரிக்கின்றன.